எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று தமிழகச் சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று, மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், தமிழகத் தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அந்தத் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள்ள மாற்றுத்திறனாளிகள் நலன்கள் குறித்த அம்சங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அவர்களின் வெளியீட்டுத் தேதியின்படியே இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அதிகாரப் பூர்வமாக நமக்குக் கிடைக்கும் அறிக்கைகளும் அவ்வப்போது பதிவேற்றப்பட்டு, இந்தப் பதிவு உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2025
மாற்றுத்திறனாளிகள் நலன்
1. மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி அமைச்சகம் மற்றும் தனி அமைச்சர் உருவாக்கப்படும். மேலும் தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடப்பங்கீட்டில் 5% மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்படும்.
2. மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016இல் வழங்கப்பட்டுள்ள 4% இடப்பங்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வண்ணம் தமிழ்நாட்டு அரசின் கீழுள்ளப் பணியிடங்களை முழுமையாகவும், அறிவியல் நிலையிலும், ஆய்வு செய்து கண்டறியும் ஆணையம் உருவாக்கப்படும்.
3. பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், எளிமையாக அணுகத்தக்க வகையில் சாய்வுதளம், கழிவறை, மின்தூக்கி, வாகனம் நிறுத்துமிடம், படிகளில் சிறப்புக் கைப்பிடி போன்ற மற்ற வசதிகள் உருவாக்கப்படும். புதியதாகக் கட்டப்படும் கட்டடங்களில் சாய்வுதளம் மற்றும் மின்தூக்கி அமைப்பதற்கான வரைப்படத்தில் குறிப்பிடவில்லையெனில் கட்டட உரிமம் நீக்கப்படும்.
4. மாற்றுத்திறனாளிகள், மகிழுந்து (Taxi), தானி (Autorickshaw) போன்றவைகளைக் கைகளால் இயக்கி வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணம் முறைப்படி சட்டத்திற்கு உட்பட்டு அல்லது திருத்தப்பட்டு ஓட்டுநர் உரிமம் மற்றும் சிறப்புக் கடன் வசதிக்கான திட்டம் உருவாக்கப்படும்.
5. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் (மனவளர்ச்சி உட்பட) அவர்களின் விருப்பத்திற்கேற்ப கூட்டாக வாழக்கூடிய (Community Living) வீடுகளோ அல்லது மனைகளோ அமைத்துக் கொள்ள உதவிகள் செய்யப்படும்.
6. ஒவ்வொரு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் இயலாமை உடையோர், மூத்தக் குடிமக்கள், அரிதான நோய்களால் பாதிக்கப்பட்டோர், அமைப்புச் சாரா இயலாமை (NON-CONVENTIONAL DISABILTY) உள்ளவர்களுக்கான தனி மருத்துவத்துறை (Disability Management Department) அமைக்கப்படும்.
7. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிக் கருவிகளை உருவாக்கி, சீராக்கம் செய்வதற்கானப் பணிமனை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும்.
8. Autism போன்ற பாதிப்புக்குள்ளான அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடுடைய குழந்தைகளுக்கான, அரசு சிறப்புப் பள்ளி மாநிலத்திற்கே ஒன்றுதான் உள்ளது. இது மாவட்டத்துக்கு ஒரு பள்ளி என்று உருவாக்கப்படும். இதைப்போலவே, வயது வந்த, ஆதரவற்ற, மனவளர்ச்சி குன்றியோருக்குப் காப்பகங்கள் உருவாக்கப்படும்.
9. அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, பயிற்சி கொடுக்க உதவும் ஈ.ஐ. (c.1) நிலையங்கள் மாவட்ட அளவில் உள்ளன. இதனை வட்ட அளவில் கொண்டு வந்து மேலும் பல நிலையங்கள் உருவாக்கப்படும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

23) மாற்றுத் திறனாளிகளுக்கான நலன்:
1. சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர், விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1,200/-ல் இருந்து ரூ. 2,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2. மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
3. கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் கடன் தொகையை குறைந்தபட்சம் ரூ. 1,00,000/-த்தில் இருந்து ரூ 2,00,000/-மாக உயர்த்தி, 50% மானியத்துடன் வழங்கிட வழிவகை செய்யப்படும்.
4. மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின்கீழ் இந்து சமய அறநிலைத் துறை சார்ந்த கடைகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
5. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை, கடுமையாக பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் இணைத்து, பராமரிப்பு உதவித் தொகை உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
6. கண் பாதிப்புக்கு உள்ளானவர்களை குறைந்த பார்வை உடையவர்களுக்கான பட்டியலில் சேர்த்து மாற்றுத் திறனாளி அடையாள அட்டை மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்படும்.
7. ஆட்டிசம் போன்ற பாதிப்புக்குள்ளான அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உடைய குழந்தைகளுக்காக அரசு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

மாற்றுத்திறனாளிகள் நலன்
1. ஓய்வூதியம் அதிகரிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் குறைந்தபட்சமாக 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2. மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3. இருசக்கர வாகணங்களுக்கு வரிச்சலுகை
மாற்றுத்திறனாளிகள் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் வாகனங்களுக்கு வரிச்சலுகையோடு, மானியமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4. அரசின் உதவிகளை பெற ஒரே அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகள் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளையும், உதவிகளையும் எளிமையாக பெறும் வகையில் ஒரே வகையான அட்டை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகம்

15 | மாற்றுத்திறனாளிகள் நலன்
சமூகத்தில் வாழும் அனைத்துத் தரப்பினரின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் காத்து – அவற்றை உறுதிசெய்வதே திராவிட இயக்கத்தின் பணி. அதனை நெஞ்சில் வைத்தே மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர். மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்துறையைத் தனது கண்காணிப்பிலேயே வைத்து திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த தலைவர் கலைஞரின் வழியில், திராவிட மாடல் முதலமைச்சர் அவர்களும் பயணித்து புதிய திட்டங்களால் புரட்சிகள் படைத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்…
1. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒரு குறிப்பிட்ட நாளில், அனைத்துச் சிறப்பு மருத்துவர்களும் ஒரே இடத்தில் மாற்றுத்திறனாளி மருத்துவப் பயனாளிகளைப் பரிசோதனை செய்யும் நடைமுறை உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.
2. மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதைத் தொடர்ந்து தொகுத்து வழங்கும் அமைப்பு உருவாக்கப்படும். மாற்றுத் திறனாளிகளின் திறனும் – கல்வித் தகுதியும் பதிவு செய்யப்பட்டு பெருநிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதை எளிதாக்கும் அமைப்பாக இது செயல்படும்.
3. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1500-இல் இருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.
4. தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத கடுமையான குறைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான (Persons With Severe Disabilities) மாதாந்திர பராமரிப்பு மானியத் தொகை ரூ. 2000-லிருந்து ரூ. 4,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
5. மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க கடன் உதவி, உரிய ஆலோசனைகள், சந்தைத் தொடர்பு ஆகியவற்றை ஏற்படுத்தி வழங்கிட ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
6. அரசு வழங்கும் குடியிருப்புத் திட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
7. அன்றாடச் செயல்பாடுகளை எளிதாக்க உதவும் நவீனக் கருவிகளைக் (Modern Assis- tive Devices) கண்டறிந்து அவற்றை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை எளிதாகவும், இயல்பாகவும் மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்க நவீனக் கருவிகள் வழங்குவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்குவோம்.
பாட்டாளி மக்கள் கட்சி

1. இடஒதுக்கீடு உயர்வு:
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 5 விழுக்காடாக உயர்த்தப்படும்.
2. தனியார் துறை இடஒதுக்கீடு:
தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; இதற்காகத் தனிச் சட்டம் இயற்றப்படும்.
3. மாதாந்திர உதவித்தொகை:
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 6,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
பாரதிய ஜனதா கட்சி

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான மாநில அளவிலான ஆதரவும் உத்தரவாதமும், தமிழகத்தில் தற்போதைய அரசால் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களது வாக்குறுதிகள் வாக்குகளுக்கானதல்ல, மாறாக ஆர்வமுடன் சேவை செய்ய விரும்பும் மக்களின் ஆசீர்வாதத்திற்கு உரியதாகும். எனவே, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நோக்கத்துடன் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த, பின்வருவனவற்றை உறுதிசெய்வோம்:
a. மாநிலப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை 1,500-லிருந்து 3,000 ஆக இரட்டிப்பாக்குவோம்.
b. மத்திய அரசின் முன்னோடித் திட்டமான பி.எம். திவ்யாஷா கேந்திராவை உறுதியாகச் செயல்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள், உதவி சாதனங்களை எளிதாகப் பெறுவதற்கு உதவி தொழில்நுட்ப மார்ட்டுகளை (Assistive Technology Marts) நிறுவுவோம்
C. மாற்றுத்திறன்கொண்டஇளைஞர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம், AVGC, விருந்தோம்பல் மற்றும் உணவு & பானச் சேவைகளில் தொழில்துறை சார்ந்த பயிற்சி வழங்கும் திட்டத்தைத் தொடங்குவோம்.
தமிழக வெற்றிக் கழகம்

E. மாற்றுத் திறனாளிகள் நலன்
1 ஓய்வூதியம் உயர்வு
மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் மூன்றாயிரம் (ரூ.3000) ரூபாயாக உயர்த்தப்படும்.
2 சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி
ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் சிறப்புக் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆசிரியர்
நியமிக்கப்படுவார். அதேபோல, சிறப்புக் குழந்தைகளுக்கான பிரத்தியேகப் பள்ளிகளும்
திறக்கப்படும்.
3 உபகரண உதவித்தொகை
மாற்றுத்திறனாளிகளுக்கு அவசியமாகத் தேவைப்படும் சக்கர நாற்காலி, கண் கண்ணாடி, காது
கேட்கும் கருவிகள், நடை உபகரணங்கள் ஆகியவை வாங்க உதவித்தொகை வழங்கப்படும்.
4 இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துதல்
மாற்றுத் திறனாளிகளுக்கு வழக்கத்தில் இருக்கும் 4 சதவிகித இடஒதுக்கீட்டை முறையாக
நடைமுறைப்படுத்துவோம்.
இவை தவிர, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து அரசியல் மன்றங்களிலும் இட ஒதுக்கீடு பெற போராடுவோம் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
***தொகுப்பு: ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
