அவலம்: நகர்ந்தபடி இருக்கிறது நான் வாழும் காலம்

அவலம்: நகர்ந்தபடி இருக்கிறது நான் வாழும் காலம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் ஐம்பது விழுக்காடு பணியிடங்கள் காலியாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 10.2023 அன்று அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு பொதுத்தள விவாதமாகாதது வழக்கம்தான் என்றாலும், பார்வையற்றவர்கள்கூட அதுகுறித்து விவாதிக்காமல் கடந்தார்கள் என்கிற கசப்பான உண்மை பொட்டில் அறைகிறது.

தமிழக அரசால் நடத்தப்படும் சிறப்புப்பள்ளிகளில் நிலவும் நெடுநாளைய அவலம் இது. பள்ளிக்கல்வித்துறை நீங்களாக பிற துறைப் பள்ளிகளை ஒப்பிட்டால், உண்மையில் கேட்பாரற்றவை சிறப்புப் பள்ளிகள். கல்வி சார்ந்தும், பள்ளிக்கல்வி சார்ந்தும் அரசால் வெளியிடப்படும் பொது அறிவிப்புகள், அறிவுறுத்தல்களில்கூட சமூகநலத்துறைப் பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகள் என எல்லாத் துறைகளின் பள்ளிகள் இடம்பெற்றபோதும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் நடத்தப்படும் சிறப்புப்பள்ளிகளுக்கு அங்கே இடம் இருக்காது.

அதேவேளை, பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தரவுதளத்தில் (EMIS) சிறப்புப்பள்ளிகளும் இடம்பெற்றுத்தான் இருக்கின்றன. ஆனாலும் ஏன் இந்த விலக்கம் (isolation) என்றுதான் புரிபடுவதே இல்லை.

பார்வையற்றோரும் கல்விபெற வேண்டும் என்கிற கிறிஸ்துவ மிஷனரிகளின் சிந்தனை வெளிப்பாடாய் இந்தியாவின் முதல் பள்ளி பஞ்சாபிலும், தமிழகத்தின் முதல் பள்ளி பாளையங்கோட்டையிலும் அமைந்தது. அதனை அடியொற்றிக் கடந்த நூற்றாண்டில் ஆளும் அரசுகள் விடுதியுடன் கூடிய பார்வையற்றோருக்கான சில சிறப்புப்பள்ளிகளைத் தொடங்கின.

தற்போது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 3 மேல்நிலைப்பள்ளிகள், 1 உயர்நிலைப்பள்ளி, இரண்டு நடுநிலைப்பள்ளிகள், 4 தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 10 பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகள் இயங்கிவருகின்றன.

பொதுப்பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமச்சீர் பாடத்திட்டமே இங்கும் சில தனித்த கற்பித்தல் உத்திகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்திக் கற்பிக்கப்படுகின்றன. இதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.

சென்னை தொடங்கி, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இயங்கும் இந்தப் பள்ளிகளில், 1:10 என்பதே கடைபிடிக்கப்படும் ஆசிரியர் மாணவர் விகிதம். இதை ஐந்தாகக் குறைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில், 1:10 என்ற விகிதத்தில்கூட இங்கு ஆசிரியர்கள் இல்லை என்பது இருள்சூழ்ந்த பார்வையற்ற மாணவர்களின் கற்றல் சூழலை மேலும் இருளாக்கும் அம்சம்.

அதிர்ச்சியூட்டும் சில தரவுகள்:

*மேற்கண்ட பள்ளிகளில் இருக்கிற மொத்தமுள்ள 83 இடைநிலை ஆசிரியர்ப் பணியிடங்களில்  (10 துணைவிடுதிக் காப்பாளர்கள் உட்பட) மொத்தம் 24 பேர் மட்டுமே தற்போது பணிபுரிகின்றனர்.

*மொத்தமுள்ள 20 பட்டதாரி ஆசிரியர்ப் பணியிடங்களில் 9 பட்டதாரி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அறிவியல் கற்பிக்க ஆசிரியர்களே இல்லை என்பதும், கணித பாடத்துக்கு மாநிலத்தில் ஒரே ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார் என்பதும் அவலத்தின் உச்சம்.

*மொத்தமுள்ள 17 முதுகலை ஆசிரியர்ப் பணியிடங்களில் தற்போது 10 பேர் பணியாற்றுகின்றனர்.

*ஒட்டுமொத்தமாக பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 3 தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் 2 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களையும் சேர்த்து 48 ஆசிரியர்ப் பணியிடங்களே நிரப்பப்பட்ட பணியிடங்களாகும்.

*பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 8 உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்களில் 1 மட்டுமே நிரப்பப்பட்டுள்்ளது.

*இசை ஆசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 10 பணியிடங்களில் 8 காலியாக உள்ளன.

*பார்வைத்திறன் குறையுடையோருக்கான 3 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் மூன்று தலைமை ஆசிரியர்ப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன.

