பல பெற்றவர்கள் தன்னுடைய குழந்தைகளை, “நீ டாக்டராக ஆகணும், கலெக்டராக ஆகணும்” அப்படின்னு சொல்லி வளர்ப்பாங்க! அப்படியெல்லாம் எனக்கு யாரும் சொல்லலை. நானே ஒரு கனவோடு படிக்க ஆரம்பிச்சேன்; அதுவும் முடிந்துபோச்சு! என்னுடைய 15 ஆவது வயதில் என் வாழ்க்கையைப் பற்றித் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். “என் எழுத்தைத் தவிர வேறு எதுவும் என்னைக் காப்பாற்றாது, முன்னேற்றாது” என்று முடிவு செய்தேன். எழுத்தாளராக, கவிஞராக, சினிமாவில் பாடலாசிரியராக ஆகணும்—இதுதான் என் லட்சியம், இனி இதுதான் என் வாழ்க்கைப் பயணம் என்று முடிவு செய்தேன்.
இந்தக் கவிஞருக்கு, பாடலாசிரியருக்கு ஒரு புதுப் பெயர் தேவைப்பட்டது. யோசித்த கணத்தில் தோன்றியதுதான் ‘பாலா’—S.A. பாலா. அசோக்கிற்கும் ஐயப்பனுக்கும் இடையில் பாலா உருவானான். இப்பொழுது புரிகிறதா? என்னை இந்த உலகம் இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன், அழைக்கும் என்றும் நம்பினேன்.
இனி விடாமல் கவிதை எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்; எழுதவும் துவங்கினேன். யாருக்கும் தெரியாமல் மதியம் மூன்று மணிக்கு நோட்டை எடுத்துக்கொண்டு, என் வீட்டு மாடியில் வந்து அமர்ந்து எழுதுவேன். நான் எழுதும்போது, நான் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மட்டும்தான் நிழல் தேவைப்படும்; நான் எழுதும் நோட்டிற்குச் சூரிய வெளிச்சம் வேண்டும். உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். அப்படி அந்தச் சூரிய வெளிச்சம் படும் பொழுது எழுதிக்கொண்டிருப்பேன்.
ஆனால், அவ்வளவு கஷ்டப்பட்டு எழுதினாலும் நான் எழுதுவதை என்னாலும் படிக்க முடியாது; அதை வேறு யார் பார்த்தாலும் அவர்களாலும் படிக்க முடியாது. அந்த எழுத்து யாருக்கும் புரியாது. ஆனாலும், நான் எழுதிக்கொண்டே இருந்தேன்; தோன்றுவதையெல்லாம் எழுதினேன். எனக்கு நான்தான் ரசிகன், எனக்கு நான்தான் விமர்சகன். யாரையும் பார்த்து நான் கவிதை எழுதத் துவங்கவில்லை; எந்தக் கவிதைத் தொகுப்பையும் நான் படித்ததும் இல்லை. நான் எழுதுவதே கவிதை என்று நம்பினேன்.
15 வயதில் எனக்குப் பெயரை மட்டும் மாற்றவில்லை; என்னையே முழுவதுமாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தேன். நான் என் லட்சியப் பாதையில் ஜெயிக்க வேண்டும் என்றால், எனக்கென்று ஒரு தேவதை வரவேண்டும் என்று நினைத்தேன். எனக்காகப் பார்க்க, எனக்காகப் படிக்க, எனக்காக எழுத, எனக்காகவே வாழ அவளே வருவாள் என்று நம்பினேன். அப்புறம் என்ன… கலர் கலர் கனவுகள் வந்தது; கற்பனையிலும் அவள் முகம் தெரிந்தது. நான் எழுதிய கவிதையெல்லாம் காதலைச் சுமந்தது. அதோடு மட்டுமா விட்டேன்? கற்பனையில் சுமந்த அவளுக்குப் பெயரும் வைத்தேன். காதல் வாழ்க்கையில் சிறகடித்துப் பறந்தேன், எனக்கு மட்டுமே தெரிந்த அவளோடு! அவள் இப்படித்தான் இருப்பாள், இப்படித்தான் பார்ப்பாள், இப்படித்தான் நடப்பாள், இப்படித்தான் சிரிப்பாள்… இப்படியெல்லாம் யோசித்து வைத்திருந்தேன்; அப்படியே தேடவும் துவங்கினேன்.
