
வணக்கம்!, பார்வையற்ற சமூகம் கொண்டாட வேண்டிய ஒரு ஆன் சலிவனை நம் தொடுகை மின்னிதழ் பெருமையோடு அறிமுகம் செய்கிறது. உலகமே போற்றும் ஹெலன் கெல்லர் போற்றப்பட, கொண்டாடப்படக் காரணம், அவரை உருவாக்கிய ஆசிரியர் ஆன் சலிவன் என்பது எல்லோருக்கும் தெரியும்! பார்வையற்ற நம் தமிழ் சமூகத்தில், கடந்த 25 ஆண்டு காலமாய் ஒருவர் பார்வையற்றவர்களுக்கு ஆன் சலிவனாய் வாழ்ந்து வருகிறார், தன்னை எதிலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல்! தான் செய்யும் சேவையை விளம்பரம் செய்து கொள்ளாமல், மகத்தான மனிதராய் வாழ்கிறார்! அப்படி என்ன செய்து விட்டார், செய்கிறார் என்று கேட்கிறீர்களா?
ஒவ்வொருவரும் உயர்வதற்கு கல்வி இன்றியமையாதது. பார்வையற்றவர்களுக்கு கல்விதான் அடிப்படை நம்பிக்கையே! அப்படிப்பட்ட கல்வியைக் கொடுக்கிறார், எப்படிப்பட்டவர்களுக்கு தெரியுமா? சிறுவயதிலேயே பார்வையையும் இழந்து, படிப்பையும் இழந்து, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பார்வையற்றவர்களுக்கு. தனக்கு எதிர்காலமே இல்லை, வாழ்க்கையே இல்லை என்று நினைத்த பல பார்வையற்றவர்கள் இன்று இவரால் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? இந்தக் கட்டுரைக்காக ஒரு சிலரிடம் பேசினேன். அவர்கள் சொன்னதை எழுதுகிறேன்!
உள்ளே
- மூன்றாம் வகுப்பைக்கூட முழுதாய் முடிக்காதவன் இன்று எம்பிஏ பட்டதாரி
- ‘படித்துக்கொண்டே இரு, படிப்புக்கு வயது தடையில்லை’
- அன்று அலட்சியப் பார்வை, இன்று ஆச்சரியப் பெருமிதம்
- “30-ஆம் வயதுவரை வீட்டில்தான் இருந்தேன்”
- சுவைக்காத விடுதிச் சாப்பாடு, சுடச்சுட சமைத்துத்தரும் அண்ணன்
- பிச்சையெடுத்திருக்க வேண்டியவள், அரசு ஊழியராய் இருக்கிறேன்
- தொடரும் வெற்றிப் பயணம்
மூன்றாம் வகுப்பைக்கூட முழுதாய் முடிக்காதவன் இன்று எம்பிஏ பட்டதாரி

“நான் பிறந்ததிலிருந்து பார்வையற்றவன். என் ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போய் வருவேன்; அதுகூட மூன்றாம் வகுப்பு வரைதான் போனேன். அதற்குப் பிறகு நான் செல்லவில்லை. என்னை படிக்கச் சொல்லி யாரும் வற்புறுத்தவும் இல்லை. ஆண்டுகள் உருண்டோடின. 29, 30 வயதில், சென்னையில் இருக்கும் N.A.B. பயிற்சி மையத்திற்கு நாற்காலி பின்னும் பயிற்சி கற்றுக் கொள்ள வந்து சேர்ந்தேன். ஆனால், நானும் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையோடுதான் வந்தேன். அதைத் தெரிந்து கொண்ட அங்கிருந்தவர்கள் – என்னைப்போல் இன்னும் சிலர் படிக்காமல் அங்கு இருந்தார்கள் – எங்களை அண்ணனிடம் அறிமுகம் செய்தார்கள்.
அண்ணன் எங்களை வந்து நேரில் சந்தித்தார். எட்டாம் வகுப்பு தனித்தேர்வு பிரிவில் எங்களை விண்ணப்பிக்க வைத்தார். மாதவரத்தில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு சனி, ஞாயிறுகளில் வந்து, எங்களை அங்கு வர வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தார். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோம். அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுக்காக விண்ணப்பித்தோம்! கல்மண்டபத்தில் இருக்கும் அவர் ஆபீசுக்குச் சென்று படித்தோம். தேர்வு நேரங்களில் அண்ணன் வீட்டிலேயே பாடம் எடுப்பார்கள். அண்ணனின் மனைவி ஒரு தமிழாசிரியர். அக்காவும் எங்களுக்கு பாடம் எடுப்பார். 30 பேர் வரை படித்தோம். என்னைப்போல் மொத்தம் 15 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்கள் பிரிவில் எழுதினோம்! தேர்ச்சியும் பெற்றோம்.
அரசு சார்பாக வேலைவாய்ப்பு தேர்வுகள் வரும்போதெல்லாம் எங்களுக்காக விண்ணப்பித்து விடுவார். அவர் எங்களுக்காக நிறைய அலைந்து கொண்டே இருந்தார், உழைத்துக் கொண்டே இருந்தார், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி. அவருடைய எதிர்பார்ப்பு ஒன்றாகத்தான் இருந்தது – எல்லோரும் நன்றாகப் படிக்க வேண்டும், பார்வையற்றவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும். நெய்வேலி NLC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு வந்தது, விண்ணப்பித்தேன். அந்த வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். எனக்கு வேலையும் கிடைத்துவிட்டது. எனக்குத் திருமணமும் ஆகிவிட்டது. நான் ஒரு உடல் சவால் கொண்ட பெண்ணை மணந்தேன். எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்; இரண்டு பேரும் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்கள். நான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.
மூன்றாம் வகுப்பைக் கூட முழுதாய் படிக்காத நான், இன்று என்ன படித்திருக்கிறேன் தெரியுமா? MBA பட்டம் பெற்றிருக்கிறேன். தேர்விற்காக நான் சென்னை செல்லும்போதெல்லாம் அண்ணன் வீட்டில்தான் தங்கியிருப்பேன். நான் மட்டுமல்ல, பலர் அங்கேதான் தங்கியிருப்போம். ஒரு வாரம், பத்து நாட்கள் கூட அண்ணன் வீட்டில் தங்கியிருக்கிறோம். அங்கு சாதி, மதம் எந்தவித பாகுபாடும் கிடையாது. அண்ணன், அக்கா, அவர்களின் இரு பெண் குழந்தைகள் எல்லோரும் அன்பை மட்டுமே பகிர்வார்கள். அண்ணன் எனக்கு வெறும் ஆசிரியர் மட்டுமல்ல, என் குடும்பத்தில் ஒருவர். என் எல்லா சுக துக்கங்களிலும் அவர் துணையாய் இருப்பார். எனக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கிறார். என் எல்லா சந்தோஷங்களுக்கும் வெற்றிக்கும் காரணம் என் ஆசிரியர், என் அண்ணன் அவர்கள்தான். அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இந்த நாள் முழுக்கச் சொல்லிக் கொண்டே இருப்பேன்,” என்றார் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, ஓடுவங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன்.
‘படித்துக்கொண்டே இரு, படிப்புக்கு வயது தடையில்லை’

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் இப்படிச் சொன்னார்.
“நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வரை எனக்கு முழு பார்வை இருந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை, என் கண்களில் அடுத்தடுத்து முழு பார்வையும் பறிபோனது. மூன்றாம் வகுப்போடு என் படிப்பும் வாழ்க்கையும் முடிந்து போனது. 18 வயது வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். என் ஊரில் இருந்த ஒரு அண்ணன் மூலமாக சென்னையில் இருக்கும் N.A.B. நிறுவனத்திற்கு வந்தேன். அங்கு இருந்த சசி அண்ணன் அறிமுகமானார். அவர் என்னிடம் சொன்னார், ‘இங்கே ஒருவர் இருக்கிறார், அவரிடம் சென்றால் உன் வாழ்க்கையே மாறிவிடும்,’ அப்படியே நான் அண்ணனைச் சென்று பார்த்தேன். அவருக்கு ‘சார்’ என்று கூப்பிட்டால் பிடிக்காது, ‘அண்ணன்’ என்றுதான் அழைக்க வேண்டும்.
