Categories
தொடர் விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

எனக்கு என் தாய்மாமா வைத்த பெயர் அசோக். சபரிமலைக்கு மாலை போட்டு வேண்டிக்கொண்டதால் ஐயப்பனே வந்து பிறந்துவிட்டார் என்று என் அப்பா எனக்கு வைத்த பெயர்தான் ஐயப்பன். ஆனால், என்னை எல்லோரும் அசோக் என்றுதான் அழைப்பார்கள்; அதுதான் எனக்கும் பிடிக்கும்.

ஆரம்பிக்கலாமா? எங்கிருந்து துவங்குவது? கதை என்றால் எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கலாம், இது நிஜம். நான் உயிரோடு புதைத்த என் கனவுகளை, என் ஆசைகளை, நான் இழந்தவைகளை, என்னையும் சேர்த்தே நான் புதைத்தவைகளை மீண்டும் தோண்டி எடுக்கிறேன்.

என்ன ஆச்சரியம்! அத்தனைக்கும் உயிர் இருக்கிறது! அதனால்தானோ இதை எழுதுகையில் எனக்கு வலிக்கிறது! முடிந்தவரை சுவாரஸ்யம் குறையாமல் நீங்கள் வாசிக்கத் தருகிறேன் என்னையே! வாசியுங்கள்.

அஷோக் பாலா
அஷோக் பாலா

எந்தக் குழந்தையும் கனவுகளோடு பிறப்பதில்லை, அதற்கு நானும் விதிவிலக்கில்லை. அப்படி ஒரு குழந்தையாய், என் அம்மா பிறந்த ஊரில், என் தாத்தா வீட்டில், மருத்துவமனைக்குக்கூடச் செல்லாமல் நான் பிறந்தேன். “பூமி பார்த்துப் பிறந்த புள்ள, வலது கண்ணுல ஒளி அடிக்குது, அதிர்ஷ்டக்காரக் குழந்தை” என்று எல்லோரும் சொன்னாங்களாம்! கொய்யால… அவங்க மட்டும் என் கையில கிடைச்சா!

சரி, நான் இப்போ என் குடும்பத்தையும் என் ஊரையும் அறிமுகம் செய்கிறேன். என் அப்பா பெயர் சங்கரன். அவரைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள ஒரு சிறிய செய்தி: அப்பாவுக்கு 13 வயது இருக்கும்போது அவர் அப்பா இறந்துவிட்டாராம். என் அப்பாவின் அம்மா, அக்கா, இரு தங்கை என்று அவர்களுக்காக அந்த வயதிலேயே வேலைக்குச் செல்லத் தொடங்கினாராம். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்.

என் அம்மா பெயர் சுந்தரி. தன் கணவனின் பெயரைச் சொல்வதுகூடப் பாவம் என்று இன்றுவரை என் அப்பாவின் பெயரை என் அம்மா சொல்வதே இல்லை; வீட்டுக்குக் கணக்கெடுக்க வந்து யாராவது கேட்டாலும் அவர் சொன்னதில்லை. ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.

என் அக்கா பெயர் அபிராமி, மூன்று பட்டங்கள் பெற்றவர். அப்பாவின் அம்மா (பாட்டி) இன்று உயிரோடு இல்லை. இதுதான் என் குடும்பம்.

எனக்கு என் தாய்மாமா வைத்த பெயர் அசோக். சபரிமலைக்கு மாலை போட்டு வேண்டிக்கொண்டதால் ஐயப்பனே வந்து பிறந்துவிட்டார் என்று என் அப்பா எனக்கு வைத்த பெயர்தான் ஐயப்பன். ஆனால், என்னை எல்லோரும் அசோக் என்றுதான் அழைப்பார்கள்; அதுதான் எனக்கும் பிடிக்கும்.

என் ஊர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாண்டிகோட்டகம். 40-க்கும் குறைவான வீடுகளைக் கொண்ட ஒரு அழகான கிராமம். அத்தனை குடும்பங்களும் சொந்தங்கள்தான். அங்காளி, பங்காளி, மாமா, மச்சான் என்று உறவுகளால் பின்னப்பட்ட ஊர். எங்க ஊரில்தான் என் அப்பா மளிகைக் கடை வைத்திருக்கிறார். எங்கள் ஊரில் ஒரு ரைஸ் மில், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்கப்பள்ளி இருக்கிறது.

இதெல்லாம் சரி, விஷயத்தைச் சொல்லு அப்படின்னு நீங்க நினைக்கிறது புரியுது. உங்களை நான் தான் கைப்பிடித்துக் கூட்டிட்டுப் போறேன் என் வாழ்க்கைப்பாதையில். அதனால சுத்தி வளைச்சு அழைச்சிட்டுப் போவேன், ஆனா சரியாத்தான் போவேன்.

மின்சாரம்கூட இல்லாத ஒரு கூரை வீட்டில்தான் நான், அக்கா, அப்பா, அம்மா, பாட்டி என்ற ஐந்து பேரும் இருந்தோம். ஆனாலும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. என் மூன்று வயதிலேயே ஆங்கிலப் பள்ளிக்கு படிக்கச் சென்றேன். அந்தப் பள்ளி எங்கள் ஊரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்தது. ஒன்றாம் வகுப்பிற்கு என் ஊரிலேயே இருக்கும் பள்ளியில் சேர்ந்தேன். படிப்பைப் பொறுத்த அளவு நான் நன்றாகப் படிப்பவன்தான்; சுட்டியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பேன்.

பக்கத்து வீட்டில் டிவி பார்ப்பது வழக்கம். அப்படிப் பார்த்த படங்களில் எந்தப் படம் என்று நினைவில்லை, ஆனால் நான் ரசித்த, நான் நேசிக்கத் துவங்கிய, எனக்குப் பிடித்த நடிகர் கேப்டன் விஜயகாந்த். இரண்டாம், மூன்றாம் வகுப்பு படிக்கும்போது கேப்டன் போலீஸாக நடித்த படத்தைப் பார்த்ததிலிருந்து நான் I.P.S. படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எல்லாம் நன்றாகத்தான் சென்றது, நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது… பள்ளியில் விளையாட்டு நேரத்தில் விளையாடினோம். “பே பே என்ன பே? தூக்கிப் போட்டா பிடிக்கிற பே! ஆளக் கண்டா அடிக்கிற பே!” அப்படி ஒரு விளையாட்டு. கீழே கிடக்கிற காகிதத்தை எல்லாம் எடுத்துச் சுருட்டி, சணலில் கட்டி, ஆளப் பார்த்து அடிக்கிறது. என் வாழ்க்கையை மொத்தமாகச் சுருட்டி, அவிழ்க்க முடியாத கயிறை வச்சுக் கட்டித் தூக்கிப் போடப்போற விளையாட்டுன்னு அப்போ எனக்குத் தெரியலை!

அந்தப் பந்தை நான் கீழே குனிஞ்சு எடுக்கையில, இன்னொருத்தனும் ஓடிவந்து அந்தப் பந்தை எடுக்கக் கையை நீட்டினான். அவன் நீட்டுன கை விரல் என் இடது கண்ணுல குத்திடுச்சு. குத்துனது அவன் விரல்தான், கண்ணு ரத்தமா சிவந்திடுச்சு. ஆனால், அது ஒரு பெரிய விஷயமா தெரியலை! அடுத்த நாள், தாய்ப்பால் வாங்கி கண்ணுல ஊத்துனா சரியாயிடும்னு கண்ணுல ஊத்தினாங்க. அதுக்குப்பிறகு அது சரியாயிடுச்சு, அது மறந்து போயிடுச்சு.

