Categories
விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (9) அண்ணனைப் பார்த்துவிட்டேன்: S. அஷோக் பாலா

ஒரு நடிகரோட ரசிகர்கள் எதிர்பார்ப்பது, தன்னுடைய ஹீரோவை ஒரு முறையாவது நேரில் பார்த்திடணும், முடிஞ்சா கை கொடுக்கணும், ஒரு போட்டோ எடுக்கணும்.

முந்தைய பகுதிகளைப் படிக்க:

2006 தேர்தல் பற்றி சொல்றேன். நான் எதிர்பார்த்துகிட்டு இருந்த தேர்தல் வந்துச்சு. ஒரு நாள் எங்க கடை வாசலில் சுவரில் ஒரு போஸ்டர் ஒட்டி இருந்தது, கேப்டன் திருத்துறைப்பூண்டியில் இருக்க தெற்கு வீதிக்கு காலை 10 மணிக்கு பிரச்சாரத்துக்கு வர்றார்னு. போஸ்டர் பார்த்தவுடனே என்னோட சந்தோஷத்துக்கு அளவே இல்லாம இருந்தது. கொஞ்ச நேரத்திலேயே என்னோட சந்தோஷத்துக்கு ஆபத்து வந்துச்சு. நாளைக்குத்தான் கேப்டன் வரப்போறாருன்னு நினைச்சுதான் சந்தோஷப்பட்டேன். ஆனா கேப்டன் அன்னைக்குத்தான் வர்றாரு, நான் படிச்சதே 8 மணிக்கு மேலதான். “அய்யய்யோ! என் அண்ணனைப் பார்க்கணுமே, என் தலைவனைப் பார்க்கணுமே”ன்னு நான் தவிச்சேன். என்னால தனியா போக முடியாது, யாரையாவது கூட்டிட்டுதான் போகணும். என் ஊர்ல இருந்து திருத்துறைப்பூண்டி பத்து கிலோமீட்டர். 9 மணி ஆயிடுச்சு, எனக்கு யாரும் ஆள் கிடைக்கல. கிட்டத்தட்ட நான் அழுகுற நிலைக்கு வந்துட்டேன்.

அப்பதான் என் ஃப்ரெண்ட் மாதவன் வந்தான். “டேய் அண்ணன் திருத்துறைப்பூண்டிக்கு வர்றாருடா, வாடா போய் பார்ப்போம்”னு அவனை கெஞ்சிக் கூப்பிட்டேன். ஒரு வழியா அவனும் வரேன்னு சொன்னான். அவன்கிட்ட ஒரு சைக்கிள் இருந்தது, உலகத்திலேயே அந்த மாதிரி சைக்கிள் யாரிடமும் இருக்காது. வேகமா மிதிச்சாலும் செயின் கழன்றிடும், மெதுவா மிதிச்சாலும் செயின் கழன்றிடும். அப்படி ஒரு சைக்கிளை எடுத்துக்கிட்டு ஒரு ஆத்தங்கரை வழியா ரெண்டு பேரும் போனோம். அந்த வழியா போனா மூணு கிலோமீட்டர் கம்மி. உண்மையைச் சொல்லணும்னா அந்த சைக்கிளை ஓட்டிட்டு போனதை விட தள்ளிக்கிட்டுதான் போனோம்.

திருத்துறைப்பூண்டிக்கு போகும்போது மணி 11. அந்தத் தெற்கு வீதியில் ஒரு மேடை இருந்தது, அங்க யாருமே இல்லை. எனக்கு உண்மையிலேயே அழுகை வந்துருச்சு. “அண்ணன் வந்துட்டு போயிட்டாரு, நம்மளால பார்க்க முடியலையே” அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டேன். அதுக்குப் பிறகு அங்க விசாரிக்கும்போதுதான் தெரிஞ்சது ஒரு மணிக்குத்தான் கேப்டன் வர்றாருன்னு.

ஒரு நடிகரோட ரசிகர்கள் எதிர்பார்ப்பது, தன்னுடைய ஹீரோவை ஒரு முறையாவது நேரில் பார்த்திடணும், முடிஞ்சா கை கொடுக்கணும், ஒரு போட்டோ எடுக்கணும். இதுதான் ஒரு ரசிகன் தனக்கு பிடிச்ச ஹீரோகிட்ட இருந்து எதிர்பார்க்கிறது. ரசிகர்கள் மட்டுமில்ல, தொண்டர்களும் அப்படித்தான் தன் தலைவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கேப்டனுக்காக போட்டிருந்த மேடை பக்கத்துல போய் நின்னுகிட்டேன். எனக்குக் கிட்டக்க நின்னு பார்த்தாத்தான் முகம் தெளிவா தெரியும். அதனால மைக் பிடிச்சு பேசுற இடத்துக்கு நேரா அந்த மேடையைப் பிடிச்சுக்கிட்டு கீழே நின்னேன். அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுத்திடக் கூடாதுன்னு நின்னேன்.

ஒரு மணிக்கு வெடி சத்தமும் “கேப்டன்… கேப்டன்…” என்ற முழக்கமும் கேட்டுச்சு. நான் மேடையை மட்டுமே பாக்குறேன், மேடையில் யாருமே இல்லை. “அய்யய்யோ நமக்குத்தான் கண்ணு தெரியாம போயிடுச்சோ” அப்படின்னு பயந்துட்டேன். என் ஃப்ரெண்ட் திரும்பி “பாருடா”ன்னு சொன்னான். திரும்பிப் பார்த்தா, நான் அறியா வயசுல இருந்து பார்த்து பார்த்து ரசித்த, ஒரு முறையாவது நேர்ல பார்த்திடணும்னு நினைச்ச என் அண்ணன், என் தலைவன், என் கேப்டன்!

பிரச்சார வாகனத்தில் இருந்து கேப்டன் எழுந்து நின்றார். அந்த நொடி ஒரு கடவுளின் தரிசனமாகவே எனக்குத் தெரிஞ்சது. என்ன கொடுமைனா, நான் அந்த வாகனத்துக்குப் பின்னாடி நிக்கிற மாதிரி ஆயிடுச்சு. இருந்தாலும் அந்த வெயில்ல என் அண்ணனுடைய முகம் நல்லா தெரிஞ்சிச்சு. “நான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பேன்”னு கேப்டன் சொல்லும்போது, “தமிழ்நாட்டைக் காப்பாற்ற வந்த தலைவனே, கேப்டனே!” அப்படின்னு நான் கத்தினேன். என் அண்ணனோட திருமுகத்தைப் பார்த்தாச்சு. என்னைக்காவது ஒரு நாள் என் அண்ணனை சந்திக்கணும், அவரோட ஒரு போட்டோ எடுத்துக்கணும் அப்படின்னு நினைச்சேன்.

அண்ணனைப் பார்த்த சந்தோஷத்துல அந்த சைக்கிளைத் தள்ளிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தோம். என் அண்ணனைப் பார்த்துட்டேன்னு நான் செஞ்ச அலப்பறைக்கு அளவே இல்லை. “வரப்போவது கேப்டன் ஆட்சிதான்”னு பெட்டெல்லாம் கட்டினேன். நான் நினைச்ச மாதிரியே என்னோட முதல் ஓட்டை என் கட்சிக்குப் போட்டேன். ஆனா தேர்தல் முடிவு, விருத்தாச்சலத்தில் மட்டும் கேப்டன் ஜெயித்தார். தமிழ்நாட்டுல கேப்டன் ஆட்சி நிச்சயமா ஒரு நாள் வரும்னு நினைச்சேன். என் கட்சியை வைத்து என் பசங்க எல்லாம் என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. அவங்ககிட்ட எல்லாம் சண்டை போடுவேன். “நான் தேமுதிகாடா” அப்படின்னு கெத்தா சொல்லுவேன்.

