அரட்டை அரங்கத்தில் கலந்துக்க முடியாமல் போனது எனக்கு மிகப்பெரிய கஷ்டத்தைக் கொடுத்துச்சு. அதைவிட அந்த அறையில் இருந்த அத்தனை பேரும் என்னைப் பார்த்த பார்வை, அங்கு நிலவிய அமைதி, அந்த அவமானம்… என் வாழ்க்கையில் நான் முதல்முறையா அனுபவித்தது. அடிக்கடி அத நெனச்சு அழுது இருக்கேன் தனியா. இருந்தாலும் எதையும் யாரிடமும் காட்டிக்காம நான் ஜாலியாதான் இருந்தேன்.
நான் தீவிரமா சாமி கும்பிடுவேன்னு சொல்லி இருக்கேன்ல? ஒரு நாள் திடீர்னு யோசிச்சேன், நாம ஜெயிப்பதற்கு நாமதான் காரணமா இருக்கணும், சாமி காரணமாக இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ஒருவேளை கடவுளே இல்ல, எது நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு, ஒரு நாள் சாமி இல்லாம நம்ம வாழ்ந்து பாக்கணும்னு நினைச்சேன். அப்படி ஒரு நாள் முழுவதும் சாமியே கும்பிடாமல் இருந்தேன். அந்த ஒரு நாள் இரண்டு நாள் ஆனது, இரண்டு நாள் மூன்று நாள் ஆனது. நிறைய கேள்விகள், அதற்கு பதில் தேடிப் பார்த்தேன், பதில் கிடைக்கல.
கடவுள் என்பது இல்ல, கடவுள் மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது என்று புரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு நான் சாமி கும்பிடுவதே இல்லை, அத நம்பவும் இல்லை. ஆனா கோவிலுக்குப் போவேன். சாமி கும்பிடுன்னு சொன்னா மத்தவங்களுக்காக சாமி கும்பிடுவேன். ஆனா மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டேதான் இருப்பேன். உண்மையச் சொல்லணும்னா, கடவுள் நம்பிக்கை என்ன விட்டுப் போன பிறகுதான் என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கத் துவங்கியது. கடவுள் நம்பிக்கையை விட்டாலும், காதல் மீது நான் கொண்ட நம்பிக்கையை விடவில்லை. நீங்க கேக்குறது எனக்குக் கேக்குது. “உண்மையில் நான் அறிவாளியா, முட்டாளா?” அப்படித்தானே கேக்குறீங்க? தெரியலையேப்பா!
என்னுடைய அரசியல் பிரவேசத்தைப் பத்தி சொல்றேன். நான் கேப்டனுடைய தம்பின்னு உங்களுக்குத் தெரியும். சில ஆண்டுகளாகவே என் அண்ணன் அரசியலுக்கு வரப்போறாருன்னு செய்தி வந்தது. என் அண்ணன் எப்ப அரசியலுக்கு வராரோ அப்பதான் நான் ஓட்டுப் போடணும்னு ஒரு முடிவோடையே இருந்தேன்.
2005 செப்டம்பர் 14 முதல் அரசியல் மாநாடு அறிவிப்பு வந்தது. எப்படியாவது அந்த மாநாட்டுக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். என் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் வேன் எடுத்துக்கிட்டுப் போனாங்க. ஆனா நான் போகல. எப்பொழுதுமே நான் தனியா எங்கேயும் போக மாட்டேன், என் அப்பா எங்கேயும் அதுபோல அனுப்பவும் மாட்டார். கட்சிப் பெயர கேப்டன் அறிவிக்கிறத டிவியில பார்க்கலாம்னு நினைச்சா, அன்னைக்கு கேபிள் கட் ஆயிடுச்சு. அடுத்த நாள் எங்க கடைக்கு பேப்பர் வந்தது. தினத்தந்தி பேப்பர்ல தலைப்புச் செய்தியே, ‘நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியைத் துவங்கினார்’ என்றுதான் இருந்தது. அது பெரிய எழுத்துல இருந்ததுனால என்னால படிக்க முடிஞ்சுச்சு. அத என் நெஞ்சோடு அணைச்சுக்கிட்டேன். நான் தேமுதிகவோட தொண்டனா மாறினேன். அந்தப் பேப்பர் இன்னும் என்னிடம் பத்திரமாதான் இருக்கு. எனக்கு அரசியலும் ரொம்ப ரொம்பப் பிடிக்க ஆரம்பிச்சுருச்சு. என் அப்பா கலைஞரோட தொண்டர். எனக்கும் கலைஞரைப் பிடிக்கும், கேப்டன் கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும். அதற்குப் பிறகு அரசியல் நிறைய தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன், பேசவும் ஆரம்பிச்சேன். இப்படியே நாட்கள் நகர்ந்துச்சு.
