Categories
அணுகல்

அணுகல்: வேண்டும் தற்சார்பு

ஒரு பார்வையற்றவர் இன்னொருவரின் உதவியுடன்தான் இந்தத் தளத்தை அணுக முடியும் என்றால்,

தளத்தின் புகைப்படம்

கற்றலில் சிறப்புத் தேவைகள் உடைய குழந்தைகளை (Children with Special Needs) எப்படிக் கையாள்வது என்கிற விளக்கங்களைக் கொண்ட பத்து காணொளிகளை உள்ளடக்கிய ஓர் ஓர் இணைப்பு.

https://prashast.education.gov.in/prashast-tutorials/#/login

பள்ளிக்கல்வித்துறையால் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மூன்று நிமிடங்களைக் கொண்ட பத்து காணொளிகள். கட்டாயம் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பார்த்து முடிக்க வேண்டும் என்பது கட்டளை.

ஆசிரியர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியே தளத்துக்குச் சென்று, அங்கே முதல் உள்ளீட்டுப் பெட்டியில் (Edit Box) தங்கள் பள்ளிக்கான யுடைஸ் கோடை (UDISE code) உள்ளிட வேண்டும்.

அடுத்த உள்ளீட்டுப் பெட்டியில் தாங்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்திருக்கிற தங்களின் அலைபேசி எண்ணை உள்ளிட்டு, கேப்ச்சர் (Capture) சரிபார்த்தால், நாம் வழங்கிய அலைபேசி எண்ணுக்கு ஆறு இலக்க ஒருமுறை பயன்பாட்டுக் கடவுச்சொல் (OTP) வரும். அதனை உள்ளிட்டு, நாம் தளத்துக்குள் நுழைய வேண்டும்.

அங்கே திரையில் பத்து தலைப்புகளில் பத்து காணொளிகளுக்கான தொடுப்புகள் தோன்றும்.

அனைத்துக் காணொளிகளையும் முழுவதும் பார்த்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், எமிஸ் தளத்தில் இலக்கை நிறைவு செய்யாதோர் பட்டியலில் உங்கள் பள்ளியின் பெயர் காட்டியபடியே இருக்கும்.

ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொருவகை உடல்ச்சவால் கொண்ட குழந்தைகள் பற்றியும் கற்றலில் அவர்களுக்கான சிறப்புத் தேவைகள் குறித்தும், அவர்களைப் பொதுக் கல்வியில் எவ்வாறு உள்ளடக்குவது (inclusive) விளக்குகிறது.

ஆங்கிலத்தில் மட்டுமின்றி, நாம் விரும்பும் பிராந்திய மொழியிலும் காணொளியைப் பார்த்துப் புரிந்துகொள்ள இணையதளத்தின் தொடக்கப் பகுதியிலேயே தெரிவுப் பெட்டியும் (combo box) வசதி தரப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் குழந்தைகளையும் கற்றலில் உள்ளடக்கிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்.

அதேசமயம், இந்தத் தளத்தில் உள்நுழைய புகைப்பட வடிவில் மட்டுமே கேப்ச்சர் (Image capture) வசதி செய்திருப்பது கற்றல் கற்பித்தலில் உள்ளடங்கல் (inclusive) என்கிற ஒட்டுமொத்த நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தொடங்கி, தள வடிவமைப்பாளர்கள், அதனை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்லும் ஒருவருக்குக்கூட, இந்தத் தளத்தை ஆயிரக்கணக்கான பார்வைத்திறன் குறையுடைய ஆசிரியர்கள், தங்கள் திரைவாசிப்பான்களைக் கொண்டு அணுகுவார்கள். அவர்களுக்காக, குரல்வழி கேப்ச்சர் (Audio Capture) வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் தோன்றாமல் போனது விந்தையிலும் விந்தைதான்.

“சார் எனக்கு இந்த தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது” என்று சொன்னாலே, எதிரிலிருந்து வரும் முதல் பதிலே, “சார் அது வீடியோ மட்டுமில்ல, சவுண்டும் வரும், நீங்க கேட்டுக்கலாம்” என்பதுதான்.

இந்தத் தளத்தை அணுகி, இதில் இருக்கிற மொத்தக் காணொளிகளையும் பார்த்துவிட இன்றுதான் அதாவது, 02/செப்டம்பர்/2026 இறுதி நாள்என்றார்கள். வேகவேகமாக வலைதளத்துக்குள் நுழைந்தேன். யுடைஸ் கோட், அலைபேசி எண் தந்து, அடுத்து நகர்ந்தால், “இமேஜ் கேப்ச்சர் உள்ளிடு” என்றது திரைவாசிப்பான்.

அதற்கு நான் ஒரு பார்வையுள்ளவரை நாட வேண்டும். அதற்கென்ன! உதவ உள்ளங்கள் ஓராயிரம் உண்டு இந்த உலகில். ஆனால், உள்ளடங்களின் உயரிய நோக்கமே தற்சார்புதான்.

அத்தகைய தற்சார்போடு இந்தத் தளத்தை என்னால் அணுக முடிகிற அந்த நாளில் நான் இந்த 10 காணொளிகளையும் பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளேன்.

எனது முடிவு சரியென்று உங்களுக்குத் தோன்றினால், ஆதரிக்கிறேன் என மறுமொழி இடுங்கள். அப்படியே இந்தப் பதிவை உரியவர்களின் கவனத்துக்கும்  கொண்டுசேருங்கள்.

ப. சரவணமணிகண்டன்,

முதுகலை தமிழாசிரியர்,

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி,

பூவிருந்தவல்லி.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.