1. அத்தையின் கவலை:
வேலைக்குச் சென்று திரும்பி,
சமைத்தல், துவைத்தல்,
குழந்தை பேணல்,
வீட்டின் அறைகள் எல்லாம்
விடாமல் பெருக்கியும்
என் புகுந்த வீட்டு அம்மா
பொழுதுக்கும் புழுங்குகிறாள்,
அவர் மகனைப் போல் நானும்
முழுப் பார்வையற்றவள் என்பதால் அல்ல,
வாசல் தெளித்துக் கோலமிடும் பணி
வாழ்நாளுக்கும் தனக்கே வாய்த்துவிட்டதை எண்ணி.
ஆகவே தோழமைகளே! – இந்த
நவீன யுகத்தின் சிக்கல் தீர,
நல்லதொரு செயலி
நவிலுங்கள் நன்றி.
2. அறையும் அம்பலமும்
ஒரு பூவை அணுகும் பக்குவத்தில் தான்
என் பிஞ்சைப் பேணுகிறேன் நான்.
மெல்ல விரல் பரப்பி,
மேலெல்லாம் நீவீ,
குரல் வழியே மொழியூட்டி,
கொஞ்சம் கொஞ்சமாய் அமுதூட்டி,
பூவிதழ் பக்கவாட்டில்
பூரிப்பின் தடயம் துழாவி,
ஒற்றி ஒற்றி எடுத்தது போல்
உச்சிமுதல் பாதம்வரை தொட்டு,
உறங்கும் அழகினை,
உள்ளுக்குள் தியானிக்கிறேன்,
நெற்றி வாசம் முகர்ந்து
நெஞ்சுக் கூட்டில் சேமிக்கிறேன்,
முகம் பார்த்ததில்லை ஆனாலும் – அதன்
முழு நிழற்படம்
முகிழ்கிறது என்னுள்.
தொட்டிலில் உறங்கினாலும்
தொட்டுத் தொட்டுப் பார்த்தபடி,
மலம் துடைத்து,
மாற்றுத் துணி மாற்றி,
சிறுநீர் குளிர்பட்டுச்
செல்லம் சிணுங்குவதற்குள்
சிற்றுடை மாற்றி,
வளைத்தும் நேராகவும்
வலக்கை முன்னே நீட்டி,
வழிகளைச் சோதித்தபடி
தோள்களில் தூக்கி வந்தேன்,
தோட்டத்தில் பறவைகள் காட்ட.
எதிர்பட்ட அண்டைக்குரல்
அத்தை எங்கே என்றது.
உறங்குகிறார் என்றேன் நான்.
“அசதி இருக்காதா பின்னே!
உங்களையும் பார்த்துக்கொண்டு
இவனையும் பார்த்துக்கொண்டு
பாவம் அவருக்கு ஓயாத வேலைதான்.
டேய் குட்டிப் பையா!
பெரியவனானதும்
உங்க அப்பத்தாவை நீதான் பார்த்துக்கிடணும்.”
சொல்லியோ மெல்லமாய்க் கிள்ளியோ
இடம் அகன்றார் அவர்.
தூரத்தில் குயிலின்
கேவல் கேட்டது,
“குயில் பாரு, குயில் பாரு”
குனிந்து சொன்னேன் நான்.
கனிந்து இயல்பாகத்தான் – சில
கணங்கள் ஆனது.
***ப. ஒலிமயக்கூத்தன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
