Categories
விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா Uncategorized

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (7) அரற்றிய அரங்கம்: S. அஷோக் பாலா

மைக்கை பிடித்து பேசுறதுல எனக்கு பயம் இல்லைன்னு நம்பினேன். அதிகமா டிவி பார்ப்பேன், திரைப்படங்கள் பார்ப்பேன்.

முந்தைய பகுதிகளைப் படிக்க:

உங்களுக்கு ஞாபகம் இருக்கா? கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கும்போது ஃபுல்டாஸா வந்த பந்து என் கண்ணில பட்டதா சொன்னேனே! அப்புறம் என்ன நடந்துச்சுன்னா, என்னோட அண்ணிகிட்ட போய் சொன்னேன், “பந்து அடிச்சிருச்சு, எனக்கு சரியா கண்ணு தெரியல.” உடனே அண்ணி என் வீட்ல சொல்லிட்டாங்க. உடனே எங்க அம்மா புறப்பட்டு வந்து, திருவாரூர் பக்கத்துல இருக்க ஒரு கண் மருத்துவமனைக்கு போனோம். அங்க, “நீங்க உடனே மதுரைக்கு போய் காட்டுங்க”ன்னு சொல்லிட்டாங்க. அடுத்து என்ன, மீண்டும் மதுரைக்கு பயணம்.

இந்த இடத்துல உங்களுக்கு சில விஷயத்தை மட்டும் சொல்றேன். நான் வருஷத்துக்கு ஒரு முறை கூட செக்கப்புக்குன்னு ஹாஸ்பிடல் போனதில்லை. ஏதாவது கண்ணுல பிரச்சனைன்னு வந்தா மட்டும் தான் மதுரைக்கு போவோம். அது மட்டும் இல்ல, சின்ன வயசுல ஒரு தடவை மட்டும் தான் என் அம்மா ஹாஸ்பிடல் வந்தாங்க. என் அப்பா அது கூட இல்லை. காரணமெல்லாம் கடையை விட்டுட்டு என் அப்பாவால வர முடியாது. என்னை அழைச்சிட்டு போறது எல்லாமே என் முக்கியமான உறவுகள் தான்.

சரி, இப்ப மதுரையில் என்ன நடந்தது என்று சொல்றேன். டாக்டர் எல்லாம் செக் பண்ணி பார்த்துட்டு, “கண்ணுக்கு ஏதும் பிரச்சனை இல்லை, அடிபட்ட அதிர்ச்சி தான்” அப்படின்னு சொன்னாங்க. ஆனா என்னால சந்தோஷப்பட முடியல. உண்மைய சொல்லணும்னா எனக்கு பார்வை கொஞ்சம் குறைஞ்சிட்டு. “கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும்” என்று சொல்லுவாங்க. உண்மையிலேயே அது என் வாழ்க்கையில அந்த நிமிஷம் நடந்தது.

ஹாஸ்பிடல்ல ஒரு புக்கை கொடுத்து, ஒவ்வொரு லென்ஸா கைல கொடுத்து வச்சு படிச்சு பாக்க சொன்னாங்க. கொஞ்சம் பெரிதாய் இருக்கிற எழுத்தை எல்லாம் படிச்சேன். அந்த லென்ஸை எனக்கே கொடுத்தாங்க. விலை 50 ரூபா தான்.

ஊருக்கு வந்தேன். அந்த லென்ஸை என் இடது கையில் வச்சிக்கிட்டு, அது வழியா பார்த்து எழுத ஆரம்பித்தேன். ஆச்சரியம், அதிசயம்! ஆனால் உண்மை, நான் எழுதுவதை என்னால் படிக்க முடிந்தது. அது மற்றவர்களும் பார்த்தால் படிக்க முடிந்ததா இருந்தது. அது மட்டும் இல்லாமல், என் ரூமிலேயே அமர்ந்து ஜன்னல் வெளிச்சத்தில் எழுத முடிந்தது.

தினந்தோறும் எழுதினேன், எழுதிக் கொண்டே இருந்தேன். நான் எழுதுவதை நானே வாசித்துப் பார்த்து சந்தோஷப்படுவேன். அந்த லென்ஸை வைத்து எழுதும் போது கொஞ்ச நேரத்தில் கண் கலங்கும், கண்ணீர் வரும். அதையும் சமாளித்து எழுதுவேன். ஒரு மணி நேரம் ஆகிவிட்டால் தலைவலி வந்துவிடும். அத்தனை வலியும் கஷ்டமும் நான் எழுதும் போது எனக்கு சுகமாகத்தான் இருந்தது.

‘இதயம்’ படத்தில் ஒரு வசனம் வரும்: “அந்த வெள்ளைத் தாள்களில் கொள்ளை கொள்ளையாய் காதலென்று”. அப்படித்தான் நான் எழுதியதெல்லாம் காதல். நான் வெளியிட நினைத்த கவிதை தொகுப்பிற்கு பெயர் என்ன தெரியுமா? ‘ S.A. பாலாவின் வாழ்க்கையில் வந்த வசந்தங்கள்’. என்றாவது ஒரு நாள் இந்த தலைப்பில் நான் கவிதை தொகுப்பு வெளியிட வேண்டும் என்று நினைத்தேன்.

