மீசை வளர ஆரம்பிச்ச வயசு. அதைவிட முக்கியமா எனக்குள்ள கற்பனை சிறகடித்து பறந்து கொண்டிருந்த வயசு. என் பசங்களோட ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமா போய்கிட்டு இருந்தது. எங்க ஊருக்குள்ள ரெண்டு கோவில் இருக்கு. ஒன்னு முருகன் கோயில், இன்னொன்னு மன்மதன் கோவில். கோவில் திருவிழா என்று வந்துச்சுன்னா, என் பசங்க எல்லாம் சுத்தி நின்னு என்னை உசுப்பேத்தி விடுவாங்க. ‘ஊருக்கு நடுவுல நான் ஆட ஆரம்பிச்சேன்னா, ஊரே சுத்தி நின்னு கை தட்டும்’னு நினைச்சீங்களா? அதுதான் இல்ல. எல்லாம் காரி துப்புவாங்க, சிரிப்பாங்க. கைலியை தூக்கி தொடை தெரிய கட்டிக்கிட்டு, ஆட்டங்கற பேர்ல ‘டங்கு டங்கு’ என்று குதிச்சா அப்புறம் என்ன செய்வாங்க!
நான் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்; ஆடணும்னு முடிவு பண்ணா ஆடுவேன். அதுலயும் பல பேர் நான் சரக்கு அடிச்சிட்டு தான் ஆடறேன்னு சொல்லுவாங்க. அது மட்டுமில்லாம, எங்க அப்பாகிட்டயே போய் போட்டு கொடுத்துடுவாங்க. எனக்கு ரெண்டு பாட்டை போட்டா நான் ஆடிடுவேன். இந்த சாமி பாட்டைக் கேட்டா சாமி வர மாதிரி. அது என்ன ரெண்டு பாட்டுன்னு சொல்றேன், நீங்களும் காரி துப்பிடாதீங்க! முதல் பாட்டு ‘மொச்ச கொட்ட பல்லழகி முத்து முத்து சொல்லழகி’. இரண்டாவது பாட்டு ‘ஒட்டட ஒட்டட கம்பத்துல’. இந்த மாதிரி தத்துவ பாட்டைக் கேட்டா ஆட்டம் தானா வரும்.
என் பசங்களோட நான் பேசுற மீட்டிங் ஹால் எந்த இடம் தெரியுமா? சொன்னா சிரிக்கக் கூடாது—எங்க ஊரு சுடுகாடு! ஆத்தங்கரையில, ஆத்தோரத்துல ஆறு தூணோட அமைதியா நிக்கும். அங்கதான் எங்களோட ரகசிய பேச்சுவார்த்தையே பகல் முழுக்க நடக்கும். வயசுக்கு வந்த பசங்க பேசறதுக்கு ஏத்த இடம் அதுதாங்க. அப்படி என்ன பேசினோம்னு கேட்காதீங்க, அதையெல்லாம் எழுத முடியாது. நயிட்ல எங்க ஊர்ல ஒரு பெரிய பாலம் இருக்கு, அந்தப் பாலத்துல மீட்டிங் நடக்கும். மாலை நேரத்துல பள்ளிக்கூடம் முடிஞ்சு சைக்கிள்ல போற பொண்ணுங்கள பார்த்துகிட்டு உட்கார்ந்திருப்பாய்ங்க என் பசங்க. ஆனா நான் பார்க்க மாட்டேன், ஏன்னு சொல்லுங்க? ஏன்னா, என் தேவதை சைக்கிள்ல வரமாட்டா, ஸ்கூட்டில தான் வருவா! என் கூட இருந்த பசங்க எல்லாம் நிஜ உலகத்துல இருப்பாங்க, நான் மட்டும்தான் கனவு உலகத்துல இருப்பேன். ஐயோ, என்னை நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு.
சரி, இன்னொரு விஷயம் சொல்றேன். எங்க ஊரு பள்ளிக்கூடம் இருக்கிற இடத்துல நாலஞ்சு தென்னை மரம் இருக்கும். நயிட்ல யாருக்கும் தெரியாம மரம் ஏறி இளநீர் பறிச்சு குடிப்போம். ஆனா எனக்கு மரம் ஏறத் தெரியாது. சுடு தேங்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? முத்தின தேங்காயாப் பார்த்து ஆட்டையப் போட்டு, தேங்காயை உரிச்சு, அதோட குடுமியைப் பிச்சு, அது தலையில ஒரு சின்ன ஓட்டை போட்டு, பாசிப்பருப்பு, வெல்லம், ஏலக்காய் எல்லாத்தையும் தேங்காய்க்குள்ள வச்சு திணிச்சு, ஒரு சின்ன குச்சியை வெட்டி அந்த ஓட்டையில வச்சு அடைச்சு, தேங்காய் ஃபுல்லா களிமண்ணைப் பூசி, வைக்கோல் அள்ளிட்டு வந்து ரோட்டுல போட்டு கொளுத்தி, அதுல தேங்காயைப் போட்டு சுடுவோம்.
கொஞ்ச நேரம் கழிச்சு தேங்காய் வெடிக்கிற பக்குவத்துக்கு வரும், ஏலக்காய் வாசம் வரும். அப்போ அந்தத் தேங்காயை எடுத்துக் கழுவிட்டு, அந்தப் குச்சியை எடுத்துட்டு, டம்ளர்ல அந்தத் தேங்காய் தண்ணியை ஊத்தி எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் குடிப்போம். தேங்காயை உடைச்சு எல்லோரும் பங்கு போட்டு சாப்பிடுவோம். உண்மையிலேயே அதோட டேஸ்ட் வேற லெவல்! என்ன, உங்களுக்கும் சுடு தேங்காய் சாப்பிடணும் போல இருக்கா? இதுபோல பல விஷயங்கள் என் தலைமையில்தான் நடக்கும்.
ஒரு நாள் எங்க ஊரு பள்ளிக்கூடத்துக்கு ஒரு நர்ஸ் வந்து இருக்காங்க. என்னோட அண்ணி ஸ்கூல்ல டெம்ப்ரவரியா டீச்சரா இருந்தாங்க. அப்போ அந்த நர்ஸ் கிட்ட என்னை பத்தி சொல்ல, என்னைப் பார்க்கணும்னு என்னை கூப்பிட்டாங்க. நான் வரமாட்டேன்னு சொன்னேன். ஆனா என் அண்ணி சொன்னா நான் கேட்பேன்; என் வாழ்க்கையில அவங்க எனக்கு ரொம்ப முக்கியமானவங்க, என்னோட நல்ல ஃப்ரெண்ட் அவங்க. கூப்பிட்ட உடனே நான் போனேன். அந்த நர்ஸ், “வாங்க அசோக் பாலா, ஏன் வெட்கப்படுறீங்க? இங்க வாங்க”ன்னு கூப்பிட்டாங்க. “உங்களுக்கு என்ன இன்ட்ரஸ்ட், சொல்லுங்க”ன்னு கேட்டாங்க. நான் எதிலுமே இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்னேன். “எதிலுமே இல்லையா?”ன்னு ஆச்சரியமா கேட்டாங்க. நான் அப்பவும் இல்லைன்னு சொன்னேன். “நீங்க படிக்கிறீங்களா சொல்லுங்க, உங்களை ஸ்கூல்ல சேர்க்கலாம்”னு சொன்னாங்க!
என் வாழ்க்கையில எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல கிடைச்ச வாய்ப்பு. ஆனா நான் ஒரு தனி கனவு உலகத்துல இருந்ததால், ‘நான் ஒரு எழுத்தாளர், நான் ஒரு பாடலாசிரியர், பெரிய ஆளா வந்துடுவேன்’ என்கிற முட்டாள்தனத்துல நான் எனக்குள்ளே சிரிச்சுகிட்டு, படிக்க விருப்பமில்லை என்று சொன்னேன். இவ்ளோ வயசுக்கு அப்புறம் எப்படி ஸ்கூல்ல போய் படிக்க முடியும், நம்மள எப்படி சேர்ப்பாங்க என்கிற எண்ணமும் எனக்குள்ள இருந்துச்சு. அவங்க கடைசியா எனக்கு மாற்றுத்திறனாளி அட்டை ரெடி பண்றேன்னு சொல்லி முத்துப்பேட்டைக்கு வர சொன்னாங்க. நான் வரமாட்டேன் என்று சொன்னேன். ஆனா அவங்க என்னை ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி, “வந்தே ஆகணும், எனக்காக வரணும்”னு சொன்னாங்க. என் அண்ணியும் போகச் சொன்னதுனால, என் அம்மா கூட அவங்க சொன்ன இடத்துக்கு போனேன்.
நிறைய மாற்றுத்திறனாளிகளை அங்க பார்த்தேன், அது ஒரு முகாம். ஆனா அங்க பார்வையற்றவர்களை பார்த்த ஞாபகம் இல்லை. என்னை அங்க பார்த்த அந்த நர்ஸ் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. என் கையைப் பிடிச்சு நன்றி சொன்னாங்க, “என் பேச்சை மதிச்சு வந்தீங்க”ன்னு சொல்லிட்டு எனக்கு அடையாள அட்டை ரெடி பண்ணிக் கொடுத்தாங்க. நான் அவங்ககிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன். அசோக் பாலா என்பது என்னை கூப்பிடுற பெயர்தான்; சர்டிபிகேட்ல இருக்க பெயர் ‘ஐயப்பன்’ என்பது அவங்களுக்குத் தெரியாது. அசோக் பாலா என்கிற பெயரில்தான் நான் அடையாள அட்டை வாங்கினேன். அதுவும் அந்த நர்ஸ் மேடத்திற்காக மட்டும்தான். அதற்குப் பிறகு நான் அந்த அடையாள அட்டையைத் தூக்கிப் போட்டேன். அப்போ எல்லாம் ‘ஊனமுற்றவர்கள்’ என்றுதான் இருக்கும். ‘என் ரேஞ்ச் என்ன, என் லெவல் என்ன’ அப்படின்னு நினைச்சுகிட்டு, எனக்குக் கிடைச்ச கடைசி வாய்ப்பையும் தூக்கிப் போட்ட முட்டாள்தான் நான்.
ஊருக்குள்ள பசங்களோட இருக்கிறது மட்டும் என் பொழுதுபோக்கு இல்லை. பசங்க எல்லாம் ஸ்கூல் போயிட்டாங்கன்னா நான் என் அண்ணன் வீட்டுலதான் இருப்பேன். என் அண்ணிகிட்ட நான் எதையுமே மறைக்க மாட்டேன். அதுமட்டுமில்ல, என் ஒட்டுமொத்த சந்தோஷமாய் இருந்தது ஸ்ரீகுட்டி. யாருன்னு கேக்குறீங்களா? என் அண்ணன் குழந்தை. கங்காரு தன் குட்டியைச் சுமக்கிற மாதிரி நான் ஸ்ரீகுட்டியை வச்சுக்கிட்டுதான் சுத்துவேன். நான் அவனுக்குச் சாப்பாடு ஊட்டி விடுவேன், தாலாட்டுப் பாடி தூங்க வைப்பேன். என் தாலாட்டைக் கேட்டுத் தூங்கின முதல் குழந்தை அவன்தான். என்னை ‘அப்பா’ என்றுதான் கூப்பிடுவான், இப்பவும் அப்படித்தான்.
ஒரு நாள் கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கும்போது நான் பேட் பிடிச்சேன். பால் ஃபுல்டாஸா, ஸ்பீடா வந்துச்சு. என் கண்ணுக்குத் தெரியல, ஆனா பந்துக்கு என் கண்ணு நல்லா தெரிஞ்சிருக்கு! நேரா வந்து என் வலது கண்ணுல அடிச்சிருச்சு. நான் போட்டிருந்த கண்ணாடி பறந்துடுச்சு. என் கண்ணுக்கு எதுவுமே தெரியல, எல்லா பசங்களும் அதிர்ச்சி. என்ன செய்யறதுன்னு யாருக்குமே புரியல. நான் எப்படி வீட்டுல போய் இதைச் சொல்லுவேன்னு தெரியல, பயந்துட்டேன். நேரா என் அண்ணன் வீட்டுக்குப் போயிட்டேன்.
அப்புறம் என்ன நடந்துச்சுன்னு சொல்றேன் அடுத்த பகுதியில்.
தொடர்புக்கு: ashokbala1387@gmail.com
பேச: 9626261773
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
