தொடர்: காவியச்சுடர்கள் (2): எழுத வேண்டும் புதிய பாரதம்!

தொடர்: காவியச்சுடர்கள் (2): எழுத வேண்டும் புதிய பாரதம்!

ஆக்கம் ஒலிமயக்கூத்தன் வெளியிடப்பட்டது
ஊன்றுகோலைப் பயன்படுத்தி நடந்து செல்லும் பார்வையற்றவர்

உயர்ப்பதவிகளுக்கும் பார்வையின்மைக்கும் இடையேயான பொருத்தப்பாட்டைப் பேசுவது காலத்தின் தேவையாக இருக்கிறது. இன்றும்கூட பல அரசுக் கல்லூரிகள், பள்ளிக்கல்வித்துறையின் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முழுப் பார்வையற்றவர்கள் முதல்வர்களாக, தலைமை ஆசிரியர்களாகத் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அந்தப் பணிகளில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதை முரியடிப்பதற்கான வியூகங்கள் என எல்லாவற்றையும், தனிநபரின் ஆளுமை, அந்த நேரத்து சமயோஜிதம் இவை அத்தனையும் கூட்டிக் கழித்தே கணக்கில் கொண்டாக வேண்டும்.

இன்னும்கூட இந்தியச் சமூகம் என்பது, சிந்தனையால், கண்ண்இயத்தால் வளர்ந்துகொண்டிருக்கிற சமூகம்தான். பண்பட்ட மனதுடையோராய்த் தன் குடிமக்களைச்  சிறுகச் சிறுகச் செப்பனிட்டே இந்ந்தியச் சமூகம் முழு ஆளுமைகொண்ட, எல்லாவற்றிலும் பொது ஒழுங்கையும் கண்ணியத்தையும் பேணுகிற மனிதவளம் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. இப்போதும்கூட இந்த நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு உடல்ச்சவால் கொண்ட ஒருவரை எப்படிக் கண்ணியமாய் நடத்துவது, அவரோடு எப்படி உறவாடுவது என்பதில்கூடத் தெளிவில்லை.

மிகத் திறமை வாய்ந்த, தங்கள் மாணவர்களுக்கு ஒரு முன் மாதிரியாய்த் திகழ்கிற எத்தனையோ பார்வையற்ற ஆசிரியர்கள் நம்மிடம் உண்டு. அதேசமயம், வகுப்பில் ஒரு பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்க, மாணவர்கள் அவரைக் கேலி செய்தும், அவர் வகுப்பில் நடனமாடியும் வெளியான டிக்டாக் காணொளிகள் உணர்த்துவதெல்லாம் எதை? இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதைத்தானே?

அப்படியானால், இந்தியச் சமூகம் என்பது இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், அந்தச் சமூகத்தில் ஒரு தரப்பின் தலைமையாக ஒரு பார்வையற்றவர் திகழ்வதற்கு நேர்மையும், ஒழுங்கும், நெஞ்சுரமும் நிச்சயம் வேண்டும். பெரியார் சொல்வதைப்போல, மான அவமானங்கள்ள் கணக்கில் கொள்ளாமல், தலைமைப்பணியை நிறைவேற்றிட அவர் மனதளவில் தன்னைத் தயார்செய்துகொள்ள வேண்டும்.

நிர்வாக அலுவல் தொடர்பான செயல்பாடுகளில் அவர் கொஞ்சம் தொழில்நுட்பம் கற்றுக்கொண்டாலே போதுமானது. கரையேறிவிடலாம். ஆனால், பலதரப்பட்ட குணநலன்களைக் கொண்ட மனிதர்களைக் கையாள்வதில் அவர் எப்போதும் விழிப்புடையவராய், எதிலும் ஒழிவு மறைவற்றவராய் இருத்தல் மிகமிக அவசியம். அதைவிடவும் அவசியமான ஒன்று, தன்னைப் போன்ற திறந்த மனதும், திட்பமான ஆளுமையும் கொண்ட சிலரைத் தன் நம்பிக்கைக்குரியவர்களாய்ப் பேணுவது. அதேசமயம், அந்த நம்பிக்கைக்குரியவர்களிடம் காலப்போக்கில், தனக்கு ஒரு சார்புத் தன்மை வந்துவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அதைவிட முக்கியம். ஒருபோதும் கண்கள் கண்கள்தான், மூளைகள் அல்ல என்கிற தெளிவு எப்போதும் வேண்டும்.