இப்படியெல்லாம் இருந்தா ’90 கிட்ஸ்க்கு’ எப்படிடா கல்யாணம் நடக்கும்னு நீங்க நினைக்கிறது புரியுது. என்ன செய்வது, ‘ஜென்சி கிட்ஸாகப்’ பொறக்க எனக்குக் கொடுத்து வைக்கலை! 20 வயசுக்குள்ள எனக்கானவளைப் பார்க்கணும், 25 வயசுல அவளைக் கல்யாணம் பண்ணணும், 30 வயதிற்குள் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கணும், வாழ்க்கை சிறப்பாகப் போகணும், போகும் அப்படின்னு நம்பினேன். நாசமா போச்சு!
அந்த 15 வயதில் நான் யோசித்தது முட்டாள்தனமாக இருக்கலாம்; அதிலும் சில கொள்கைகளை நான் வகுத்துக்கொண்டேன்: தவறான பழக்கங்களை ஒருபோதும் செய்யக்கூடாது; உண்மையாகவும் நேர்மையாகவும் வாழணும்; எனக்கென்று ஒரு தனித்துவம் இருக்கணும்; ஒழுக்கம் தவறி வாழக்கூடாது; தப்புன்னு தெரிஞ்சா அது யாராக இருந்தாலும் தட்டிக்கேட்டுடணும்; எதுக்கும் எப்பொழுதும் பயப்படக்கூடாது; என்னால் முடிந்த உதவிகளை மற்றவங்களுக்குச் செய்யணும். “இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கு”—என் அண்ணன் எனக்குச் சொல்லித்தந்தது. இப்படி நல்ல கொள்கைகளையும் வகுத்துக்கொண்டேன்.
இப்போது வரை நான் சரக்கு குடித்ததில்லை; அதை ஒரு துளி கூடச் சுவைத்ததும் இல்லை. புகைபிடித்ததில்லை. இப்படி எந்தத் தவறான பழக்கமும் என்னிடம் இல்லை. “என்னடா, உலகத்திலேயே இல்லாத உத்தமன் போல இவன் அவனைப் பத்தியே சொல்றான்” என்று நீங்க நினைக்கிறது புரியுது. என் எழுத்து பொய் சொல்லாது பாஸ்!
அதற்குப் பிறகு என்ன… நான் சாமிகிட்ட வேண்டுனதெல்லாம் எனக்குக் கண் தெரியணும்கிறது இல்லை; எனக்கானவள் சீக்கிரம் வரணும்னு மட்டும்தான். ஐயப்பன் என்பதால் நான் ஐயப்பன் பக்தனாகவும் இருந்தேன். மாலை போட்டுச் சபரிமலைக்குப் போக வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன்; ஆனால், அது முடியவில்லை. இருப்பினும் சாமியை வேண்டிக்கொண்டே இருப்பேன். நாட்கள் பல கனவோடு நகர்ந்துகொண்டிருந்தன.
ஏதோ ஒரு புதுக் கண் மருத்துவர் நன்றாகப் பார்க்கிறார் என்று யாராவது சொன்னால், அவரையும் சென்று பார்ப்போம். அப்படித் திருவாரூருக்கு ‘பாபா’ என்ற ஒரு கண் மருத்துவர் நன்றாகப் பார்க்கிறார் என்று சொன்னார்கள்; அவரைச் சென்று பார்த்தோம். நான் பல கண் மருத்துவர்களையும் மருத்துவமனையையும் சென்று பார்த்தவன். எல்லோரும் முதலில் கண்ணைப் பரிசோதிக்கக் கண்ணாடியைப் போட்டுவிட்டு, ஒவ்வொரு லென்ஸாக மாற்றி “எழுத்துக்கள் தெரிகிறதா?” என்று கேட்பார்கள்.
உண்மையைச் சொல்லவா? எனக்கு அப்படி கேட்கும்போதெல்லாம், சாதாரணமாகத் தெரிவதைவிட, அந்தக் கண்ணாடியைப் போட்டு லென்ஸை மாற்றும்பொழுது எனக்கு இன்னும் கூடுதலாகத் தெளிவாகத் தெரியும். ஆனாலும், எனக்கு எந்தக் கண் மருத்துவரும் கண்ணாடி அணிந்துகொள்ளச் சொன்னதில்லை; அது ஏன் என்றும் இதுவரையில் எனக்குப் புரியவில்லை. இந்த ‘பாபா’ என்ற கண் மருத்துவர் சரியாகக் கவனித்தார். “கண்ணாடி போட்டால் உனக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிகிறது, பிறகு ஏன் உனக்கு இதுவரையில் யாரும் கண்ணாடி எழுதிக்கொடுக்கவில்லை? டாக்டர்கள் ஏதோ விளையாடிட்டாங்க” என்று சொல்லிச் சிரித்தார். எனக்கு முதன்முதலில் கண்ணாடி அணிவதற்கு எழுதிக்கொடுத்தார். என்னுடைய 16 ஆவது வயதில் கண்ணாடி போடத் துவங்கினேன்; இன்னும் பார்வை கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தது.
என் ஊரில் என் தலைமையில் ஒரு ‘புலிப்படை’ தயாரானது. என் பெயரைச் சொல்லி அழைக்க, என்னை “வாடா போடா” என்று கூப்பிட ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள். மற்ற எல்லோரும் சின்னத் தம்பிகளே! எப்பொழுதும் என்னோடு ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு நற்பணி மன்றத்தை உருவாக்கினோம் என் தலைமையில். அதன் பெயரைத் தற்போது எழுத இயலாது; காரணத்தை மட்டும் சொல்கிறேன். அது ஒரு சமூகத்தின் குறியீடு; தற்போது அந்தக் குறியீட்டைக் குறிவைத்து என் மீது சுமத்திவிடக் கூடாது என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.
சுனாமி வந்தபோது ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக அறிந்தோம். அவர்களுக்கு உடுத்திக்கொள்ள ஆடைகள் கூட இல்லை என்பதை அறிந்து, என் ஊரிலேயே பழைய ஆடைகளை வீடு வீடாகச் சென்று வாங்கினோம். இரண்டு, மூன்று மூட்டைகளில் கட்டி, என் தலைமையில் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தோம். இதெல்லாம் என்ன பெருமையா? இல்லை, கடமை!
“இதனால ஊரே என்னையும் என்னோட சேர்ந்தவர்களையும் கொண்டாடியிருக்குமே” அப்படின்னு தப்பாக நினைக்காதீங்க. எவனாவது ஸ்கூல்ல லீவு போட்டா அதுக்குக் காரணம் நான்தான்; எவனாவது மார்க் கம்மியா வாங்கினா அதுக்குக் காரணமும் நான்தான்; எவனாவது தம் அடிச்சா, தண்ணி அடிச்சா அதுக்கும் காரணம் நான்தான்! “அசோக் கூடச் சேர்ந்துதான் என் பிள்ளைகள் எல்லாம் உருப்படாமல் போறானுங்க” அப்படின்னு ஊரே திட்டுச்சு. சுருக்கமாகச் சொல்லவா? “அண்ணே, எங்க அப்பா சொல்றாரு… நீ அசோக் கூடச் சேர்ந்துட்டே இல்ல, இனிமே உருப்பட மாட்டே அப்படின்னு சொல்றாரு அண்ணே” என்று தம்பிகள் என்கிட்டே சொல்லுவாங்க.
இவ்வளவு ‘நல்ல’ பேரோடு என் ஊரில் அடுத்து என்னென்னவெல்லாம் செய்தேன்? தேவதையைப் பார்த்தேனா? சொல்கிறேன் அடுத்த பகுதியில்.
தொடர்புக்கு: ashokbala1387@gmail.com
பேச: 9626261773
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