* 10 பள்ளிகளிலும் 1 முதல் 8ஆம் வகுப்புவரை மொத்தம் 261 மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கற்பிப்பதற்காக வெறும் 14 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார்கள். அதாவது, நிர்ணயிக்கப்பட்ட மாணவ ஆசிரியர் வீதம் 1’8ஆக இருக்க, தற்போது சராசரியாக 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நிலைமை உள்ளது. குறைந்தபட்சம் 20 இடைநிலை ஆசிரியர்களேனும் நியமிக்கப்பட வேண்டியது அவசியமும் அவசரமுமான ஒன்று.

இந்த நிலையில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, தர்மபுரி மற்றும் கடலூர்த் தொடக்கப்பள்ளிகள் அதே பகுதிகளில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளோடு இணைத்து இயக்கப்படுகின்றன.

ஆசிரியர்களை நியமிப்பதில் என்ன சிக்கல்?

தமிழகத்திலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளிகளில் பணியாற்ற வேண்டுமாயின், இடைநிலை ஆசிரியர்ப் பட்டயம் (D.T.Ed) அல்லது இளங்கலைக் கல்வியியல் (B.Ed) முடித்து, பார்வையற்றோருக்குக் கற்பிப்பதில் இளநிலைப் பட்டயம் (Junior Diploma in Teaching the Blind) அல்லது பார்வையற்றோருக்குக் கற்பிப்பதில் முதுநிலைப் பட்டயம் (Senior Diploma in Teaching the Blind) ஓராண்டு பயிற்சியை முடித்திருக்க வேண்டும் என்பதே அரசின் விதி. அதாவது, பொதுப்பள்ளி ஆசிரியருக்கான  தகுதி முடித்தபின்னும் கூடுதலாக ஓராண்டு பயின்றால்தான் தமிழக சிறப்புப்பள்ளிகளில் பணியாற்ற இயலும்.

உரிய தகுதிகளைப் பெற்ற சுமார் 50க்கும் மேற்பட்ட பணிநாடுனர்கள் பல ஆண்டுகளாகப் பணிவாய்ப்புக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். பொதுப்பள்ளி ஆசிரியர்களைப் போன்றே இவர்களும் ஆசிரியர்த் தகுதித் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்கிற நிர்பந்தம் இவர்களின் கனவுகளுக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.

உண்மையில் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களிடம் சிறப்புப் பட்டயப் பயிற்சி இல்லை. சிறப்புப் பயிற்சி முடித்தவர்கள் தகுதித் தேர்வில் வெல்லவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே தோற்றுக்கொண்டிருக்கிறது சில தலைமுறைப் பார்வையற்ற குழந்தைகளின் எதிர்காலம்.

துறை அதிகாரிகள் இவற்றைச் சொல்லிச் சொல்லியே காலம் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசின் கவனத்துக்கும் இந்தப் பிரச்சனை சென்றதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே, போராடிப் பெற்ற தங்களின் பணிவாய்ப்பை உதறிவிட்டு, காத்துக் கிடப்பவர்களின் பணிவாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறோம் என்ற சுரணையில்லாத சிலர் இந்தப் பள்ளிகளுக்குள் துறை மாறுதல் என்ற பெயரில் ஊடுருவ முயற்சிப்பதாகவும் சில அதிர்ச்சிச் செய்திகள். காரணம் கேட்டால், அங்கே காலம் தள்ள முடியவில்லையாம். இங்கே அது எளிமையானதாம். சொகுசு என்பதே சுருக்கம், சொர்க்கம் என்பது நேர் அர்த்தம்.

ஒருபக்கம் முறையான திட்டமிடலின்றி அமலாக்கப்படும் உள்ளடங்கிய கல்விமுறை (inclusive education), மறுபக்கம் கேட்பாரற்றுப் பாழடைந்து கிடக்கும் சிறப்புப்பள்ளிகள் என இரண்டு தலைமுறைப் பார்வையற்ற குழந்தைகளின் கல்வியைக் காவுகொடுத்து நகர்ந்தபடி இருக்கிறது நான் வாழும் காலம்.

***சகா

தொடர்புக்கு: anbullasaga@gmail.com

கட்டுரைக்கான வெளி இணைப்புகள்:

***

Petition at Madras High Court accuses T.N. government of turning a blind eye to schools for the visually-impaired

***

https://www.thenewsminute.com/article/compulsory-tet-rule-robs-tn-s-children-visual-impairments-right-education-171413Compulsory TET Rule robs TN’s children with visual impairments of right to education

***

பரிதவிக்கும் பார்வையற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்..?

பகிர

4 thoughts on “அவலம்: நகர்ந்தபடி இருக்கிறது நான் வாழும் காலம்

  1. இந்த வழக்கில் பல மாற்றங்கள் வரும் பார்வையற்ற மாணவர்களின் கல்வித் தரும் உயரும்

  2. aaddhu ippa mattum illa aavanga eppaiyumi ippadithan nammala kandduka mattanga parrvai yetra manavarrgal vazhkkai eppadi ponal enna aavanga nalla irundha podhum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *