தமிழகத்தின் 17 மாவட்டங்களிலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியிடங்களை சில நிபந்தனைகளுக்குட்பட்டு நிரப்பிடுமாறு, தொடர்புடைய 17 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடமிருந்து 15.09.2026 என்ற தேதியிட்ட
ஒன்று மின்னஞ்சல் வழியே அனுப்பப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடமிருந்து வந்த அறிவிப்பு பொது ஆணையல்ல. அது தொடர்புடைய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட செயல்முறை நடவடிக்கைகள் அவ்வளவே. எனவே, இந்தப் பணிவாய்ப்பு நடவடிக்கைகள் குறித்து எவரும் அதிகாரப் பூர்வமாய் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஏதோ ஒரு மாவட்டத்தில் கசிந்த ஒரு செய்தியின் வழியேதான் இந்தப் பணிவாய்ப்பு குறித்த முழு விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.
இதனையடுத்து, இந்தப் பணியிடத்துக்குத் தகுதியுடைய பார்வையற்றவர்கள் விண்ணப்பிக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் உள்ளூர் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில்தான் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
முதலில் இந்தப் பணியிடங்கள் மாவட்ட அளவிலானவை என்றபோதும், அவை 40 வயதுக்கு உட்பட்ட எட்டாம் வகுப்பு முடித்திருக்கிற பார்வையற்றவர்களுக்கான பிரத்யேக பணிவாய்ப்புகள். ஆனால், பார்வையற்றவர்களால் அன்றாட நாளிதழ்களை எளிதாகவெல்லாம் படித்துவிட இயலாது என்பது முதல் பிரச்சனை. மேலும், மாவட்ட அளவிலான செய்தி வெளியீடுகள் அந்தந்த மாவட்டத்தின் அதிகாரப் பூர்வ இணையதளங்களில் திரைவாசிப்பான்களுக்கு உகந்த வடிவத்தில் (accessible formats) வெளியிடப்படுவதில்லை. இத்தனை தடைகளுக்கு நடுவே, திருச்சி, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான போதுமான கால அவகாசம் தரப்படாமல் இறுதித் தேதியும் முடிந்துவிட்டது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 29.09.2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, இறுதித் தேதி 07.10.2026 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கடந்த 26.09.2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, 05.10.2026 அன்றே இறுதித் தேதியும் முடிந்துவிட்டது. அதாவது, பத்து நாட்கள்கூட கால அவகாசம் வழங்கப்படவில்லை. இடையில் அக்டோபர் 2, மற்றும் சனி, ஞாயிறுகள் தவிர்த்தால் ஐந்து நாட்களே எஞ்சுகின்றன.
இதற்கிடையே, திருப்பத்தூர், நெல்லை போன்ற சில மாவட்டங்களில் இரண்டு வாரங்கள் அல்லது 20 நாட்கள் என விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு நேர்மறையான செய்தி என்றாலும்கூட, பொதுத் தகவல்களைக் கையாள்வது போலவே, சமூகத்தின் மிகவும் விளிம்புநிலையினரான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தகவல்களையும் அரசு அணுகுவது ஏற்புடையதல்ல.
எனவே, வெளியிடப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் உதவி வரவேற்பாளர்களுக்கான பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இரண்டு வாரங்கள் அல்லது 20 நாட்கள் என்ற வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதை தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் உறுதி செய்திட வேண்டும். மாறாக, போதுமான கால அவகாசம் வழங்கப்படாமல், அவசர அவசரமாக பணிகள் நடைபெறுவது ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016-ல் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு, சம பங்கேற்பு என்கிற அடிப்படை இலக்குகளுக்கே எதிரானது.
இது குறித்து பார்வையற்றோருக்கான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு செல்வது அவசியமும் அவசரமுமான ஒன்று.
***தொடுகை மின்னிதழ்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