சில மாதங்களுக்குப் பிறகு, என் இடது கண்ணுல கருவிழியில வெள்ளையா ஒரு சின்னப் புள்ளி தெரியுதுன்னு, திருத்துறைப்பூண்டியில் இருக்கிற ஒரு கண் மருத்துவரைச் சென்று பார்த்தோம்! டாக்டரை நாம பார்க்கப் போறதே, நம் காயத்துக்கு மருந்து கொடுப்பாரு, நாம சரியாகிவிடுவோம் என்று நம்பித்தான். அப்படித்தான் அந்த வயசுல நானும் நம்பிப் போயிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனா, என் அம்மா கண்டிப்பா அப்படி நினைச்சுத்தான் வந்தாங்க!

டாக்டர் என் வலது கண்ணை மூடிக்கிட்டு, இடது கண்ணால போர்டுல தெரியுற எழுத்தைப் படிக்கச் சொன்னார். எல்லா எழுத்தையும் படிச்சேன்; என் கண்பார்வைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. டாக்டர் இப்போ இடது கண்ணை மூடிக்கிட்டு, வலது கண்ணால படிக்கச் சொன்னார். இங்கதான் ஒரு ட்விஸ்ட், என் வாழ்க்கையில ஒரு டர்னிங் பாயிண்ட்… நான் படிக்கலை, அந்தக் கண்ணுக்கு எதுவும் தெரியலை. அப்பதான் டாக்டர் சொன்னாரு, ஒரு கண்ணு பிறவியிலிருந்தே பார்வையில்லாம இருக்குன்னு!

பத்து வருஷமா எனக்கு ஒரு கண்ணே தெரியலை என்கிறது தெரியாம வளர்ந்த முட்டாள்தான் நான். என் காயத்துக்கு மருந்து கொடுக்க வேண்டிய டாக்டர், எனக்கு இன்னொரு காயம் இருக்குன்னு சொல்லிட்டாரு. எந்த வலது கண் “ஒளி அடிக்குது”ன்னு சொன்னாங்களோ, அந்தக் கண்ணுல ஒளியே இல்லை! எப்படி எனக்கு ஒரு கண்ணு தெரியலை என்கிறது எனக்குத் தெரியாம போச்சுன்னு, இப்ப வரைக்கும் எனக்குத் தெரியலை.

ஐயையோ… ஏதும் சோகமா எழுதுறேன் போல! சரி, உங்களுக்கு இன்னொரு விஷயத்தைச் சொல்றேன். நான் குழந்தையா இருப்பதிலிருந்து எனக்கு ஒரு பழக்கம் உண்டு… விரல் சப்பும் பழக்கம். என் வலது கை கட்டைவிரலை வாயில வச்சுக்கிட்டு, நாலு விரல்களால வலது கண்ணை மூடி இருப்பேன். ஒருவேளை அந்தக் கண்ணு தெரியலை அப்படிங்கறதுனாலதான் நான் அப்படிப் பண்ணினேனா? அதுவும் தெரியலை. எத்தனை தெரியலை! மொத்தமா கண்ணு தெரியலை! விரல் சப்புற குழந்தைகள் அறிவா இருக்குமாம், நம்புங்க… நான் 13 வயசு வரைக்கும் விரல் சப்புனவன்.

சரி, நீங்க கேக்குறது புரியுது. சுனாமி, சூறாவளி எல்லாம் வாழ்க்கையில மொத்தமா வந்து அடிச்சிருக்கு, அடுத்தது என்ன நடந்தது என்றுதானே? அடுத்த இதழில் சொல்கிறேன்.

***திருவாரூர் மாவட்டம், திருத்துறை்ப்பூண்டி வட்டம், பாண்டி கோட்டகம் என்ற சிற்றூரைச் சேர்ந்த அஷோக் பாலா என்கிற ஐயப்பன் ஓர் இளங்கலைப் பட்டதாரி. வளரிளம் பருவத்தில் தன் கண் பார்வையை இழந்தவர். தொடுகை புலனக்குழுவில் எழுதிய பல சமூக அக்கறை கொண்ட கட்டுரைகளின் வழியே அறியப்பட்டவர். தற்போது தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். ***S. அசோக் பாலா

தொடர்புக்கு: ashokbala1387@gmail.com

பேச: 9626261773


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.