ஊர்ல திருவிழா வரும்போதெல்லாம் அதை முன்னிட்டு கூட்டம் போடுவாங்க. வீட்டுக்கு வீடு எவ்வளவு வசூல் பண்ணலாம், என்ன நிகழ்ச்சி வைக்கலாம் அப்படிலாம் பேசுற கூட்டத்துல போய், எல்லாரும் அமைதியா இருந்தாலும் நான் அமைதியா இருக்க மாட்டேன். வீட்டுக்கு வீடு ரூ. 1000 வாங்கணும்னு சொன்னா, “ஆயிரம் கொடுக்க முடியாது, அதிகம்”னு சொல்லுவேன். நான் முன்மொழிந்த பிறகுதான் பலர் வழிமொழிவாங்க. “அசோக், நீ இதைக் கேளு” அப்படின்னு ரகசியமாக வேற நம்மிடம் சொல்லுவாங்க. காரணம் யாரும் யாரையும் பகைச்சுக்கக் கூடாது. “கரகாட்டம் வைக்கணும், ஆடலும் பாடலும் வைக்கணும்”னு கூட்டத்துல சொல்லுவோம். அது மாதிரி கரகாட்டம், ஆடலும் பாடலும் நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கு.

நீங்க அதிர்ச்சியாகப் போற சில விஷயங்களைச் சொல்றேன். என் நியாயக் கணக்குகளை மட்டுமே நான் எழுதுறேன்னு நீங்க நினைக்கிறது புரியுது. இப்போ நான் செஞ்ச சில பாவக் கணக்குகளையும் சொல்றேன். ஒருமுறை ஊருக்குள்ள ஒரு வெறி நாயை அடிச்சுக் கொல்ல முடிவு பண்ணினோம். நாங்க நாலஞ்சு பேரு கையில பெரிய பெரிய கட்டையை வச்சுக்கிட்டு அந்த நாயைச் சுற்றி வளைச்சுட்டோம். ஆனா யாரு முன்னாடி போய் அடிக்கிறது அப்படிங்கிறதுல ஒரு பயம். எப்போதுமே என் அடி முதல்ல இருக்கணும்னு நினைக்கிறவன் நான். கட்டையை எடுத்துக்கிட்டு ஒரு அடி முன்னாடி வச்சு ஓங்கி ஒரே அடி அடிச்சேன். நாய் நகர்ந்துருச்சு, அடி தரையில விழுந்துடுச்சு. என் பசங்க எல்லாம் சிரிச்சிட்டாங்க. எனக்கு அது இன்சல்ட் ஆயிடுச்சு. திரும்ப அந்த கட்டையை எடுத்து ஓங்கி ஒரே அடி அடிச்சேன். யாருமே சிரிக்கல, அதிர்ச்சி ஆயிட்டாங்க!

என்ன நடந்திருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? “அது எப்படிடா எங்களுக்குத் தெரியும்”னு நீங்க சொல்றது புரியுது. நடந்தது என்ன தெரியுமா? அந்த நாய் செத்துடுச்சு. எல்லாரும் சொன்னாங்க, “அசோக் ஒரே அடியில நாயைக் கொன்னுட்டான்”னு. நான் கெத்தா அந்த கட்டையை தூக்கிப் போட்டுட்டு, “அடிச்சா இப்படி அடிக்கணும்டா”னு சொல்லிட்டு வந்தேன். வீட்ல வந்து தனியா யோசிக்கும்போதுதான் தெரிஞ்சது, நான் பண்ணது மிகப்பெரிய பாவம், நான் செஞ்சது ஒரு கொலைன்னு.அந்த நாய் சாக வேண்டிய நாய்தான், ஆனா அதை நான் பண்ணியிருக்கக் கூடாதுன்னு இப்ப வரைக்கும் நினைக்கிறேன்.

நான் ஒரு நாயை அடிச்சுக் கொன்னுட்டேன்கிறது என் ஊருக்கு மட்டும் இல்லை, என் வீட்டுக்கும் தெரிஞ்சிடுச்சு. அப்போ என் அம்மா சொன்னது இதுதான்: “நாம என்ன பாவம் செஞ்சோமோ தெரியல, நீ இப்படி இருக்க… இதுல இந்த பாவம் வேறயா?”னு திட்டும் போது நான் எதுவுமே சொல்லல.

