Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் Uncategorized

களம்: ஓங்கிய உரிமைக் குரல்கள், உடனுக்குடன் மாற்றம் பெற்ற அரசாணைகள்

மாற்றுத்திறனாளிகளின் தொடர் வலியுறுத்தல்களால் சில அண்மைய அரசாணைகள் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த ஜனவரி 2026 இறுதி நாட்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக, இனி கல்லூரி பயிலும் மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்ப் பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை ஆசிரியர்க் கல்வியியல் மாணவர்கள் இவர்களோடு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிவோர் பதிலி எழுத்தர்களாகத் தேர்வுகளை எழுதுவார்கள் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்

வழிகாட்டு நெறிமுறைகள்

வெளியிடப்பட்டன.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தினார் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் திரு. சண்முகம் அவர்கள். அதனைத் தொடர்ந்து, பல்வேறு மாற்றுத்திறனாளி அமைப்புகள் இந்த நெறிமுறைகள் குறித்த தங்கள் கண்டனங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், பிப்பரவரி 2026 4-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதிவரை நடைபெற்ற பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தொடர் போராட்டத்தின் 9 அம்சக் கோரிக்கைகளில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் ஒன்றாக இடம்பெற்றது.

இறுதியில், 19 பிப்பரவரி 2026 அன்று, மேற்சொன்ன வழிகாட்டு நெறிமுறைகள் திரும்பப் பெறப்பட்டு, பதிலி எழுத்தர்களாக ஆசிரியர்களே தொடர்வார்கள் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது.

பள்ளிக்கல்வித் துறை
அரசுத் தேர்வுகள் இயக்ககம்
பத்திரிக்கை செய்தி
மார்ச் / ஏப்ரல் 2026 இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு
மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகளில் கடந்த ஆண்டினைப்
போலவே அரசாணை (நிலை) எண் 54, பள்ளிக் கல்வி (பொது1)
துறை, நாள் 29.02.2016 மற்றும் அரசாணை (நிலை) எண் 62,
பள்ளிக் கல்வி (அ.தே) துறை, நாள் 25.03.2022 ஆகியவற்றைப்
பின்பற்றியே சொல்வதை எழுதுபவர்கள் (Scribes) நியமிக்கப்பட
உள்ளனர். எனவே, முந்தைய ஆண்டுகளைப் போல
ஆசிரியர்களை சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) நியமிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
நாள் : 19-02-2026
சென்னை
அரசுத் தேர்வுகள் இயக்குநர்

குறைந்தது ஒரு மாதத்துக்குள் குறைக்கப்பட்ட மதிப்பெண்கள்:

ஆசிரியர்த் தகுதித் தேர்வில்் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் மற்றும்் பழங்குடியினத் தேர்வர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 55% 82 மதிப்பெண்களிலிருந்து முறையே, 50% 75, 40% 60 எனக் குறைக்கப்பட்டு அதற்கான

அரசாணை

வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண் குறைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி விழுக்காடு 50% 75 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கம் தனது முதல் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தது. பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கப் போராட்டத்தின் 9 அம்சக் கோரிக்கைகளில் இந்தக் கோரிக்கைக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது.

தற்போது, அதாவது பிப்பரவரி 25, 2026 அன்று

அரசாணை எண் 46

மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 60 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றி அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறையால் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கிறார்கள். தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகக்  குறைக்கப்பட்டதில் பணியிலுள்ள பல மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த அரசாணையால் அவர்கள் தங்கள் அரசுப்பணியைத் தக்கவைத்துக்கொள்வார்கள். பலர் பதவி உயர்வுக்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

அதேசமயம், பணியிலில்லாத பிற மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மதிப்பெண் குறைப்பு மகிழ்ச்சிதான் என்றாலும், அவர்கள் மேலும் ஒரு தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற்றால்தான் அரசுப்பணியை அடைய முடியும். அந்தத் தேர்வை எழுதுவதற்கான தகுதியை இந்தத் தேர்ச்சி அவர்களுக்கு வழங்கியுள்ளது என்ற வகையில் முதல் வாசல் நிரந்தரமாகத் திறந்திருக்கிறது எனலாம்.

மாற்றத்துக்காக உழைத்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் பாராட்டுகளும்.

***தொகுப்பு சகா.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.