அவர் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் பிரிவில் விண்ணப்பித்தார். சனி, ஞாயிறுகளில் என் ஊரில் இருந்து அண்ணன் ஆபீஸிற்குச் சென்று படிப்பேன். திங்கள் முதல் வெள்ளி வரை போன்களிலேயே கான்ஃபரன்ஸ் கால் மூலமாக எனக்கு பாடம் எடுப்பார். அந்த கான்ஃபரன்ஸ் காலில் என்னைப்போன்று பலர் படிப்பார்கள். அடுத்தடுத்து எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு என்று தேர்ச்சி பெற்றேன். என் அண்ணனால் கல்வியை நன்றாகக் கற்றேன். எங்கள் எல்லோருடைய விவரங்களும் அண்ணனிடம் இருக்கும். அதனால் எந்த வேலைவாய்ப்பு வந்தாலும் உடனே விண்ணப்பித்து விடுவார். அப்படி அவர் விண்ணப்பித்த ஒரு வேலைக்கு நான் தேர்வானேன் – MTS, மத்திய அரசு ஊழியராக பாண்டிச்சேரியில் பணிபுரிகிறேன்.
பார்வையுள்ள ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். எனக்குத் தற்போது இரண்டு மகள்கள். மூத்த மகள் மூன்றாம் வகுப்பு, இளைய மகள் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். நான் என்ன படித்திருக்கிறேன் தெரியுமா? MBA படித்திருக்கிறேன். நான் தேர்வுக்காக சென்னைக்குச் செல்லும்போதெல்லாம் அண்ணன் வீட்டில்தான் தங்கி இருப்பேன். அண்ணனைப் பொறுத்த அளவு ஒன்றுதான் – ‘படித்துக் கொண்டே இரு, படிப்பதற்கு வயது தடை இல்லை’ என்பார். ஒரு ரூபாய் கூட அவர் என்னிடமிருந்து எதிர்பார்த்ததில்லை. என்னிடம் மட்டுமல்ல, எவரிடமிருந்தும் அவர் எதையும் எதிர்பார்த்ததில்லை. ஆனால், அவர் எல்லோருக்கும் செய்வார், கொடுப்பார்.
என்னை அலட்சியமாகவும் கேவலமாகவும் பார்த்த என் குடும்பம், உறவுகள், ஊர்க்காரர்கள் இன்று தலைநிமிர்ந்து பார்க்கிறார்கள்! எல்லாவற்றுக்கும் காரணம் ஒருவர், ஒருவர் மட்டுமே – அவர்தான் என் அண்ணன், என் ஆசிரியர், என் வழிகாட்டி. என் வாழ்க்கை முழுவதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என் அண்ணனுக்கு. அவர் தன்னிடம் படிப்பவர்களை வெறும் மாணவ, மாணவிகளாய் பார்ப்பதில்லை; மகன்களாய், மகள்களாய் மட்டும்தான் பார்ப்பார். அவரின் அன்பும் அக்கறையும் எப்பொழுதும் எங்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்ணனும், அண்ணன் குடும்பமும் என்றென்றும் நலமோடும் சந்தோஷத்தோடும் வாழ நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்,” என்றார் சக்திவேல்.
அன்று அலட்சியப் பார்வை, இன்று ஆச்சரியப் பெருமிதம்

“நான் என் ஊரில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, கண்களில் பிரச்சினை ஏற்பட படிப்பு பாதியில் நின்று போனது. குறை பார்வை உடையவனாய் ஏழு ஆண்டுகள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். மீண்டும் அந்தப் பார்வையில் பிரச்சினை ஏற்பட, மருத்துவமனையில் ‘இனி பார்வை வராது’ என்று சொல்லி, சேலத்தில் இருக்கும் ஒருவரின் தொலைபேசி எண்ணைத் தந்தார்கள். அவர்களிடம் பேசியபோது, சென்னையில் அண்ணனைப் பற்றி கூறி அவரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள். நான் அண்ணனைத் தொடர்பு கொண்டேன். அண்ணன் என்னை சென்னையில் இருக்கும் N.I.V.H. சென்டரில் I.L.S. வகுப்பில் சேர்த்துவிட்டார். அதுமட்டுமில்லாமல், எட்டாம் வகுப்பு தனித்தேர்வு பிரிவில் விண்ணப்பித்தேன். சனி, ஞாயிறுகளில் அண்ணன் வீட்டுக்குச் சென்று படிப்பேன். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன்.
