கவனம்: தேர்வு அறிவிப்பில், பரிட்சை வைக்கிறார்கள்!

கவனம்: தேர்வு அறிவிப்பில், பரிட்சை வைக்கிறார்கள்!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நேற்றைய நிகழ்வும் எப்போதையும்போல சிறப்பாகவே நடந்து முடிந்தது.  டிஎன்பிஎஸ்சியின் தேர்வு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசிய திரு. கணேஷ், தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் எவை என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்த திரு. சுந்தர் மகாலிங்கம் ஆகிய இருவரின் உரைகளிலும் ஒரு வினாடியைக்கூட தவிர்த்துவிட்டுக் கடந்துவிட இயலாது.

அதிலும் அந்தக் கேள்விநேரம், காட்சி ஊடகங்களில் நடைபெறுவதைப்போல செறிவாகவும் இயல்பாகவும் இருந்தது.

தேர்வுக்கான பாடத்திட்டங்களில், தமிழ்ப்பாடங்கள் குறித்து விளக்கிய திரு. விஜய் மற்றும் பொதுப்பாடங்கள் குறித்துப் பகிர்ந்த  செல்வி. நந்தினி  ஆகிய இருவரின் தடுமாற்றமற்ற உரைகளைக் காணொளியிலிருந்து பிரித்தெடுத்து, TNPSC Group IV syllabus in audio format என்றே வெளியிடலாம்.

இறுதியாக, இருக்கும் நான்கு மாதங்களில் இந்தத் தேர்வுக்கு எப்படித் தயாராவது என்று தனது பாணியில் நமக்கு விளக்கிய திரு. சௌண்டப்பனின் உரை சுவாரசியமும் செறிவான உள்ளடக்கமும் கொண்டது.

தொகுதி 4 தேர்வுக்கு ஆயிரத்தைக் கடந்த எண்ணிக்கையில் பார்வைத்திறன் குறையுடையோர் விண்ணப்பிப்பார்கள் என்றாலும், நிகழ்வில் 50க்கு மிகாத எண்ணிக்கையிலேயே பங்கேற்றார்கள் என்பது எப்போதையும்போல ரகம்தான்.

ஆனாலும் நாங்கள் அசரப்போவதில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில்,

“டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வைத்திறன் குறையுடைய நண்பர்கள், எஞ்சியிருக்கும் இந்த நான்கு மாத காலத்தில் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து பயிலலாம்.

பயிற்சி மையத்தில் இணைய விரும்புபவர்கள்,

9655013030 அல்லது

9789533964 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.”

என்ற அறிவிப்பை, மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வி. சித்ரா, நிகழ்ச்சிக்கு இடையிடையே தொடர்ந்து சொல்லியபடியே இருந்தார்.

எல்லாம் அரங்கேறி, திரைபோட்டபின்னும், மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது நிகழ்ச்சியில் பகிரப்பட்ட ஒரு தகவல். கீழே கொடுத்துள்ள புகைப்படத்தைப்பாருங்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
Tamil Nadu Public Service Commission 
5.5.3 . Differently abled persons with blindness and low vision are not eligible for 
the posts in the 
Judicial Department .

தற்போது டிஎன்பிஎஸ்சியால் வெளியிடப்பட்டுள்ள தொகுதி நான்கு (group IV) தேர்வுக்கான அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வாக்கியமே புகைப்படமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மாற்றுத்திறனாளிகளில் பார்வையற்றோர் (blindness), குறைப்பார்வை உடையோர் (low vision) நீதித்துறை தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.

நேற்று, ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில், மையத்தின் பயிற்றுநர்களில் ஒருவரான திரு. கணேஷ் இந்தச் செய்தியைச் சொல்லி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “இதே அறிவிப்பை அவர்கள் all differently abled என்று கொடுத்திருந்தால், நிலையே வேறு” என்ற அவரின் குமுறலில் நூறு விழுக்காடு உண்மை இருக்கிறது. அறிவிப்பு வெளியாகி ஐந்து நாட்கள் கடந்தும் நம் அமைப்புகளிடம் நிலவும் மயான அமைதி நமக்குச் சொல்லும் செய்திகள் பல.

மேற்கண்ட அறிவிப்புக்கான காரணங்கள் எதுவும் சொல்லப்படாத நிலையில், நமது அமைப்புகள் இதை அப்படியே கடந்துவிடலாகாது. முதலில் டிஎன்பிஎஸ்சியைத் தொடர்புகொண்டு உரிய விளக்கம் பெற முயல வேண்டும்.

உரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லையென்றால், நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான நிரப்புதலுக்கு மட்டும் தற்காளிகத் தடை பெறலாம்.

டிஎன்பிஎஸ்சியின் தேர்வு அறிவிப்பின் வழியே, பார்வையற்ற சமூகத்தின் செயல்திறனுக்குப் பரிட்சை வைத்துப் பார்க்கிறது நீதித்துறை. தேர்வு,பரிட்சை இரண்டுமே முக்கியம்தான்.

என்ன செய்யப் போகிறோம் நாம்?

பகிர

1 thought on “கவனம்: தேர்வு அறிவிப்பில், பரிட்சை வைக்கிறார்கள்!

  1. First we have to contact TNPSC and we have to ask why they mentioned like low vision full totally blind like that every human are equal we have 21 types of disabilities that 21 facilities also equal only

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *