எங்கோ ஒரு மேடையில் ஒரு ஒரு அரசியல் கட்சியின் மூன்றாம் நான்காம் கட்டப் பேச்சாளர், தன் அரசியல் எதிரிகளைத் திட்டுகிறேன் பேர்வழி ‘குருடு’ என்ற சொல்லை உச்சரிக்கையில் கொந்தளிக்கிறோம். அதிலும் பார்வையற்றோர் சமூகத்திடம் கட்சி பேதம் உண்டு என்பதும் கண்கூடு. பார்த்தீர்களா கண்ணைத் தவிர்க்கவே முடியாது என்பது எழுத்திலும் வெளிப்பட்டுவிடுகிறது.
‘குருடு’ என்கிற கொச்சைச் சொல்லை ஒழிக்கக் குரல் கொடுக்கும் நாம், பார்வையற்றோர் என்ற சொல்லும் கவனமாகத் தவிர்க்கப்படுவதை உணர்ந்துவிட்டோமா? அந்தச் சொல் முதலில் அரசால் தவிர்க்கப்பட்டது. பார்வையற்றோர் என்பதற்குப் பதிலாக, பார்வைத்திறன் குறையுடையோர் என அறிவித்தார்கள். இப்போது பார்வை மாற்றுத்திறனாளி என்ற சொல்லும் அதிகம் புழக்கத்துக்கு வந்துவிட்டது.
பெயர் எதுவாகவும் இருக்கட்டும்! ஏனெனில், பார்வையற்றோர் சமூகத்தில் முழுப் பார்வையற்றவர்கள் மட்டும் புழங்குவதில்லை. பகுதிப் பார்வையற்றோர் (partially sighted), குறைப்பார்வையுடையோர் (low-vision) என இந்த மூன்று வகைகளையும் உள்ளடக்கியதுதான் பார்வையற்ற சமூகம்.
ஆனால், பார்வையற்றோர் சமூகத்தில் இந்த மூவருமே சமமான அங்கத்தினர் என்பதை நாம் மூவர் சகிதம் நமக்குச் சேவையாற்றுவதாய்ச் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் புரிந்துவைத்திருக்கிறோமா? இன்று பார்வையற்றோர் சமூகத்தில், ஒரு முழுப் பார்வையற்றவரின் அல்லது பார்வையற்ற குழந்தையின் இடம் என்னவாக இருக்கிறது?

ஒரு முழுப் பார்வையற்ற குழந்தையைக் கையாள்கிற திறனையும், பொறுமையையும் இன்றைய சிறப்புக் கல்வியியல் வகுப்புகள் (Special B.ed) கற்றுத் தருகின்றனவா?
இன்னும் உடைத்துப் பேசினால், அப்படி சிறப்புக் கல்வியியல் பயிலும் மாணவர்களில் எத்தனை பேருக்கு பிரெயில், தொடுதிறன் சார் கணிதப் பலகைப் (Taylor Frame) பயிற்சி முறையாகச் சொல்லித் தரப்படுகிறது? முழுப் பார்வையற்ற குழந்தையின் அன்றாட வாழ்க்கைத்திறன் கற்பித்தல், அவர்களுக்கான ஆளுமைத்திறன்களைச் செம்மை செய்வதற்குக் கற்பித்தல் போன்ற பாடங்கள் ஏதேனும் கலைத்திட்டத்தில் இருக்கிறதா? களத்தில் உணர்ந்ததைச் சொல்கிறேன். எழுப்பிய வினாக்களுக்கு வந்து சேரும் நோக்கம்தான் என்றாலும், கொஞ்சம் எட்ட நடந்து ஆதியிலிருந்து தொடங்குகிறேன்.
இன்றைய சூழலில் ஒரு முழுப் பார்வையற்ற குழந்தைக்கான கற்றல் அதள பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அறிவும் திறனும் ஒன்றுகூட்டி ஊட்டப்பட்ட கல்வியில் பெரும் பின்னடைவு நேர்ந்திருக்கிறது. சிறப்புப் பள்ளிகளிலேயே பிரெயில் முறை அருகி வருகிறது. காரணம், சிறப்புப் பள்ளிகளுக்கான போதிய கவனமும் கண்காணிப்பும் முழுதும் அற்றுவிட்டது.
இப்போதெல்லாம் சிறப்புப்பள்ளிகளில் குறைப்பார்வையுடைய மாணவர்களே அதிகம் இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிடும் அளவில் இருக்கும் முழுப் பார்வையற்றவர்களில் கணிசமானவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திறன் பாதிப்புகள் இருக்கின்றன. மாணவர் எண்ணிக்கையின்றி, பள்ளிகளை மூடிவிடும் ஆபத்து இருப்பதால், வந்தவர்களையெல்லாம் வகைதொகையின்றிச் சேர்த்துக்கொள்ளும் கட்டாயம் ஒவ்வொரு சிறப்புப்பள்ளிக்கும் இருக்கிறது.
ஒரு காலத்தில், சிறப்புப் பள்ளிகளில் குறைப் பார்வையுடைய மாணவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, பிரெயில், கணிதப்பலகை ஆகியவை வழிந்து கற்பிக்கப்பட்டன. ஏனெனில், குறைப்பார்வையுடைய மாணவர்களில் பெரும்பாலோர், நரம்பு மற்றும் விழித்திரை பாதிப்புகளால் தங்கள் பார்வையை இழந்தவர்கள். எனவே, எஞ்சிய பார்வை எப்போது வேண்டுமானாலும் குறையலாம் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வு எல்லா ஆசிரியர்களிடமும் இருந்தது. இப்போது அது நிகழ்வதில்லை, மற்றும் நிகழ்வதற்கான முதல் தடையாக இருப்பது ஆளும் அரசின் பார்வையற்றோர் கல்வி தொடர்பான புரிதலற்ற அணுகுமுறைகளும், அதன்வழியே நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய கல்விச் சூழலும்.
பொதுவாகவே உள்ளடங்கிய கல்வி என்கிற ஊதிப் பெருக்கப்படும் கல்விமுறையால் சிறப்புப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. 1,2,3 போன்ற தொடக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஒன்று என்றாலே அது பெரும் சாதனை. அப்படி வரும் குழந்தையும் முன்னமே சொன்னதுபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைகளுடன் எல்லாப் பக்கங்களிலும் வெளித்தள்ளப்பட்டே சிறப்புப்பள்ளிகளில் அதுவும் அரசு சிறப்புப்பள்ளிகளில் தஞ்சம் ஏற்கிறது.
உள்ளடங்கிய கல்விமுறையில் படித்துப் பல பார்வையற்ற அல்லது பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியெல்லாம் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவர்களே முன்னுதாரணங்கள் என்றும் நம்முடைய சூழலிலேயே முன்நிறுத்தவும் படுகிறார்கள். உள்ளுக்குள் நிகழும் அபத்தங்களை யார் அறிவார்?
உள்ளடங்கிய கல்வி முறையில் இயல்பிலேயே கற்றல் ஊக்கம் கொண்ட முழுப் பார்வையற்ற மாணவர்கள், தங்கள் சிறப்பான மனனத் திறனாலும், உள்வாங்கியதை அப்படியே ஒப்புவிக்கும் ஆற்றலாலும் கரையேறிவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஒருவகையில் தகவல் சேமக்களமான இன்றைய ஜெமினிகள். அவர்களுக்கு வீடும் பெற்றோரும் பள்ளியும் தவிர எதுவும் தெரியாது. சமூக ஊடாட்டத்தில் அவர்களின் மதிப்பெண் சுழியம்.
