Categories
தொடர் தொடர்: காவியச்சுடர்கள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023

தொடர்: காவியச்சுடர்கள் (4) காதல்முதல் கல்யாணம்வரை

ஒரு பார்வையற்றவர் தன்னைப் போலவே பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான மனநிலைக்குத் தயாராகாதபடி முதல் கட்டையைப் போடுபவர்கள் அவரைச் சிறுவயது முதலாகவே அலங்கரித்துப் போஷித்து ஆட்கொள்ளும் குடும்பத்தினர்தான்.

தீர்க்கதமஸ் என்றால் முடிவில்லா இருள் அல்லது நித்திய இருள் என்று பொருள். முற்றும் அறிந்த முனிவன், ஆனால் வெளிச்சத்தை அறியவில்லை இதுவும் ஒரு படைப்பு உத்திதான்.  கற்றறிந்த முனிவனேயானாலும் பார்வையின்மையால் அவன் சந்திக்கும் வாழ்வியல் சிக்கல்கள் கால மாறுபாடு அற்றவை என்றே தோன்றுகிறது.

முனிவருக்காவது ஒரு பார்வையுள்ள மனைவி கிடைத்தாள். ஆனால், இப்போதும் பார்வையுள்ள இணையர் கிடைக்காமல் அல்லாடும் பல மேதைமை நிறைந்த பார்வையற்றவர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். உடனே எல்லோரின் மனதிலும் எழும் கேள்வி இதுதான். ஏன் “அறிவிற் சிறந்த பார்வையற்ற தாங்கள் ஒரு பார்வையற்ற பெண்ணையே மணம் முடிக்கலாமே?”

நல்ல ஆலோசனைதான் என்றாலும், பல கற்றறிந்த பார்வையற்றவர்கள் தங்கள் மனதை இதற்குத் தயார்செய்துகொள்வதில்லை. மிகப் பெரிய பொறுப்பு பதவிகளில் அமரும் பார்வையற்றவர்கள்கூட தங்களைப் போலவே இன்னோரு பார்வையற்றவரோடு தங்களின் மணவாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதற்குத் தயங்குகிறார்கள். “சார் நீங்க நல்லா சம்பாதிக்கிறீங்க, எப்படியும் மாசம் 50000 வருமானம் வரும். உங்கள மாதிரியே ஒரு டோட்டலி ப்லைண்ட் டீச்சராப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாமே?”

பெரும்பாலோர் இந்தக் கேள்வியை மௌனமாய்க் கடந்துவிடவே எத்தனிக்கிறார்கள். காரணம், ஆலோசனையாக அல்லாமல், ‘பார் நானும் ஒரு முழுப் பார்வையற்றவன்தான் என்றாலும் என்னைப் போலவே ஒரு முழுப் பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். நீ இவ்வளவு படித்து சம்பாதித்து என்ன பயன்? உனக்கு சமுதாயப் பற்றே கிடையாது என்கிற தொனியில்தான் பல நேரங்களில் கேட்பவரின் கேள்வியும் இருக்கிறது.

ஒரு பார்வையற்றவர் தன்னைப் போலவே பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான மனநிலைக்குத் தயாராகாதபடி  முதல் கட்டையைப் போடுபவர்கள் அவரைச் சிறுவயது முதலாகவே அலங்கரித்துப் போஷித்து ஆட்கொள்ளும் குடும்பத்தினர்தான். அவருக்குப் பார்வையுள்ள பெண்ணைத் தேடுகிறோம் என்ற சாக்கிலேயே நாட்கள் கடக்கும். ஒருபக்கம் இவருக்கு வயதேறும், மறுபக்கம் இவரின் உடன்பிறந்த இளவல்களின் திருமணங்கள் இவரின் நிதிநல்கையாலே அரங்கேறும்.

நீண்ட நாட்களுக்குப் பின்பு என் பள்ளிகால நண்பர் ஒருவரை ஒரு இல்லவிழாவில் சந்தித்தேன். பரஸ்பர அறிமுகத்துக்குப் பின்னர் “என் மகனைப் பார்த்தியா? என்றார். அதுவரை அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்று கேள்விப்பட்டிருந்த எனக்கோ  வியப்பு மேலிட, “எங்கே உங்க பையன்” என்றேன். அவரும் தனது தம்பியை அழைத்து, “எங்கடா அவன்” என்றார். அப்போதுதான் புரிந்தது அவர் தன் தம்பியின் மகனைச் சொல்கிறார் என்று. இங்கே கவனிக்க வேண்டியது, அவர் சார்ந்த குடும்பம் அவருக்குத் திருமணம் செய்துவைக்கவில்லை என்பதைத் தாண்டி, அத்தகைய நிலையை அவர் எளிதாக ஏற்றுக்கொள்ளும்படிக்கு “இனி உனக்கு உன் தம்பி தங்கை குடும்பம்தான் எல்லாம்” என்ற ரீதியில் அவரைப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.