என் கூட இருந்த எந்த பசங்களுக்கும் கவிதையைப் பற்றி எந்த ரசனையும் கிடையாது. முக்கியமா நான் கவிதைன்னு ஆரம்பிச்சா, “நீ என்ன பெரிய வைரமுத்தா?” என்று கிண்டல் பண்ணுவாங்க. கவிதையை தவிர மற்ற எல்லா விஷயங்களையும் பேசுவோம்.

உங்களுக்கு இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லவா? ஊர்ல திருவிழான்னா ஆடலும் பாடலும், கரகாட்டம் இந்த மாதிரி நிகழ்ச்சி வைப்பாங்க. இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்குதுன்னு ஊர் ஊரா மைக்ல அனௌன்ஸ் பண்ணிட்டு போகணும்.

“வணக்கத்துக்குரிய பக்த கோடிகளே, கலா ரசிகப் பெருமக்களே! பாண்டி கோட்டகம் பழனி ஆண்டவர் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு…”

இப்படி அனௌன்ஸ் பண்ணிக்கிட்டு போனது யார் தெரியுமா?

“அதெல்லாம் எங்களுக்கு எப்படிடா தெரியும்?” அப்படின்னு நீங்க கடுப்பாகிறது எனக்கு புரியுது. அது நான்தான்! குறைந்தபட்சம் சுற்றி இருக்க ஒரு பத்து பதினைந்து ஊரு பேசிகிட்டே போகணும். அதை நான் பிடித்து, ரசித்துத்தான் செய்வேன். எங்க ஊரு பெருசுங்கல்லாம் “அசோக் அருமையா அனௌன்ஸ் பண்ணுறான்”னு சொல்லுவாங்க. அதுக்கும் காரணம் இருக்கு. வேற யாராவது அனௌன்ஸ் பண்ண போனா 500 ரூபாய் சம்பளம் கொடுக்கணும், ஒரு குவாட்டர் வாங்கி கொடுக்கணும். நான் அப்படி எதுவும் வாங்க மாட்டேன்.

மைக்கை பிடித்து பேசுறதுல எனக்கு பயம் இல்லைன்னு நம்பினேன். அதிகமா டிவி பார்ப்பேன், திரைப்படங்கள் பார்ப்பேன். சன் டிவில விசுவின் ‘அரட்டை அரங்கம்’ வாராவாரம் ஒளிபரப்பாகும், அதை நான் தவறாமல் பார்ப்பேன். விசு சாரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். படங்களை தாண்டி, அரட்டை அரங்கம் மூலமா அவர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்றாவது ஒரு நாள் அரட்டை அரங்கத்தில் நான் கலந்துக்கணும், பேசணும்னு ஆசைப்பட்டேன்.

2005 இல் அந்த வாய்ப்பு வந்தது. பட்டுக்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் நடக்க போற அரட்டை அரங்கத்திற்கு நேர்முகத்தேர்வு மூன்று இடத்தில் நடந்தது. அதில் ஒரு இடம் திருத்துறைப்பூண்டி. எப்படியோ அதுல கலந்துகொள்ள விண்ணப்பத்தை வாங்கிட்டேன். ‘பாலா’ என்கிற பெயரில் தான் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினேன்.

அந்த நேர்முகத் தேர்வு எப்படி நடக்கும், எப்படிப் பேசணும்… எதுவும் தெரியாது. தனியா நானே பேசிப் பார்த்தேன். நான் எங்க தனியா பேசிப் பேசி பிராக்டிஸ் பண்ணேன் தெரியுமா? எங்களுடைய ஃபேவரட் மீட்டிங் ஹால்—சுடுகாட்டில்தான்! “விளங்குமா?”ன்னு நீங்க யோசிக்கிறது புரியுது.

சரி, அடுத்து நடந்ததை சொல்றேன் கேளுங்க. நேர்முகத் தேர்வுக்கு என்னோட நண்பன் பிரபுவோட போனேன். நான் நினைத்தது, தனித்தனியாக ஒவ்வொருத்தங்களையும் ஒரு ரூம்ல கூப்பிட்டு பேச சொல்லுவாங்கன்னு நினைச்சேன். மொத்தம் அஞ்சு ரவுண்டு நடக்கும்; அஞ்சாவது ரவுண்ட்ல தான் விசு சார் வந்து இறுதியாக தேர்ந்தெடுப்பார் என்று அங்க போய்தான் தெரிஞ்சுகிட்டேன்.

பெரும் கூட்டம் அங்க இருந்தது. அத்தனை பேரும் படிச்சவங்க, படிச்சுக்கிட்டு இருப்பவர்கள். நிறைய பேர் கையில சர்டிபிகேட், மெடல், பேச்சுப் போட்டியில் வாங்கிய பரிசுகள் வைத்திருந்தார்கள். அப்பவே நான் பாதி அதிர்ச்சி ஆயிட்டேன்.

எல்லோரையும் நிக்க வச்சு நான்கு தலைப்பு கொடுத்தாங்க. “நான்கு தலைப்புல நீங்க எந்த தலைப்பு வேணாலும் எடுத்துக்கலாம்”னு சொன்னாங்க. 100 பேருக்கு மேல இருந்தவங்கள ரெண்டு பகுதியா பிரிச்சாங்க. ரெண்டு அறையில ரெண்டு நடுவர்கள் இருந்தாங்க; அது ஒரு பள்ளி கட்டடம். 50 பேருக்கு முன்னால பேசணும்.

முதலில் ஒருத்தர் பேசினாரு, தடுமாறி பேசினார். என்னோட நேரம், என்னை மூன்றாவது நபரா கூப்பிட்டாங்க. நான் பேசியதைப் பாத்துட்டு, அந்த அறையில் இருந்த அத்தனை பேரும் அமைதியாகிட்டாங்க, அதிர்ச்சி ஆயிட்டாங்க. நான் அப்படி என்ன பேசினேன் அப்படின்னு நீங்க கேட்டா, நீங்களும் அதிர்ச்சி ஆயிடுவீங்க, வாயடைச்சு போயிடுவீங்க!

நேரா போனேன், எல்லோருக்கும் முன்னாடி நின்னு வணக்கம் சொன்னேன். பேசினேன், ஆனால் பேச்சு வரலை! “சாரி சார், என்னால பேச முடியல” அப்படின்னு சொல்லிட்டு வந்து உக்காந்துட்டேன். அந்த அறையில் இருந்த அத்தனை பேரும் என்னையே பார்த்தாங்க; அப்படியே அமைதியாக இரண்டு நிமிஷம் இருந்தாங்க. என் வாழ்க்கையில நானா ஒரு முயற்சி எடுத்து, அதையும் பயன்படுத்திக்க முடியாமல் அவமானப்பட்டது… அந்த வலி இப்ப நினைச்சாலும் வலிக்குது.

ஆனா எல்லாரும் பேசும் போது நான் சிரிச்சுகிட்டு, கைதட்டிகிட்டு தான் உட்கார்ந்திருந்தேன். என் வயசு பொண்ணு ஒன்னு பத்து நிமிஷம் பேசியது தெறிக்க விட்டுச்சு. தலைப்பு கொடுத்து இரண்டு நிமிடத்தில் பேசி கோல்ட் மெடல் வாங்கியதாம் அந்தப் பெண். அதுவும் யார் கையால் தெரியுமா? அப்துல் கலாம் ஐயா கையால்! எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? கிடுகிடுன்னு ஓடிப்போய் மாடியில் இருந்து குதித்து செத்துடலாமான்னு இருந்துச்சு!

சொல்ல முடியாத வேதனையுடன் நான் வெளியில் வந்தா, அங்கே என் ஃப்ரெண்ட் பிரபு மட்டுமல்ல, குமார்னு ஒரு ஃப்ரெண்டும் வந்து இருந்தான். “நீ எப்படிடா வந்த?”ன்னு கேட்டா, “நீ பேசுவதை பார்க்க ஸ்கூல கட்டடிச்சிட்டு வந்தேன்” என்றான்.

அவன் வந்தது பெரிய விஷயம் இல்லை. நான் சொல்ல முடியாத வேதனையோடு வந்தா, பிரபுவுக்கும் குமாருக்கும் சண்டை நடக்குது. “ஏண்டா?” என்று கேட்டா, எனக்கு எப்படி துணையா பிரபு வந்தானோ, அதேபோல அங்க வந்திருந்த ஒரு பொண்ணுக்கு துணையா இன்னொரு பொண்ணு வந்து இருக்கு. அப்படி வெளியில் தனியா நின்ன பொண்ணு கிட்ட நம்ம ஆளு நூல் விட்டு இருக்கான். அந்தப் பொண்ணும் கயிரே விட்டிருக்கு. அந்தப் பொண்ண கரெக்ட் பண்ணியாச்சு என்ற சந்தோசத்துல என்னக்கூட மறந்துட்டு, அந்தப் பொண்ண பக்கத்துல இருக்க தியேட்டருக்கு கூப்பிட்டு இருக்கான்.

அந்த நேரத்துல தான் குமார் வந்து இருக்கான், சிவபூஜையில கரடி மாதிரி! “நீ போடா போடா”ன்னு சொல்லியும் குமார் நகரல. அந்தப் பொண்ணு நகர்ந்து இன்னொருத்தனோட போயிடுச்சு. “உன்னால தான் அந்த பிகரு போயிடுச்சு”ன்னு ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.

“ஏண்டா, என் வாழ்க்கையில பெரிய அவமானம் நடந்துட்டுனு வேதனையில் இருக்கேன், நீங்க வேற ஏண்டா?”ன்னு புலம்பிக்கிட்டே வீட்டுக்கு வந்தேன். இப்படிப்பட்ட நண்பர்கள் எல்லாம் என் கூட இருந்திருக்காங்க பாத்தீங்களா!

இது மட்டுமா, இன்னும் இருக்கு! நீங்க ரசிக்க, சிரிக்க சொல்கிறேன் அடுத்த பகுதியில்.

தொடர்புக்கு: ashokbala1387@gmail.com

பேச: 9626261773


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.