புகழுக்காய்த்  தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள். அதற்காக அவர்களை முற்றிலும் விலக்கி வைத்துவிடவும் முடியாது. அப்படி அவர்கள் விலக்கப்பட்டால், கடைநிலைகளிலிருந்து எழுந்துவரும் பல கலவரத் தீக்கங்குகளைப் பற்றவைத்தபடியே இருப்பார்கள். அவர்களை உளவியல் ரீதியில் கையாள்தல் அவசியம். இப்படி ஒவ்வொன்றாய் நீட்டி நீட்டிச் சொல்வதைக் காட்டிலும், சுருக்கமாய் இப்படிச் சொல்லலாம். நிர்வாகத்தின் தலைமை பீடத்தில் அமரும் ஒரு பார்வையற்றவர், பார்வையுள்ளவரைக் காட்டிலும் பல மடங்கு விழிப்புடன் எப்போதும் இருப்பது அந்த நிர்வாகத்துக்கும் தனக்கும் நலம் பயப்பதாய் அமையும்.

கடந்த பத்திகளில் நீங்கள் படித்தவற்றையெல்லாம் அப்படியே திருதராட்டினன் மேல் போட்டுப்பாருங்கள். முந்திப் பிறந்துவிட்டதால் சூட்டப்பட்ட முள்முடிதான் அவரின் அரசபதவி. போருக்கு பாண்டுவும், புத்திக்கு விதுரனும், ஒழுங்குக்கு பீஷ்மரும் என எல்லாமே வேறு சிலர் கட்டுப்பாட்டில் என்றானபிறகு, வேலைதான் என்ன நம் மன்னனுக்கு?

பாரதத்தை எழுதிய வியாசரே, தொடக்கம் முதல் இறுதிவரை நாயகன் எதிர் நாயகன் என்றவாறே தன் காவியத்தை வடிவமைத்துவிட்ட பிறகு சொல்வதற்கு ஒன்றுமில்லைதான். பாண்டவர்கள் நல்லவர்கள், கௌரவர்கள் தீயவர்கள் என்று இரண்டே வாக்கியங்களில் முடித்துவிடலாம். ஆனாலும், நாமும் எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டனைப்போல துரியோதனனின் மூர்க்கமும் கண்மூடித்தனமும் ஆவேசமும் பிறந்த ஊற்றுமுகம் எது என்று ஆராய்ந்துதான் பார்க்கலாமே. அதனால் எஞ்சுவது நமக்கான படிப்பினைகள் என்றால் நன்மைதானே அந்த அலசலும்.

எல்லோரும் தன்னிடம் அன்பாகப் பேசினாலும், ஏதோ ஒன்று உருத்துகிறது. , மெய்சிலிர்க்கும் சொற்சேர்க்கைகளில் திகட்டுகிறது மொழி. அத்தனையும் பரிவா? பாசாங்கா? எனப் பிதற்றுகிறது மனம். மென்மையும் இனிமையும் கலந்த வார்த்தைப் பிரையோகங்கள் வாடிக்கையாகிவிட்ட அந்தத் தருணங்களின் தனிமை கிழிக்க, தன் கைபற்றியிருக்கிறாள் ஒருத்தி. இவள் என் மனைவி, என் கண், இனி என் சிந்தனைக்கு மூலம், உள்ளதை உள்ளதென்று எனக்கு உரைக்கக் கிடைத்த உண்மையான துணையாள்.

நான் பார்க்க விரும்பியவற்றையெல்லாம் எனக்காகப் பார்த்து, குன்றாச் சுவையோடும், குறைபடா உண்மையோடும் என்னிடம் உரைப்பாள். இனி இவள்தான் நம் நம்பிக்கைக்குரிய நமக்கான கண். பரந்து விரிந்த அரண்மனைப் பெருமுகட்டின் மடிப்புகளைத் தொட்டுக்காட்டவும், அதன் இண்டு இடுக்குகளின் அகளம் உரைக்கவும், அங்கே இடுங்கியிருக்கும் இடுக்கண்களின் முடிச்சவிழ்க்கவும் நமக்கென வந்துவிட்ட நம்பிக்கை தேவதை என திருதராட்டினன் எண்ணிக்கொண்டிருக்க, காந்தாரியின் கண்களையும், காதல், காவியச்சுவை என்று காரணங்களை அடுக்கி, வியாசன் இறுக்கமாய் கட்டிவிட்டபிறகு, கிட்டத்தட்ட பெயரளவு ராஜாதானே திருதராட்டினன். இது எவ்வளவு பெரிய அநீதி.

