Categories
இலக்கியம் கவிதைகள்

கவிதை: உள்ளத்தின் ஒளி

பார்வையற்றோர் தங்கள் படைப்புகளை அனுப்ப: thodugai@gmail.com

காணாத காட்சிகள் கற்பனையில் மலரும்,

கடலின் பரப்பும் மனத்திரையில் விரியும்;

ஆனையின் உருவமும் அருவியின் ஓசையும்

அன்பின் உணர்வில் அழகாய்த் திகழும்.

மரங்களின் மணமும் மலர்களின் வாசமும்,

இலைகளின் தீண்டலும் இனிமை தரும்;

பறவையின் குரலில் சிறகுகள் விரிந்து,

புதியதோர் உலகம் நெஞ்சில் பிறக்கும்.

தொட்டுணர்ப் புள்ளிகள் அறிவைத் திறக்கும்,

விரல்களின் வழியே வெளிச்சம் பெருகும்;

கற்பனைச் சிறகுகள் வானை அளக்கும்,

கனவுகள் யாவும் கரை சேரும்.

கை கோர்த்துத் தூக்கிடும் நல்லுள்ளங்களும்,

ஊக்கமும் அன்பும் தருபவரும் உண்டு;

தோளோடு தோள்நின்று தோழமை காட்டும்

தூயநல் நெஞ்சங்கள் எங்களுக்கோர் பலமாம்.

சிலரின் சொற்கள் மனதைப் புண்படுத்தும்,

குறை காணும் பார்வை மாறிட வேண்டும்;

எவரும் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை—

எல்லா உயிர்க்கும் சம உரிமை உண்டு.

கண்கள் காணும் எல்லை கடந்தும்

கற்பனை உலகம் விரிந்தே கிடக்கும்;

உள்ளத்தின் ஒளியை ஏந்தி நடந்தால்

உயரங்கள் யாவும் அருகில் வரும்.

***இந்திராஸ்ரீ

கவிஞரும் எழுத்தாளருமான திருமதி. இந்திராஸ்ரீ அவர்கள் ஒரு குறைப்பார்வை மாற்றுத்திறனாளி. பார்வையற்றோர் அதிகம் புழங்கும் பல டெலகிராம் குழுக்களில், கவிதைகள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

தொடர்புக்கு: indrasree007@gmail.com

பேச: 9840863828


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.