அந்தக அரசன் திருதராட்டினன் பாரதம் படைத்த வியாசனின் பிள்ளை. எதிரே நின்ற வியாச முனியின் தோற்றம் கண்டு அறுவறுத்த அம்பிகை தன் விழிகளை இறுக மூடிக்கொண்டு வேண்டா வெறுப்பாய் அவரோடு கூடினாள். ரிஷிகளாலும் பொறுக்க ஒண்ணாத் துயரம் இந்த உலகில் உண்டென்றால், அதுதான் அழகான பெண்களின் புறக்கணிப்பு. அதனால்தான் வியாசன் உள்ளுக்குள் சினந்தாரோ என்னவோ மூடிய விழிகளோடே பிறந்தார் திருதராட்டினன்.

குருகுளத்தின் வாரிசுகளாய் வியாசன் தந்து சென்ற மூன்று மகன்களும் மூன்று குறியீடுகள். விதுரன் விவேகி. நிகரற்ற அறிவும், ஆற்றலும் கொண்டிருந்தாலும், அதைக் கட்டுக்குள் வைத்து, சமநிலையின் விளைநிலமாய் வாழ்ந்தவன்.
பாண்டு அறிவும், அறிவால் தூண்டப்பட்ட விழைவும் கொண்டவன். ஆனால், விழைவின் ஈடேற்றத்துக்கான வீரியமில்லை அவனிடம். இந்த இருவரை மிஞ்சிய அறிவும், துணிவும், ஆற்றலும், உடல்வலுவும் கொண்டு, அரசனுக்கான தகுதியோடு அமைந்தவன் திருதராட்டினன். உடல்த்தினவால், உள்ளத் தெளிவால் கூர்மை கொண்டிருந்தவனிடமிருந்து ஒளி என்னும் கேடயம் பறிக்கப்பட்டது என்றோ, அல்லது இருள் என்னும் முடிவற்று நீளும் வாள் கையில் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லலாம்.
உண்மையில் திருதராட்டினனைப் பற்றி நாம் அறிந்துவைத்திருப்பதெல்லாம் மிகமிகமிக மேலோட்டமானவை. அவன் குருடன். தன்னைப் போலவே, தன் மகன்கள்மீது அவன் கொண்டிருந்த குருட்டுப் பாசத்தால்தான் அவனுக்கு அழிவு நேர்ந்ததாய்ப் புரிந்துவைத்திருக்கிறோம் நாம். ஆம்! அவன் ஒளியற்றவன். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்= காட்சி என்று வாழப் பணிக்கப்பட்டவன். பட்டுக் கம்பளங்களோ, பருக்கைக் கற்களோ பாதங்களை உராய்ந்து, உராய்ந்து, இடரி, வீழ்ந்து, எழுந்து, பின் தடுமாறி என மெல்லத் தன் பாதைகளைச் சமைக்க வேண்டியவன். முட்டி, மோதி, நெற்றி பிளந்து, தனக்கு முன் இருக்கிற திசைகளை அவன் திறந்துகொள்ளவேண்டும்.
ஆனால், இதெல்லாம் வாய்த்ததா அவனுக்கு? உலகத்தை அவன் எதிர்கொள்ள ஒரு பயில்தல் அவனுக்குத் தேவையாக இருந்தது. அதற்கான அவகாசத்தைக்கோரத்தான் அவனுக்கு வாய்க்கவே இல்லை. பிறப்பிலிருந்தே அவன் எதிர்கொண்ட எல்லாம் மதிப்பு வாய்ந்த பிரமாண்டங்கள். அரசு, அரண்மனை, யானைகள், குதிரைகள், பொற்குவைகள், போர்வீரர்கள். எல்லாமே பலம், எல்லாமே திரள். தன் குரலின் எதிரொலிப்பின் கணத்தைக்கூட அவனால் அனுபவிக்க இயலாதபடி, அவனுக்கான பணிவிடைகள் நடந்தேறின. ஆயினும் அவன் பாதுகாப்பாக உணரவில்லை. பிறவியிலிருந்தே அவனைப் பீடித்த இருளே தன் ஆற்றலை ஒடுக்கிவிடுவதாக அவன் கணங்கள்தோறும் உணர்ந்தான். உடல் என்னவோ, உலகத்தையே வாரிச் சுருட்டித் தன் பிடிக்குள் வைத்துக்கொள்ளத் திமிரிக்கொண்டுதான் இருந்தது. ஆனால், ஒளியின்மை என்கிற உடைக்க ஒண்ணா மதில்ச்சுவரில் ஒவ்வொரு நாளும் மோதி மோதி மூர்க்கம் வளர்க்கிற முரட்டு மிருகமாய் ஆவதிலேயே அவன் இளமை கழிந்தது.