அதே கல்விமுறையில் பயிலும் குறைப்பார்வையுடைய (low-vision) மாணவர்கள், தங்கள் இளம் வயதில் கொண்டிருக்கிற செழிப்பான பார்வைத்திறனால் தனக்கு அப்படி ஒரு குறையிருப்பதையே மறைத்தும் மறந்தும் உலாவுகிறார்கள். மேல்நிலைக் கல்வியின் இறுதிநாட்களில் பார்வையில் இருந்த ஒருவகை நிலைப்புத் தன்மை ஆட்டம் காணத் தொடங்கும். அவர்களின் திணறலும் அங்கே ஆரம்பிக்கும். அத்தகைய திணறலைப் புரிந்துகொண்டு தகவமைவதற்குள், தடுமாறித் தடுமாறி முன்னைவிடவும் அதிகம் உற்றுப் பார்த்துப் படித்து, மேலும் அகலத் திறந்த கண்களால் கூர்ந்து பார்த்து நடந்து, ஓடி உயர்கல்வியை ஒப்பேற்றிவிடுவார்கள். இப்போது கூடுதலான பார்வையிழப்பு அவர்களைச் சூழும். அவர்களுக்குத் தாங்கள் இதுவரை கற்றுவந்த அச்சுக் கல்வி பயன் கொடுக்காது. பிரெயில் கல்வி தெரியவே தெரியாது. பிறகென்ன, எந்தப் பக்கமும் இல்லாமல் அல்லாடுவார்கள்.
இந்த இரண்டு வகையிலும் சேர்த்தியில்லாத அதாவது, சராசரிக் கற்றல் திறன் கொண்ட முழுப் பார்வையற்ற மாணவரையும், உயர்நிலை வகுப்புகளை அடைவதற்குள் பார்வையில் நிலைப்புத் தன்மை குன்றிவிட்ட குறைப்பார்வையுடைய மாணவர்களையும் பொதுப்பள்ளிகள் சிறப்புப்பள்ளிகளை நோக்கி வழிகாட்டும். அதனால்தான் சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 9 மற்றும் 11 வகுப்புகளில் மட்டும் அதிகரித்துக் காணப்படும். அப்போதும்கூட பத்துக்கு ஒரு மாணவர்தான் முழுப் பார்வையற்றவராக இருப்பார்.
இத்தகைய மாணவர் சேர்க்கைக் குளறுபடிகளில் அதிகம் சிக்கித் திண்டாடுவது சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள்தான். பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடுகள் அவர்களை துரத்திக்கொண்டே இருப்பதால், பிரெயில் உள்ளிட்ட பிரத்யேக முறைகளைக் கற்பிப்பதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்காது. எது எப்படியோ காகிதத்தில் நிர்வாகம் கனகச்சிதமாக இருந்தாக வேண்டும் என்கிற வரட்டுத்தனமான இன்றைய கல்விச் சூழலுக்குள் தங்களைப் பொருத்திக்கொள்ளாத ஆசிரியர்கள் கற்பிக்க லாயக்கற்றவர்கள் என்று முத்திரை குத்தப்படுவதன் ஆபத்து அவர்களையும் பத்தில் ஒன்றாக மாற்றிவிடுகிறது.
பிறகென்ன! முழுப் பார்வையற்றவருக்கு எல்லாமே ஒலிமயம், குறைப்பார்வையுடைய மாணவருக்கு அனைத்தும் அச்சுமயம். வகுப்பறைகளுக்குள் நுழைந்தால், சிலர் ஒலிப்பதிவுகள் கேட்டுக்கொண்டிருக்க, பலரின் பார்வை குறிப்பேடுகளில் ஓடிக்கொண்டிருக்கும். கூடவே, பலபலப்பு குறையாத முகப்பு அட்டைகளுடன் பிரெயில் புத்தகங்களும் ஒரு ஓரமாய்த் தூங்கிக்கொண்டிருக்கும்.
இதுதான் ஏறக்குறைய தமிழகத்தில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அனைத்து சிறப்புப்பள்ளிகளின் நிலை. இதற்கு யார் காரணம் என்று உங்கள் மனதுக்குள் எழும் கேள்விக்கு விடை வேண்டுமெனில், மீண்டும் ஒருமுறை இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அரசின் தவறான கல்விக்கொள்கைகள்தான் அத்தனைக்கும் தோற்றுவாய், துவக்கப்புள்ளி என்பது உங்களுக்குப் புரியவரும். அரசின் இத்தகைய பொறுப்பற்ற தன்மையையும் மேம்போக்கான அணுகுமுறைகளையும் தங்களுக்கான வாய்ப்பாய் பயன்படுத்திக்கொண்டு, சந்தடி சாக்கில் உள்ளே நுழையும் தொண்டு நிறுவனங்கள் தனியாள் முயற்சிகள் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
***சகா.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
