Categories
தொடர் விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (3) பார்வையைப் பறித்த முனி: S. அஷோக் பாலா

எனக்கு பக்தி இருந்துச்சானு கேட்டா, நிறைய இருந்துச்சு. கண்ணு தெரியணும்னு ஆஞ்சநேயருக்கு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதிக் கோயில்ல போய் வச்சிருக்கேன்—108 தடவை, 1008 தடவைன்னு

முந்தைய பகுதிகளைப் படிக்க:

வாழ்க்கை சில நேரங்களில் சில வாய்ப்புகளைக் கொடுக்கும். அதை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், வாழ்க்கை நம்மைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். இந்த உலகத்துக்கு ஒரு தத்துவம் சொல்லலாம்னு நெனச்சேன், வேற ஒன்னும் இல்ல. சரி, இப்ப விஷயத்துக்கு வரேன்.

தஞ்சாவூர்ல ஒரு பள்ளி இருக்குனு என் அக்கா சொன்னபோது, “அது எப்படி ஒரே பையன், அவனை எப்படி தனியா அனுப்புறது? அதெல்லாம் முடியாது”ன்னு சொல்லிட்டாரு என் அப்பா. I.P.S. படிக்கணும்னு நினைச்ச இந்த அறிவாளி பையனும், “கண்ணு தெரியாதவங்க படிக்கிற ஸ்கூல்ல நானும் படிக்கணுமா? எனக்கு என்ன குறைச்சல்? எனக்குத்தான் கண்ணு தெரியுதே…” அப்படிங்கற முட்டாள்தனத்தில், “நான் படிக்கிறேன்”னு சொல்லவே இல்ல; அதை நினைக்கவும் இல்லை. எனக்கு முழுப் பார்வை தெரியலன்கிறத ஒத்துக்கவும் முடியல, என்னால ஏத்துக்கவும் முடியல. என்னை ‘பளார்’ என்று அறையணும் போல இருக்கா? எனக்கே அப்படித்தான் இருக்கு, என்ன பண்றது! “என் படிப்பு மொத்தமா முடிஞ்சு போச்சு” அப்படிங்கறதை நானே முடிவு பண்ணிட்டேன்.

நான் முதலிலேயே உங்களிடம் சொன்னது ஞாபகம் இருக்கா? விரல் சப்புற குழந்தைங்க அறிவா இருக்கும். அதுலயும் 13 வயது வரைக்கும் நான் விரல் சப்பினவன். அந்த அறிவு எல்லாம் அதிகமா வளர்ந்ததனால் எனக்கு ஏதோ தோன்றிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் நோட்டு எடுத்து, பெரிய பெரிய எழுத்தா என்னுடைய பதிமூணாவது வயதில் முதல் கவிதையை எழுதினேன். உண்மையச் சொல்லணும்னா, அதுதான் கவிதைன்னு எனக்குத் தெரியாது. ஒரு கவிதை எப்படி எழுதணும்னு எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் அடுத்தடுத்து இரண்டு கவிதைகள் எழுதினேன். நானே வெட்கப்பட்டு, அந்த எழுதுன பேப்பரைக் கிழிச்சுக் கசக்கிப் போட்டுட்டேன். அதை எடுத்துப் பார்த்த என் அக்கா, அவங்க ஸ்கூல்ல இருக்க தோழிகளிடம் காண்பிக்க, “உன் தம்பி சூப்பரா கவிதை எழுதுறான்” அப்படின்னு சொன்னாங்கன்னு வந்து என் அக்கா என்னிடம் சொன்ன போது… அட அட அட அட, அந்த நிமிஷம் இந்த உலகத்தையே ஜெயிச்சுட்டதாத்தான் நினைச்சேன். இந்த எழுத்துதான் என்னை வாழவைக்கப் போகுதுன்னு நம்பினேன். வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த முதல் நம்பிக்கை, ஒரே நம்பிக்கை எழுத்துதான்.

வாழ்க்கை நகர ஆரம்பித்தது. என் பொழுதுபோக்கு டிவி பார்க்கிறது, பசங்க எல்லாம் பள்ளிக்கூடம் போயிட்டு வந்த பிறகு அவங்களோட விளையாடுறது—இப்படித்தான் போனது. என் வீட்டோட பொழுதுபோக்கு, என்னைக்கோயில் கோயிலா கூட்டிட்டுப் போறது, ஜாதகம் பார்க்கிறது என்று போனது. எனக்கு இப்படித் திடீர்னு கண்ணு தெரியாம போனதுக்கு ஒரு காரணம் இருக்கு, சொல்லவா? எங்க குலதெய்வம் வாஞ்சி அம்மன், எங்க ஊர்ல இருந்து ஒரு 35 கிலோமீட்டர் இருக்கும். அந்த கோவிலுக்கு வருஷம் வருஷம் என்னுடைய மூன்று பெரியப்பா குடும்பம், நாங்க எல்லோரும் போவோம். அந்த கோவில் ஒரு காட்டுக்கு நடுவில் இருக்கும்; சின்ன கோவில் தான். கோவிலுக்குள்ள வாஞ்சி அம்மன் இருக்கும். அதற்கு நேரா கொஞ்ச தூரத்தில் ஒரு சிலை இருக்கும். ஐயையோ, சிலை என்று சொல்லிட்டேனே, தப்பு; அது முனி கடவுள் சிலையா நிப்பாரு. சிலையில்ல, கடவுள்!

இப்ப நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்குப் புரியல தானே? இப்ப சொல்றேன். அந்தக்கோயில்ல போய் நான் விளையாடிட்டு இருக்கும்போது, அந்த முனி கடவுளின் கண்களை நான் தடவிப் பார்த்துவிட்டேனாம்! அதனால் கோபம் கொண்ட அந்த முனி, என் கண்களில் பார்வையைப் பறித்துவிட்டாராம். ஹலோ, இது நான் சொல்லல; என்னோட பெரியம்மாவிற்குச் சாமி வரும், அந்தச் சாமி வாஞ்சி அம்மன். அப்படிச் சாமி வரும்போது ஒரு அஞ்சு நிமிஷம் அழுது, பத்து நிமிஷம் அருள்வாக்கு சொல்லி, அதற்கு அப்புறம் மயக்கம் அடிச்சு விழுந்துருவாங்க பெரியம்மா! அவங்கதான் எனக்குப் பார்வை போன கதையைச் சொன்னாங்க. என் அம்மா அழுதுகிட்டே, “நீதான் என் பிள்ளைக்குக் கண்ணு கொடுக்கணும்”னு சாமிகிட்ட சொல்ல… ஒரு நாள் அந்தக்கோவிலில் கஞ்சி காய்ச்சி ஊத்தும் நிகழ்ச்சி நடந்தது, நிறைய பேர் இருந்தாங்க. அப்போ, நான் செஞ்சது தப்புன்னு அந்த முனி சிலைக்கு முன்னாடி என்னைச் சொல்லிக்கிட்டே தோப்புக்கரணம் போடச் சொன்னாங்க; அதையும் நான் சிரிச்சுகிட்டே செய்தேன். நல்லவேளை, நான் கண்ணைத் தான் தடவிப் பார்த்தேன், அதனால் கண்ணோடு போச்சு! அய்யய்யோ, நீங்க ஏதும் தப்பா யோசிக்காதீங்க; கையைக் காலைத் தடவிப் பார்த்திருந்தால் இன்னிக்கு எனக்குக் கை கால் இருக்காது இல்ல, அதுக்காகச் சொன்னேன்.

கோயில் கோயிலா போறது, அர்ச்சனை பண்றது, யாருக்குச் சாமி வந்தாலும் குறி கேட்பதுன்னு ஊர் ஊராய் போயிருக்கேன். அப்படிப் போகும்போது ஒரு பெண் சாமி, “சாமிகிட்ட வச்சிருந்த எலுமிச்சம்பழம்” அப்படின்னு அதை எடுத்து என் கண்ணுல பிழிந்துவிட்டாங்க! எலுமிச்சம்பழத்தைக் கண்ணுல பிழிந்தா எப்படி இருக்கும் தெரியுமா? அந்தச் சின்ன வயசுல அந்த வலியை, எரிச்சலை நான் அனுபவித்திருக்கேன். இது மட்டுமல்ல, “சாமிக்கு அபிஷேகம் பண்ணுன பாலு”னு கண்ணுல ஊத்துவாங்க.