பிறகு, அண்ணனின் வழிகாட்டுதலில் திருவாரூரில் இருக்கும் இசைப் பள்ளியில் சேர்ந்து நாதஸ்வரம் மூன்றாண்டுகள் படித்தேன். இதற்கிடையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன்; பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். எனக்கு அண்ணன் ஒலிப் புத்தகமாக நிறைய பதிவு செய்து அனுப்பி வைப்பார். அதைக் கேட்டு கேட்டு படித்து தேர்ச்சி பெற்றேன். அதற்குப் பிறகு ‘நீ நேரடியாகக் கல்லூரியில் சேர்ந்து படி’ என்று அண்ணன் சொன்னார். திருவாரூர் திரு. வி. க. கலைக் கல்லூரியில் சேர்ந்து B.A. வரலாறு படிக்கத் தொடங்கினேன். குரூப் 4 தேர்வையும் எழுத அண்ணன் சொன்னது மட்டுமில்லாமல், அதற்கான ஒலிப் புத்தகங்களையும் பென்டிரைவில் பதிவேற்றி எனக்கு அனுப்பி வைத்தார். கல்லூரியில் படித்துக் கொண்டே குரூப் 4 தேர்வுக்காகவும் படித்துக் கொண்டிருந்தேன். முதல் குரூப் 4 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை. விடாமுயற்சியுடன் படித்தேன். 2014-ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் 30-ஆவது ரேங்க் எடுத்தேன். அதையும் எனக்கு அண்ணன் தான் பார்த்துச் சொன்னார். ‘கண்டிப்பா உனக்கு வேலை கிடைத்துவிடும்’ என்றார். அதேபோல், சென்னையில் நடந்த கலந்தாய்விற்கும் அண்ணனே அழைத்துச் சென்றார். அங்கு சுகாதாரத் துறையில் இளநிலை உதவியாளர் பணியைத் தேர்ந்தெடுத்தேன். அதையும் அண்ணன் தான் தேர்ந்தெடுக்கச் சொன்னார். ‘வேலை கிடைத்துவிட்டது என்பதற்காக படிப்பை விட்டுவிடாதே, தொடர்ந்து படி’ என்றார். M.A., M.F.A. தொலைதூரக் கல்வியில் படித்துப் பட்டம் பெற்று இருக்கிறேன்.
எந்த கிராமத்தில் முடங்கிக் கிடந்தேனோ, நான் பார்வையற்றவனாய், நான் பரிதாபத்துக்குரியவனாய், பாவப்பட்டவனாய் வாழ்ந்தேனோ, அதே கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான் இளநிலை உதவியாளராகப் பணிபுரிகிறேன். சொந்தமாக என் ஊரிலேயே ஒரு பெரிய வீடு கட்டி இருக்கிறேன். என்னை அலட்சியமாய் பார்த்தவர்கள் எல்லாம் இன்று பொறாமையோடும், பெருமையோடும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறார்கள். அத்தனை மாற்றத்திற்கும், என் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் அண்ணன், என் வழிகாட்டி ஆசிரியர் அவர்கள்தான். என் உயிர் உள்ளவரை அண்ணனை மறக்க மாட்டேன். அவர் எப்பொழுதும் நல்லா இருக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா, பொன்னிறை கிராமத்தில் வசிக்கும் அருள் மாதவன்
“30-ஆம் வயதுவரை வீட்டில்தான் இருந்தேன்”
அருள் மாதவனின் கதை நெகிழ்ச்சிக்குரியது என்றால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள நாமகிரிப்பேட்டையில் வசிக்கும் ராமசாமியின் கதையோ நம்மை அதிர வைக்கிறது.

