Categories
அஞ்சலி தொடுகை மின்னிதழ்

அஞ்சலி: தளிர்த்தபடியே இருக்கும் அந்தத் தன்னிகரற்ற மரம்!

புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பணியாற்றிய அன்பு அண்ணன் சரவணக்குமார் அவர்கள், சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட விளிம்புநிலைப் பார்வையற்றவர்களின் ஒற்றை உதவிக்கரம்.

கண்ணீர் அஞ்சலி 
அரசு கிளை அச்சகத்தில் பணிபுரிந்து வந்த இரா.சரவணகுமார் 
இளநிலை புத்தகம் கட்டுநர் 
அவர்கள் 03.05.2024 இன்று மதியம் இயற்கை எய்தி விட்டார் . அன்னாரின் இறுதி ஊர்வலம் நல்லடக்கம் நாளை 04.05.2024 மதியம் 3.00 மணியளவில் மேட்டுப்பட்டியில் ஜெயராணி பள்ளி எதிரில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் . 
அரசு கிளை அச்சகம் புதுக்கோட்டை என்ற வாசகம் அடங்கிய பதாகை

“சிஸ்டர் தம்பிக்கு என்ன வயசு? மூனு முடிஞ்சிருச்சா? விஷேஷ வீட்டில நிறைய வேலை இருக்குமே! ஏதாவது ஹெல்ப் தேவைப்படுதா? நான் வரட்டுமா?” அவர் என் மனைவியிடம் பேசிய இறுதி வார்த்தைகள் இவை.

“அண்ணே காலைல 4 மணிக்கு வேன் கிளம்பும். நீங்க எப்படி வரீங்க?”

“கமல்கூடபைக்ல வந்ந்து ஏறிக்கிறேன். உனக்கு உடம்பு சரியில்லைனு சிஸ்டர் சொன்னாங்க. ரெஸ்ட் எடு”.

அவர் கடைசியாக என்னிடம் பேசிய வார்த்தைகள் இவை. இப்படிச் சொன்னதோடு நிற்காமல், எனக்கு சில மாத்திரைகளும் ஒரு பாக்கெட் ஓஆரெஸ் பவுடரும் வாங்கி, தன் நண்பர் கமலிடம் கொடுத்தனுப்பினார்.

புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பணியாற்றிய அன்பு அண்ணன் சரவணக்குமார் அவர்கள், சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட விளிம்புநிலைப் பார்வையற்றவர்களின் ஒற்றை உதவிக்கரம்.

ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க, சம்பளம் தந்து மாவட்டந்தோறும் அதிகாரிகளை அரசு நியமித்திருந்தாலும், உரியவை உரியவர் கையில் கிடைத்திட, தட்டிக் கழிக்கும் அதிகாரிகளிடம் மல்ல்லுக்கு நிற்க,  எளிமையாகச் சொன்னால்,  சண்டை செய்வதற்கு என இங்கேயும் சில ஆட்கள் உண்டு. அவர்களுள் பலர் வெறும் கெத்துக்காக இதுபோன்ற விஷயங்களில் தங்களை வலிந்து ஈடுபடுத்திக்கொள்பவர்கள்.

மனு கொடுப்பவர்களோடு ஒருவராக வரிசையில் நின்று,  மனுமட்டுமே கொடுத்துவிட்டு, “அமைச்சர்கிட்ட பேசிட்டேன், கவலப்படாத முடிச்சிரலாம்” எனப் பீலா விடும் பேர்வழிகளுக்கு நடுவே, எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், பல அன்றாடங்காய்ச்சிகளின் அபிலாஷைகளுக்கு முகம் கொடுத்தவர் அண்ணன். தன்னிடம் எஞ்சியிருந்த குறைப்பார்வையினைப் பயன்படுத்தி, பல முழுப் பார்வையற்றவர்களின் வழிகளைச் செப்பனிட்டபடியே இருந்தார்.

அரசுத் திட்டத்தில் பார்வையற்றவர்களுக்கு வீடு வாங்கித் தருவது, தாமதமாகும் திருமண உதவிநிதியினை உரிய அதிகாரிகளிடம் பேசிப் பெற்றுத்தருவது, பஸ் பாஸ், அடையாள அட்டை எனப் பிரச்சனைகள் எதுவானாலும், பார்வையற்றோர்களின் பிரதிநிதியாக முன்னே நிற்பது என அரசுப்பணிக்கு வருவதற்கு முன்பே மதுரையில் அவர் பிரபலம்.

அரசு இயந்திர அசமஞ்சத்தால் அங்கேயும் இங்கேயும் அலைக்கழியும் பல பார்வையற்றவர்களின் வலிமையான புகலிடமாக இருந்தவர் அண்ணன். “சரவணன்கிட்ட சொன்னா வேல முடிஞ்சுரும்” என்ற வாக்கியத்தை பலர் உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன். அந்த வாக்கியத்துக்கு அகமும் புறமுமாக எத்தனை உண்மையாக இருந்திருக்கிறார் என யோசிக்கையில் வியப்பாக இருக்கிறது.

தனிப்பட்ட வகையில் வாழ்க்கை அவருக்கு வாரி வழங்கிக்கொண்டே இருந்த கசப்புகளுக்கான முறிவு மருந்தாய்  சமூகப்பணி அவருக்குப் பயன்பட்டிருக்கக்கூடும். ஆனால், சொல்லளவிலும் எவருக்கும் அவர் அந்த கசப்பின் துளியைக்கூட கையளித்ததில்லை.

தன் உழைப்பால், உள்ளத்தால் மருந்தாகித் தப்பாத மரமொன்று மண் சரிந்துவிட்டது. மரத்தை மண் மூடலாம்; அது நின்றிருந்த தடத்தைக் காலம் கருணையின்றிக் கரைத்துக்கொண்டோடலாம்.

ஆனால், அந்த மரம் விரித்த நிழல்மடியில் இளைப்பாறியவர்கள் இங்கு அனேகம். அவர்களின் நெஞ்சாழத்தில், நினைவடுக்குகளில் தளிர்த்தபடியே இருக்கும் அந்தத் தன்னிகரற்ற மரம்.

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “அஞ்சலி: தளிர்த்தபடியே இருக்கும் அந்தத் தன்னிகரற்ற மரம்!”

இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர், பார்வையற்றோருக்குப் பணியாற்றியவர் பணியிலிருக்கும் காலத்திலேயே நம்மை விட்டுப் பிரிந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்…

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.