மாதா எண்ணெய், கன்னியாகுறிச்சி எண்ணெய் அப்படின்னு சொல்லி, ஏதேதோ எண்ணெயெல்லாம் என் கண்ணுல ஊத்திருக்காங்க. “கண்ணுல மாவிளக்கு போடுறேன்னு வேண்டிக்கிட்டேன்” என்று சொல்லி, கோயில்ல படுக்க வைத்து, வாழை இலையை என் கண்ணுல வச்சு, அதுமேல மாவிளக்கு வச்சு, அந்த மாவிளக்குல நெய்யை ஊத்தி, திரி போட்டுத் தீபம் ஏற்றி, அது அணையுற வரைக்கும் என்னைக் கையால பிடிச்சுகிட்டுப் படுத்து இருக்கச் சொல்லி இருக்காங்க. “சாமியோட பூ” அப்படின்னு சொல்லி, என் ரெண்டு கண்ணுலையும் வச்சு நைட்டு கட்டிக்கிட்டுத் தூங்கச் சொல்லி இருக்காங்க. இது போன்ற விஷயங்கள் என் வாழ்க்கையில் வருஷக்கணக்காக நடந்தது. என்னுடைய இடது கண் முழுமையா வெள்ளையா மாறினது மட்டுமில்லாமல், அந்தக்கண்ணு ரொம்பப் பெருசாவும் வளர்ந்த மாதிரி ஆயிடுச்சு. பக்திங்கற பேர்ல அந்தக்கண்ணுக்காக நடந்த ஆபரேஷன்கள் அப்படி—பக்தி ஆபரேஷன்!

ஒருமுறை நான் என் கடை வாசலில் நின்றுகொண்டிருந்தேன், கடை சாத்தியிருந்தது. அப்பொழுது  பக்கத்து ஊருக்குச் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் என்னைப் பார்த்துவிட்டு என் அருகில் வந்தார்கள். அதில் ஒருவர் மஞ்சப் புடவை கட்டி, தலையை விரித்துப் போட்டு என்னருகே வந்தார். அந்தப் பெண்ணிடம், “இவர்தான் அய்யாவோட பிள்ளை, இவருக்குக் கண்ணு தெரியல”ன்னு சிலர் சொல்ல… அந்தப் பெண் என்னைக் கட்டிப்பிடிச்சு—அய்யய்யோ தப்பா யோசிக்காதீங்க, நான் சொல்லி முடிச்சிடறேன். “என் இடது கண்ணுல நாக்கைக் கண்ணுக்குள்ள விட்டு, உன் கண்ணுல விரலை விட்டு ஆட்டிடுவான்” என்று சொல்லிக் கேட்டதுண்டு. ஆனா, என் கண்ணுக்குள்ள நாக்கை விட்டு ஆட்டிட்டாங்க! இப்படிச் சொல்றது நல்லா இல்ல; “கண்ணைத் துடைத்தாங்க!” இப்படிச் சொல்லலாமா? “கண்ணு இப்ப குளு குளுன்னு இருக்கா?”ன்னு கேட்டாங்க. நான் பயந்து போய் வீட்டுக்கு ஓடி வந்துட்டேன். அதற்குப் பிறகுதான் தெரியும், அவங்க ஒரு பெண் சாமியார்; கோழி கழுத்தைக் கடித்துத் துப்பிட்டு, அந்த ரத்தத்தைக் குடிப்பாங்களாம். நல்லவேளை, என் கழுத்தைக் கடிச்சு ரத்தத்தைக் குடிக்காமல் விட்டாங்க! இதுவும் பக்தி ஆபரேஷன் தான்.

