Categories
விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (4) சங்கீத சக்கரவர்த்தி: S. அஷோக் பாலா

குஜராத்தில் பூகம்பம் வந்தபோது, நற்பணி மன்றம் சார்பாக நிவாரண நிதி திரட்டினோம். உண்டியல் ஏந்த எல்லோரும் வெட்கப்பட்டபோது, நான் உண்டியல் ஏந்திய ஞாபகம் வருகிறது.

முந்தைய பகுதிகளைப் படிக்க:

கவிதை எழுதத் தோன்றினாலும் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நான் எழுதுவதை என்னாலேயே படிக்க முடியவில்லை. அதனால் எழுதுவதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டது. நான் எழுதிய முதல் கவிதையைப் பற்றி உங்களிடம் சொல்லவில்லை. அந்தக் கவிதையை இப்போது எழுதுகிறேன். ஆனால் ஒரு கண்டிஷன், அதைப் படித்துவிட்டுச் சிரிக்கக் கூடாது. ஏன்னா எனக்கே சிரிப்பு வருது. சரி எழுதுகிறேன்.

கடவுள் இருக்கும் வரை,

மழை பொழியும் வரை,

புயல் ஓயும் வரை,

மனிதன் மாறும் வரை,

ஜாதி என்னும் வேலி உடையும் வரை,

இந்த மனிதர்கள் சந்தனமல்ல, சாக்கடைதான்.

பார்த்தீர்களா? சிரிக்கக் கூடாதுன்னு சொன்னேன், சிரிக்கிறீங்க. 13 வயசு விரல் சப்புற குழந்தை எழுதின முதல் கவிதை அது. அதனால சிரிக்கக் கூடாது, சரியா? இப்படி எழுதத் துவங்கியவன்தான் நான். அடுத்தடுத்த விஷயங்களிலும் கவனம் செலுத்தத் துவங்கினேன். எங்கள் ஊரில் ஒரு நற்பணி மன்றம் துவங்கினோம். அந்த நற்பணி மன்றத்தின் பெயர் ‘பூஞ்சோலை நற்பணி மன்றம்’. அதில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை, ஆனால் பொறுப்பாக இருந்தேன்.

குஜராத்தில் பூகம்பம் வந்தபோது, நற்பணி மன்றம் சார்பாக நிவாரண நிதி திரட்டினோம். உண்டியல் ஏந்த எல்லோரும் வெட்கப்பட்டபோது, நான் உண்டியல் ஏந்திய ஞாபகம் வருகிறது. நிதி திரட்டி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தோம். நற்பணி மன்றம் சார்பாக ஊரைச் சுத்தம் செய்வது, குளத்தில் இறங்கி அல்லிகளை அகற்றுவது என்று எங்களால் முடிந்தவற்றைச் செய்தோம். ஒருமுறை எங்கள் நற்பணி மன்றம் சார்பாக ஊருக்குள் கலை நிகழ்ச்சி நடத்தினோம். அதில் நடனம், நாடகம் என்று நிகழ்ச்சிகள் இருந்தன. ஒரு நாடகத்தில் நான் ஐயர் வேடமிட்டு நடித்தேன். அதுமட்டுமில்லாமல், அந்த நிகழ்ச்சி முழுவதும் நான் தொகுத்து வழங்கினேன். மைக் பிடித்துப் பேசுவது எனக்குப் பிடிக்கும். விளையாட்டுகளிலும் ஆர்வமாகவே இருப்பேன்.

மாலை நேரத்தில் என் வீட்டு மாடியில் அமர்ந்து, என் நண்பன் பாலு அன்னக்கூடையைக் கவுத்து வைத்துத் தாளம் போட, நான் பாட! ஊருக்குள் என்ன சொல்வார்கள் தெரியுமா? “சின்னத்தம்பியும் சின்ராசும் பாட ஆரம்பிச்சுட்டாங்க, இனி குழந்தைகள் எல்லாம் தூங்கிடும்” என்று சொல்லுவாங்கன்னு நினைச்சீங்களா? அதுதான் இல்லை. “அசோக் கத்த ஆரம்பிச்சுட்டான், இனி தூங்கிக்கிட்டு இருந்த நாய் எல்லாம் கத்த ஆரம்பிச்சிடும்” என்று சொல்லுவாங்க! நான் ஒரு சங்கீத சக்கரவர்த்தி என்று எனக்குத் தெரியும், ஆனாலும் என் ஊருக்கு அது தெரியவில்லை. என் முயற்சியை நான் விடவில்லை.

அப்புறம் ஏன் நான் ஒரு பிரபலமான பாடகர் ஆகவில்லை என்றுதானே கேட்கிறீர்கள்? அதுக்கும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கு. சன் டிவியில் ‘லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு’ நிகழ்ச்சி வாரம் வாரம் வரும். அதை நான் தவறாமல் பார்ப்பேன். அப்படி ஒருமுறை பார்த்தபோது, ஒரு சின்னப் பையன் ‘அமர்க்களம்’ படத்தில் வரும் “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” என்ற பாடலை முழுவதும் பாடினான். அவன் மட்டும்தான் பாடுவானா, நானும் அதைப் பாடுவேன் என்று முடிவு செய்தேன். என்னிடம் ஒரு டேப் ரெக்கார்டர் இருந்தது. அதில் அமர்க்களம் படத்தின் பாடலைப் போட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு வாரத் தொடர் முயற்சியில் அந்தப் பாடலை மனப்பாடமும் செய்தேன். கேசட்டைப் போட்டு நாம் ரெக்கார்டும் செய்து கொள்ளலாம். அப்படி நான் கேசட்டைப் போட்டு, ரெக்கார்ட் பட்டனை அழுத்திப் பாட ஆரம்பித்தேன். பாடினேன், பாடினேன், மூச்சு நின்றுபோகும் அளவிற்கு அந்தப் பாடலைப் பாடிக்கொண்டே வந்தேன். இறுதியாக “மரணம், மரணம், மரணம் கேட்டேன்” என்ற வரியில் நான் ஹை பிச்சில் போகும்போது, திடீரென்று உள்ளே வந்த என் பாட்டி என்ன சொன்னது தெரியுமா? உண்மையிலேயே மரணம் எனக்கு வந்திருக்கலாம் என்று நினைத்தேன். அது என்ன வார்த்தை தெரியுமா? “ஏண்டா கழுதை மாதிரி கத்துற?” அப்படின்னு எங்க வீட்டுக் கிளவி சொல்ல, “அடிப்பாவி கிழவி! ஒரு சங்கீத சக்கரவர்த்தியைப் பார்த்து இப்படிச் சொல்லிட்டியே” அப்படின்னு நினைச்சேன். “இனி நம்ம பாடவே வேண்டாம்” என்று அன்றைக்கு முடிவு செய்தேன். அதனால்தான் நான் இசைத்துறைக்குள்ள வரவில்லை. மற்றவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டேன். நீங்கள் ஆசைப்பட்டால் நான் பாடுறேன், கேட்கிறீர்களா? பயப்படாதீங்க, நான் பாடவில்லை.

வாழ்க்கை இப்படிச் சின்ன வயதில் ஜாலியாகப் போனாலும், சில சோகங்களும் அவ்வப்போது வந்து தாக்கிக்கொண்டேதான் இருந்தன. கிரிக்கெட் விளையாடும்போது என்னால் கேட்ச் பிடிக்க முடியாது. ஏனென்றால், பந்து வேகமாய் வருவதால் எனக்குத் தெரியாது. அதேபோல் நான் பேட்டிங் பிடிக்கும்போது, ஷார்ட் பிட்ச் பால் வந்தால் அதைப் பார்த்து அடித்துவிடுவேன்; அடித்தால் சிக்ஸர்தான். ஆனால், பந்து வேகமாய் வந்தாலோ, ஃபுல் டாஸாக வந்தாலோ என்னால் அடிக்க முடியாது. அதேபோல் ஃபீல்டிங் செய்யும்போது, பந்தை நான் பார்த்துவிட்டால் துரத்தி ஓடிக்கொண்டு பிடித்திடுவேன். ஒரு நொடி நான் பார்க்கத் தவறினால் பந்து எனக்குத் தெரியாது. “அங்கேதான் கிடக்கு, இங்கேதான் கிடக்கு, தடவிக்கிட்டு நிக்கிறான் பாருடா” இப்படியெல்லாம் சிலர் விளையாட்டு வேகத்தில் சொல்வதும் உண்டு. சுருக்கென்று அது என் இதயத்தில் குத்திக் கிழிப்பதும் உண்டு. அதுபோல் சைக்கிள் ஓட்டிச் செல்லும்போது, நிழல் இருக்கும் இடங்களில் பள்ளம், மேடு தெரியாது. சில நேரங்களில் ஆட்டுக்குட்டி படுத்திருக்கும்; அதன் மேல் சைக்கிளை ஏற்றி இறக்கியிருக்கிறேன்.

இரவில் நான் நடப்பதில் பிரச்சினை உண்டு. வெளிச்சம் இருக்கும் இடங்களில் சென்றுவிடுவேன்; வெளிச்சம் இல்லாத இடங்களில் கொஞ்சம் தடுமாறுவேன். ஆனாலும் அதைக்காட்டிக்கொள்ளவும் மாட்டேன், ஒத்துக்கொள்ளவும் மாட்டேன். வெட்டி வீராப்பு, வேறொன்றும் இல்லை.

என் பெரியப்பா மகள்—என் அக்காவிற்குத் திருமணம் நடந்தது. நான் என் பெரியப்பா வீட்டில் அதிகமாய் இருப்பவன். என் ஊரிலேயே இருப்பதால் அடிக்கடி சென்று வருவேன். திருமணம் முடிந்து, இரவுச் சாப்பாட்டிற்காக எல்லோருக்கும் வாழை இலை விரிக்கப்பட்டிருந்தது. நான் விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்றபோது, அங்கு சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது; அதை நான் உதைத்துவிட்டேன். அப்புறம் என்ன சத்தம் கேட்டு என் பெரிய அக்கா வந்து எதுவுமே சொல்லவில்லை. “ஒன்னும் இல்லப்பா, தண்ணிதான் ஊத்திடுச்சு, நீ போ” அப்படின்னு சொல்ல, நான் என் வீட்டுக்கு வரும்போதே அழ ஆரம்பித்துவிட்டேன். என் வீட்டில் கூடச் சொல்லவில்லை;

மாடியில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தேன். அதற்குள் அங்கு யாரோ ஏதோ சொல்லியிருக்கிறார்கள். அதை நான் கேட்டுவிட்டுத்தான் கோபித்துக்கொண்டு வந்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டு, என்னுடைய பெரிய அத்தான் வீட்டுக்கு வந்து, “நீ வா மாப்பிள்ளை, உன்னை யார் என்ன சொன்னா? நீ வா” என்று கூப்பிட, நான் சத்தம் போட்டு அழுதுவிட்டேன். உண்மையில் யாரும் என்னை எதுவும் சொல்லவில்லை; அதுதான் அத்தனை வலிக்கும் காரணம். என்னுடைய இயலாமை, “எனக்கு மற்றவர்களைப் போலக் கண் தெரியவில்லை”, “என்னால் மற்றவர்களுக்குத் தொந்தரவு” என்கிற எல்லா எண்ணமும் சேர்ந்து என்னைக் கதறி அழ வைத்துவிட்டது. இப்படியே அழுதுகிட்டே இருந்தா எல்லாம் மாறிடுமா? அது அந்த நிகழ்வில், அந்த நேரத்தில் அவ்வளவுதான்.

அடுத்து, என்னோட எதிர்காலத்தை நான் எந்த வயதில் தீர்மானித்தேன்? என்னோட லட்சியம் எது என்று நான் எந்த வயசில் முடிவு செய்தேன்? முக்கியமாக உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கும்: அசோக் எனக்கு என் மாமா வைத்த பெயர், ஐயப்பன் எனக்கு என் அப்பா வைத்த பெயர்—இதை முதல் பதிவிலேயே சொல்லிட்டேன். அப்படின்னா பாலா?

சொல்கிறேன் அடுத்த இதழில்.

தொடர்புக்கு: ashokbala1387@gmail.com

பேச: 9626261773


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.