என் காதலும் கற்பனையும் கவிதைகளாய் மலர்ந்துச்சு. கிரிக்கெட் நான் எந்த அளவுக்குப் பிடிச்சு விளையாடுவேனோ, அதே அளவுக்கு செஸ்ஸும் (நல்லா விளையாடுவேன். பைக்ல ஊரைச் சுத்தி வருவேன். குளத்துல தினந்தோறும் போயி நீச்சல் அடிப்பது, டைவ் அடிப்பது என்று குதூகலமாகக் குளிச்சிட்டு வருவேன். அவ்வப்போது சண்டைகளும் நடக்கும். அநியாயத்தைக் கண்டால் நான் பொங்கிடுவேன், நான் கேப்டன் தம்பி! பெரிய மனுஷங்களோட சண்டைக்குப் போயிடுவேன். வீட்டுக்கு வந்தா எங்கப்பா பொங்கிடுவார். அடிக்க மாட்டார், ஆனால் ‘அடித்து இருக்கலாமே’ன்னு தோணும் அளவுக்கு அசிங்கமாப் பேசிடுவார். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! என் வீட்டைப் பொறுத்தளவு ஒன்னுதான், “யாரு எப்படிப் போனா நமக்கென்ன, நம்ம உண்டு நம்ம வேலை உண்டு, அப்படித்தான் இருக்கணும்”னு சொல்லுவாங்க. ஆனால் நான் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன்.
சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். என்னோட நண்பன் மாதவனோட அம்மா, எங்க ஊர் அல்லிக் குளத்துல தவறி விழுந்து இறந்துட்டாங்க. எங்க ஊர் பேய்களுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆனது. மாதவன் அம்மா இறந்த பிறகு இரவு எட்டு மணிக்கு மேல யாரும் வெளியிலகூட வர மாட்டாங்க. அந்த அல்லிக் குளத்துக்கு மத்தியான நேரத்துல யாரும் போறது கிடையாது. நான் மதியான நேரம்தான் குளிக்கவே போவேன் அந்தக் குளத்துக்கு. எனக்கு ஒரு நாள் நல்ல ஜுரம் வந்துட்டு. ரெண்டு நாளாகியும் ஜுரம் விடல. எங்க ஊர்ல அம்சு ஆத்தான்னு ஒருத்தவங்க இருக்காங்க. எங்க அம்மா அவங்ககிட்ட சொல்லி துன்னூர்) போட வரச்சொல்ல, அன்னைக்கு சாயந்திரம் ஆறு மணி, தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி உட்கார வைத்து, “ஆத்தா உனக்குத் துன்னூர் போட வந்திருக்காங்க” அப்படின்னு எங்க அம்மா சொல்ல, முடியல… உண்மையிலேயே பாதி மயக்கத்தில் ஜுரத்தோட எழுந்து உட்கார்ந்தா, அம்சு ஆத்தாவோட பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருந்துச்சு தெரியுமா?
“ஏய்!” அப்படின்னு ஒரு சத்தம். உண்மையிலேயே நான் பயந்துட்டேன். “இது அதுதான்பா… நான் அப்பவே சொன்னேன் சுடுகாட்டுக்கு, குளத்துக்கெல்லாம் போகாதன்னு, உன் புள்ள கேட்கல” அப்படின்னு ஆத்தா சாமி வந்து சொல்ல, நான் என் அம்மாவைப் பார்த்து முறைச்சிகிட்டு உட்கார்ந்து இருந்தேன். அதப் பார்த்த ஆத்தா, “பாத்தியா எப்படி முறைக்குது பாத்தியா… ஏய் போறேன்னு சொல்லு… போறேன்னு சொல்லு…” அப்படின்னு ஆத்தா கத்த… அடிப்பாவி கிழவி! ஜுரத்தோட இருக்கிற என்ன உக்கார வச்சு ‘போறேன்னு சொல்லு போறேன்னு சொல்லு’ அப்படின்னா நான் என்ன சொல்றது?
எனக்கு அப்பதான் ஒரு ஞாபகம் வந்தது. எங்க ஊர்ல முன்னாடி கல்யாணி பேய் ஒன்னு இருந்துச்சு. வயசுக்கு வந்த பொண்ணுங்களாப் பார்த்துதான் அது பிடிக்கும். அந்தப் பொண்ணுங்களுக்கு பேய் பிடிச்சுகிட்டு அப்படின்னு, வேப்பமரத்து அடியில் கொண்டு வந்து அந்தப் பொண்ணுங்கள நிக்க வச்சு, அம்சு ஆத்தா ‘போறேன்னு சொல்லு’ன்னு சொல்ல, அந்தப் பொண்ணுங்க ‘போக மாட்டேன்’னு சொல்ல, ஆத்தா வேப்பிலையைக் கிளையோட உடைத்து சாத்து சாத்துன்னு சாத்தும். அந்தப் பொண்ணுங்களோ “போறேன் போறேன்”னு சொல்லிட்டு மயக்கம் அடிச்சு விழுந்திடும். அதற்குப் பிறகு அந்தப் பொண்ணுங்க உச்சந்தலையில் இருக்கிற முடியை அருவாளை வைத்துக் கொஞ்சம் அறுத்து, ஒரு ஆணியையும் எலுமிச்சம் பழத்தையும் எடுத்துக்கிட்டு, ஒரு கையில சூலத்தை எடுத்துக்கிட்டு, ஆத்தங்கரையில் இருக்கிற ஒத்த பனை மரத்தில் போய் அந்த ஆணியை அடிச்சு, அந்த முடியைச் சுத்தி, எலுமிச்சம்பழத்தை அறுத்து போட்டுட்டு, ஆத்தா அமெரிக்காவைப் போரில் ஜெயிச்சது மாதிரி திரும்பி வரும். இந்தப் பொண்ணுங்களும், “எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல” அப்படின்னு சொல்லுவாங்க.
இதையெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு ரொம்ப காலமா ஒரு டவுட். இருந்துச்சு. இன்னைக்கு அதுக்கு விடை கிடைச்சிடும்னு முடிவு பண்ணிட்டேன். ‘கிழவி நான் எங்க போறது? நான் நல்லாதானே இருக்கேன்!’னு நினைச்சுக்கிட்டு, எது நடந்தாலும் வாயைத் திறக்கக் கூடாதுன்னு உக்காந்து இருந்தேன். கடுப்பான கிழவி என் தலையில ஒரே அடி அடிக்க… ஐயோ என்னால சத்தியமா முடியல! அடிப்பாவி கிழவி, ஜுரத்தோட இருக்க ஒருத்தனை உட்கார வச்சி ‘பேய் புடிச்சுகிட்டு’ அப்படின்னு கிழவி கலவரம் பண்ண, ‘இன்னைக்கு எது நடந்தாலும் வாயைத் திறக்கக் கூடாது’ அப்படின்னு பொறுத்துக்கிட்டு பொறுமையா இருந்தா… ஆவேசமான ஆத்தா கிடுகிடுன்னு வெளில போனது. கிழவி போயிடுச்சுன்னு நெனச்சபோது, ஆத்தா ரெண்டு கையிலயும் வேப்பிலைக் கிளையை உடைச்சிக்கிட்டு வந்து என் முன்னாடி நின்னு, “போறியா இல்லையா?”ன்னு கேட்க… என் கண்ணு முன்னாடி அடி வாங்குன பல பொண்ணுங்க வந்து போனது. பத்து பேரு அடிக்க வந்தாலும் புறமுதுகு காட்டாத நான்… சொல்லுங்க என்ன செஞ்சு இருப்பேன்னு நினைக்கிறீங்க?
ஆத்தாவை அடிச்சா அது எனக்கு அசிங்கம். ஆத்தாகிட்ட வேப்பிலையில் அடி வாங்குனா அது எனக்குப் பெரிய அசிங்கம். ‘போறேன்னு சொல்லு’ன்னு ஹை-பிச்சில (கத்திக்கிட்டு அடிக்க கைய ஓங்குன உடனேயே, கொஞ்சம் கூட வெக்கப்படாம நான் “போறேன்”னு சொல்லிட்டேன்! “என் கை மேல மூணு தடவை சத்தியம் பண்ணி போறேன்னு சொல்லு”ன்னு அம்சு ஆத்தா சொல்ல, மூணு தடவை சொல்லிட்டுப் படுத்துட்டேன். ‘மச்சான் சாச்சுப்புட்டாங்க மச்சான்!’… “பேயை நான் விரட்டிட்டேன்” அப்படின்னு என் அம்மாகிட்ட சொல்லிட்டுப் போனபோதுதான், அந்தப் பொண்ணுங்க எல்லாம் எப்படி ‘போறேன்’னு சொன்னதுன்னு புரிஞ்சது. தயவு செய்து சிரிக்காதீங்க!