எனக்கு பக்தி இருந்துச்சானு கேட்டா, நிறைய இருந்துச்சு. கண்ணு தெரியணும்னு ஆஞ்சநேயருக்கு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதிக் கோயில்ல போய் வச்சிருக்கேன்—108 தடவை, 1008 தடவைன்னு! பல பக்தி ஆபரேஷன்களைத் தாங்கிய என்னுடைய இடது கண், வெளியில் வந்த மாதிரி நல்லாப் பெருசா வளர்ந்திருந்தது என்று சொன்னேன்ல? என் சித்தி வீட்ல நான் தங்கி இருந்தபோது, என் மாமா பக்கத்துல படுத்து இருந்தேன்; டிவி பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்ப திடீர்னு நான் எந்திரிக்க, என் மாமா முழங்கால்ல அடிச்சு, என்னோட இடது கண் வெடிச்ச மாதிரி எனக்குச் சத்தம் கேட்டுச்சு. என்னுடைய கண்ணே வெளில வந்து தொங்குற மாதிரி ஆயிடுச்சு. எல்லோரும் பயந்து அழ ஆரம்பிச்சுட்டாங்க, என் மாமா உட்பட. நான் அப்போ சின்னப் பையன்தான், நான் அழுதுகிட்டேதான் இருந்தேன். அந்த நேரத்துல யாருக்கும் என்ன பண்றதுன்னு தெரியல. கண் மருத்துவமனையும் கிடையாது; ஒரு கண் டாக்டர் கிளினிக் வச்சிருப்பாரு, அதுவும் அந்த நேரம் திறந்திருக்காது.

அதனால, திருவாரூரில் இருக்க ஒரு கண் டாக்டர் வீட்டுக்கே போய் அந்த டாக்டர்கிட்ட சொல்ல, அவர் ஒரு மருந்து கொடுத்து, “இதைப் போட்டு அழைச்சிட்டு வாங்க”ன்னு சொன்னாராம். அந்தச் சொட்டு மருந்து என் கண்ணுல ஊத்துறதுக்காக என்னைப் படுக்க வைக்கும்போது, எனக்கு ஏதோ மயக்கம் வர்ற மாதிரி இருந்தது. வந்தது மயக்கம் மட்டுமல்ல, ரத்தம் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியா கொட்டும்; அதுல ரெண்டு கன்னம் மட்டும் ஜாலியா குளிக்கும். ஆனா அன்னைக்கு, என்னோட கன்னம் ரத்தத்துல குளிச்சது; ரத்தம் அருவியா கொட்டியது. இறுதியாக, அந்தக்கண் டாக்டரே சைக்கிள்ல என் சித்தி வீட்டுக்கு வந்து எனக்குக் கட்டுப் போட்டுவிட்டுப் போனாரு.

எனக்காகப் பத்து வருஷம் இந்த உலகத்தைப் பார்த்த கண், ‘பக்தி ஆபரேஷன்’ என்ற பெயரில் பல வலியைச் சுமந்த கண், கொஞ்சம் கொஞ்சமாகப் பெருசாகி, மொத்தமாக வெடிச்சு இறந்து போனது. அதற்குப் பிறகு, அந்தக்கண் அப்படியே சுருங்கிச் சின்னதாக ஆயிடுச்சு. ஒரு சின்னப் பையன் எத்தனை அடியைத்தான் வாங்குறது, தாங்குறது?

எப்பத்தான் நான் என் வாழ்க்கையைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன்? எழுதுறதைத் தாண்டி எனக்கு வேறு என்னென்ன திறமைகள் இருந்தன? சொல்கிறேன் அடுத்தவாரம்.

தொடர்புக்கு: ashokbala1387@gmail.com பேச: 9626261773


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (3) பார்வையைப் பறித்த முனி: S. அஷோக் பாலா”

இதனை படிக்கிற போது இதுபோன்ற துண்பத்தை சந்தித்திருப்பார்கள் இன்னும் எத்தனைபேர் என்று சிந்திக்க தோன்றுகிறது

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.