நன்றாகப் படித்தவர், நல்ல பணியில் இருப்பவர். அவரை அப்படியெல்லாம் மழுங்கடித்துவிட முடியுமா என்றால், இங்கே அவர் பெற்ற படிப்பும் பணியும் ஏட்டுக்கல்வி சார்ந்தது. எல்லாவற்றையும் கற்றுத் தகவல் களஞ்சியமாக இருக்கும் பல பார்வையற்றவர்கள் நடைமுறை சார்ந்த அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷய அறிவுகூட இல்லாமல் திண்டாடிக்கொண்டிருப்பதும் இங்கே கள எதார்த்தம். அது அவர்களுக்கே தெரியும் என்பதால்தான் தன்னைப் போன்ற இன்னொரு பார்வையற்ற இணையரோடு வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டு சமாளிப்பதெல்லாம் அவர்களுக்கு மலையாகத் தோன்றுகிறது. மண்டைக்குள் எப்போதும் ஓர் அவநம்பிக்கை அலாரம் அடித்தபடியே இருக்கிறது.

அதற்காக தன்னைப் போலவே ஒரு பார்வையற்ற இணையைத் தேர்ந்தெடுத்து வாழும் பார்வையற்றவர்களெல்லாம் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள், நடைமுறை அறிவில் கைதேர்ந்தவர்கள், அதிக சமுதாயப் பற்றுள்ளவர்கள் என்றெல்லாம் பொருள் இல்லை. சரியோ தவறோ இங்கே பல பார்வையற்றவர்களின் காதல் திருமணங்கள் அவர்களின் சிறப்புப்பள்ளியில் பயிலும் காலத்திலேயே நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றன. பிறரிடமிருந்து கொஞ்சம் வேறுபட்டுத் திகழும் எவரும் எங்கும் எப்போதும்  உண்டு. அப்படித்தான் ஆர்வமும் துருதுருப்பும் நிறைந்த பள்ளி வயது பார்வையற்றவர்கள் தங்கள் வகுப்பு அல்லது விடுதித் தோழிகளோடு நட்பு பாராட்டத் தொடங்குகிறார்கள். பெரும்பாலும் அது காதலில்தான் போய் முடிகிறது. அவர்கள் அதைக் காதல் என்றே வரையறை செய்துகொள்கிறார்கள் அதுவும் பள்ளிகாலத்திலேயே.

உந்துசக்தி என்பது அந்த சிறப்புப்பள்ளி வளாகம்தான். அங்கே அரங்கேறும் மூத்த காவியங்கள், பணியாளர்கள் தொடர்பான கதைகள், கிசுகிசுப்புகள் எல்லாம் எளிதினும் எளிதாகச் சிறுவர்களின்  காதுகளை எட்டிவிட,  முயன்று பார்க்கிற ஆர்வம் முகிழ்ப்பது இயற்கைதானே! போதாக்குறைக்கு, நெறிப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆசிரியர்கள் அனாவசியமாக ஊற்றும் உருட்டல் மிரட்டல் எண்ணெய்களில் பந்தங்கள் பற்றி எரியத் தொடங்கிவிடுகின்றன.

சிறுவயதில், சிறப்புப்பள்ளியில் முகிழ்க்கும் காதலென்பது விடாது கறுப்பு வகைமையைச் சேர்ந்தது. காதலில் கலக்கும் இருவரையுமே அவர்கள் விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும் அது ஒரு நிழலெனப் பின்தொடரத் தொடங்கும். இவர்கள் விட்டாலும் இருப்பவர்கள் விடமாட்டார்கள். இருவருக்குமே அவர்களின் சொந்த இனிஷியல்களைத் தாண்டி, புதிய ஒரு இனிஷியலை பார்வையற்ற சமூகம் உட்பொதிக்கத் தொடங்கும். “எந்தக் கமலா ? மணிகண்டன் கமலாதானே அந்த ரீதியில் குறுவட்ட  தினத்தந்திகள் செய்தி பரப்பும்.

நாமும் “ரொம்ப அசிங்கமாப் போச்சு குமாரு” என்பதாக அவற்றைக் கடந்துவிடுவதுமில்லை. அந்தப் பேச்சுகளையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காதல் என்ற பெயரில் பரஸ்பரம் ஒருவரையொருவர் கட்டுக்குள் வைத்திருந்து திருமணமும் செய்துவிடுவோம். இல்லையென்றால் “எவன் எவன் என்னென்ன பேசுவானோ?” அந்தப் பத்தாண்டுகளிலேயே கொண்டாட்டங்களெல்லாம் மெல்ல வடிந்து, சரியாகத் திருமண வாழ்க்கை தொடங்கும்போது திண்டாட்டங்களும் தொடங்கிவிடுகின்றன.

இப்போது காதல் என்றால்… திருமணம் என்றால்… பரஸ்பரப் புரிதல் என்றால்… எல்லாவற்றிற்கும் தெளிவான பளிச்சென்ற விடை நமக்குக் கிடைக்கிறது, விடுதலை வேட்கையும்  தகிக்கிறது. ஆனால் அப்போதும் முன்வந்து நிற்கிற அந்த நாளு பேரை நினைத்தால்தான் நெஞ்சமெல்லாம் பதைக்கிறது. சரி, உப்பு தின்றோம், தண்ணீர் குடிப்போம் எனக் காலமும் கழிகிறது.

அப்படியென்றால், முறியாத காதல்களே இல்லையா? ஒரே காதலை தூக்கிச் சுமந்து, உறவாடும் உத்தமர்களா நாம் என்றால் அப்படியெல்லாம் இல்லை. அப்படி ஒன்றையே தூக்கிச் சுமப்பதுதான் உத்தமம் என நம்பவைக்கப்பட்டிருப்பதுதான் இங்கு பிரச்சனை.

முனிவர் தீர்க்கதமஸ் கதையை யோசிக்க யோசிக்கப் பல்வேறு கோணங்களில்  சிந்தனைகள் பெருகியபடியே இருக்கின்றன. பிறப்பு முதல் அவரின் முழு வாழ்வும் பாலுணர்ச்சி சார்ந்ததாகவும் படைக்கப்பட்டு்ளது. ஒருபக்கம் பார்வையற்றவர்களுக்குப் பாலுறவு சாத்தியம்தானா என்ற அறியாமைக் குரல்கள் அதிர்ந்துகொண்டிருக்க,  கவிஞர்கள் படைப்பாளர்களோ பார்வையற்றவர்கள் அதீதப் பாலுணர்வு கொண்டவர்கள் என்ற ரீதியில் எழுதியபடியும் இருக்கிறார்கள்.

எனவே, அதுகுறித்தும் பேசுவோம் அடுத்த இதழில்.

***தொடர்புக்கு: koothan@thodugai.in

*** இலக்கியக் கர்த்தாக்கள் தங்கள் சிறுகதைகள், புதினங்கள் வழியாக படைத்தளித்த பார்வையற்ற கதாப்பாத்திரங்கள் குறித்துப் பேசுவதும், அதன்மூலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்வையின்மை என்பது எப்படியெல்லாம் புரிந்துகொள்ளப்பட்டு, எவ்வாறெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதை அலசுவதே இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும். எனவே, நீங்கள் படித்த சிறுகதைகளில், புதினங்களில் பார்வையின்மை குறித்தோ, பார்வையற்றவர்கள் குறித்தோ பேசப்பட்டிருப்பின் அதையும் இங்கே பகிரலாம்.

உங்கள் கருத்துகளைப் thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

அல்லது 9080079481 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத குரல்ப்பதிவுகளாக அனுப்பிவையுங்கள்.

பிரெயில் மடல் எழுத விரும்புவோர், ஐந்து பக்கங்களுக்கு மிகாதவாறு எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

தொடுகை மின்னிதழ்,

G1 சுனில் மெசியா,

30 டெலிபோன் காலனி,

2ஆவது தெரு,

ஆதம்பாக்கம்,

சென்னை 600088

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே க்லிக் செய்யவும்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “தொடர்: காவியச்சுடர்கள் (4) காதல்முதல் கல்யாணம்வரை”

தொடர் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நானெல்லாம் ஒரு முழு பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்வதற்கு வீட்டில் அழுத புரண்டு சண்டை போட வேண்டி இருந்தது. பெற்றோரின் அழுகாச்சி காவியங்களை கஷ்டப்பட்டு கடாச வேண்டி இருந்தது. இன்று நாங்கள் இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்கள் பெற்றோரின் முன்னாள்.
அது சரி, கட்டுரையின் இடையே வந்த கமலா யார்? ஒருவேளை கூத்தனின் முன்னாள் காதலியாக இருக்குமோ?😀😃 தொடர்ந்து இணைந்திருங்கள் விவாதிப்போம்.

Like

Leave a reply to விழியன் Cancel reply