இந்தக் கிழவிக்கும் இந்த ஊருக்கும் ஏதாவது ஒன்னு சிறப்பா செய்யணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே இருந்தேன். அப்படி ஒரு நாள் வந்தது. நாங்க முதன்முறையா புத்தாண்டைக் கொண்டாடலாம்னு முடிவு பண்ணினோம். நான், பிரபு, மாதவன், குமார், பெரியவன், சின்னவன்… எல்லாரும் நைட்டு தூங்காம பாலத்துல உக்காந்து பேசிகிட்டு இருந்தோம். அதுல பிரபு மட்டும் ஒரு பீர் வாங்கிக் குடிச்சான். நாங்க ஊருக்கு நடுவுல ஒரு சின்ன பாலம் இருக்கும், அதுல உட்கார்ந்து இருந்தோம். பீர் குடிச்சிட்டு அந்த பாட்டிலை வைத்தான் பிரபு. உடனே எங்களுக்கு ஒரு ஐடியா தோணுச்சு. மன்மத கோயில்ல போய் அங்கிருந்த மாலையை எடுத்துக்கிட்டோம். துன்னூரையும் குங்குமத்தையும் எடுத்துக்கிட்டோம். பிழிஞ்சிட்டுப் போட்ட எலுமிச்சம்பழம் மூடியையும் எடுத்துக்கிட்டோம். என் வீட்டுக்குத் தெரியாம வந்தேன், ஒரு கத்திரிக்காய் இருந்துச்சு, அதையும் எடுத்துக்கிட்டுப் போனோம். ‘இப்ப என்னதான்டா சொல்ல வர?’ அப்படின்னு நீங்க கடுப்பாகிறது புரியுது. சொல்றேன்!
அது பீர் பாட்டிலுன்னு தெரியாம மாலையை அந்த பாட்டில்ல சுத்தினோம். கத்திரிக்காவுக்குக் கண்ணெல்லாம் வரைந்து, அந்த பீர் பாட்டில் மூடியை எடுத்துட்டு பாட்டில்ல வச்சோம். அத ஊருக்கு நடுவுல, நடு ரோட்டில் வைத்து, திருநீராலும் குங்குமத்தாலும் மூணு வட்டம் போட்டோம். எலுமிச்சை பழத்தின் மூடியை இரண்டு சைடும் வச்சிட்டோம். உண்மையிலேயே அதைப் பார்க்கவே வேறு மாதிரிதான் இருந்துச்சு. எல்லோரும் எங்களுக்குள்ளே ‘ஹாப்பி நியூ இயர்’ சொல்லிட்டு வீட்டுக்கு வந்து படுத்துட்டோம். காலையிலேயே என்ன வந்து எழுப்பினார்கள் பசங்க… “வா ஊருக்குள்ள ஒரு பெரிய பிரச்சனையே ஆயிடுச்சு”. ஊருக்குள்ள ஓடிப் போய் பார்த்தா ஊரே கூடி நிக்குது! நாங்க வச்ச பீர் பாட்டில் அப்படி! நாலு மணிக்கு டீக்கடையைத் திறக்கப் போன கார்த்தி சித்தப்பா பார்த்துட்டு பயந்து வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து விட்டாராம். இங்க இருந்து யாரும் அங்கிட்டு போகல, அங்கிருந்து யாரும் இங்குட்டு வரல.
நாங்க போன உடனே, “அய்யய்யோ நாங்க நைட் வரைக்கும் இருந்தோமே… அப்போ இது இல்லையே… இப்ப எப்படி வந்துச்சு?” அப்படின்னு ஆச்சரியமா கேட்க, அதுல சில பெருசுங்க, “நீங்கதான் நைட்டு வரைக்கும் இருந்தீங்க, உண்மையச் சொல்லுங்கடா… நீங்கதான் இதப் பண்ணது எனக்குத் தெரியும்”னு சொல்ல, எல்லா சாமி மேலயும் நான் சத்தியம் பண்ணிட்டேன், தெரியாதுன்னு. ஆனா பேச்சு வார்த்தை முத்தி சண்டையாயிடுச்சு. நானும் பிரபுவும் களத்துல இறங்கி கலக்க ஆரம்பிச்சுட்டோம். நாங்க போட்ட சண்டையில எல்லோருமே நாங்க அதைச் செய்யலன்னு நம்பிட்டாங்க. அதிலையும் சிலர், “தம்பிகளா கையெடுத்து கும்புட்றேன்டா… சொல்லிடுங்க, சாமியாரைக் கூப்பிட்டு வரணும்டா” அப்படின்னு கேட்டாங்க. நாங்க எங்களுக்குத் தெரியாது என்பதைத்தான் சொன்னோம். இந்தப் பஞ்சாயத்தும் பரபரப்பும் காலைல 10 மணியத் தாண்டியும் போயிட்டுத்தான் இருந்தது. கடைசியா பிரபு அந்த பீர் பாட்டிலை எட்டி உதைச்சிட்டான்.
அது உருண்டு போகும்போதுதான் எல்லோருக்கும் தெரிந்தது அது பீர் பாட்டிலுன்னு. என் ப்ளான் படி, அம்சு ஆத்தா வந்திருந்தா சாமி வந்து சொல்லும், ‘இது பேய்தான் கொண்டு வந்து வச்சது’ன்னு. அப்போ அதோட முகத்திரையைக் கிழிக்கணும்னு நினைச்சேன். ஆனா அன்னைக்குன்னு அம்சு ஆத்தா ஊரிலேயே இல்லை. அப்புறம் என்ன? எங்க அப்பாகிட்ட போயி உங்க புள்ளதான் இதுக்கெல்லாம் காரணம்னு சொல்லிட்டாங்க. சின்ன சம்பவங்களா ஏதாவது பண்ணா என் வீட்டை சமாளிச்சுடுவேன். பெரிய சம்பவமா ஆகிடுச்சுன்னா என் தம்பியை வரச் சொல்லி திருவாரூரில் இருக்கிற சித்தி வீட்டுக்குப் போயிடுவேன்… ஊருக்குப் பயந்து இல்ல, எங்க அப்பாவுக்குப் பயந்துதான். என்ன இருந்தாலும் சோறு முக்கியம் பாஸ்! வீட்லதான் கிடைக்கும் வேளைவேளைக்கு சாப்பாடு. அவசரப்பட்டு என் வீரத்தைச் சந்தேகப்பட்டிடாதீங்க.
என்னைக்குமே என் வீட்டுக்குள்ள வீரத்தையோ பகுத்தறிவையோ காட்டிட மாட்டேன். நான் கடவுள் இல்லைன்னு உணர்ந்த பிறகுதான் நிறைய விஷயங்களைக் கேள்வி கேட்க ஆரம்பிச்சேன். அதனாலேயே என் வீட்டில் நான் பேசுவதைக் குறைத்துவிட்டேன். என்னச் சுத்தி இருந்த எல்லோரிடமிருந்தும் நான் மட்டும் தனியா நிக்கிற மாதிரி நினைச்சிருக்கேன். அதுக்குக் காரணம் என்னுடைய கடவுள் மறுப்பு. என் கூட இருந்த பசங்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு, பேய் பத்தின பயம் இருந்துச்சு. எல்லோருமே ஒரு திசையில் இருக்கும்போது நான் மட்டும் எதிர் திசையில் இருந்தேன், ஆனால் காட்டிக்கிட்டதில்லை. பெரிய பகுத்தறிவுவாதியா நான் மாறிட்டேன்னு நினைச்சுடாதீங்க. எனக்குப் பகுத்தறிவுன்னாலே என்னன்னு அப்பத் தெரியாது. பெரியாரைப் பத்தியே அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.
ஓவரா எனக்கு நானே பில்டப் கொடுக்கிறேன்னு தோணுதா? என்ன நல்லவனாவே காட்டுகிற மாதிரி எழுதுறேன்னு தோணுதா? கடவுள் இல்லைன்னு நம்புன நான், ஜாதியை இல்லைன்னு நினைச்சேனா? இன்னும் நான் செஞ்ச தவறுகள் என்னென்ன? சொல்கிறேன்… இப்ப இல்ல… சரி சரி என்னத் திட்டாதீங்க. இன்னும் சொல்ல நிறைய இருக்கு, தொடர்ந்து வாசியுங்கள், சொல்கிறேன் அடுத்த பகுதியில்.
தொடர்புக்கு: ashokbala1387@gmail.com
பேச: 9626261773
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