பிறவிப் பார்வையற்றவன் என்றாலும், தன் பார்்வையின்மை மீதான ஒருவித கழிவிறக்கம் அவன் நெஞ்சில் நிலைகொண்டுதான் இருந்தது. அக்கறைப் போர்வையில் அம்பிகை தொடங்கி, பீஷ்மர் என ஒவ்வொருவரும் அதைப் பெரிதாக்கி வளர்த்தார்கள். புறத்தே அவன் ஒருபோதும் எவராலும் புறக்கணிக்கப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. அப்படிச் செய்வதும் அக்காலத்திய வழக்கப்படி அரச நிந்தனை. ஆனாலும் அகத்தே அவன் கொண்டிருந்த தனிமையை அம்பிகை உட்பட எவரும் பொருட்படுத்தவே இல்லை. போதாகுறைக்கு, கண்களாய் இருக்க வேண்டிய தன் சகியும் கண்ணைக் கட்டிக்கொண்டதில் இறுதி நம்பிக்கையையும் இழந்து நின்றார் பேரரசர்.
பார்வைக்கு அகப்படாத சூழ்ச்சி அரவங்கள் ஊர்ந்தபடியே இருக்கிற ஒருவித மர்மப்பிளங்களே அரச மாளிகைகள். கணங்கள்தோறும் அங்கு நிகழ்பவை எல்லாம், வெட்டியும் வெட்டுப்பட்டும் முடிவுறாது தொடர்கிற சதுரங்க ஆட்டம். ஒவ்வொருப் பணிவுச் சொல்லின் இடுக்கிலும் ஒரு கூரிய வஞ்சகவாள் பொதிக்கப்பட்டிருக்கும். அங்கே ஒவ்வொருவரும் உடுத்தியிருக்கிற தங்களுக்கான கவச உடை என்பது சந்தேகம்தான். ராஜ்யங்களில் முதன்மையான அஸ்தினாபுரத்து அரசன் அவர் என்றபோதும், வாய்ப்பு மறுக்கப்பட்ட, பிறரின் சொற்களை அப்படியே எதிரொலிக்கும் பீடத்தில் வீற்றிருக்கிற பிரதான ஒலிவாங்கியாக மட்டுமே அவர் இருந்தார். சகுனி, துரியோதனன், விதுரன், பீஷ்மர், பாண்டு என எவரெவரோ அவர் முன்னே வந்து தங்கள் சிந்டனைகளை, அபிலாஷைகளை இவர் குரலில் பேசிப்போனார்கள் அவ்வளவுதான்.
காவியராஜாதான் திருதராட்டினன். ஆனால், காட்சிப்படுத்தப்பட்ட ராஜா. அவர் ஆணையின்படி அங்கு எதுதான் நிறைவேறியது. எல்லாம் எவர் எவரோ நினைத்தவை, எங்கெங்கிருந்தோ திரண்டுவந்து அவரின் பெயரால் ஆணைகள் என வெளியானவை. உண்மையில் திருதராட்டினனின் மூத்த மகன் துரியோதனன்தான் இவற்றையெல்லாம் கண்ணுற்றிருந்த நேரடி சாட்சி. தன் அப்பா அம்மாவைச் சுற்றி, யார்யார் என்னவெல்லாம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பசுமரத்தாணிபோல் நெஞ்சில் ஏந்திக்கொண்டவன். அதனால்தான் சிறுவயதிலிருந்தே அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வளர்ந்திருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில், தன் இளையவர்களான பாண்டவர்களின் மீதான தீராப்பகைக்குக் காரணமாக அமைந்திருக்க வேண்டும்.
காவியமுனி வியாசனைப் பொருத்தவரை, பார்வையற்ற அரசனான திருதராட்டினன் ஒரு குறியீடு. மனிதர்களின் இருண்ட அகத்தைச் சித்தரிப்பதாய் எண்ணி, தான் படைத்து உலவவிட்ட ஒரு பாத்திரம். மக்களும் தன் வழியிலேயே அவரைப் புரிந்துகொள்ள வேண்டும் என வியாசன் ஆசைப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் முழுக்க முழுக்க எதிர்மறைப் பாத்திரங்களின் தலைமைப் பாத்திரமாகவே வியாசர் திருதராட்டினனைப் படைத்திருக்கிறார்.
பிறவிப் பார்வையற்றவரான திருதராட்டினன் பிறவி மூர்க்கனா? அவருடைய இருள் மனம் என்பது பிறவியிலேயே அவருக்கு வாய்க்கப்பெற்றதா என்றால், பாரதக்கதை வழி யோசித்தாலே இல்லை என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்திலேயே பார்வையற்ற ஒருவர் அரசராக இருந்திருக்கிறார் என்று சொல்லி நம்மால் பெரும்ஐப்படும்படியாக வியாசர் அந்தப் பாத்திரத்தைப் படைக்கவில்லை. அப்படிக் கொஞ்சமேனும் நாம் உள்ளூர நம் தலைவன் திருதராட்டினனை ரசித்துக்கொள்ள ஜெயமோகன்தான் தன்னுடைய வெண்முரசு வழியாக நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறார். வெண்முரசின் இரண்டாம் புத்தகமான மழைப்பாடலின் முதல் இருபது அத்தியாயங்களைப் படித்துப் பாருங்கள், நான் சொல்வது புரியும்.
காவியங்கள் உயர் பீடங்களில் பார்வையற்றவர்களை அமர்த்தி அழகு பார்த்துவிட்டன என்றாலும், உயர் பதவிகளுக்கும் பார்வையின்மைக்கும் இடையேயான ஊடாட்டங்கள் பேசப்பட வேண்டியவை. அதுபற்றியும் கொஞ்சம் பேசுவோம் அடுத்த இதழில்.
தொடர்புக்கு: koothan@thodugai.in
*** இலக்கியக் கர்த்தாக்கள் தங்கள் சிறுகதைகள், புதினங்கள் வழியாக படைத்தளித்த பார்வையற்ற கதாப்பாத்திரங்கள் குறித்துப் பேசுவதும், அதன்மூலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்வையின்மை என்பது எப்படியெல்லாம் புரிந்துகொள்ளப்பட்டு, எவ்வாறெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதை அலசுவதே இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும். எனவே, நீங்கள் படித்த சிறுகதைகளில், புதினங்களில் பார்வையின்மை குறித்தோ, பார்வையற்றவர்கள் குறித்தோ பேசப்பட்டிருப்பின் அதையும் இங்கே பகிரலாம்.
உங்கள் கருத்துகளைப் thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
அல்லது 9080079481 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத குரல்ப்பதிவுகளாக அனுப்பிவையுங்கள்.
பிரெயில் மடல் எழுத விரும்புவோர், ஐந்து பக்கங்களுக்கு மிகாதவாறு எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
தொடுகை மின்னிதழ்,
G1 சுனில் மெசியா,
30 டெலிபோன் காலனி,
2ஆவது தெரு,
ஆதம்பாக்கம்,
சென்னை 600088
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “தொடர்: காவியச்சுடர்கள் (1)”
[…] தொடர்: காவியச்சுடர்கள் (1) […]
LikeLike