பீமனின் சிலையுருவத்தை இறுகப் பற்றி அதை நொறுக்கும் திருதராட்டினன்

இத்தனையும் போதாதென்று, அந்தப் பார்வையற்ற தம்பதிக்கு நூறு பிள்ளைகள் வேறு. வியாசன் திருதராட்டினனுக்கு மட்டும் அநீதி இழைக்கவில்லை. துரியோதனன் சகிதம் பிள்ளைகள் நூற்றுவருக்கும் அல்லவா அநீதி இழைத்துவிட்டார். அந்த அநீதி இருளில் தொடங்கியதுதான் அத்தனை பகைகளும், அத்தனை மூர்க்கங்களும், அவ்வளவு பெரிய போரும்.

இந்த நூற்றாண்டில் நாம் வியாசனுக்கு எதிர்முகமாய்ச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கண்களைக் கட்டாத காந்தாரிப் பாத்திரத்தைப் படைத்து உலவவிட்டு, புதிய மகாபாரதம் ஒன்றை எழுதிட வேண்டும். அப்படி எழுதப்படும் புதிய பாரதத்தில், திருதராட்டினனின்  உண்மையான பிடிக்குள் தேசம் வந்தமையும். மாளிகையில் தனக்கு நேரும் பழிப்புகளையும் இழிப்புகளையும் தட்டிக் கேட்க சிறுவன் துரியோதனனுக்கு ஒரு துணை கிடைக்கும். சொக்கட்டான் ஆடவும், தன் சுகதுக்கங்களைச் சொல்லிக்கொள்ளவும் இனி துரியோதனனுக்கு சகுனி தேவையில்லை என்ற நிலைவரும். அரண்மனையில் சகஜமாய்ப் புழங்கிய சைகைகள், கண்சிமிட்டல்களில் கணிசமான சரிவு ஏற்படும். இன்னும் வேறு என்னென்ன மாற்றங்கள் வரலாம். உங்கள் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு, கருத்துப் பெட்டியை நிரப்பிடுங்கள்.

காவியமுனி வியாசரால் பாரதத்தில் உலவவிடப்பட்ட பார்வையற்ற முதல் கதாப்பாத்திரம் திருதராட்டினன்தானா என்றால் அதுதான் இல்லை. திருதராட்டினனின் பிறப்புக்கே மூலகாரணமாய் பீஷ்மரால் சத்தியவதிக்கு உரைக்கப்படும் முன்கதையும் ஒரு பார்வையற்றவரைப் பற்றித்தான். யார் அவர்? என்ன கதை அது? பேசுவோம், அடுத்த இதழில்.

தொடர்புக்கு: koothan@thodugai.in

*** இலக்கியக் கர்த்தாக்கள் தங்கள் சிறுகதைகள், புதினங்கள் வழியாக படைத்தளித்த பார்வையற்ற கதாப்பாத்திரங்கள் குறித்துப் பேசுவதும், அதன்மூலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்வையின்மை என்பது எப்படியெல்லாம் புரிந்துகொள்ளப்பட்டு, எவ்வாறெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதை அலசுவதே இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும். எனவே, நீங்கள் படித்த சிறுகதைகளில், புதினங்களில் பார்வையின்மை குறித்தோ, பார்வையற்றவர்கள் குறித்தோ பேசப்பட்டிருப்பின் அதையும் இங்கே பகிரலாம்.

உங்கள் கருத்துகளைப் thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

அல்லது 9080079481 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத குரல்ப்பதிவுகளாக அனுப்பிவையுங்கள்.

பிரெயில் மடல் எழுத விரும்புவோர், ஐந்து பக்கங்களுக்கு மிகாதவாறு எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

தொடுகை மின்னிதழ்,

G1 சுனில் மெசியா,

30 டெலிபோன் காலனி,

2ஆவது தெரு,

ஆதம்பாக்கம்,

சென்னை 600088

தொடர்: காவியச்சுடர்கள் (1)

பகிர

1 thought on “தொடர்: காவியச்சுடர்கள் (2): எழுத வேண்டும் புதிய பாரதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *