Categories
கல்வி சிறப்புப் பள்ளிகள் தொடுகை மின்னிதழ்

வாழ்த்து: தங்கங்களே! நாளைத் தலைவர்களே!

தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை (மே 6, 2024) அன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 1, 2024 முதல் மார்ச் 22, 2024 வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் மாநிலம் முழுக்க 4,08440 மாணவிகளும், 3,52,165 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 7,60606 பேர் தேர்வை எதிர்கொண்டனர்.

தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை (மே 6, 2024) அன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

தேர்வில் 3,93,890 (96.44) விழுக்காடு மாணவிகளும், 3,25,305 (92.37) விழுக்காடு மாணவர்களும் என மொத்தம் 7,19,196 (94.56) விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நிவேதா

தேர்வை எதிர்கொண்ட ஐநூறுக்கும் மேற்பட்ட பார்வைக்குறையுடைய மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களுள்  சென்னை சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நிவேதா செந்தில் 600க்கு 574 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரை அடுத்து அதே பள்ளியைச் சேர்ந்த இரட்டையர்கள் ஹேமதாரணி மற்றும் ஹேமஸ்ரீ முறையே 569, 566 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

எல்கேஜியில் தொடங்கிய பயணம்

கணிப்பொறி பயன்பாட்டியல்  (Computer Application) பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ள நிவேதாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர். பிரெயில், ஆடியோ எனத் தன் கல்வியைத் தகவமைத்துக்கொண்ட நிவேதா, இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லிப் பூரிக்கிறார்.

ஹேமதாரணி மற்றும் ஹேமஸ்ரீ

எல்கேஜி தொடங்கி இந்தக் கல்வியாண்டுவரை, தினமும் தங்களைப் பள்ளியில் விடுவது, வீட்டில் தங்களுக்கான அன்றாடப் பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது என இந்த வெற்றியில் அப்பா அம்மா இருவருக்கும் பங்கு அதிகம் என மெய் சிலிர்க்கிறார்கள் ஹேமதாரணியும் ஹேமஸ்ரீயும்.

வெறும் பாடம் கற்பித்தலோடு நின்றுவிடாமல், எல்லாப் பாடங்களையும் மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் என்பதில் அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்பவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் எனச் சொல்லும் ஹேமதாரணி, கணிப்பொறி பயன்பாட்டியலில் நூற்றுக்கு நூறும், ஆங்கிலம் தவிர்த்த பிற நான்கு பாடங்களில் தலா 99 மதிப்பெண்களையும் அசால்ட்டாய் அள்ளியுள்ளார்.

பெரும்பாலான பாடங்களை பிரெயில் வழியில் மட்டுமே படித்ததாகப் பெருமை பொங்கச் சொல்கிறார்கள் மூவரும். அத்தோடு, கணினிப் பயன்பாட்டியல் பாடத்துக்காக புத்தகத்தை மட்டுமே பரிந்துரைத்த தங்கள் ஆசிரியருக்கும், அதை பிரெயில் ஆக்கித் தந்த பணியாளர்களுக்கும், பள்ளியின் அத்தனை ஆசிரியர்களுக்கும் தங்கள் பணிவான நன்றிகளை உரித்தாக்கும் இந்த மூன்று செல்லங்களின் ஒற்றை இலட்சியம் ஐஎஃப்எஸ். உபயம், இதே பள்ளியின் முன்னால் மாணவியும் தற்போது ஐஎஃப்எஸாகப் பணியாற்றுபவருமான  பெனோ செஃபென்.

‘வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்!’ வாழ்த்துகள்் தங்கங்களே! உங்கள் வாழ்வு செழிக்கட்டும்!

இருளைக் கிழிக்க வந்த ஒளி!

சுரேஷ்முத்து

மதுரை தூய வளனார் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டாம் ்வகுப்பு மாணவன் சுரேஷ் முத்து, அவர்  அம்மா, உடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் என தந்தையைத் தவிர குடும்பத்தில் அனைவருமே பார்வையற்றவர்கள். அப்பாவும், கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

இத்தனை துயரங்கள் தன்னைத் துரத்தியபோதும், எதற்கும் சோர்ந்துவிடாமல் படித்து, சுரேஷ்முத்து இந்தப் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 600க்கு 549.

தமிழ் மற்றும் வரலாறு பாடத்தில் தலா 98 மதிப்பெண்கள் பெற்றுள்ள சுரேஷின் ஒற்றைக்கனவு சட்டம் படிக்க வேண்டும் என்பதே.

வாழ்த்துகள் வக்கில் சார்!

“வாங்கிய பிரெயில் நோட்ஸ் வீண் போகல”

வினோத்

அப்பா ஓட்டுநர், அம்மா தையல்ப்பணி செய்கிறார். ஆரணி அமலராகினி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில்தான் சேர்ந்தார் மாணவர் வினோத்.

ஆனாலும், தனக்கிருக்கும் குறைப்பார்வையை கூர்த்த மதிசெய்யப் பயன்படுத்தி வெற்றிபெற்றுள்ளார் வினோத். வங்கிக் கணக்காளராகப் பணியாற்ற விரும்பும் அவர், வெளியான தேர்வு முடிவில் பெற்ற மதிப்பெண்கள் 547

மாரிச்சாமி

வினோதைப் போலவே, மாரிச்சாமியும் வறுமைப் பின்னணிகொண்ட குடும்பத்தைச்சேர்ந்தவர்தான். ஓட்டுநரான அப்பா, கூலி வேலை செய்யும் அம்மா இருவரின் உள்ளம் குளிரும்படி, 537 மதிப்பெண்களுடன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் பாளையங்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாரிச்சாமி.

600க்கு 534 என்ற மதிப்பெண்களோடு, பள்ளியில் முதலிடம் என்ற வெற்றிக்கோட்டில் வேகம் காட்டி முட்டி நிற்பவர்கள் சென்னை அடையாறு செயின்ட் லூயிஸ் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்களான தனுஷ் மற்றும் பாலகிருஷ்ணன்.

“எங்க அப்பாவும் அம்மாவும்் இதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. நிறைய செலவழிச்சு, வொர்த் டிரஸ்ட் மூலமா பிரெயில் நோட்ஸ் வாங்கித் தந்ததெல்லாம் வீண் போகலைங்கறத நெனச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு” என மனம் மகிழ்கிறார் தனுஷ்.

பெற்றோர் விவசாயக் கூலிகள் என்றாலும், தான் படித்து, ஐஏஎஸ் ஆவதுதான் தனது ஒரே இலட்சியம் எனச் சவால்விடும் பாலகிருஷ்ணனின் உயரிய கனவுக்கு ஒரு சல்யூட்!

பிரெயில் நோட்ஸ் வாங்கித் தந்த ஆசிரியர்கள்

பாலகிருஷ்ணனைப்போலவே, மதுரை சுந்தர்ராஜன்பட்டியில் இயங்கிவரும் இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தின் (IAB) அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த கருப்பையாவும் மிகுந்த வறுமைச் சூழலைப் பின்னணியாகக் கொண்டவர்தான். ஆயினும், தன் அயராத உழைப்பால் அவர் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் 510.

அதிக மதிப்பெண்கள் கிடைக்காமல் போனது  ஏமாற்றமாக இருப்பதாகச் சொல்லும் மாணவிகள் ரித்திகாவும் புவனாவும் திருச்சி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகளான இவர்களைத் தாங்கி, தன்னம்பிக்கை தந்து வளர்த்த பள்ளிக்கு இவர்கள் செய்த கைமாறு என்ன தெரியுமா?

இருவரும் முறையே 480, 479 என மதிப்பெண்கள் பெற்று, தமிழக அரசால் நடத்தப்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான 3 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கிடையே தங்கள் பள்ளியை முன்வரிசையில் நிறுத்தியிருக்கிறார்கள்.

“பிரெயில் மூலமாத்தான் எல்லாப் பாடங்களையும் படிச்சோம். பாடங்களுக்கான நோட்ஸ் எல்லாமே எங்க அஷோக் சாரும், சரவணன் சாரும் தங்களோட சொந்தப் பணத்தில வொர்த் டிரஸ்ட் மூலமா பிரெயில் பண்ணிக் கொடுத்தாங்க.” என நன்றியோடு நினைவுகூரும் இருவரில் ரித்திகா இந்த சமுதாயத்துக்கான நல்லதொரு ஆசிரியராவதையே குறிக்கோலாகக் கொண்டுள்ளார். புவனாவுக்கோ ஆங்கிலப் பேராசிரியர் ஆவதே ஒற்றைக் கனவு.

பொதுத்தேர்வில் முதன்மை இடம் பிடித்த மாணவர்களில் பெரும்பாலோர் பிரெயில் முறையைத் துணைகொண்டே வெற்றிபெற்றுள்ளனர். இது, தற்போதைய சூழலில் நலிந்துவரும் சிறப்புக்கல்வியின் முக்கியத்துவத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

மேலும், சிறப்புப்பள்ளியோ, உள்ளடங்கிய கல்வியோ பள்ளிவயது பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு பிரெயில் உபகரணங்கள், கணிதப்பலகை போன்றவை விலையில்லாத் திட்டத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

தற்போது அரசுத் தேர்வில் வெற்றிபெற்று, கல்லூரிக்குள் அடியெடுத்துவைக்க உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் கைகளில் உடனடியாக மடிக்கணினிகள் தவழ்வதை அரசு உறுதிசெய்திட வேண்டும்.

கற்றலின் அடுத்த அதிமுக்கியமான அத்தியாயத்தில் நுழையவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

காலம் உங்களைப் புடம்போடப் புடம்போடத் தங்கங்களாய் மிளிர்ந்து, நாளைத் தலைவர்களாய் வெற்றிமாலை சூடிட ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறது தொடுகை மின்னிதழ்.

தொகுப்பு: U. [சித்ரா,

X. செலின்மேரி.

எழுத்து: ப. சரவணமணிகண்டன்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

3 replies on “வாழ்த்து: தங்கங்களே! நாளைத் தலைவர்களே!”

கருப்பையா என் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் சொன்னது போலவே வறுமை சூழல் அவனை படிப், படி என துரத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் கீழச்சேவில் பட்டி அவனது சொந்த ஊர். பிறக்கும்போதே முழு பார்வையோடு தான் அவனும் பிறந்தான். வயலில் வேலை செய்து கொண்டிருக்கையில் காகமோ, கொக்கோ அவனது கண்ணை பதம் பார்த்தது. ஒரு கண்ணில் முழு பார்வையும் பறிபோக மிஞ்சி இருக்கும் கண்ணின் அரை பார்வையோடு இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறான். கொசுறு தகவல்: தொடுகை மின் இதழின் ஆசிரியர் படித்த திருப்பத்தூர் பார்வையற்றோர் பள்ளியில் தான் அவனும் பயின்றான்.

Like

நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தங்களுடைய உழைப்பின் மூலம் வெற்றி கனியை சுவைத்த அனைத்து மாணவ கண்மணிகளுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். உங்களுடைய இந்த வெற்றி உங்களுடைய பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சமுதாயம் பெருமை கொள்ள செய்துள்ளது. இவர்களுடைய வளர்ச்சிக்கு துணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

Like

my hearty congratulation to all the chellams god bless you all and reach more successful achievements…….

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.