Categories
கல்வி சிறப்புப் பள்ளிகள் Uncategorized

சாதனை: தம்பி தங்கைகளுக்கு வாழ்த்துகள்! தாராளமனம் கொண்டோருக்கு வேண்டுகோள்கள்!

கடந்த மே 8, 2026, வெள்ளிக்கிழமை மாநிலப் பள்ளிகளின் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழ்நாடு அரசியலின் கூட்டணி கும்மிச் சத்தங்கள் தாண்டி, 595 மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள், 585 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முன்னுதாரணமாகத் திகழும் சலவைத்தொழிலாளியின் மகள் என ஒவ்வொருவரின் சாதனையும் விதந்தோதப்பட்டன. வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்க, எல்லா ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் நமது பார்வைத்திறன் குறையுடைய தம்பி தங்கைகளின் சாதனை சரித்திரத்தை இந்த உலகுக்குச் சொல்ல களத்தில் இறங்கினோம்.

திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு

கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டில், பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவன்

ஆனந்த்

கணினி வழியே தனது பொதுத்தேர்வினை எழுதி ஒரு வரலாற்று வாய்ப்பினைத் தொடக்கிவைத்தார். இந்த ஆண்டும் அந்தத் தொடர்ச்சியைக் கைவிடாத அதே பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் திருநாவுக்கரசு, அனைத்துத் தேர்வுகளையும் கணினியைப் பயன்படுத்தி சுயமாக எழுதி, 449 மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்று சாதித்துள்ளார்.

அம்மா இல்லை, அப்பா மாற்றுத்திறனாளி

திருச்சியில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான விடுதியுடன் கூடிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின்  மாணவி நந்தினி, பன்னிரண்டாம்வகுப்புப் பொதுத்தேர்வில் 600-க்கு 547 மதிப்பெண்கள் எடுத்துச் சாதனைபடைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், V. புதூரைச் சேர்ந்த இவருக்கு அம்மா இல்லை; அப்பாவும் மாற்றுத்திறனாளி. நூறு நாள் வேலைக்குச் சென்றுதான் குடும்பம் பிழைக்க வேண்டும் என்ற நிலையிலும், தளராது படித்து, ஐஏஎஸ் ஆவதே தனது இலக்கு என்கிறார் இவர்.

இதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் திவ்யா, தேவதர்ஷினி இருவரும் முறையே 509, 507 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வறுமைச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்த இருவரின் உடன்பிறந்தோரும் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒன்றல்ல இலக்கு: உளம் முழுக்க கனவு

கடலூரைச் சேர்ந்த முழுப் பார்வையற்ற மாணவன் மணிகண்டனின் அப்பா லாரி ஓட்டுநர், அக்காவோ கடும்வகை மாற்றுத்திறனாளி. சொல்வதற்குச் சில துன்பக் கதைகள் இருந்தபோதிலும், எதிர்கொண்ட தேர்வில் 569 மதிப்பெண்கள் பெற்று, சென்னை அடையாறிலுள்ள புனித லூயி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியைப் பெருமைப்படுத்தியுள்ளார் மணிகண்டன். இளங்கலை ஆங்கிலம் படித்து, எழுத்தாளராக, பாடலாசிரியராக, இசையமைப்பாளராக அத்தோடு ஆங்கிலப் பேராசிரியராகவும் ஆக வேண்டும் எனத் தன் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகிறார் இந்த அன்புத் தம்பி.

556, 551 என புனித லூயி பள்ளியைப் பெருமைப்படுத்த அடுத்தடு்த்து வரிசை கட்டியவர்கள் ஆண்ட்ரூஸ் மற்றும் தினேஷ்.

திருச்சி மாவட்டம், ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த ஆண்ரூஸின் பெற்றோர் விவசாயிகள். ஆங்கிலப் பேராசிரியர் என்கிற தன் கனவு நோக்கிய முதல் அடியை அழுத்தமாகப் பதித்துள்ளார் இவர்.

ராப் என்னும் மேற்கத்திய இசைசார் கமுனிட்டியில் உறுப்பினராக இருப்பதை பெருமிதத்துடன் பகிரும் தினேஷுக்கு மனசு முழுக்க இசையே நிறைந்திருக்கிறது. இலங்கலை முடித்து, ஒலிசார் பொறியியல் (sound engieneering) படிக்கத் திட்டமிட்டு்ள்ளார் சென்னை எண்ணூரைச்சேர்ந்த இந்த இளவல்.

வளனார் வைரங்கள்

மதுரையிலுள்ள  பரவை என்ற இடத்தில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான புனித வளனார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. விடுதியுடன் கூடிய இந்தப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களான மதுரையைச் சேர்ந்த  பரனி, நத்தம் கங்கை பிரியதர்ஷினி மற்றும் திண்டுக்கல் சிவக்குமார் முறையே 556, 545 மற்றும் 531 என மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

பரனிக்கு ஆங்கிலப் பேராசிரியர் ஆவதே இலக்கு. தேனெடுக்கும் தொழில் செய்யும் பெற்றோரின் செல்ல மகளான கங்கைப் பிரியதர்ஷினிக்கோ ஆங்கில ஆசிரியர் ஆகவேண்டும் என்பது விருப்பம்.

வங்கி அலுவலராக வேண்டும் என்பதைத் தன் இலக்காகக் கொண்டுள்ள மாணவர் சிவக்குமாரின் பெற்றோர் கட்டடப் பணியாளர்கள்.

ஆசிரியர், ஐஏஎஸ்; அதிரடிக்கும் ஐஏபி செல்லங்கள்

மதுரை சுந்தரராஜன்பட்டியில் இயங்கி வருகிறது இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தால் நடத்தப்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் பயின்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களான தர்ஷினி, குணா, சாஃபின் குத்தூஸ் முறையே 530, 515, 502 மதிப்பெண்களை எடுத்துச் சாதித்துள்ளனர்.

உயர்கல்வியில் மூவருமே ஆங்கிலப் பாடத்தைத் தங்கள் ஒற்றைத்  தெரிவாகக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், குணா மற்றும் சாஃபினுக்கு ஐஏஎஸ் ஆவதே இலட்சியம். தர்ஷினியோ ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறார்.

‘அப்பா அம்மா இல்லை, அது ஒரு தடையில்லை’

படிப்பால் வென்ற பாளை மாணவி

சிறுவயதிலேயே அப்பா அம்மாவை இழந்துவிட்ட நெல்லையைச் சேர்ந்த எசக்கியம்மாள், கேரளாவின் ஒரு ஹோட்டலில் பணியாற்றும் தன் மாமாவின்  பாதுகாப்பில்தான் வளர்கிறார். ஆசிரியர்ப் பணி உள்ளிட்ட ஏதேனும் ஒரு அரசுப்பணியில் அமர்ந்துவிடுவதே நோக்கமாகக் கொண்டிருக்கும் எசக்கியம்மாள் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 530.

முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மதுரை பரவைப் பள்ளியில் படித்த மாணவன் ஹரிஹரன், வணிகவியல் பாடம் படிப்பதற்காகவே தனது சொந்த ஊரான திண்டுக்கல் சின்னாலபட்டியிலிருந்து பாளையங்கோட்டை, CSI பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்திருக்கிறார். 512 மதிப்பெண்களைப் பெற்றுள்ள ஹரிஹரனுக்கு ஆசிரியராக வேண்டுமென்பது அவா.

511 மதிப்பெண்கள் பெற்ற பிறகும், சீஏ படிக்கும் கனவைத் தன் குடும்பச் சூழல் கருதி கைவிட்டுவிட்டு, போட்டித் தேர்வுகளுக்குத் தன்னைத் தயார்செய்யவிருக்கிறார் மாணவர் வேல்முருகன். செவித்திறன் மற்றும் பேச்சுத்திறனற்ற அப்பா, தன்னை் போலவே குறைப்பார்வையுடைய அம்மா என வேல்முருகன் அன்றாடம் கடந்துகொண்டிருக்கும் பாதை முட்களும் முனைகூர் கற்களும் நிறைந்தவை. மூன்று மாணவர்களுமே ஏதேனும் ஒரு இடையூறின் வழியே வளர்ந்தாலும், மதிப்பெண்களின் மூலம், தாங்கள் படித்த பாளையங்கோட்டை பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

சிறு பூக்கள், பெருங்கனவுகள்

சென்னையில் இயங்கிவரும் சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த அஷ்வினி 571 மதிப்பெண்களுடன் மாநிலத்தின்  பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர்களுள் மூன்றாம் இடம் பிடித்துச் சாதித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இவருடைய பெற்றோர் விவசாயிகள். குறைப்பார்வையுடையவரான அஷ்வினி, ஐஏஎஸ் ஆவதே தனது இலட்சியம் என்கிறார்.

இதே கனவைச் சுமந்திருக்கும் அஷ்வினியின் வகுப்புத் தோழியான அனிஸ் நிஷாவின் தந்தை ஒரு எளிய நடைபாதை வணிகர். மேலும், நிஷாவோடு சேர்த்து, அந்தத் தந்தையின் மூன்று பெண் பிள்ளைகளுமே பார்வையற்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இத்தனைக்குப் பிறகும், தன்னுடைய கனவைச் சாதிப்பதற்கான கட்டியமாய் அவர் இந்தத் தேர்வில் 572 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தின் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களிடையே 576 மதிப்பெண்கள்  பெற்று, மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருக்கும் ரைசாவும் இதே சிறுமலர்ப் பள்ளியின் மாணவிதான். BCA படித்து ஐடி துறையில் பணியாற்ற விரும்பும் இவருக்குப் போதுமான வழிகாட்டல்கள் இல்லாத காரணத்தால், தற்போது இளங்கலை ஆங்கிலம் படிப்பது என முடிவு செய்துள்ளார்.

வரிசைப்படுத்தப்பட்ட அனைவருமே மாநிலத்தில் இயங்கிவரும் அரசு மற்றும்் அரசு உதவிபெறும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் படித்துச் சாதித்தவர்கள். இன்னும் பரவலாக உள்ளடங்கிய கல்வியின் மூலம் பொதுப்பள்ளிகளில் இதே சாதனைகளை நிகழ்த்திய அனைத்துப் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பார்வையின்மை என்கிற பெருஞ்சவால் பிறவி கொடுத்தது. அதற்கு யாரும் எதுவும் செய்துவிட இயலாது. ஆனால், இந்த மாணவர்களில் சிலர் தங்கள் இளமைப் பருவத்திலேயே எதிர்கொண்டிருக்கும் வறுமையும் ஆதரவின்மையும் மிகவும் கொடியது. கொஞ்சம் மனது வைத்தால், எளிதில் போக்கக் கூடியது. எனவே, ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஆதரவை நல்கி அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிட முயலலாம்.

தொகுப்பு: U. சித்ரா,

எழுத்து மற்றும் வடிவாக்கம்: ப. சரவணமணிகண்டன்.

குறிப்பு: மாணவர்களின் வளர்ச்சியிலும் வழிகாட்டலிலும் தங்கள் பங்கேற்பைச் செலுத்த விரும்புபவர்கள்

9655013030 மற்றும்

9789533964 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.