
சென்ற 24.06.2026 அன்று மதியம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் புத்தக வெளியீட்டு அரங்கில், எனது இரண்டு ஆண்டு கால உழைப்பு “தளிர்களின் பயணம்” என்னும் சிறுகதைத் தொகுப்பாக வெளிச்சம் கண்டது. என் வாழ்நாளின் மிக முக்கிய மைல்கல்லான இந்நிகழ்வு குறித்தும், இதில் பங்கேற்று என்னை வாழ்த்திய ஆளுமைகள் குறித்தும் உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) “அனைவருக்குமான அணுகல் தன்மை கொண்ட நூல்களை உருவாக்குதல்” என்ற உன்னதக் குறிக்கோளை நெஞ்சில் தாங்கி—ஒரே மேடையில் அச்சுப் பதிப்பு, பிரெய்ல் வடிவம் மற்றும் மின்னூல் (E-Book) என மூவகைத் தளங்களிலும் எனது தளிர் தன் பயணத்தைத் தொடங்கியது.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு. கரன் கார்க்கி அவர்கள் அச்சுப் பிரதியை வெளியிட, அதன் முதல் பிரதியைப் புனித லூயிஸ் பள்ளியின் அருட்சகோதரர் சார்லஸ், ஆசிரியர்கள் திரு. இருதயராஜ், திரு. லட்சுமி நாராயணன், நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் து. தங்கராசன், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. ஜெயபாலன், எனக்குத் தூண்டுகோலாய் விளங்கும் எனது நெறியாளரும் இணைப் பேராசிரியருமான முனைவர் கா. செல்லதுரை மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் சே. திவாகர் உள்ளிட்ட சான்றோர்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
பிரெய்ல் பதிப்பினைப் பிரெய்ல் பயிற்றுநரும் கணித ஆசிரியருமான திரு. லட்சுமி நாராயணன் அவர்கள் வெளியிட, இணைப் பேராசிரியர் முனைவர் சே. திவாகர் அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
கல்லூரி முதல்வர் முனைவர் து. தங்கராசன் அவர்கள் மின்னூலை வெளியிட, அதற்கான சிறப்பு அறிமுகக் காணொளியும் திரையிடப்பட்டது. இந்தியா, அமெரிக்கா (US), இங்கிலாந்து (UK), ஜப்பான், கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் வாசகர்களை அமேசான் கிண்டில் மற்றும் பேஹிப் (Payhip) தளங்களின் வாயிலாக இம் மின்னூல் சென்றடையும் வகையில் உலகளாவிய வெளியீடாக இது அமைந்தது.
பேரா. திவாகர் அவர்களின் பேராதரவோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ‘ஒலி விவரணை’ (Audio Description) வசதியுடன் கூடிய அட்டைப்பட விளக்கமும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நூல் பத்து வெவ்வேறு சூழல்களில் வேரூன்றி நிற்கும் குழந்தைகளின் வாழ்வியலைச் சித்திரமாக்குகிறது. அவர்களின் அகப்போராட்டங்கள், கள்ளமில்லாச் சிரிப்பு, உதிரும் கண்ணீர் என அத்தனையையும் எழுத்துக்களில் காட்சிப்படுத்தியிருக்கிறேன். எழுத்தாளர் திரு. கரன் கார்க்கி அவர்கள் தனது வாழ்த்துரையில் உதிர்த்ததைப் போல, “என் கதைகள் கடலின் எழுச்சியால் பிறந்த ஆழிப்பேரலையோ, காற்றின் சீற்றத்தால் வந்த சூறாவளியோ அல்ல; அமைதியான சிறு குளத்தில் எழும் சலசலக்கும் சிற்றலைகள்.” நாம் அன்றாடம் கண்டும் காணாமல் கடந்து செல்லும் எளிய மனிதர்களின் பக்கங்களை உங்களைச் சிந்திக்க வைக்க முயன்றிருக்கிறேன்.

சாலையோரம் நடந்து செல்லும்போது, தூய்மைப் பணியாளரின் விரல் பிடித்து, வண்டியின் பின்னே ஓடிவரும் அந்தப் பிஞ்சு முகத்தை என்றேனும் கவனித்திருக்கிறீர்களா? கடற்கரை மணலில், குடிசைக்கு முன்னே கற்பனைக் கோட்டை கட்டி விளையாடும் மழலையின் சிரிப்பை ரசித்திருக்கிறீர்களா? நம் வீட்டுச் சிறகுகள் ஏதோ ஒன்றை ஆழமாகச் சிந்திக்கும்போது, அந்தச் சின்னஞ்சிறு மூளைக்குள் ஓடும் பெரிய உலகத்தை எட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அவற்றையெல்லாம் நீங்கள் உற்றுக் கவனித்தால், அந்தக் குழந்தைகள் இந்தச் சமூகத்திற்கு ஏதோ ஒரு செய்தியைச் சொல்ல வருகிறார்கள் என்பது புரியும். அதைத்தான் என் சிந்தையில் ஓடிய எண்ண ஓட்டங்களாக உங்களுக்கு அளித்திருக்கிறேன். குழந்தைகள் மற்றவர்களைக் கவர்வதற்காக வார்த்தைகளைத் தேடிப் பிடித்துப் பேசுவதில்லை. அவர்களின் மொழிக்கு எந்த ஒப்பனையும் தேவையில்லை. ஆகையால்தான், இந்த நூலிலும் நான் கவர்ச்சியான வார்த்தைகளையும், அழகியல் சார்ந்த பகட்டான வார்த்தைகளையும் தவிர்த்திருக்கிறேன்.
பிஞ்சுகளின் மனதிலோடுவதை என் பேனாவின் வழியே எளிய மொழியில் அப்படியே கடத்த முயன்றிருக்கிறேன்.

இந்நூல் வெளிவரப் பக்கபலமாய் நின்ற அத்தனை நல்நெஞ்சங்களுக்கும், விழாவில் பங்கேற்று சிறப்பித்த என் சக ஆய்வாளர்களுக்கும் இதயபூர்வமான நன்றிகள். நிகழ்வை மிக அழகாகத் தொகுத்து வழங்கிய நண்பர் சிவமணி, வரவேற்புரை ஆற்றிய தோழி காயத்ரி ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்.
நிகழ்ச்சியை எவ்விதத் தொய்வுமின்றி மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்களான நண்பர்கள் யோகேஷ், முகமது அர்ஷத், ஹேமலதா, நித்யஸ்ரீ ஆகியோரின் உழைப்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அதேபோல், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் எனக்குப் பல்வேறு வழிகளில் கைகொடுத்து உதவிய நண்பர்கள் ரோகித், சரண்ராஜ், காயத்ரி, தீபிகா உள்ளிட்ட தோழமைகளுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
மேலும், எனக்காகத் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு, அரங்கம் நிறைந்து வாழ்த்திச் சென்ற பேராசிரியர் திரு. ரகுராம், பேராசிரியை திருமதி. ரத்னா அவர்களுக்கும், விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய உறவினர்கள், நலம் விரும்பிகள் என அகத்தில் போற்றிய ஒவ்வொருவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
அனைவரும் இந்த நூலை வாங்கி வாசித்து ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.
அச்சுப் பதிப்பு மற்றும் பிரெய்ல் புத்தகங்களுக்கு என்னை 9884207199 என்ற எண்ணில் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.
மின்னூலை (eBook) வாங்குவதற்கான உலகளாவிய சுருக்கிகள் (Purchase Links) கீழே இணைக்கப்பட்டுள்ளன:
Purchase Links: eBook
India (KINDLE):
US (KINDLE US):
UK (KINDLE UK):
JAPAN (KINDLE JP):
CANADA (KINDLE CA):
WORLDWIDE (PAYHIP):
வாசிப்போம்… தளிர்களின் பயணத்தில் நாமும் கை கோர்ப்போம்!
நன்றி
அன்புடன்
கார்த்திக்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
