நிகழ்வு: அன்பும், அகம்சார் புரிதலும்!

நிகழ்வு: அன்பும், அகம்சார் புரிதலும்!

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

அறிவிப்பு: திறப்புவிழா! இல்லையில்லை திருப்பவிழா!

தஞ்சை மதர் தெரசா ஃபவுண்டேஷன் ஒருங்கிணைத்த பார்வையற்றோருக்கான பிரத்யேக சுயவரம் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறையுடையவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Mother Teresa Foundation Youtube

நலிவடைந்த, ஏழை எளிய மக்களுக்கான நலனை ஒற்றை நோக்கமாகக்கொண்டு, கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தஞ்சை மதர் தெரசா ஃபவுண்டேஷன், அன்பு இல்லம் என்ற பெயரில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது. அத்தோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களு்க்கான நல மையம் ஒன்றினைச் செயல்படுத்தி, அவர்களுக்கான மருத்துவ சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

சவரிமுத்து

போற்றுதலுக்குரிய இந்த அமைப்பின் சேர்மேன் திரு. சவரிமுத்து அவர்களோடு ஒரு டிரஸ்டியாகப் பங்கேற்று, பார்வையற்றோருக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளை முன்னெடுத்து வருகிறார், ஓய்வுபெற்ற பேராசிரியர் திருமதி. ராதாபாய் அவர்கள். இவர், தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையற்றவர்கள்

பார்வையற்றோரின் கல்வி மேம்பாட்டில் பெரும் அக்கறைகொண்டுள்ள மதர் தெரசா ஃபவுண்டேஷன், பார்வைக்குறையுடைய மாணவர்களுக்கு மட்டுமின்றி, பார்வைக்குறையுடைய பெற்றோரின் குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகிறது.

மூன்று கட்டங்கள், இரண்டு ஆண்டுகள் என நீடித்த கரோனா ஊரடங்கின்போது, வறுமைக்குள்ளாகி பெரும் பாதிப்பைச் சந்தித்த பல பார்வையற்றோர் குடும்பங்களின் ஒற்றை நம்பிக்கையாக உடன் நின்று அவர்களின் கண்ணீர் துடைத்தது இந்த அமைப்பு.

இவ்வாறு பார்வையற்றோர் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்திவரும் இந்த அறக்கட்டளையின் ஒரு தனித்துவமான, அதி அவசியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாக அமைந்தது பார்வையற்றோருக்கான சுயவரம் நிகழ்ச்சி.

ராதாபாய்

“பார்வையற்றோருக்குன்னு பிரத்யேகமா ஒரு சுயவரம் நிகழ்ச்சி  நடத்தணும்கிற சிந்தனையை எங்களுக்குள்ள விதைச்சது தம்பி நாகராஜ்தான்” என்று தனது வரவேற்புரையில் பூரித்தார் அம்மையார் ராதாபாய் அவர்கள்.

சென்னை மாநிலக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் திரு. நாகராஜ் அவர்கள், கடந்த 2014ல் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு முன்னெடுத்த போராட்டம், அன்றைய அரசையே அதிரவைத்தது. அந்த ஆண்டின் டாப் 10 இளைஞர்களில் நாகராஜ் அவர்களுக்கும் இடம் அளித்துப் பெருமைப்படுத்தியது ஆனந்தவிகடன்.

“சாதி, மதம், இனங்கிற எந்த ஒரு பாகுபாடும் இல்லாத இந்த நிகழ்ச்சிக்குத் தன்னோட ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தந்து, நிகழ்ச்சில சிறப்பு விருந்தினரா வந்திருப்பவர் முகமது தியாங். ஆகவே இந்த நிகழ்ச்சில நம்ம நாட்டோட ஒருமைப்பாடு உணர்வும் கலந்திருக்கு” எனப் பெருமை பொங்கப் பேசினார் சேர்மேன் திரு. சவரிமுத்து அவர்கள்.

முகமது தியாங்

சர்வதேச அளவில் மலர்வணிகம் நடத்திவரும் முகமது தியாங் அவர்கள், மதர் தெரசா ஃபவுண்டேஷனின் ஒப்பற்ற புரவலர். தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் 8000 ஊழியர்களுக்கு நிறுவனத்தில் விலையில்லா உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். கரோனா ஊரடங்கின்போது, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் வழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய சுயவரம் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறையுடையவர்கள் பங்கேற்றனர். இணையவழியில் மட்டுமின்றி, நிகழ்வு வளாகத்திலும் வரன் தேடுபவர்களுக்கான பதிவுகள் தொடர்ந்து நடந்தபடியே இருந்தன.  பெண்களின் பங்கேற்பு குறைவுதான் என்றாலும், கணிசமான அளவில் இருந்தது என்பது ஓர் ஆறுதலான அம்சம்.

வரன்தேடி வந்தவர்களில் பெரும்பான்மையினர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். சுயதொழில் செய்வோர், குறைந்த ஊதியத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சிலரும் பங்கேற்றார்கள்ள்.

முறையான தொடக்க நிகழ்வை அடுத்து தன்னறிமுக அமர்வு நடந்தது.  அமர்வில் பங்கேற்ற மணவாள/மணவாட்டிகளில் ஓரிருவரைத் தவிர, ஒரே மனதாய் அச்சுப் பிசகாமல் அனைவரும் அப்படியே உச்சரித்த வாக்கியம், பார்வையுள்ள (sighted), குறைப்பார்வையுடைய (low-vision) மனமகள்/மணமகன் தேவை என்பதைத்தான். அப்படிச் சொன்னவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் முழுப் பார்வையற்றவர்கள் என்பதே சுவைமுரண்.

வரன்தேடிப் பதிவு செய்தவர்கள் வழங்கியிருக்கிற  விவரங்களின் உண்மைத் தன்மைக்கு ஃபவுண்டேஷன் எவ்வகையிலும் பொறுப்பேற்காது என்ற தன்னிலை விளக்கத்தோடு, சுயவரத்தில் பங்கேற்ற அனைவருக்குமே தங்கள் சக பங்கேற்பாளர்களின் முழுவிவரங்கள்  அடங்கிய கையேடு வழங்கப்பட்டது.

“அனைவருக்கும் கையளித்த இந்த விவரத் தொகுப்பினை ஃபவுண்டேஷனும் தன்னளவில் தொடர்ந்து பராமரித்து, பார்வைத்திறன் குறையுடையோருக்கான சுயவரம் சார்ந்த தரவுத்தளம் ஒன்றினை உருவாக்கிட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இந்த  நிகழ்ச்சியை நடத்திட அறக்கட்டளையாளர்கள் முயற்சி  மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது” என நாமும் நமது பின்னூட்டத்தைப் பதிவு செய்தோம்.

இறுதியாக, நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. குன்றாத உற்சாகத்துடன் தன்னார்வளர்கள் சுற்றிச் சுழல,  உரிய பக்குவத்தோடு பரிமாறப்பட்ட அந்த உணவுப் பந்தியில் வெளிப்பட்டது பார்வையற்றோர்மீதான அறக்கட்டளையாளர்களின் அன்பும் அகம்சார் புரிதலும்.

***தொகுப்பு: U. சித்ரா,

படங்கள்: மலர்விழி,

எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *