Categories
விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (10) மரணம் தந்த மரணிக்காத குற்ற உணர்ச்சி: S. அஷோக் பாலா

1997-ல ஒரு முறை வெள்ளம் வந்தது எனக்குத் தெரியும். அதற்குப் பிறகு 2008-ல கரையை உடைக்கப் போகுதுங்குற தகவல் வந்துடுச்சு.

முந்தைய பகுதிகளைப் படிக்க

“சுனாமியிலேயே நாங்க சும்மிங்க போட்டவங்கடா”ன்னு ஒரு வசனம் கேட்டிருக்கீங்களா? அதுபோல நாங்க வெள்ளத்திலேயே சும்மிங்க போட்டவங்க.

என் ஊர்ல இன்னும் சில விஷயத்தைப் பத்தி உங்ககிட்ட சொல்லல. என் ஊர்ல ஒரு அணை இருக்கு, அதை Satras-ன்னு சொல்லுவோம்; நூறு வருஷம் பழமையான அணை. மறைக்கா கோரை ஆறுன்னு ஒரு பெரிய ஆறு இருக்கு. ராசவாய்க்கால்னு ஒரு வாய்க்கால், குளங்களும் இருக்கு. மழைக்காலங்களில் எப்பயாவது வெள்ளம் வந்திடுமோ என்ற பயம் வரும். கரையை உடைக்கிற அளவுக்குத் தண்ணி போகும்; பல நேரங்களில் வெள்ளம் வராமல் போயிருக்கு.

1997-ல ஒரு முறை வெள்ளம் வந்தது எனக்குத் தெரியும். அதற்குப் பிறகு 2008-ல கரையை உடைக்கப் போகுதுங்குற தகவல் வந்துடுச்சு. எல்லா வீடுகள்லயும் இருந்த பொருளையெல்லாம் மூட்டை மூட்டையா கட்டி உயரமான இடத்துல வைக்கிறது, மாடி வீடு இல்லாதவங்க வீட்ல இருக்கப் பொருளையெல்லாம் மாடி வீட்டுக் கொண்டு வந்து மாடி மேல வைக்கிறது அப்படின்னு அந்த நாளே பரபரப்பா இருந்தது. மூணு கிலோமீட்டர் தொலைவில் கரை உடைஞ்சிடுச்சு. வயல், வாய்க்கால் எல்லாம் நிரம்பித் தண்ணி வேகமா வந்துகிட்டே இருந்தது. அதை ஜாலியா போய் வேடிக்கை பார்த்தோம்.

ஊருக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சது. காலையில ஊரு ஃபுல்லா தண்ணி வந்துடும்னு எல்லாருக்கும் தெரியும். அந்த இரவு முழுக்க ஊரே ஒரு இடத்துல நின்னு பேசிக்கிட்டு இருந்தோம். விடியும்போது ஊரே தண்ணிக்குள்ள இருந்துச்சு. ஒரு தெருவுல மட்டும் தண்ணி ஏறல. இன்னும் சில இடங்கள்ல வீட்டுக்குள்ள தண்ணி வரல. நேரமாக ஆகத் தண்ணியோட அளவு உயர்ந்து கொண்டே இருந்தது. நடந்து போன ஊருக்குள்ள நாங்க நீச்சல் அடிச்சுப் போனோம். ஊரையே நீச்சல் அடிச்சுச் சுத்தி வந்தோம். நிறைய பாம்புகள், பூச்சிகள் மட்டுமில்லாம ஆடு மாடுகள் செத்து அந்த வெள்ளத்துல மிதந்துதான் வந்தது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போய் எவ்வளவு தண்ணி இருக்குன்னு பார்த்தோம். என் வீட்டுக்குள்ள இடுப்புக்கு மேல தண்ணி. என் வீட்டுக்கு வர வழியெல்லாம் கழுத்தளவு தண்ணி. எனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுச்சு. எனக்கு ஒரு தொலைநோக்கு பார்வை இருந்தது; அதனால முதல் நாளே என் அம்மாவிடம் புளிசாதம் செஞ்சு வைக்கச் சொல்லிட்டேன். ஒரு மேடான மாடி வீட்டுக்குள்ளதான் நிறைய பேரு தங்கியிருந்தோம். நிறைய சின்னக் குழந்தைங்களாம் பசிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தது. நான், சின்னவன், பெரியவன் மூணு பேரும் நீச்சல் அடிச்சு என் வீட்டுக்கு வந்தோம்.

புளிசாதம் ஒரு உயரமான அலமாரியில் இருந்தது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அதனால தண்ணிக்குள்ள நின்னுகிட்டு மூணு பேரும் சாப்பிடலாம்னு முடிவு பண்ணினோம். ஹலோ, அவசரப்பட்டு என்னைத் தப்பா நினைக்கிறது புரியுது! ஆனா நான் அப்படி இல்லை. அந்தக் குழந்தைங்க பசிக்குதுன்னு சொன்னது ஞாபகம் வந்ததால, அப்படியே எடுத்துட்டு போய் அந்தக் குழந்தைங்ககிட்டயே கொடுத்துட்டோம். நாங்கல்லாம் எவ்வளவு பெரிய தியாகிங்கனு இப்பயாவது தெரிஞ்சுக்கங்க.

ஆனாலும் எனக்கு பயங்கர பசி. என் வாழ்க்கையிலேயே ஒரு டிகாஷனுக்காக மதியானம் ஒரு மணி வரைக்கும் காத்திருந்து ஒரு டம்ளர் டிகாஷன் குடிச்சேன். இப்போது நினைக்கும்போது கண் முன்னே காட்சிகளா தெரியுது. ஒரு வெள்ளம் வந்தா ஒரு ஊர் எப்படி இருக்கும், ஒவ்வொரு வீட்ல இருக்கவங்களும் எப்படியெல்லாம் கஷ்டப்படுவாங்கன்னு நான் பார்த்திருக்கேன். என்னால் அந்த கஷ்டத்தை ஒரு நாள் மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடிஞ்சது; அதுக்குக் காரணம் என் கண் பார்வைதான். அடுத்த நாளே என் அத்தான் வந்து என்னை கூட்டிட்டு போய்ட்டாங்க. ஊருக்குள்ள வெள்ளம் வந்தா அந்த ஊர் பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்களாகும். எல்லாம் அனுபவமே!

அடுத்த புத்தாண்டைக் கொண்டாடணும்னு முடிவு பண்ணினோம், 2009-ஆம் ஆண்டை வரவேற்க. முடிவு செஞ்சு திட்டமிட்டோம். திட்டமிடுவது, செயல்படுத்துவது, ஒருங்கிணைப்பது என்னோட வேலை. காரணம் என் ஊருக்குள்ளே வெட்டியா இருந்தது நான் மட்டும்தான். ஒரு திருவிழா மாதிரி கொண்டாட முடிவு பண்ணி, பசங்களிடம் காசு வசூல் பண்ணி, ரெண்டு பசங்களை அழைச்சுக்கிட்டு பைக்ல திருத்துறைப்பூண்டி போயி, அன்னைக்கு நைட் எல்லா பசங்களுக்கும் சாப்பாடு வாங்கிட்டு, கேக் வாங்கிட்டு, பத்து மணிக்கு வந்து எல்லாரும் சேர்ந்து மாடியில் உட்கார்ந்து சாப்பிட்டு, அதற்குப் பிறகு தோரணம் எல்லாம் ஊருக்குள்ள கட்டி, ரோடு எல்லாத்துலயும் ‘ஹேப்பி நியூ இயர்’ எழுதி, நைட் 12 மணிக்கு கேக் வெட்டி முடிச்சுட்டு, ஊருக்குள்ள ‘ஹேப்பி நியூ இயர்’னு கத்திக்கிட்டு வெடி வெடிச்சுக்கிட்டு ஊரைச் சுத்தி வந்தோம்.

அதோட கொண்டாட்டம் முடியல. என் ஊரையும் சந்தோஷப்படுத்த முடிவு பண்ணி, அடுத்த நாள் காலையிலேயே முதல் முறையா நிறைய தாம்பாளத் தட்டில் பேப்பர் பிளேட் வச்சு, எல்லா வீட்டுக்கும் கேக், சாக்லேட், கேசரினு வீடு வீடா போய்க் கொடுத்து ‘ஹேப்பி நியூ இயர்’ சொன்னோம். இதற்கான வரவு செலவு கணக்கு எல்லாத்தையும் பார்த்து எல்லா பசங்களையும் உட்கார வச்சு நான் சொல்லுவேன். ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியான கணக்கு இருக்கும். அதுமட்டுமில்லாம ஊருக்குள்ள யாருக்கும் கல்யாணம்னா பேனர் அடிப்போம். அதுக்கும் நான்தான் போய் அந்த டிசைன் எல்லாம் பார்ப்பேன். அதைக் கொண்டு வந்து வைக்கிற வரைக்கும் என் பொறுப்பு; என் கூட என் பசங்களும் இருப்பாங்க. இந்தக் கொண்டாட்டம் ஒவ்வொரு புத்தாண்டுக்கும் தொடர்ந்தது.

உங்களுக்கு என் வீட்டில் நடந்த ஒரு மரணத்தைப் பத்தி சொல்றேன். என் பாட்டியைப் பத்தி உங்ககிட்ட ஒரு முறை சொல்லிருக்கேன் தானே? நாங்க ஆத்தானுதான் கூப்பிடுவோம். எனக்கும் எங்க ஆத்தாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அப்ப எல்லாம், “பேசாம இருந்தரலாம்னு பாக்குறேன், முடியாத பிள்ளைகிட்ட பேசாம இருக்கிறான்னு யாராவது ஏதும் சொல்லுவாங்கன்னு பாக்குறேன்”னு எங்க ஆத்தா அடிக்கடி சொல்லும். ஒரு நாள் எனக்கு கடுப்பாயிடுச்சு; “கிழவி, இனிமே உன்கிட்ட பேச மாட்டேன்”னு சொன்னேன். அதிலிருந்து பேசுவதே இல்லை. எவ்வளவு நாளான்னு கேக்குறீங்களா? அஞ்சு வருஷம் நான் பேசவே இல்லை.

என் ஆத்தா கீழே விழுந்து கால் அடிபட்டு நடக்க முடியாமல் போயிடுச்சு. ஒரு வருஷம் நடக்க முடியாமதான் இருந்தது. அப்ப எல்லாம் “என்னோட பேசுடா, என்னை ஆத்தான்னு கூப்பிடுடா, நான் சாகப் போறேன்”னு நிறைய முறை சொல்லியிருக்கு. நான் அதெல்லாம் காதிலேயே வாங்க மாட்டேன்; “கிழவி எப்பதான் சாகுமோ”னு நினைச்சிருக்கேன். அதற்கான நாளும் வந்தது.

என் ஆத்தாவோட கடைசி ஒருவாரம். படுத்த படுக்கையா ஆச்சு. பேரன் பேத்திகளையெல்லாம் கூப்பிட்டு பால் ஊத்தச் சொன்னாங்க. அப்ப நான் ஊத்த போனபோது, “ஆத்தா, நான்தான் அசோக்” அப்படின்னு சொல்லி “பால் ஊத்துடா”ன்னு சொன்னாங்க. நான் அப்பக்கூட ஆத்தான்னு கூப்பிடாம சிரிச்சுக்கிட்டே அந்தப் பாலை ஆத்தா வாயில ஊத்தினேன். கடைசி உயிர் போற தருணம் நான் ஜன்னலுக்குப் பின்னாடி கம்பியைப் பிடிச்சுக்கிட்டு நின்னேன். என் ஆத்தா கடைசி மூச்சை வேகமா இழுத்து விட்டது. அங்கே இருந்த சிலர் “நின்னுடுச்சுப்பா”ன்னு சொன்னபோது எனக்கு என்ன ஆனுச்சுன்னே தெரியல. இதயமே வெடிச்சு போற மாதிரி அழுதேன். கத்தி கதறி அழுத சத்தத்தைக் கேட்டு ஊரே வந்துடுச்சு. என் கண்ணீருக்குக் காரணம் குற்ற உணர்ச்சி.

ஒருத்தவங்க மேல நாம எவ்வளவு கோவமாவும் வெறுப்பாவும் இருந்தாலும் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? அவங்க உயிரோட இருக்கிற வரைக்கும்தானே அந்த கோபமும் வெறுப்பும் இருக்கும். என் ஆத்தாவோட மரணம் எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்துட்டு போச்சு. ஆத்தா உயிரோட இருக்கும்போது பேசக் கூடாதுங்கிறது என்னுடைய ஈகோ. அந்த ஈகோவை வச்சு நான் எதையுமே சாதிக்கல. என்னுடைய ஆத்தா உயிரோட இருக்கும்போது நான் ‘ஆத்தா’ன்னு கூப்பிட்டிருந்தா அதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும்! ஆனா நான் கூப்பிடாம அது செத்ததுக்கு பிறகு அழுது என்ன பயன்? நான் செஞ்ச தப்பை யாரும் செஞ்சுடாதீங்க. உறவுகள் உண்மையிலேயே மேன்மையானது.

எனக்கு ஆன்மா மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது. அந்த நம்பிக்கை இருந்திருந்தால் தினந்தோறும் என் ஆத்தாவிடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். சரி விடுங்க, என் சோகம் என்னோடு.

உங்களிடம் ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்றேன். என் அக்கா எனக்குக் கொடுத்த முதல் வரம், என் வீட்டுக்கே கொடுத்த சந்தோஷம் என்ன தெரியுமா? என் தங்கக்குட்டி! 2009 மே 30 என் அக்காவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் உலகம் குழந்தைகளால் நிறைந்தது. அந்த உலகத்துக்குள்ள முதல்ல இருந்தது ஸ்ரீகுட்டி; அதுக்குப் பிறகு முழுமையானது என் தங்கம்! எனக்கு தாய்மாமன் என்கிற அந்தஸ்தைக் கொடுத்தவன். அவனுக்கு நான் வச்ச பெயரை வைக்காம ஜாதகப்படி மித்ரன் என்ற பெயர் வச்சாங்க. அதனாலயே நான் அவனை ‘தங்கம்’னு கூப்பிட ஆரம்பிச்சேன். என் அக்கா உட்பட எல்லோருமே அவனை ‘தங்கம்’னுதான் கூப்பிடுவாங்க.

என் அக்காவைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த ஊரு தொலைதூரமெல்லாம் இல்லை, அடுத்த தெருதான். அதனாலேயே என் தங்கம் என் கூடவே இருப்பான். அவனை அணு அணுவா ரசிச்சேன், அவனுக்குள்ளேயே நான் வசிச்சேன். அவனோட ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் பார்த்து ரசிப்பேன். என் அப்பா, அம்மா, அக்கான்னு எல்லாரோடையும் நான் சேர்ந்து உட்கார்ந்திருந்தேன்னா அதுக்குக் காரணம் என் தங்கம். அவன் எப்ப பேசுவான், எப்ப என்னை ‘மாமா’ன்னு கூப்பிடுவான்னு நான் காத்துக்கிட்டு இருந்திருக்கேன். என் தாலாட்டைக் கேட்டு தூங்குற இரண்டாவது குழந்தை என் தங்கம்தான்.

அவன் குப்புற விழ முயற்சி செஞ்சது, குப்புற விழுந்தது, மண்டி போட்டு நகர்ந்தது, நடக்க ஆரம்பிச்சது, முதன்முதல்ல என்னை ‘மாமா’ன்னு கூப்பிட்டதுன்னு என் தங்கத்தோடு இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்குச் சொர்க்கம்தான். தாய்மாமனா நான் அவனுக்கு நிறைய செய்யணும்னு நினைச்சேன். அதுக்கு நான் முதல்ல சம்பாதிக்கணும். ஆனா அது எப்படிங்கிற வழிதான் எனக்குத் தெரியல. என் தேவதை வந்துடுவா, என் வாழ்க்கையை மாத்திடுவான்னு நான் நினைச்ச கனவு கனவாகவே தொடர்ந்தது.

அரட்டை அரங்கத்தில் நான் பேச முடியாம வந்ததைப் பற்றி உங்களிடம் சொல்லிருக்கேன் இல்ல? சன் டிவில ஏதோ சண்டையாகி விசு சார் அதை ‘மக்கள் அரங்கம்’னு ஜெயா டிவில நடத்தினார். அதுல தனித்திறமைக்குன்னு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும். 2010-ஆம் ஆண்டு மன்னார்குடியில் நடக்கப்போற மக்கள் அரங்கம் நிகழ்ச்சிக்காக திருத்துறைப்பூண்டியில் நேர்முகத்தேர்வு நடத்துனாங்க.

இந்த முறை நான் பேசப் போகல. அதுக்கு பதில் நான் எழுதின என் கவிதை நோட்டு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, விசு சாருக்காக என்னைப் பத்தின எல்லாத்தையும் ஒரு கடிதமா ஒரு தம்பியை வச்சு எழுதி எடுத்துக்கிட்டு இந்த முறை குமாரோடு போனேன். என் எழுத்து என்னைக் காப்பாத்தும்ங்கிற நம்பிக்கையோட அந்த நேர்முகத் தேர்வு அறைக்குள்ள இருந்தேன். அந்தத் தேர்வு குழுவில் இருக்கிறவங்க “தனித்திறமைக்காக எத்தனை பேர் வந்திருக்கீங்க, கை தூக்குங்க”ன்னு சொன்னாங்க. முதல்ல நான் தூக்கினேன், இன்னும் ரெண்டு பேர் கை தூக்குனாங்க.

என்னைப்பார்த்துக் கூப்பிட்ட உடனே நான் போய் விசு சாருக்காக எழுதின கடிதத்தைதான் கொடுத்தேன். முழுமையா படிச்சுப் பார்த்துட்டு அவர் சொன்னதுதான்: “ஐ லைக். இதெல்லாம் ஒரு திறமை கிடையாது, எல்லோரும்தான் எழுதுறாங்க, இது ஒரு சிறப்பு கிடையாது. மும்பையில் அதை கண்டுபிடிச்சாங்க, சிங்கப்பூர்ல இதை கண்டுபிடிச்சாங்க… நாங்க போன நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தின ஒருத்தன் பத்து கோல்ட் மெடல் வாங்கிருக்கான் நீச்சல் போட்டியில. அந்த மாதிரியானவர்களைதான் நாங்க நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துவோம்” அப்படின்னு சொல்லிட்டாரு.

என் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கனவையும் உடைத்துப் போட்டார். அதோட வீட்டுக்கு வந்தேன். ‘இனிமே எழுதவே கூடாது’ன்னு நினைத்தேன். கொஞ்ச நாள் நான் எழுதவே இல்லை. உண்மையிலேயே வாழ்க்கையே வெறுத்துப் போன மாதிரிதான் இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு நான் திரும்பவும் எழுத ஆரம்பிச்சேன். யாருக்காகவும் எதுக்காகவும் நான் எழுதுவதை நிறுத்தக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். என்னோட ஆசையே என்ன தெரியுமா? நான் சாகப் போற கடைசி நிமிஷத்துல கூட கவிதை எழுதிட்டு சாகணும்னு நினைச்சவன்.

என் வாழ்க்கைக்கான அடுத்த முயற்சியைப் பற்றி யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, திருவாரூர்ல இருக்க என் தம்பிகளோட ஃப்ரெண்ட் (எனக்கும் தெரிஞ்சவன்தான்), “அவன் தண்ணி கேன், தண்ணி பாட்டில் ஏஜென்சி எடுத்து கடைக்கு கடை போடப் போறேன். அதுக்கு ஒரு ஆட்டோ வேணும், தினந்தோறும் வாடகை தர்றேன்”னு சொல்ல, “ஆஹா! இது நல்லா இருக்கே” அப்படின்னு யோசிச்சு என் வீட்ல பேசினேன்.

என் பேர்ல எங்க அப்பா வாங்கி வச்ச ஒரு ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. அந்த வயலை அடமானம் வச்சு கொஞ்சம் பணம் வாங்கி, அதுவும் பத்தாம என் விரல்ல எப்பொழுதுமே தங்க மோதிரம் இருக்கும், அதையும் அடகு வச்சு பழைய லோடு ஆட்டோ வாங்கி அவனிடம் கொடுத்தேன். “தினந்தோறும் 250 ரூபாய் தர்றேன்”னு சொன்னான். நம்பினேன்.

ஒரு மாதம் முடியும்போது அவன் சொந்தமாக ஆட்டோ வாங்கிட்டு, என் ஆட்டோவைக் கொண்டு வந்து என் வீட்டில் போட்டுட்டு போய்ட்டான். நான் அவனை எதுவுமே சொல்லல. அவனை நம்புனது என் தப்பு. என் வாழ்க்கையில் நான் எடுத்த கடைசி முயற்சி, அதுவும் ரொம்ப பெரிய முயற்சி, அதுலயும் தோத்துப் போயிட்டேன். ஆட்டோவுக்காக அடமானம் வைத்த என்னுடைய வயலை இன்னமும் திருப்ப முடியல! என்னால பத்து ரூபா சம்பாதிக்க முடியலன்னாலும் என் வீட்டுக்கு பத்து ரூபாய் கூட என்னால நஷ்டமாகிடக் கூடாதுன்னு நினைக்கிறவன். என்ன செய்வது? நான் விதி மேல பழி போட மாட்டேன், என்னோட முட்டாள்தனம்.

என் பசங்க எல்லாம் “ஆட்டோவில் ஒரு ரவுண்டு போகணும், ஓட்டு”ன்னு சொன்னாங்க. என் பசங்க எல்லாரும் ஆட்டோ பின்னாடி ஏற, நான் ஆட்டோ ஓட்டிக்கிட்டு ஊருக்குள்ள போனேன். நான்தான் ஆட்டோ ஓட்டிட்டு வர்றேன்னு தெரிஞ்ச உடனே வாசல்ல உக்காந்திருந்த எல்லாரும் தலை தெறிக்க வீட்டுக்குள்ள ஓடினாங்க, “அசோக் கண்ணு தெரியாம நம்ம மேல விட்ருவான்”ங்கிற பயத்துல! ஆனா என் கூட இருந்த பசங்க எப்போதுமே பயப்பட மாட்டாங்க. “விழுந்தா சேர்ந்து விழுவோம், நீ ஓட்டு அண்ணே பாத்துக்கலாம்”னு சொல்லுவாங்க. என்னோட பெரிய பலம் என் கூட இருந்த பசங்க!

சரி, அடுத்து நிகழ்ந்தது என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? அதுக்கு முன்னாடி இந்த பத்து வாரமா என் கைப்பிடிச்சு என் வாழ்க்கையோட பயணிக்கிற உங்க எல்லோருக்கும் நன்றி. தொடர்ந்து பயணிங்க, உங்க எல்லோரையும் என்னோட மரணத்துக்கு அழைச்சிட்டு போறேன். எதுவும் புரியலையா? புரியும்… அடுத்த பகுதியில்.

தொடர்புக்கு: ashokbala1387@gmail.com

பேச: 9626261773


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.