Categories
தொடர் Uncategorized

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (2) அந்தக் கடைசிப் பேருந்து S. அஷோக் பாலா

கூரை வீட்டிலிருந்து மாடி வீட்டிற்குக் குடிபுகுந்தோம். வீடு பெரிதாய் இருந்தது, மின்சாரம் இருந்தது; ஆனால் பழைய சந்தோஷம் இல்லை.

முந்தைய பகுதி

விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

சூறாவளியும் சுனாமியும் என் வாழ்க்கையில் ஒரே நேரத்தில் தாக்கிய போதுதான், என் ஊரிலேயே இடம் வாங்கி மாடி வீடு கட்டிக் கொண்டிருந்தோம்! மதுரையில் இருக்கும் பிரபல கண் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு பரிசோதித்து விட்டு, “பிறவியிலேயே பார்வை தெரியாத கண்ணை எதுவும் செய்ய முடியாது. இப்போது அடிபட்ட கண்ணுக்கு மருந்து தருகிறோம், சரியாகிவிடும்” என்று சொல்லி அனுப்பினார்கள்.

இதற்கிடையில் நான் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆறாம் வகுப்பு படிப்பதற்காக ஒரு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். என் ஊரில் இருந்து ஒரு கிலோமீட்டர் சைக்கிளில் சென்று, மெயின் ரோட்டில் பஸ் ஏறி அந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அந்தப் பள்ளியில் தான் என் அக்கா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

கனவுகள் அற்றுப் பிறந்த குழந்தைதான் நான்; ஆனால் எண்ணற்ற கனவுகளை வளர்க்கவும் சுமக்கவும் துவங்கினேன். I.P.S. படிக்கும் கனவோடு ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். அந்தப் பள்ளியில் சேர்வதற்கு ஒரு தேர்வு வைக்கப்பட்டது; 10 மதிப்பெண்ணுக்கு நான் ஒன்பது மதிப்பெண்கள் எடுத்தேன். அங்கிருந்த ஆசிரியர் சொன்னார், “இவன் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் கொஞ்சம் சுமாராக இருக்கிறான்” என்று. எந்த ஆசிரியர் எனக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை என்றாரோ, அதே ஆசிரியரே என்னை நான் பள்ளிக்குச் சென்ற பத்து நாட்களிலேயே இங்கிலீஷ் குரூப் லீடராக நியமித்தார்.

அது பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி. காலையிலேயே பிரேயர் நடக்கும் போது, ஒவ்வொரு வகுப்பு லீடரும் முன்வந்து வணக்கம் வைத்து, தன் வகுப்பில் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்ற கணக்கைச் சொல்வார்கள். அதைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்; நானும் அப்படிச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். மதிய நேரங்களில் என் கண்ணுக்குச் சொட்டு மருந்து இடவேண்டும் என்பதால், என் அக்காவின் வகுப்பிற்குச் சென்று அங்கு மருந்து கண்ணுக்குப் போட்டுவிட்டு வருவேன். ஆனால் எனக்கு கண் பார்வையைப் பற்றி எந்தப் பயமும் இல்லை; “நமக்குத் தான் நல்லாத் தெரிகிறதே” என்றுதான் நினைத்தேன். சில வாரங்களிலேயே நான் க்லாஸ் லீடர் ஆனேன். பிரேயரில் வணக்கம் வைத்து, என் வகுப்பில் வந்தவர்களின் கணக்கைக் கெத்தாகச் சொன்னேன்.

பள்ளியில் இடைத்தேர்வு வந்தது, நன்றாகப் படித்தேன். முதல் நாள் தேர்வுக்கான வினாக்கள் கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்துகள் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் சமாளித்து முதல் நாள் தேர்வு எழுதினேன். அடுத்த நாள் தேர்வு, பார்வையில் பிரச்சனை ஏற்படுகிறது என்று புரியத் துவங்கியது. அந்த நாள் தேர்வையும் முடித்துவிட்டேன். மூன்றாம் நாள் தேர்வை எழுத அமர்ந்த போது, கரும்பலகையிலிருந்து எழுத்துகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. பக்கத்தில் இருப்பவர்களைக் கேட்டுக் கேட்டு எழுதினேன். அவர்களும் கேட்ட எல்லாவற்றுக்கும் பதில் சொல்லவில்லை. முதல்முறையாக எனக்குக் கண் தெரியவில்லை என்று அழுதேன்; தேர்வைப் பாதியுடன் முடித்துவிட்டேன்.

பள்ளி முடிந்து பேருந்து நிலையத்தில் வந்து பேருந்துக்காகக் காத்திருந்தேன். தூரத்தில் ஒரு லாரி வருவது போல் இருந்தது, நின்று கொண்டிருந்தேன். என் அருகே வந்து நின்ற போதுதான் தெரிந்தது அது நான் ஏற வேண்டிய பேருந்து என்று. பக்கத்தில் இருந்தவன் சொன்னான், “டேய் உன்னுடைய பஸ் வந்து நிக்குது, ஏறலையா?” என்றான். உடனே நான் ஏறியிருந்தால், எனக்குக் கண் தெரியவில்லை என்று அவன் நினைத்துவிடுவான் என்று, “தெரியும்டா, அடுத்த பஸ்ல போகலாம் என்றுதான் நிற்கிறேன்” என்று சொன்னேன். இதைத்தான் ‘பெருமைக்கு எருமை மேய்ப்பது’ என்று சொல்வார்களோ! அடுத்த பேருந்துக்காகக் காத்திருந்தேன்; கவனமாய்ப் பார்த்துப் பேருந்தில் ஏறினேன். சத்தியமாய் எனக்குத் தெரியாது, அதுதான் கடைசியாக அந்தப் பள்ளியில் இருந்து ஏறும் பேருந்து என்று, அதுதான் பள்ளிக்கும் எனக்குமான கடைசிப் பயணம் என்று!

வீட்டுக்கு வந்தேன்; அடுத்த நாள் தேர்வுக்காகப் புத்தகத்தை எடுத்துப் படிக்கப் பார்த்தேன். எந்த எழுத்தும் தெரியவில்லை, அழுதேன். அப்போது அழுதேன், சரி… இப்போதும் இதை எழுதும் போது என் கண் கலங்குகிறது, ஏன்? தூசி விழுந்துவிட்டது போலும், சரி விடுங்கள். அன்று இரவே மதுரைக்குப் புறப்பட்டோம்; கண் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு எல்லாப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு, “இனி எதுவும் எங்களால் செய்ய முடியாது” என்றார்கள். அப்படி ரத்னா என்ற டாக்டர் சொன்ன போது, என் அம்மா “ஏதாவது பண்ணுங்க, எனக்கு இருக்கிற ஒரே புள்ளை” என்று கண்ணீர் விட்டார். அந்த டாக்டர் நீண்ட யோசனைக்குப் பிறகு, “பிறவியிலேயே பார்வை தெரியாத கண்ணில் ஆபரேஷன் செய்து பார்க்கலாம்; முழுமையான பார்வை வராது, இருப்பினும் பாதி பார்வையாவது வரலாம்” என்றார்!

ஆபரேஷனுக்குத் தயாரானேன். ஆபரேஷன் நடந்தது, பார்வையும் தெரிந்தது; இடது கண்ணின் பார்வை முழுமையாய்ப் பறிபோனது. நான் எப்போதுமே ஓடி ஆடி விளையாடும் ஒருவன். ஆபரேஷன் முடிந்து பார்வை வந்த சில நாட்களிலேயே சைக்கிள் ஓட்டுவது, ஓடி ஆடி விளையாடுவது என்று சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு மாதத்திலேயே பார்வை மீண்டும் தெரியாமல் போனது. மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றோம். மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். என்ன, “மீண்டும் முதலில் இருந்தா!” அப்படின்னு நீங்க நினைக்கிறது புரியுது. ஆமாம், அப்படித்தான் இருந்தது. அதேபோல் ஆபரேஷன் நடந்தது, 90% பார்வை வந்தது. இம்முறை கவனமாய் இருந்தேன். ஆனால் அந்தப் பார்வையை வைத்து என்னால் படிக்க முடியவில்லை; பெரிய எழுத்துகள் தெரியும், புத்தகத்தில் இருக்கும் எழுத்துகள் தெரியாது.

கூரை வீட்டிலிருந்து மாடி வீட்டிற்குக் குடிபுகுந்தோம். வீடு பெரிதாய் இருந்தது, மின்சாரம் இருந்தது; ஆனால் பழைய சந்தோஷம் இல்லை. இரண்டாவது ஆபரேஷன் நடந்த போது, “நரம்புகளை ஆயில் வைத்து ஒட்டியிருக்கிறோம், மூன்று மாதம் கழித்து ஒரு சிறிய ஆபரேஷன் செய்து அந்த ஆயிலை எடுக்க வேண்டும்” என்றார்கள். ஆனால் ஒரு வருடம் கழித்துதான் மருத்துவமனைக்குச் சென்றேன்; ஆபரேஷன் செய்து அந்த ஆயிலை எடுத்தார்கள். அதை எடுத்த பிறகு பார்வை எனக்குக் கொஞ்சம் குறைந்தது. இருப்பினும் அதோடுதான் என் நாட்கள் நகர்ந்தன. என்னோடு படித்தவர்கள் எல்லாம் பள்ளிக்குச் செல்வார்கள், நான் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

ஒருமுறை என் கடை வாசலில் நின்று எல்லோரும் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் என் அப்பாவிடம் என்ன கேட்டேன் என்று ஞாபகம் இல்லை; “நானும் பள்ளிக்கு போகணும்” என்று கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். அப்போது என் அப்பா அழுதுவிட்டார். நான் என் அப்பாவைக் கட்டிப்பிடித்து அழுதுவிட்டேன். என் அப்பா எப்போதுமே ஒரு கம்பீரமாய் இருப்பார், அவர் பெரிய மீசையும் வைத்திருப்பார்; அவரின் கண்ணீரை நான் முதல்முறையாகப் பார்த்தேன், அதுவும் எனக்காக வந்த போது!

எனக்கு 13 வயது இருக்கும் போது என் அக்கா, “தஞ்சாவூரில் ஒரு பள்ளிக்கூடம் இருப்பதாகச் சொல்கிறார்கள், அங்கு படிக்க வைக்கலாம்” என்றார்! படிக்க வேண்டும் என்று ஆசையோடு இருந்த நான் அதைக் கேட்டு என்ன சொன்னேன்? என் அப்பா என்ன சொன்னார்? சொல்கிறேன் அடுத்தவாரம்.

தொடர்புக்கு: ashokbala1387@gmail.com

பேச: 9626261773


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.