“ஆத்தாடி! கர்ணக் கொடூரனா இருக்கான்” – அப்படியெல்லாம் நினைச்சிடாதீங்க, நான் அப்படியெல்லாம் கிடையாது. நான் ‘ரோஷன்’னு ஒரு நாய் வளர்த்தேன். அந்த நாய் செத்துப் போனபோது அதுக்காக அழுதவன் நான். என் வாழ்க்கையில நான் தெரிஞ்சோ தெரியாமலோ ஏதாவது தப்பு செஞ்சு, அது தப்புன்னு எனக்குத் தெரிஞ்சா, அதுக்குப் பிறகு நான் அந்தத் தப்பை மீண்டும் செஞ்சதே கிடையாது.

சின்ன வயசுல – அது எந்த வயசுன்னு எனக்கு ஞாபகம் இல்லை – திருவாரூரில் ஒரு பொருட்காட்சிக்குப் போனேன். என் சித்தி, தம்பிங்க, அக்காக்கள், இன்னும் அங்க இருந்த நண்பர்கள் நிறைய பேர் போனோம். அந்தப் பொருட்காட்சியில் எனக்கும் இன்னொருத்தனுக்கும் ஒரு பெட்டு – யாரு இங்க இருக்கிற பொருட்களை அதிகமா சுடுறதுன்னு. புரியலையா? திருடுறதுன்னு. அந்தப் பொருட்காட்சியிலிருந்து வெளியே வந்தபோது, என் பாக்கெட்ல ஹேர்பேண்ட், ஹேர்கிளிப், இன்னும் சில பொருட்கள் இருந்தது. அந்த பெட்ல நான்தான் ஜெயிச்சேன். அதுக்குப் பிறகு என் வாழ்க்கையில அந்த மாதிரி ஒரு கேவலமான விஷயத்தை நான் பண்ணதே இல்லை.

நானும் சில்க் ஸ்மிதாவையும் நமீதாவையும் ரசித்தவன்தான். எல்லா படங்களையும் என் பசங்களோடு சேர்ந்து பார்த்திருக்கேன். நானும் ஆண்தானே, ஆனாலும் என் எல்லை எதுன்னு எனக்குத் தெரியும்.

“ஆஹா! நல்லவன் போல எழுதிட்டு இருந்தவன் இப்பதான் உண்மையை எழுதுறான்” என்று தோணுதா? இன்னும் இருக்கு, சொல்றேன். “இன்னுமா!” ஆமா, நான் முன்பே சொல்லிருக்கேன் இல்ல, என் கூட இருக்கிற பசங்க எது பண்ணினாலும் அதுக்கு நான்தான் காரணம்னு சொல்லுவாங்கன்னு. அதேபோல பிரபுவை கஷ்டப்பட்டு அவங்க வீட்ல காலேஜ்ல போய் சேர்த்து விட்டாங்க. ஆனா அவன் படிக்காம வந்துட்டான். அதுக்கு மட்டும் இல்லை, அவன் செய்கிற எல்லா தப்புக்கும் நான்தான் காரணம்னு அவங்க குடும்பமே நம்புச்சு.

ஒருமுறை பிரபுவோட அப்பா என்னை ரொம்ப ரொம்ப கேவலமான வார்த்தையால திட்டிவிட்டதா என்னிடம் வந்து சொன்னாங்க. அவர் பிரபு அக்காவை அழைச்சுக்கிட்டு நைட் சைக்கிள்ல வருவாருன்னு நின்னேன். அதேபோல அவர் சைக்கிள்ல வந்த உடனே, “நின்னியா”ன்னு சொல்லி கெட்ட வார்த்தையில திட்டிட்டேன். அவரும் என்னை அடிக்க வந்தார், நானும் அடிக்கப் போனேன். ஆனா நிறைய பேரு வந்து தடுத்துட்டாங்க. அவரு கதறி அழுதுட்டாரு. ” என் புள்ளையை கஷ்டப்பட்டு படிக்க வச்சேன், அவன் படிக்காம வந்துட்டான். அதுக்குக் காரணம் நான்தான்”ங்கிற மாதிரி சொன்னாரு. ஒரு கூட்டம் கூடிடுச்சு.

யாரு நல்லா இருக்கக் கூடாதுன்னு நான் எப்பவுமே நினைச்சது கிடையாது. இருந்தாலும், அவருடைய கண்ணீருக்கு ஏதோ ஒரு வகையில நான் காரணமாயிட்டேன், அவர் என்னதான் திட்டி இருந்தாலும் நான் கெட்ட வார்த்தையில பேசியிருக்கக் கூடாதுன்னு அதற்குப் பிறகு நினைச்சு வருத்தப்பட்டேன். அதற்குப் பிறகும் கூட பிரபு என்கிட்ட பேசிட்டுதான் இருந்தான்.

இன்னொரு விஷயம். கடவுள், நல்ல நேரம், கெட்ட நேரம், ஜாதகம், பேய் இது எல்லாமே மூடநம்பிக்கைன்னு நம்புன என்னால, ஜாதியை அப்படி நினைக்க முடியல. நான் ஜாதி வெறியன் கிடையாது, ஆனா ஜாதித் திமிர அதிகமா கொண்டவன். என் ஊர், நான் வளர்ந்த சூழல் அப்படின்னு காரணம் காட்டவெல்லாம் நான் விரும்பல. கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கைகளையும் சொல்லி வளர்க்கப்பட்டவன் நான். அதையெல்லாம் பொய்னு சொன்ன என்னால, ஜாதியை அப்படி சொல்ல முடியல. என் ஜாதிப் பொண்ண யாராவது பார்த்தாலே வெட்டணும்னு நினைக்கிறவன். நம்ம வீட்டுப் பொண்ணு யாரையாவது பார்த்தால் அந்தப் பொண்ணையே வெட்டணும்னு சொல்றவன். அப்படி யாராவது செஞ்ச செய்தியைக் கேள்விப்பட்டால் அதுக்காக சந்தோஷப்பட்டிருக்கேன். காதல், கல்யாணம் எதுவா இருந்தாலும் அது நம்ம ஜாதிக்குள்ளதான் இருக்கணும்னு நினைக்கிறவன்.

என் வீட்டுக்கு வேலைக்கு வருவாங்க… என் அப்பா வயசுல உள்ள ஆம்பளைங்க, என் அம்மா வயசுல உள்ள பொம்பளைங்க எல்லாரையும் நான் பேரை சொல்லித் தான் கூப்பிடுவேன், “வா”, “போ”ன்னுதான் கூப்பிடுவேன். என் வீட்டைத் தாண்டி, என் உறவுகளைத் தாண்டி வேற யாரு வீட்டிலேயும் நான் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன். சுருக்கமா சொல்லணும்னா, ஒரு கிராமத்துல ஜாதியக் கட்டமைப்போட வளர்ந்த ஒரு பையன் எப்படி இருப்பானோ, அதுல ஒரு சதவீதம் கூட குறைவில்லாமல் வாழ்ந்தவன்தான் நான். என்னோட நண்பன் ஒருவன் ஜாதியை பச்சை குத்தி வச்சிருப்பான், இன்னும் சிலர் கயிறு கட்டி இருப்பான். எங்களோட கோஷத்துல ஒண்ணு மட்டும் சொல்றேன்:

“பசின்னு வந்தா நெல் அறுத்து சோறு போடுவோம்,

பகைன்னு வந்தா வாள் எடுத்து கூறு போடுவோம்!”

ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்… என்னை கேவலமா நீங்க திட்டுறது எனக்குக் கேட்குது, நிறுத்துங்க நிறுத்துங்க! அவசரப்படாதீங்க. இதை என்னால எழுதாமக்கூட இருக்க முடியும், ஆனா நான் அதை செய்ய மாட்டேன். என்னை நல்லவனா காட்டணுங்கிறது என் நோக்கம் இல்லை. எந்த முன்முடிவுக்கும் நீங்க வராம என்னோட பயணிங்க. இன்னொன்னு, எனக்கு ரத்தம் வந்தா மட்டும் இல்லை, மத்தவங்களுக்கு ரத்தம் வர்றதை நான் பார்த்தாலும் எனக்கு மயக்கம் வந்துடும். இதுவும் உண்மைதாங்க.

ஆமா, என் தேவதையைப் பார்த்தேனா இல்லையா? பாக்குறதுக்குதான் தேடிக்கிட்டே இருந்தேன்… என் ராசியில இல்லை, என் நட்சத்திரத்துல இல்லை, என் ஜாதியில  அய்யோ, திரும்பவும் திட்டாதீங்க!

ஒரு பீர் பாட்டிலை வச்சு நாங்க கொண்டாடின புத்தாண்டு, அடுத்த புத்தாண்டுல ஒரு கேக் வெட்டி கொண்டாடினோம். ஊரே பயந்துச்சு, “இந்தத் தடவை ஏதும் பண்ணிடாதீங்கடா”ன்னு. என் நாட்களும் வாழ்க்கையும் என் மரணத்தை நோக்கி நகருதுன்னு தெரியல.

என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது, அதை நான் யாரோடும் பகிர்ந்துகொள்ளவோ, அதை விவரித்து எழுதவோ விரும்பல. அந்த சம்பவத்துக்குப் பிறகு என் ஊரை விட்டு, உறவுகளை விட்டு, என் வீட்டை விட்டு, எல்லாரையும் விட்டு எங்கயாச்சும் போயிடணும்னு நினைச்சேன். ஆனாலும் என் சித்தி வீட்டைத் தாண்டி எனக்குப் போறதுக்கு வேற இடம் தெரியாது. முதல்முறையா சரக்கு அடிக்கலாம்னு தோணுச்சு. “சரக்கு அடிச்சா எல்லா கவலையும் மறந்திடும்”னு சொல்றாங்களே, அடிச்சுப் பார்ப்போம்னு நினைச்சேன். ஆனா நான் அவசரப்பட்டு அந்தத் தப்பை செய்யல. என் வீட்டிலேயும் என் பசங்ககிட்டயும் என் உறவுகள்கிட்டயும் எனக்குன்னு ஒரு மரியாதை இருந்துச்சுன்னா, அதுக்குக் காரணம் எனக்கு எந்தத் தவறான பழக்கமும் இல்லை என்கிறதுதான். அதனாலயே நான் சரக்கு அடிக்கல.

அந்த சம்பவத்தின் போது என் அண்ணன் வீட்ல என் பெரிய அத்தானைக் கட்டிப்பிடிச்சு கதறி அழுதேன். அதோட நான் என் சித்தி வீட்டில் போய் தங்கிவிட்டேன். நான் சிரிக்கிறதை மட்டுமே பார்த்த ஸ்ரீ குட்டி, நான் அழுவதைப் பார்த்து பயந்து அவனுக்கு ஜுரம் வந்துருச்சு, “நீங்க உடனே ஊருக்குத் திரும்பி வாங்க”ன்னு என் அண்ணி போன் பண்ணி சொன்ன உடனேயே, ஸ்ரீ குட்டிக்காக நான் திரும்ப ஊருக்கு வந்தேன்.

இதுக்கிடையே என் அக்காவுக்கு கல்யாணமும் நடந்து முடிந்தது. என் ஊரே வெள்ளத்துல மிதந்த தருணம்… என் வீட்டில் நடந்த ஒரு மரணம்… என் வீட்டையே சந்தோஷத்தால நிறைத்த வரம். இன்னும் இருக்கு நிறைய சுவாரஸ்யமான செய்திகள். சொல்கிறேன் அடுத்த பகுதியில்.

தொடர்புக்கு: ashokbala1387@gmail.com

பேச: 9626261773


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.