இன்று ஜூன் 24, 2026 அன்று பிற்பகல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரண்டாவது தளத்தில், ‘தளிர்களின் பயணம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
குழந்தைகள் பார்வையிலிருந்து விரிவதான கதைக் கருக்களைக்கொண்ட பத்து சிறுகதைகள் அடங்கிய இந்நூலை எழுதியிருப்பவர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் திரு. வெ. கார்த்திக் அவர்கள்.
பெற்றோர், உறவுகள், கார்த்திக்கின் பள்ளிகால ஆசிரியர்கள், தற்பொதைய கல்லூரி அங்கத்தினர், நண்பர்கள் சகிதம் அரங்கு நிறைந்திருந்தது.
“பன்முகத்தன்மை கொண்ட நூல்கள், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அணுகிடும் வகையில் வெளியிடப்பட வேண்டும்” என்ற ஐக்கிய நாடுகளின் இந்த ஆண்டிற்கான தீர்மானத்தை முதல் ஆளாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் கார்த்திக்.
ஒரே மேடையில் தனது நூலினை அச்சு, பிரெயில் மற்றும் மின்னூல் என அனைத்து வடிவிலும் வெளியிட்டு, ஒரு புதிய வரலாற்றைத் தொடக்கிவைத்திருக்கிறார்.
இதுதான் புத்தகம் படிக்கும் ஆர்வம் கொண்ட பல பார்வையற்றவர்கள் காலங்காலமாக எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்களிடம் முன்வைத்து வந்த கோரிக்கை. அத்தகைய சமத்துவம் நாடும் கோரிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்துத் தொடக்கிவைத்திருப்பவரும் நம்மவரே என்பது கூடுதல் பெருமிதம்.
மின்னூலினை வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.
நிகழ்வில் திருமதி. ரத்னா அவர்களின் உரை மனதில் நின்றது. “உங்கள் முயற்சிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் இருந்துவிடாமல் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும்” என ஒரு சகாவாக அவ கேட்டுக்கொண்டது நிகழ்காலப் பொருத்தம்.
வைத்தது வெடியென்றாலும், முனைவர் திரு. திவாகர் அவர்களின் உரை சில தகவல்களை உள்ளடக்கிய சுவாரசியமானதாக இருந்தது. தன் நண்பனுக்காக உள்ளுக்குள் திரட்டி வைத்திருந்த நெகிழ்ச்சித் தூறல்களால் ஆங்காங்கே அரங்கையும் நனைத்தபடியே இருந்தார் நிகழ்வுத் தொகுப்பாளர் சிவமணி.
எழுத்தாளர் கரன் கார்க்கியின் கரகரத்த குரலில் இருந்த உற்சாகம் அரங்குக்கும் புதிய தெம்பு.
“இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நான் பெற்ற பெரும் பாக்கியம் இது” என ஆசிரியர் லஶ்மி நாராயணன் சொன்னதன் ஆழத்தை உணர அர்ப்பணிப்புள்ள இன்னொரு ஆசிரியரால்தான் இயலும்.
அட்டைப் படத்துக்கு அட்டகாசமான ஒலிவிவரணை தயாரித்து இருந்ததால், மின்னூல் பற்றியும் அப்படி ஒரு விவரணை இருக்கும் என்று எதிர்பார்த்தேன் அது மட்டும் ஒரு சிறிய குறை. மற்றபடி, இந்த நிகழ்வுக்காய், ஒரு புதிய முன்னுதாரணமாய் அமைந்து, நாளை இது பலருக்கும் வழிகாட்ட வேண்டும் என்கிற நோக்கத்துக்காய் உடலாலும், செல்வத்தாலும் தாங்கள் தங்கள் உறவுகள் மற்றும் நண்பர்கள் சகிதம் எடுத்துக்கொண்ட மெனக்கெடலுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.
கடைசியாக ஒன்று, திக்கல் திணறல் இல்லாத தெளிந்த அதேசமயம், எதார்த்தமாக அமைந்த உங்களின் ஏற்புரை சிறப்போ சிறப்பு.
வாழ்த்துகள், தவெகா! தளிர்களின் பயணம்: வெ. கார்த்திக்.
குறிப்பு: பதிவின் தலைப்புக்கான காப்புரிமை முனைவர் திரு. திவாகர் அவர்களுக்கு மட்டும்.
***ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