“நான் என் ஊரில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது பார்வை குறைந்துவிட்டது. அதனோடு என் படிப்பு முடிந்துவிட்டது. 30 வயது வரை நான் வீட்டிலேயே தான் இருந்தேன். அப்போது ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு, N.I.V.H. சென்டரில் நாற்காலி பின்னும் பயிற்சிக்காக வந்து சேர்ந்தேன். அங்கு ஒருநாள் வந்த அண்ணன் என்னிடம் பேசினார்; என்னை படிக்கச் சொன்னார். ‘எனக்கு 30 வயது ஆகிவிட்டது, நான் இனி படித்து என்ன செய்யப் போகிறேன்’ என்று சொன்னேன். இருப்பினும் அண்ணன் வற்புறுத்த நான் ‘சரி’ என்றேன். ஆனாலும் நான் அண்ணனிடம் படிக்கச் செல்லவில்லை. ஆறு மாத பயிற்சி முடித்துவிட்டு ஊருக்கே சென்றுவிட்டேன். என் பக்கத்து ஊரில் இருந்த காளியப்பனைச் சந்தித்தேன். அவனிடம் சொன்னேன். இருவரும் மீண்டும் சென்னைக்கு N.A.B. நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தோம். அதற்குப் பிறகு அண்ணனிடம் சென்று படிக்கத் தொடங்கினேன். அண்ணன் என் வாழ்க்கையை மொத்தமாய் மாற்றிவிட்டார். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு என்று அடுத்தடுத்து தேர்ச்சி பெற்றேன். திருமணமும் செய்துவிட்டேன்.
அந்தச் சமயம்தான் ‘ஒரு வேலை வந்திருக்கிறது’ என்று அண்ணன் சொன்னார். காளியப்பனும் நானும் நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தோம். நானும் MBA படித்து முடித்துவிட்டேன். இன்று எல்லோரும் மதிக்கும் அளவில் மகிழ்ச்சியாய் வாழ்கிறேன். ஒருவேளை நான் அண்ணன் பேச்சைக் கேட்காமல் போயிருந்தால் என் வாழ்க்கை என்ன ஆயிருக்குமோ தெரியாது. அண்ணன் எனக்குச் செய்ததெல்லாம் என்னால் என்றுமே மறக்க முடியாது. எங்களை அவர் சொந்தத் தம்பி போலப் பார்த்துக் கொள்வார். எங்களுக்கு என்ன தேவை என்று கேட்டு கேட்டுச் செய்வார். அண்ணனால் தான் நான் இன்று மூன்று வேளை உணவை நிம்மதியாய் சாப்பிடுகிறேன் என்றும் என் அண்ணனுக்கு என் நன்றிகள்!” என்று முடித்தார் திரு. ராமசாமி அவர்கள்.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்றாலும் நான் இன்னும் சிலரை அறிமுகம் செய்கிறேன். பூவை சவுந்தர் சொன்னவை இவை:
“பத்தாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தேன். என் பார்வை குறையத் தொடங்கியது; அதனால் படிப்பை அத்துடன் நிறுத்திவிட்டேன். N.I.V.H. சென்டரில் I.L.S. வகுப்பில் 20 வயதில் சேர்ந்தேன். அங்கு மேகி மேடம், அண்ணன் போன் நம்பரைக் கொடுத்துப் பேசச் சொன்னார்கள். அண்ணனிடம் மாணவனாய் சேர்ந்தேன். பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வில் படித்து தேர்ச்சி பெற்றேன். நான் அண்ணனால் MBA படித்திருக்கிறேன். 2016-ஆம் ஆண்டு ரயில்வே தேர்வில் தேர்ச்சி பெற்று M.T.S. பணியில் சேர்ந்தேன். பார்வை உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்தேன்; எனக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கிறது. நான் இன்று ஒரு கௌரவமான மத்திய அரசு பணியில் இருப்பதற்கு காரணம் அண்ணன் தான். அந்த நன்றியை நான் என்றும் மறக்க மாட்டேன்” என்றார் பூவிருந்தவல்லியில் வசிக்கும் திரு. சவுந்தர் அவர்கள்.
சுவைக்காத விடுதிச் சாப்பாடு, சுடச்சுட சமைத்துத்தரும் அண்ணன்
“ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது பார்வை குறையத் தொடங்கியது. அதற்குப் பிறகு கடலூரில் இருக்கும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் மீண்டும் ஐந்தாம் வகுப்பு சேர்ந்து படித்தேன். எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிக்கவில்லை. அதற்குப் பிறகு அண்ணனின் அறிமுகம் கிடைத்தது. சென்னையில் ஒரு விடுதியில் தங்கிக் கொண்டு தினசரி அண்ணன் ஆபீசுக்குச் சென்று படிக்கத் துவங்கினேன். பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு படித்துத் தேர்ச்சி பெற்றேன். என்னோடு பலர் படித்தனர். நாங்கள் விடுதியில் தங்கியிருப்பதால் சாப்பாடு சரியாக இருக்காது என்பதால், அவரே சமைத்து மதிய சாப்பாடு எடுத்து வந்து விடுவார்; ஆபீசில் எங்களைச் சாப்பிட வைத்துவிட்டு, அதற்குப் பிறகு பாடம் நடத்துவார். விடுமுறை நாட்களில் வீட்டுக்கே வர வைத்து அசைவம் (நான்வெஜ்) சமைத்துச் சாப்பிட வைப்பார்.
வெளியுலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அடிக்கடி சென்னையில் இருக்கும் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்வார். அதை பார்வையற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வார். உதாரணமாகச் சென்னையில் இருக்கும் கோளரங்கத்திற்குக்கூட அழைத்துச் சென்று அதைப் பற்றி விளக்கியிருக்கிறார்!
நான் புத்தகக் கட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்து முடியவில்லை. ஆனால் அண்ணன் எனக்காக விண்ணப்பித்தார்; அங்கு எப்படிப் பேச வேண்டும் என்று சொல்லித் தந்தார்; நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன், அண்ணன் சொன்னது போலவே நடந்து கொண்டேன். புத்தகக் கட்டுநர் பயிற்சியிலும் சேர்ந்து ஓராண்டு பயின்றேன். இன்று நான் செங்கல்பட்டு அரசு நூலகத்தில் அரசு ஊழியராகப் பணிபுரிகிறேன். M.A. படித்துவிட்டேன். நான் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன் என்றால் அதற்கு அண்ணன்தான் காரணம். அண்ணனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் நிறையச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
பார்வையற்ற பெண்கள் நிறையப் படிக்க வேண்டும், பணிக்குச் செல்ல வேண்டும் என்பது அவருடைய பெரும் ஆசை. இடையில் கல்வியை இழந்த பார்வையற்ற நிறையப் பெண்கள் இன்று ஆசிரியர்களாக, வங்கி ஊழியர்களாக, மத்திய, மாநில அரசின் பணிகளில் இருக்கிறார்கள். நிறையப் பேருக்கு அண்ணன் திருமணம்கூடச் செய்து வைத்திருக்கிறார். அண்ணனாக, அப்பாவாக, அம்மாவாக, ஆசிரியராக, வழிகாட்டியாக, நல்ல ஆலோசனை தருபவராகப் பல பல பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் அண்ணன் திகழ்கிறார்!
பார்வையற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர் பாடம் சொல்லிக் கொடுப்பார். அதற்காகவும் தனியாகவே அவர் படித்திருக்கிறார். முக்கியமான ஒன்று, அவர் எங்களை புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்ததில்லை; எங்களை வைத்து வியாபாரம் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் அண்ணனுக்குத் தெரியாது! அதனால்தான் அண்ணனைப் பார்வையற்ற சமூகத்தில் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை” என்றார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன்.
பிச்சையெடுத்திருக்க வேண்டியவள், அரசு ஊழியராய் இருக்கிறேன்
“ஐந்தாம் வகுப்பைக்கூட முழுமையாகப் படிக்காத நான், அண்ணனின் அறிமுகத்தால் மீண்டும் படிக்கத் துவங்கினேன். எட்டாம் வகுப்பு படித்துத் தேர்ச்சி பெற்றேன். அண்ணனின் வழிகாட்டுதலில் புத்தகக் கட்டுநர் பயிற்சியிலும் சேர்ந்து ஓராண்டு படித்தேன். அந்தச் சமயத்தில் பன்னிரண்டாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றேன். அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்திருப்பேன். இன்று அரசு ஊழியராக இருக்கிறேன்; எனக்குத் திருமணமாகிவிட்டது, மகிழ்ச்சியாய் வாழ்கிறேன். இதற்குக் காரணம் அண்ணன்” என்றார் கடலூர் அரசு நூலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் பார்வையற்ற சகோதரி திருமதி. மீனா.
“நான் கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்தான். என் அப்பா ஆசிரியராக இருந்தும், ஏழாம் வகுப்புக்கு மேல் என்னை படிக்க வைக்கவில்லை. குறை பார்வையோடு இருந்த நான் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். வீடே என் உலகம் என்று ஆனது. 30 வயதில் எப்படியோ போராடி, N.I.V.H. சென்டருக்கு வந்தேன். அங்கு I.L.S. கோர்ஸில் சேர்ந்து படித்தேன். அப்பொழுது அண்ணன் அங்கு வந்தார், என்னிடம் பேசினார். என்னை மீண்டும் படிக்கச் சொன்னார். என் வீட்டிலேயும் பேசினார். இன்னொரு விடுதியில் தங்கி அண்ணனிடம் எட்டாம் வகுப்பு படித்து முடித்தேன்.
பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் புத்தகக் கட்டுநர் பயிற்சியிலும் சேர்ந்து படித்தேன். பத்தாம் வகுப்பு நான் முடித்தபோது எனக்குத் திருமணமாகிவிட்டது. என் கணவர் ஓர் ஆசிரியர். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் 12-ஆம் வகுப்பு படித்தேன். தேர்வு எழுத என் கணவரோடு சென்று அண்ணன் வீட்டில் தங்கித் தேர்வு எழுதி வந்திருக்கிறேன்.
அண்ணன்தான் எனக்கு வெளியுலகத்தைக் காட்டியவர். என் கண்ணுக்குக் கண்ணாய் இருந்தார். என்னைக்கூடப் பிறந்த தங்கை போலவே பார்த்துக் கொண்டார். என் சுக துக்கங்கள் அனைத்திலும் அண்ணன் இருப்பார். என்னைப் பெற்றவர்களைவிட அண்ணன்தான் என் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர்!
அண்ணனிடம் நான் எதையும் மறைத்தது கிடையாது. அண்ணனின் ஆலோசனையும் வழிகாட்டுதலையும் பின்பற்றியதால்தான் நான் இன்று மகிழ்ச்சியோடு இருக்கிறேன். B.A. படித்திருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள், மகிழ்ச்சியோடு வாழ்கிறேன். அண்ணனை நான் என்றும் என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்” என்று நெகிழ்ந்தார் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த திருமதி. சித்ரா.
தொடரும் வெற்றிப் பயணம்
ஒவ்வொருவரிடமும் பேசி முடிக்கையில் கற்பனைக்கும் எட்டாத ஒரு புதிய உலகத்துக்குள் சென்றுவந்தேன். அடுத்து, பல பார்வையற்றவர்களை அண்ணனிடம் அறிமுகம் செய்துவைத்த அந்த முக்கிய நபர் N.A.B. நிறுவனத்தில் மசாஜ் பயிற்றுநராகப் பணியாற்றும் திரு.சசியிடம் பேசினேன்.
“சிறுவயதிலேயே கல்வியையும் பார்வையையும் இழந்த பல தம்பிகளை நான் அண்ணனிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். அவர்கள் அண்ணனால் பட்டதாரிகளாக மாறியிருக்கிறார்கள், பணியிலும் இருக்கிறார்கள். நானும் அண்ணனின் மாணவன்தான். அண்ணனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் பார்வையற்ற சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம்! அவர் பார்வையற்றவர்களின் வழிகாட்டி! என்றும் அவர் நலமோடு வாழ வேண்டும்” என்றார்.
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த பாண்டிச்சேரி ஹரிகேஷ், மூன்றாம் வகுப்பை முழுமையாய்ப் படிக்காத விருத்தாச்சலம் பரமசிவம் இன்று B.Ed. படிக்கிறார்கள்! ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த குன்றத்தூர் சத்யராஜ், நான்காம் வகுப்பு வரை படித்திருந்த ஓட்டேரி சதீஷ்குமார் இன்று M.A. படிக்கிறார்கள்! ஏழாம் வகுப்பு வரை படித்திருந்த ஈரோடு பூபதி, இன்று அவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த மதுரை ராஜலட்சுமி B.A. படிக்கிறார்! இப்படி அந்த ஒரு மாமனிதனின் வெற்றிப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது!
இதுவரையில் 50-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுப்பணியில் இருக்கிறார்கள்; இதில் பலர் பெண்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிகளாய் மாறியிருக்கிறார்கள்! இன்னும் பலர் இப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! அத்தனை பேரும் சிறுவயதிலேயே ஆரம்பக் கல்வியைக்கூட முழுதாய் முடிக்காதவர்கள்; பல வருடங்களுக்குப் பிறகு அந்த ஆன்சலிவனால் தனக்கான வாழ்க்கையைத் துவங்கியவர்கள்!
வாழ்க்கை எத்தனை அழகானது! மனிதம் எத்தனை மகத்தானது!
இறுதியாய் ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். 11 வயதில் பார்வை குறைபாட்டால் தன் படிப்பை இழந்த சிறுவன், 23 வயதில் முழு பார்வையற்றவனாய் மாறிய இளைஞன்; அடுத்த ஏழு ஆண்டுகள் வெளியில் சிரித்து, உள்ளுக்குள் அழுது நாட்களை நகர்த்தியவன், கடவுளைப் போல யாராவது வந்து தன்னை மீட்க மாட்டார்களா என்று ஏங்கிய பொழுது, கடவுளே வந்து அவனது கைபிடித்துக் கூட்டிச் சென்று அவனுக்கான உலகத்தில் விட்டார்! அவன் பார்வையற்ற சமூகத்தின் பெரும் மாற்றத்திற்காய் பெரும் நம்பிக்கையோடு பயணிக்கிறான்!
தன்னை மீட்டு வந்த கடவுளைப் பற்றி, உலகம் போற்றும் ஹெலன்கெல்லரின் பிறந்தநாளில், அவரை ஒப்பற்ற சாதனையாளராக உயர்த்திய அந்த ஆன்சலிவன் போன்றவரைப் பற்றி அவன் எழுதும் முதல் கட்டுரை இது! இன்று அசோக் பாலா பெயருக்குப் பின்னால் MSW என்ற படிப்பு இருக்கிறது. தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் தலைவர், எழுத்தாளர் என்கிற சிறிதினும் சிறிதான அடையாளம் இருக்கிறது.
மேனுவல் ராஜ் என்ற கடவுள் இல்லாமல் இன்று அசோக் பாலா இல்லை! என்றும் நான் வணங்கும் என் முதல் கடவுள், என் முதல் குரு மேனுவல் ராஜ் அண்ணன்.

இந்தக் கட்டுரையை என்னை எழுதப் பணித்த திரு. சரவணமணிகண்டன் சார் அவர்களுக்கும், ‘தொடுகை’க்கும் நன்றிகள்!
இடையில் கல்வியை இழந்தவர்களா நீங்கள்? உங்களுக்கு அதிக வயதாகி விட்டதா? பரவாயில்லை, நீங்கள் படிக்கலாம்! உங்களை இலவசமாய்ப் படிக்க, வாழ்க்கையில் வெற்றி பெற அழைக்கிறது:
SPARK SPECIAL SCHOOL (Lateral Entry),
Mr. Manual Raj,
Mobile Number: 9380023445.
தொகுப்பு மற்றும் எழுத்தாக்கம்:
S. அஷோக் பாலா.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
