களம்: நம்பிக்கைச் சொற்பொழிவா? நாராசக் கூச்சலா?

களம்: நம்பிக்கைச் சொற்பொழிவா? நாராசக் கூச்சலா?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

“போன ஜென்மத்தில் செய்த பாவங்களால்தான் ஒருவர் கண்ணில்லாமல், கையில்லாமல் பிறக்கிறார்.

சார் உங்க பெயர் சொல்லுங்க. நீங்க ஒரு கேள்வி கேட்டா, நானும் ஒரு கேள்வி கேட்பேன்தானே! சரியா? சரியா இல்லையா?

முட்டாள் மகாவிஷ்ணு

பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாதுன்னு அரசியலமைப்புச் சட்டத்தில இருக்கா? சீவோவைவிட நீங்க அறிவாளியா? உங்களைப் போன்ற ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வாழ்வியலைச் சொல்லித்தரவே முடியாது. இவ்ளவுக்குப் பிறகும் அவர் பேசுராருனா அவர் ஈகோவில பேசுறார். நான் கூலாத்தான் இருக்கேன். நீங்க அவர செட்டில் பண்ணுங்க. மாற்றுத்திறனாளிதான் ஆனா பொதுவில் பேசுறதுக்கு ஒரு வரைமுறை இருக்குல்ல.”

அரசுப்பள்ளியின் மேடையில், மாணவர்களுக்கான நம்பிக்கைச் சொற்பொழிவு என்ற பெயரில் ஒரு வடிகட்டிய முட்டாள் போட்டிருக்கும் கூச்சல்கள் இவை. அத்தனைக்கும் ஆசிரியர்கள் தரப்பில் ஆழ்ந்த அமைதி, மாணவர்கள் பக்கம் ஆர்ப்பரிக்கும் கைதட்டல்கள்.

கேள்விகேட்ட பார்வையற்ற ஆசிரியர் அப்புறப்படுத்தப்படுவதும், அந்த முட்டாளுக்குச் சமாதானம் சொல்ல நிர்வாகம் துடிப்பதும் என தமிழகத்தின் சராசரி முகம் அம்பலப்பட்டு நின்ற தருணங்கள் அவை.

மரியாதைக்குரிய ஆசிரியர் திரு. சங்கர்

தங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரை, வெளியிலிருந்து வந்த எவனோ ஒரு முட்டாள், “அவர் ஈகோவில் பேசுகிறார்” என்று அவமானப்படுத்துகிறான். அவன் அவமானப்படுத்துகிறான் என்ற செய்தியே அறியாமல் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள் நம்முடைய பிள்ளைகள் என்றால், நம்முடைய கல்விச் சூழல் எத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்பது விளங்குகிறது.

“நான் கூலாத்தான் இருக்கேன், எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை. அவரை செட்டில் பண்ணுங்க.” ஆசிரியர்் சங்கரின் உடல்சார் இயலாமைகளைச் சுட்டும் வகையில், அவன் உதிர்த்திருக்கும் சொற்கள் இவை. எவ்வளவு அகந்தை, ஆணவம். ஆனாலும் அந்தத் தருணத்தில் அத்தகைய அகந்தைச் சொற்களுக்குத்தான் மதிப்பும் மரியாதையும் மாலைகளும் என்றால், நம்முடைய சமூகத்தின் அறவீழ்ச்சியை எண்ணிப் பார்க்கிறேன்.

 “சார் அவர் ஒரு மாற்றுத்திறனாளி.” இத்தனை கலேபரங்களுக்கிடையே ஒலிக்கிறது ஒரு பெண் குரல். இப்படிச் சொல்வதன் வழியே அந்தப் பெண் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் இல்லை. “சார் அவரை மன்னிச்சிடுங்க அல்லது அவர் பேசுறதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க.”

பிரச்சனை நடந்து ஒருவாரம் ஆகிவிட்டது. சம்பவம் நடந்த அந்த வளாகத்தில் ஒற்றை ஆளாய் தனித்துவிடப்பட்டார் ஆசிரியர் சங்கர். இன்று மாநிலமே தூக்கிவைத்துப் பேசும் அவரின் கடந்த ஒருவார காலத்தைச் சிந்தித்துப் பார்க்கிறேன். நரகம், நரகம் கொடும் நரகமாய் கடந்திருக்கும் என்பது என்னுடைய அனுமானம்.

