இன்றைய தி இந்து நாளிதழின் தலையங்கப் பக்கங்களில் இறுதியாக ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கல் மற்றும் என்குலூட் செயற்கை தொழில்நுட்பத்திலும் பணியாற்றும் நவின் ஆட் என்பவர் இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளார்.
அவருடைய நண்பர் ஒரு பிறவிப் பார்வையற்றவர். திரை வாசிப்பான்களால் அடையாளம் காண இயலாத செயல்களான கோப்புகளை வாசித்தல், புகைப்படங்களை அடையாளம் காணல் போன்ற பணிகளில் அவருக்கு ஏஐ உதவியாக இருக்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விடயங்களில் ஏஐ தொழில்நுட்பம் எவ்வளவு துல்லியமானதாக, அணுகல் தன்மையுடையதாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தக் கட்டுரை.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 அனைவரையும் உள்ளடக்கிய அணுகல் தன்மையை முக்கிய நோக்கமாகத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவின் அணுகல் தொடர்பான கொள்கைகள் அப்படிப்பட்டவையாக இல்லை. அவை வெற்றுப் பரிந்துரைகளாக இருப்பதாக, இந்திய உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டது. அத்தோடு நிற்கவில்லை உச்சநீதிமன்றம். அணுகல் தன்மை என்பது, மாற்றுத்திறனாளிகளின் கண்ணியமான வாழ்வுக்கான அடிப்படைத் தேவை என்பதை வலியுறுத்தியதோடு, கடந்த 2024 நவம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசு அணுகல் தொடர்பான வலிமையான விதிகளை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை என மீண்டும் மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றப் படியேறி இருக்கிறார்கள்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த அணுகல் வசதிகளை ஏற்படுத்தாத 155 அமைப்புகள், இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு அபராதம் விதித்தார். இந்த அமைப்புகளில் அரசின் அமைச்சகங்களும் அடக்கம் என்பதை முக்கியமாகச் சுட்டுகிறது கட்டுரை.
நிலைமைகள் இப்படியிருக்க, ஏஐ தொழில்நுட்பம் அரசின் பணிவாய்ப்புகள், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கோளோச்சும் ஒன்றாகத் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. ஏஐ தரவுத் தளங்கள் மற்றும் கட்டுமான வணிகம் என்பது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 200 பில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறார் கட்டுரையாளர். ஆனால், மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குவதில் ஏஐ மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது என்பதுதான் கட்டுரை வலியுறுத்த விரும்பும் முக்கிய கருத்து.
பல ஏஐ தளங்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தரவுப் பயிற்சியில் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வெண்கோல், பிரெயில் டிஸ்ப்லேக்கள் பற்றியெல்லாம் ஏஐ தவறாகவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் கட்டுரையாளர். சான்றாக, ஒரு பார்வையற்றவர் தான் மென் பொறியாளராக விரும்புவதாக ஏஐயிடம் தெரிவித்தால், “உங்களுக்குப் பார்வையில்லை என்பது குறித்து நான் வருந்துகிறேன்” எனத் தொடர்பில்லாமல் பதில் அளிக்கிறது ஏஐ என்கிறார்.
இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
*மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தரவுகள் அவர்களின் சம்மதம் மற்றும் பங்களிப்புடன் திரட்டப்பட்டு, அவை ஏஐயின் தரவுப் பயிற்சியில் பயன்படுத்தப்பட வேண்டும்.
*ஏஐ தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் கட்டுமானச் செயல்பாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பும் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.
எந்த ஒரு நவீனத் தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சமே அதன் சிறப்பு வாய்ந்த தகவமைதல்தான். ஆனால், மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் மட்டும் ஒரு புதிய தொழில்நுட்பத்துக்கு அவர்கள் அவர்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டியிருப்பது எந்த வகையிலும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்காது என்பதை மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறது கட்டுரை.
கட்டுரையின் இணைப்பு:
https://www.thehindu.com/opinion/op-ed/disabled-citizens-and-the-future-of-ai/article71548718.ece
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
