Categories
நிதிநிலை அறிக்கைகள் Uncategorized

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2026-27: மாற்றங்கள் ஏதுமில்லா மாற்றுத்திறனாளிகள் நலன்: ஆட்சி மாறியும் காட்சிகள் மாறாத அவலம்

தமிழக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 1485 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கடந்த 05 ஆகஸ்ட், 2026 அன்று தமிகழ சட்டமன்றத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து பேசிய மாண்புமிகு நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்கள் பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலன்:

மாற்றுத்திறனாளிகளை மகத்தான திறனாளிகளாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனதார எண்ணுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நமது அரசின் சமத்துவக் கொள்கையின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

*தற்போதுள்ள உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் இடம்பெறாத செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன உதவி உபகரணங்களான விளையாட்டு செயற்கை கால், மின்தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம் மற்றும் பிற உயர்தர உதவி உபகரணங்கள் மற்றும் கோக்ளியர் இம்ப்ளான்ட் பேட்டரி போன்ற உயர்வகை உபகரணங்களை வாங்குவதற்காக, அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 30,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்.

*தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், அறிவுசார் குறைபாடு உடையோருக்கான அரசு நிறுவனங்கள் நம்பிக்கை இல்லம் என்ற பெயரில் அமைக்கப்படும். இந்நிறுவனங்களில், மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி, ஆரம்பகால பயிற்சி சேவைகள், மறுவாழ்வு மற்றும் தொழிற்பயிற்சி வழங்கப்படும். தொடக்க நிலையில், ஒவ்வொரு நிறுவனமும் 50 மாணவர்கள் பயிலும் பகல்நேரப் பள்ளியாக செயல்பட்டு, பின்னர் தங்குமிட வசதியுடன் கூடிய நிறுவனமாக மேம்படுத்தப்படும். இதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், பிற துறைகள் சார்ந்த அறிவிப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சில அறிவிப்புகள் இடம்பெற்றன.

கிராமப்புற மேம்பாடு:

 ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேளாண் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கால்நடை பராமரிப்புத் துறை விளங்குகிறது. நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்’ கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன் மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர். இதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பொதுவிநியோகத் திட்டம்:

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்புநிலையில் வாழும் சமூகத்தினருக்கு, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை முன்னுரிமை அடிப்படையில் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை இந்த அரசு விரிவுபடுத்தி செயல்படுத்தும்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதியாண்டில் 7.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று 31 ஆகஸ்ட், 2026, மாற்றுத்திறனாளிகளுக்கான மானிய கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை வாசித்தார் மாண்புமிகு சமூகநலம் மற்றும் பெண்கள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள்.

அந்த அறிவிப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி, பணிவாய்ப்பு, மாதாந்திர ஓய்வூதிய உயர்வு என எதிர்பார்க்கப்பட்ட எந்த ஒரு அம்சமும் இடம்பெறவில்லை.

குளிரூட்டப்பட்ட பேருந்துகள் நீங்கலாக, அனைத்துவிதமான மாநகரப் பேருந்துகளிலும் மகளிருக்கு அறிவித்திருப்பது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்கள் உடன் அழைத்துச் செல்லும் ஒருவருக்கும் கட்டணமில்லாப் பயணச் சலுகை விரிவுபடுத்தப்படும்,

பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும். போன்றவை பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே சிறிதளவு வரவேற்பைப் பெற்றுள்ளன.

மற்றபடி, கடந்த ஆட்சியாளர்களைப் போலவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையினை அந்தத் துறையின் அமைச்சரான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாசிக்கவில்லை. அவருக்குப் பதிலாக சமூகநலன் மற்றும் பெண்கள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் திருமதி. ஜெகதீஸ்வரி அவர்கள் வாசித்தது மாற்றுத்திறனாளிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வாசிக்கப்பட்ட 9 திட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றில் ‘தொண்டு நிறுவனங்களோடு அரசு இணைந்து செயல்படுத்தும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது மாற்றுத்திறனாளிகளிடையே கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, மாற்றுத்திறனாளிகள் நலன் என்ற அரசின் பார்வையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு குறையுடைய பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அமைப்புகள், அவைகள் முன்வைக்கும் சிந்தனைகள் செல்வாக்கு செலுத்தும். அந்த வகையில், கடந்த ஆட்சியில் உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளின் முன்நிறுத்தல்கள் அரசின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தின.

நடப்பு அரசின் நிதிநிலை அறி்க்கையின் திட்ட அறிவிப்புகள் மற்றும் மானிய கோரி்க்கை அறிவிப்புகளை ஒருசேர இணைத்துப் பார்க்கையில், அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் அல்லது அவர்கள் தொடர்பான சிந்தனைகள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசின் அணுகுமுறைகளில் செல்வாக்கு செலுத்துவதாகத் தோன்றுகிறது.

எவ்வாறாயினும், மாற்றுத்திறனாளிகளுக்கு நீண்ட கால நோக்கில் அதிக பலனளிக்கக்கூடிய தரமான சிறப்புக்கல்வி,  பணிவாய்ப்பு போன்ற கோரிக்கைகள் அழுத்தம் பெறவில்லை என்பதும், அதுகுறித்து இன்றைய அரசுக்கும் பெரிய அக்கறைகள் இல்லை என்பதும் புலப்படுகிறது. அதன் காரணமாகவே, அந்தக் கோரிக்கைகளையே மீண்டும் மீண்டும் மிக அழுத்தமாக முன்வைக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் அவர்கள் தொடர்பான அமைப்புகளும் தொடர்ந்து துறை அதிகாரிகளாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அடுத்து வரும் ஐந்தாண்டுகளும் மேலும் கடுமையானதாக, போராட்டங்கள் நிறைந்ததாகத்தான் இருக்கப்போகிறதா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.