Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் கல்வி கல்வி தொடர்பான அரசாணைகள் சிறப்புப் பள்ளிகள்

கல்வி: பெருமை மகிழ்ச்சிதான், பெருமிதம் வேண்டும்!

ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்காக மொத்தம் 10 சிறப்புப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவற்றுள் பூவிருந்தவல்லி, திருச்சி மற்றும் தஞ்சை ஆகிய மூன்றும் மேல்நிலைப்பள்ளிகள். கடந்த 2014-ஆம் ஆண்டு தஞ்சைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போதிலிருந்த்ஏ அந்தப் பள்ளியில் பாடப்பிரிவுக் குறியீடான 2802 கற்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அந்தப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளியல் மற்றும் கணினிப் பயன்பாடு பாடங்களாக இருக்கின்றன. கணினிப் பயன்பாடு கற்பிக்கும் ஆசிரியர்ப் பணியிடம் அன்றிலிருந்தே காலியாகவே வைக்கப்பட்டுள்ளது என்பதே ஒரு முரண். கணினிப் பயன்பாடு வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்திய வரலாறு மற்றும் பண்பாடு பாடத்தை ஒரு தெரிவாகக் கொள்ள முடியும். இது அந்தப் பள்ளியின் சிறப்பம்சம்.

ஏன் இது சிறப்பம்சம் என்றால், பூவிருந்தவல்லி மற்றும் திருச்சி பள்ளிகளில் பாடப்பிரிவுக் குறியீடான 2804-ன்படி, தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளியல் மற்றும் அரசியல் அறிவியல் பாடங்கள் என ஒரே ஒரு பாடப்பிரிவு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில்தான் வரவேற்கப்பட வேண்டிய மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் அந்த

அனுமதி ஆணை

வெளியாகியுள்ளது.

செய்தியைத் தாங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தித்தாள்

அந்த ஆணையின்படி, பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களிடையே கணினி கற்கும் ஆர்வம் அதிகரித்து வருவதாலும், கணினிப் பயன்பாட்டின் அவசியம் கருதியும் தஞ்சைப் பள்ளியைப் போன்றே, பூவிருந்தவல்லி மற்றும் திருச்சி பள்ளிகளில் பாடப்பிரிவுக் குறியீடான 2802 கற்பிக்க இந்தக் கல்வியாண்டு (2026-27) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த இரண்டு பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களும் கணினிப் பயன்பாடு பாடத்தைக் கற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாம் முன்னரே சொன்னதுபோல், இது வரவேற்புக்குரிய ஆணைதான். ஆனால், ஏற்கனவே இருக்கிற பாடப்பிரிவுக் குறியீடான 2804-ஐப் பற்றி ஆணையில் எவ்விதக் குறிப்பும் இல்லை. 2804-க்குப் பதிலாக 2802 கற்பிக்கப்பட வேண்டுமா, அல்லது இரண்டும் மாணவர்களுக்கான ஒரு தெரிவாக இருக்கலாமா என்பது பற்றிய விளக்கம் அந்த ஆணையில் இல்லை.

விளைவு, இரண்டு பள்ளித் தலைமை ஆசிரியர்களும் வெவ்வேறு முடிவுகளை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆணையில் சொல்லப்பட்டுள்ளதுபோல், கணினி கற்கும் ஆர்வம் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களிடம் அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். இது சார்ந்து தமிழகமெங்கும் உள்ள பார்வைத்திறன் குறையுடைய சிறப்புப் பள்ளிகளில், 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுக்கே அவர்களுக்கென்று சொந்தமாக மடிக்கணினி வழங்குவதோடு, தொடந்து கணினி வகுப்புகளையும் நடத்திவரும் கர்ணவித்யா அமைப்பின் முன்னெடுப்பு போற்றுதலுக்குரியது.

மாணவர்களிடையே இருக்கிற கணினி தொடர்பான ஆர்வத்தால் சில பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பில் இளங்கலைக் கணினிப் பயன்பாடு (BCA) பாடத்தைத் தெரிவு செய்ய விரும்புகின்றனர். ஆனால், தங்கள் மேல்நிலைக் கல்வியில் கணினிப் பயன்பாடு (Computer Application) எடுத்துப் படிக்காததால் அவர்களுக்கு பிசிஏ (BCA) மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, மேல்நிலைக் கல்வியில் கணினிப் பயன்பாடு பாடம் கற்றல் என்பது பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் கல்வியில் ஒரு முக்கியமான முன் நகர்வுதான்.

அதற்காக அரசியல் அறிவியல் பாடத்தை முற்றிலும் கைவிடுவது பொருத்தமானதாக இல்லை.

அரசியல் அறிவியல் பாடம் கைவிடப்பட்டதற்கு மாணவர்கள் அப்பிரிவைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதைக் காரணமாகச் சொல்லலாம். இந்த இரண்டு பள்ளிகளிலுமே அரசியல் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்ப் பணியிடங்கள் சில ஆண்டுகளாகவே காலியாக இருக்கின்றன என்பதும் கூடுதல் காரணங்கள். ஆனால், அதற்காகவெல்லாம் அரசியல் அறிவியல் பாடத்தைக் கைவிடுவது, அதன் முக்கியத்துவம் குறித்தும், பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் சமூகம்சார் புரிதல்களில் அது ஏற்படுத்தும் ஆழ்ந்த தாக்கம் குறித்தும் சிந்திக்காமல், பொத்தாம் பொதுவாக யோசிப்பதன் விளைவேயாகும்.

எதற்கெடுத்தாலும் போட்டித் தேர்வுகள் என்றாகிவிட்ட இன்றைய சூழலில், அரசியல் அறிவியல் பாடம் என்பது தவிர்க்க இயலாதது. உயர்கல்வியில் நுழையும் ஒரு சராசரி மாணவனின் சமூகம் மற்றும் அரசியல் பார்வைகளைச் செதுக்குவதில் அந்தப் பாடத்த்இன் பங்களிப்பு முக்கியமானது.

மேலும், பிற பாடங்களைப் போல் செய்முறைத் தேர்வில் பிறரைச் சார்ந்திருக்கும் அவசியம் ஏதுமின்றி, முழுக்க முழுக்க கருத்தியல் சார்ந்து படிக்கவும் எழுதவும் இயலும் என்பதால், பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் தற்சார்ப்உ அதிகரிக்கும், தன்னம்பிக்கையும் மேம்படும்.

எனவே, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என்றாலும்கூட பாடப்பிரிவுக் குறியீடு 2804 கைவிடப்படாமல் அதுவும் மாணவர்களுக்கான ஒரு கூடுதல் தெரிவாக ஒவ்வொரு ஆண்டும் தொடர்வதை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களை செயல்முறை ஆணைகளாக வெளியிட வேண்டும்.

அத்தோடு, தொடர்ந்து சிறப்புப்பள்ளிகளில் காலியாக உள்ள இரண்டு அரசியல் அறிவியல் முதுகலை ஆசிரியர்ப் பணியிடங்கள் மற்றும் தஞ்சைப் பள்ளியில்் தொடக்கத்திலிருந்தே காலியாக உள்ள கணினிப் பயன்பாடு ஆசிரியர்ப் பணியிடம் நிரப்பப்படுவதற்கு ஏதுவாக, தகுதியுடைய ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கிடவோ, அல்லது ஆசிரியர்த் தேர்வு வாரியத்துக்குப் பணிநியமனம் கோரி பரிந்துரைக்கப்படவோ வேண்டும்.

கணினிப் பயன்பாடு பாடத்தினை பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் கற்றல் தேவைகளை அறிந்து, திரைவாசிப்பான்கள் (Screen-Readers) மற்றும் விசைப்பலகைக் குறுக்குவழிகளுடன் இணைத்துக் கற்பித்தலுக்கான நெறிமுறைகளை வகுத்து அவை தொகுக்கப்பட வேண்டும்.

வெளியிடப்பட்டுள்ள ஆணையரின் ஆணையில், கணினிப் பயன்பாடு கற்பிக்கப்போகும் ஆசிரியர்கள் குறித்த எவ்வித அறிவுறுத்தல்களும் இடம்பெறவில்லை. ஏற்கனவே தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள கணினிப் பயிற்றுநர்கள்தான் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றால், அவர்களுக்கான உரிய பயிற்சிகளைக் கணினி பயன்பாட்டுத் துறையில் நிபுணர்களாகத் திகழும் பார்வையற்றவர்களைக்கொண்டு, ஆம்! பார்வையற்றவர்களை மட்டுமே கொண்டு பணியிடைப் பயிற்சிகள் அவ்வப்போது ஒருங்கு செய்யப்பட வேண்டும்.

கணினிப் பயன்பாடு பாட ஆசிரியர்ப் பணியிடங்கள் இந்த இரண்டு பள்ளிகளிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும். அப்படித் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக வேறெந்த ஆசிரியர்ப் பணியிடங்களும் திரும்ப (Surrender) அளிக்கப்படலாகாது.

கணினிப் பயன்பாடு பாடத்துக்கான பிரெயில் புத்தகங்கள், மேடுறுத்தப்பட்ட (Embossed) விளக்கப்படங்களுடன் கூடிய வழிகாட்டு புத்தகங்கள் உடனடியாக அச்சடித்து வழங்கப்பட வேண்டும். அவற்றில் காணப்படும் சிறப்புக் குறியீடுகள் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

இவை அத்தனையும் நிகழ்ந்தால் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள ஆணையரின் ஆணையின் நல்ல நோக்கம் முழுமையாய் நிறைவேறும்.

எந்த ஒரு திட்டத்துக்கும் அமல்ப்படுத்தல் என்கிற தொடக்கம் பெருமைதான். ஆனால், தொடர் ஆய்வுகளும் அவ்வப்ப்ஓதைய மேம்படுத்தல்களுமே அதற்கான முழுப் பயனையு் கொண்டு வந்து சேர்க்கும் என்பதே அந்தத் திட்டத்துக்கான பெருமிதம்.

பெருமை மகிழ்ச்சிதான், பெருமிதம் வேண்டும்.

***சகா

குறிப்பு: 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஒருங்குறி முறையில் கணினிப் பயன்பாடு பாடத்துக்கான புத்தகம் மின்னூலாகவும், இணையத்தில் படித்துக்கொள்ள ஏதுவாகவும்,  கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஒரு இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த தளத்துக்கான இணைப்பு:

new.tnschools.gov.in

அந்தத் தளத்தில் சென்று நூல்களை எப்படித் தேடிக் கண்டுபிடித்துப் படிப்பது என்கிற செய்முறை விளக்கக் காணொளியின் இணைப்பு:


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.