“சார் என்ன இப்படிப் பண்ணீட்டீங்களே?” இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டும் கேட்காமலும் நகர்ந்திருக்கக்கூடும் அவருடைய சக ஜனம். அவரிடம் கொஞ்சம் பார்த்துத்தான் பழக வேண்டும் என்று சிலர் எச்சரிக்கையும் கொண்டிருக்கக்கூடும். அந்த அளவுக்குத் தார்மீகம் இழந்துவிட்டிருக்கிறது நம்முடைய பொதுச்சமூகம். இதை நீங்கள் வேறெங்கேயும்விட உங்களுடைய பணிச்சூழலில்தான் அதிகம் உய்த்துணர முடியும்.

இன்றைய நிலையில், பெரும்பாலான நிர்வாகச் செயல்பாடுகள் களத்தில் அல்ல, காகிதங்களில்தான் நிகழ்த்தப்படுகின்றன. செயல் பற்றியோ, செயலுக்கான உரிய பலன் பற்றியோ பெரும்பாலான நிர்வாகத் தலைமைகளுக்கு எவ்வித அக்கறைகளும் இல்லை. செல்லரிக்கப் போகும் கோப்புகள் சரியாக இருக்க வேண்டும் அந்த அளவுக்கு தார்மீகங்கள் செல்லரித்துவிட்ட பணிச்சூழலில் வாழ்கிறோம் நாம். இங்கே அறிவாழமோ, அடிப்படை தார்மீகமோ ஒரு பொருட்டே இல்லை. “அன்றன்றைக்கு வேண்டிய அப்பங்கள் போதும் ஆண்டவரே” என்ற ரீதியில் நாட்களை நகர்த்திடவே விரும்புகின்றன மிகுதியான அதிகார உச்சங்கள்.

“எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள்” என்று முழங்கிய இந்த மண்ணில், “சொன்னதைச் செய்யுங்கள்” என்ற வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. அப்படியே ஓரிரு கேள்விகள் உதிக்கும் என்றாலும், அதற்கான அவகாசங்களெல்லாம் எவருக்கும் தரப்படுவதே இல்லை. இப்படித்தான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழக்கப்படுத்தப்படுகிறோம். அப்படியே அந்தப் பழக்கத்தை நம்முடைய மாணவர்கள் மீதும் இறக்கிவைக்கிறோம். இத்தகைய சூழலில், அறிவார்ந்து எழும் ஒரு கேள்விக்கு எத்தகைய மதிப்பும் இருக்காது. அதிலும் கேட்பவர் ஒரு பார்வையற்றவர் என்றால், அது கேள்வியே அல்ல பிதற்றல் என்பதுதான் பொதுச்சமூகக் கண்ணோட்டம்.

இத்தனையையும் கடந்து எழுந்திருக்கும் மரியாதைக்குரிய நம்முடைய ஆசிரியர் திரு. சங்கர் அவர்களின் அறச்சீற்றம் பார்வையற்றோராகிய நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. சில ஆண்டுகளாகவே மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தலில், பார்வையற்றோரின் நியாயமான குரல்கள் அரசு தொடங்கி, அன்றாடக்களம் என எங்கும் ஒருவகை இருட்டடிப்பை எதிர்கொள்வதும், அவை சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் திரித்து வெளியிடப்படுவதுமான ஒருவகை சூழல் இருந்துவருகிறது. தொடர்ச்சியாக அவை தந்த ஒருவித சோர்வு மனநிலையிலிருந்து என்னைப் போன்ற பார்வையற்றவர்களைத் தட்டி எழுப்பியிருக்கிறார் ஆசிரியர் சங்கர்.

ஆசிரியர் சங்கரின் நியாயமான கேள்விகளையும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் தங்களுடைய சமூகவலைதளப் பதிவுகளின் வழியே அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்ற முற்போக்குச் சிந்தனையுடைய பகுத்தறிவாளர் ஒவ்வொருவரின் செயலும் போற்றுதலுக்குரியது. அவற்றை அங்கீகரிக்கும் வகையிலும், ஆசிரியரை பெருமைப்படுத்தும் நோக்கத்திலும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகப்பெரிய ஆறுதலைத் தந்திருக்கிறது.

ஆனாலும் அன்புத் தோழமைகளே! அமைச்சரே பாராட்டிவிட்டார், என்ற பெருமிதத்தோடு நாம் இந்தச் சம்பவத்தைக் கடந்துவிடக்கூடாது. இத்தகைய துணிச்சலான நிலைப்பாட்டை முன்னெடுத்த ஆசிரியர் சங்கருக்கு தனிப்பட்ட வகையில் எந்த ஒரு நெருக்கடியும் ஏற்படாத வண்ணம், “நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என்ற குரல்களை பார்வையற்றோராகிய நாம் உரத்துச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய குரல்களுக்கெல்லாம் தொடக்கமாய்,  பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், அந்த முட்டாள் மகாவிஷ்ணு மீது தொடர்ந்திருக்கும் வழக்கைக் கருதலாம். சங்க நிர்வாகிகளுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் உடன் நிற்போம் என்ற உறுதியையும் உரித்தாக்குவோம்.

இந்தப் பிரச்சனை வெளியான சில மணி நேரங்களிலேயே, முட்டாள் மகாவிஷ்ணு மீது வழக்கு தொடுத்த அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கச் சகோதரர்களுக்கும், தன்னுடைய காத்திரமான உரையால் ஆசிரியர் சங்கரின் நிலைப்பாட்டுக்கு வலுவான ஆதரவை நல்கியிருக்கும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு. தீபக்நாதன் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

***ப. சரவணமணிகண்டன்

வெளி இணைப்புகள்:

ஆசிரியருக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் நடந்த திடீர் பிரச்சனை! Controversial Questions of a Teacher !

மகா விஷ்ணுவை எதிர்த்து கேள்வி கேட்டு அலறவிட்ட ஆசிரியருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்

🔴LIVE : ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை – அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு | Anbil Mahesh | Thanthi TV

சொற்பொழிவை எதிர்த்தது ஏன்..? மகா விஷ்ணுவை கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கர் விளக்கம் | Newstamil24x7

Exclusive: `எங்களை இவங்க பாவப் பிறவின்னு சொல்லிட்டாங்களே; அதை விட..?!’ – ஆசிரியர் சங்கர் வேதனை

https://www.vikatan.com/education/government-school-teacher-sankar-exclusive-interview

மாணவர்களிடம் ‘பாவ புண்ணியம்’ பற்றி சர்ச்சைப் பேச்சு – யார் இந்த மகாவிஷ்ணு? என்ன நடந்தது?

https://www.bbc.com/tamil/articles/cqjlxxvxrj1o

பகிர

3 thoughts on “களம்: நம்பிக்கைச் சொற்பொழிவா? நாராசக் கூச்சலா?

  1. பிற்போக்குத்தனமான பேச்சுகளுக்கு என்றும் இது போன்ற கைகலும், குரல்கலும் ஓங்கும். சக உயிர்களிடத்தில் அன்பு காட்டவும். என்ற இறை நம்பிக்கையை போதிக்காமல் பிற்போக்குத்தனமான செய்திகளை இளம் மாணவர்கள் மத்தியில் நஞ்ஜாய் விதைக்கும் இது போன்றோர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் ‌.
    #I_support_Dr_Shankar_sir #all_are_equal
    #கற்றது_தமிழ்

  2. பதிவு அருமை!
    மகாவிஷ்னு பேசிய அந்தக் காணொளியில் எனக்கு தெறிந்து மாணவர்கள் ஆமோதிக்கவுமில்லை, ஆதரிப்பது போன்றும் தெறியவில்லை.
    அந்தக் காணொளியே நன்கு திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டதாக தெறிகிறது.
    மாணவர்களின் கைத்தட்டல்களும் ஆரவாரங்களும் பின்ச்சேர்க்ைகளாக இணைக்கப்பட்டுள்ளது என்பது என் அனுமானம்.

  3. திரு ஷங்கர் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    சவுண்டப்பன் சொன்னது போலவே மாணவர்களின் ஆரவார கூச்சல்கள் முற்றிலும் சேர்க்கையான இடைச் செருகலையே காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *