“பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் காணப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தமிழ்நாடு அரசு துரிதகதியில் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் தற்போது நிலவும் ஆசிரியர்ப் பற்றாக்குறையினால், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிவிடக்கூடாது” என தலைமை நீதிபதி S.V. கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி D. பரத சக்கரவர்த்தி தங்கள் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளனர்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் சுமார் 50 விழுக்காட்டுக்கும் மேலான ஆசிரியர்ப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை முடித்துவைத்து மேற்கண்ட தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சன்முகசுந்தரம், ஆசிரியர்ப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடங்கியிருப்பதாகவும், 90 ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு ஆசிரியர்த் தேர்வு வாரியத்திடம் (TRB) துறையின் சார்பில் கேட்கப்பட்டதாகத்தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆசிரியர்த் தேர்வு வாரியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் சில விவரங்களைக் கோரியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சன்முக சுந்தரம், உரிய விவரங்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், தற்காளிக அடிப்படையில் 36 ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கிடுமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களால் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, அதுஅரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
அவருடைய பதிலினைப் பதிவுசெய்த நீதிபதிகள், ஆசிரியர்த் தேர்வு வாரியத்தால் கோரப்பட்டுள்ள விவரங்களை ஒருமாத காலத்துக்குள் வழங்கி, விரைவாக நிரந்தரப் பணிநியமன நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டுமென உத்தரவிட்டனர். குறிப்பாக, இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடைப்பட்ட காலத்துக்கு மட்டும் மாணவர்களின் கல்விநலன் பாதிக்கப்படாமல் இருக்க, தற்காளிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் எனவும் அவர்கள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தினர்.
முன்னதாக, தஞ்சாவூர், திருச்சி, பூந்தமல்லி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கோயம்புத்தூர், தர்மபுரி மற்றும் கடலூர் ஆகிய பள்ளிகளில் காணப்படும் காலிப்பணியிடங்களைச் சுட்டிக்காட்டி
தாக்கல் செய்த வழக்கறிஞர் புகழேந்தி , நிரந்தரப் பணியிடங்களான பூந்தமல்லிப் பள்ளி முதல்வர் மற்றும் பிற பள்ளிகளின் ஐந்து தலைமை ஆசிரியர்ப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சிறப்புப்பள்ளிகளில் நிலவும் கடுமையான ஆசிரியர்ப் பற்றாக்குறையானது, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் (2009) நோக்கத்தையே மழுங்கடிப்பதாக இருப்பதோடு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 21.A வழங்கியிருக்கிற கல்விபெறும் உரிமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது எனவும் வாதிட்டார்.
தீர்ப்பைப் படிக்க மற்றும் பதிவிறக்க
இதையும் படிக்க:
அவலம்: நகர்ந்தபடி இருக்கிறது நான் வாழும் காலம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “சிறப்புப்பள்ளிகள்: “மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகக்கூடாது”: சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு”
[…] உத்தரவிட்டுள்ளது. […]
LikeLike