Categories
தொடுகை மின்னிதழ் books

சிந்தனை: கொட்டிக்கிடக்கும் இருவகை வளங்கள்

ஈஸ்பீக் உள்ளிட்ட இயந்திரக் குரல்களைப் பழகிக்கொள்வோர்கூட, திறன்பேசியில் க்ரோம் உள்ளிட்ட உலாவி (browser) வழியாக இணைப்பைச் சொடுக்கி, ஸ்வைப் செய்து ஒரு கட்டுரையைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதை சொம்பல் என்பதா இடரல் என்பதா சொல்லத் தெரியவில்லை.

kvf logo

“சார் நீங்க வந்துட்டு போகணும், வந்துட்டுப் போகணும்” வெகுநாட்களாகவே ரகுராமன் சார் கர்ணவித்யா மையத்துக்கு அழைத்துக்கொண்டேதான் இருந்தார். விருப்பம் இருந்தும் விடியாச் சூழல். அறிந்தாரோ என்னவோ, அவரே ஒரு வழிசெய்தார்.

கர்ணவித்யா அமைப்பின் 25 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில், ‘இணையவழி கற்றல் வளங்கள் ஒரு பார்வை’ (Online  Learning Source at a Glance) என்ற தலைப்பில் சிறியதாய் உரைநிகழ்த்த அழைத்தார். சரியான வாய்ப்பு என்று நினைத்து நானும் ஒப்புக்கொண்டேன்.

உண்மையில் சரியானதொரு வாய்ப்புதான். இதுவும் ஒரு என்ஜிவோ என்ற ரீதியில் கர்ணவித்யாவைக் கணக்கில்கொண்ட எனக்கு, அமைப்பு குறித்த நிறைய தகவல்கள் புதிதாகவும், நான் அறியாததாகவும் இருந்தன.

பூவிருந்தவல்லி, திருச்சி, புதுக்கோட்டை, பரவை, பாளையங்கோட்டை என பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப்பள்ளிகளில், 6,7,8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டுமுதல் கர்ணவித்யா தன் பயிற்றுனர்களை அனுப்பி கணினி பயிற்றுவித்து வருகிறது. அந்த வகுப்புகளால் பயன்பெறும் மாணவர்களும் விழாவில் கலந்துகொண்டார்கள்.

“இப்போ என்கிட்ட கம்ப்யூட்டர்ல என்ன தெரியுமுணு கேட்டீங்கனா, நானே ஒரு வேர்ட் ஃபைலை உருவாக்கி அதை எடிட் செய்வேன் என ஏழாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி தன் வெள்ளந்தியான குரலில் சொன்னபோது நெகிழ்ந்துபோனேன். என்னுடைய நெகிழ்ச்சியை பக்கத்தில் அமர்ந்திருந்த வினோத் பெஞ்சமின் அவர்களிடம் சொன்னபோது, “கேட்குறதுக்கே எவலோ ஹேப்பியா இருக்கு மணி. எருமை மாட்டு வயசுல இதெல்லாம் கத்துக்க நாம எவலோ அலைஞ்சிருப்போம்” என அவரும் பூரித்தார். உண்மையில் சிறப்புப் பள்ளிகளில் கர்ணவித்யா செய்துகொண்டிருப்பது ஒரு முக்கியமான பணி.

சிறப்புப்பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் சில தன்னார்வலர்கள் என அரங்கு நிறையாத கூட்டம்தான் என் முதல் அமர்வில் என்றபோதிலும், என்னுடைய உரையைச் சுருக்கமாகவும் செறிவாகவும் முன்வைப்பதில் நான் தீர்க்கமாக இருந்தேன். அந்த உரைகளில் விடுபட்டவையையும் இப்போது நினைவில் கொணர்ந்து எழுதுகிறேன்.

குழந்தைகளுக்கான, மாணவர்களுக்கான கற்றல் சார்ந்த இணையதளங்கள் கொட்டிக்கிடக்கின்றன என்றாலும், அவை பார்வைத்திறன் குறையுடையவர்களால் பயன்படுத்தப்படும் என்விடிஏ (NVDA) போன்ற திரைவாசிப்பான்களுக்கு உகந்தவையாக இல்லை. எனவே, பாட புத்தகங்களுக்கு அப்பால் மாணவர்கள் இளமையிலேயே கற்க வேண்டிய சில பொருண்மைகளைக்கொண்ட இணையதளங்களைப் பரிந்துரைப்பது என முடிவு செய்தேன். பெரும்பாலும் அவை புத்தக வாசிப்புக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். தொகுத்துச் சொல்லலில் விடுபடுதல் இருத்தல் ஆகாது என்ற என் வசதியின் பொருட்டு, தளங்களின் பெயர்களை ஆங்கில அகரவரிசைக் கிரமத்தில் வரிசைப்படுத்திக்கொண்டேன்.

நான் இப்படி நினைத்துக்கொண்டிருந்தாலும், இதே பொருண்மையில் எனக்குப் பின் செய்துகாட்டல் வழியே உரை நிகழ்த்திய கர்ணவித்யா அமைப்பின் பயிற்றுனர்களுள் ஒருவரான சிவசங்கரி அவர்கள், குழந்தைகள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் சார்ந்து இரண்டு முக்கிய இணையதளங்களை அறிமுகம் செய்தார். எனவே இப்போது அவற்றையும் என் பட்டியலில் இணைத்துக்கொண்டு, அவருக்கு என் மனமார்ந்த நன்றியைச் சொல்லும் வண்ணமாக, அவற்றையே கட்டுரையில் தொடக்கமாக அறிமுகம் செய்கிறேன்.

கான் அகாடமி

பள்ளி வயது குழந்தைகள் கணிதம் மற்றும் அறிவியலை முதல் வகுப்பிலிருந்தே கற்கும் வகையில், என்சிஈஆர்டி (NCERT) பாடங்கள் உரிய காணொளி மற்றும் புகைப்பட விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. இணையப் பயன்பாடு முற்றிலும் இலவசம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தொடக்ககால வழிகாட்டலில் குழந்தைகள் இந்த தளத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கோர்செரா

உலகம் முழுக்க இருக்கிற பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, விலையில்லாமலும், கட்டணம் சார்ந்தும் வடிவமைக்கப்பட்ட படிப்புகள் இந்தத் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அத்தனையும் கணினி அறிவியல், மொழி, சமூகம், உடல்நலம் என மாறுபட்ட பொருண்மைகள் கொண்டவை.

முழுக்க முழுக்க இணைய வழியிலேயே பயின்று நீங்கள் பட்டம் பெறும் வாய்ப்பை இந்தத்தளம் நல்குகிறது.

அமேசான் கிண்டில்

ஆண்டிற்கு ரூ. 1799 செலுத்தி இந்தத் தளத்திற்கான செயலியில்  ஒரு கணக்கு தொடங்கிக்கொண்டால், தமிழில் வெளிவந்துள்ள இலட்சக்கணக்கான மின்புத்தகங்களைப் படித்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம்.

ஒரு கணக்கின் பயனர் பெயர் (username) மற்றும் கடவுச்சொல்லை (password) ஆறு கணினிகள் அல்லது செல்பேசிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால், மாணவர்கள் அறுவர் ஒன்றிணைந்து ஆளுக்கு ரூ. 300 செலுத்திப் பயன்படுத்தலாம். ஓராண்டுக்கு 300 என்பது மிகப்பெரிய தொகையா என்ன?

அரசன் பக்கங்கள்

இந்திய இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் இராமாயணம் குறித்து மூத்தோர் சொல்வழியே அறிந்திருக்கிறோம். குட்டிக் குட்டிக் கதைகளாய், சொட்டச் சொட்டத் தெறிக்கும் சொலவடைகளாய் நமக்குள் ஆயுளுக்கும் தொகுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மிக நீண்ட இரண்டு காப்பியங்களையும் தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அது இப்போது ஈடேறும் ஆசைதான்.

இலட்சக்கணக்கான சுலோகங்கள், பதினெட்டு நீண்ட பருவங்கள் என விரிந்துகிடக்கும் பாரத காப்பியத்தைக் கடந்த 1883 முதல் 1895 வரை சுமார் 12 ஆண்டுகள் திரு. கிசாரிமோகன் கங்கூலி என்பவர் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதன் ஆங்கில வடிவம்

Sacredtexts

என்ற இணையதளத்தில் விலையில்லாப் பதிப்பாகப் படிக்கக் கிடைக்கிறது. அந்த ஆங்கிலப் படைப்பை, தமிழில் மொழிபெயர்த்துச் சாதனைபடைத்துள்ளார் திருவெற்றியூரைச் சேர்ந்த மகாராஜன்.

Mahabharatham.arasan.info

என்ற சுட்டியைச் சொடுக்கிப் பொருளடக்கம் சென்று ஒவ்வொரு பருவத்தையும் சொடுக்க, 25 25ஆகத் தொகுக்கப்பட்ட அதன் உட்பிரிவுகள் தோன்றும். அந்த இணைப்புகளைச் சொடுக்கிப் படிக்கலாம்.

மிக எளிமையான வடிவமைப்பு. ஒவ்வொரு உட்பிரிவின் இறுதியிலும் அதற்கு இணையான ஆங்கில மூலத்துக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இப்போது இதேவழியில் இராமாயணத்தையும் தொடர்ந்து மொழிபெயர்த்துப் பதிவேற்றி வருகிறார்.

அழியாச்சுடர்கள்

தமிழில் இலக்கியம் கற்க அல்லது சிறுகதை படிக்க விரும்பும் மாணவர்கள் அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்குவது சரியாய் இருக்கும். தளத்தில் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல் தரப்பட்டுள்ளதோடு, அவர்களின் சில சிறந்த சிறுகதைகள், பேட்டிகள் ஆகியவை திரைவாசிப்பானுக்கு உகந்த முறையில் தட்டச்சு செய்து பதிவேற்றப்பட்டுள்ளன. தளத்தைப் பயன்படுத்த எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

புகழ்பெற்ற சமகால எழுத்தாளரான திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் சுட்டிக்காட்டிய

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளும்

பதிவேற்றப்பட்டுள்ளமை இந்த இணையதளத்தின் சிறப்பம்சம்.

Bookshare

உலகெங்கிலும் வாழும் பார்வைத்திறன் குறையுடைய வாசிப்பாளர்களின் வாசிப்பு தாகம் தணிக்கும் மிகப்பெரிய இணையநூலகம் Bookshare. பல்வேறு மொழிகளில் வெளிவந்த முக்கிய புத்தகங்களை பார்வைத்திறன் குறையுடையோர் எளிதில் அணுகும் வண்ணம் ஒருங்குறி வடிவில் (Unicode) மாற்றிப் பதிவேற்றியிருக்கும் இந்நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவருகிறது.

ஆங்கிலத்தில் 10 லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள், ஹிந்தியில் 1902, தமிழில் 488 என இந்தத்தளம் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கும் மொழிகளே 25ஐத் தாண்டும்.

உங்களுடைய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டையினை வழங்கி, நீங்கள் இந்த நூலகத்தில் உங்களை இணைத்துக்கொள்ளலாம்.

அதற்கு நீங்கள் Bookshare இணையதளத்தின் தென்னகப் பொறுப்பாளரான திரு. குமரேசன் அவர்களை 9965197112 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

சென்னை நூலகம்

20 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், கல்கி உள்ளிட்டோரின் படைப்புகளை ஒருங்குறி முறையில் வாசிக்க இந்த இணைய நூலகத்தை அணுகலாம். இங்கே புதுமைப்பித்தன் எழுதிய 108 சிறுகதைகளும் ஒருங்குறி முறையில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஆனால், தளம் தொடர்ந்து ஸ்க்ரோல் ஆகிக்கொண்டிருப்பது பார்வையற்றோருக்கு இடைஞ்சலாக அமைகிற பெருங்குறை.

Dravidaveda.org

நாளாயிர திவ்யப் பிரபந்தத்தின் அனைத்துப் பாசுரங்களையும் ஶ்ரீ அண்ணங்காராச்சாரியார் உரையோடு படிக்க விரும்புவோர் இந்த இணையதளத்துக்குச்செல்லலாம். தளத்தில் வைணவம் குறித்த கூடுதல் கட்டுரைகள், 108திருத்தளங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.

திரைவாசிப்பான் அணுகளுக்கு ஏற்ற இணையதளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன்

இலக்கிய ஆர்வமுடைய மாணவர்கள் ஒவ்வொரு நாளும் கவனத்துடன் பயில வேண்டிய இணையதளம் இது. இந்தத் தளத்தின் மூலம், தமிழின் முன்வரிசை எழுத்தாளரான திரு. ஜெயமோகன் அவர்கள், இலக்கியம், வரலாறு, தத்துவம் என எல்லாப் பொருண்மைகளிலும் நம்மோடு உரையாடுகிறார். அவரின் கருத்துகளில் முரண்படுவோர்கூட தவிர்க்க இயலாத ஒன்றாகத் திகழும் இத்தளத்தில், தனது புகழ்பெற்ற அறம் தொகுப்புக் கதைகள், இரவு உள்ளிட்டசில நாவல்களை  அனைவரும் விலையில்லாமலேயே படித்துக்கொள்ளும் வகையில் ஒரு பக்கத்தையும் வடிவமைத்து வைத்துள்ளார்.

கீற்று

திராவிடம், முற்போக்குக் கொள்கைகள் சார்ந்து கட்டுரைகள் வெளியாகும் சிறந்த தளம் இது. கைத்தடி, பெரியார், சிந்தனையாளன் எனப் பல்வேறு முற்போக்கு சிற்றிதழ்களில் இடம்பெறும் முக்கியக் கட்டுரைகளை இந்தத் தளத்தில் படிக்கலாம்.

Madraspaper.com

எழுத்தாளரும் இதழாளருமான பா. ராகவன் அவர்களால் இணையவழியில் நடத்தப்படும் வார இதழ் மெட்ராஸ் பேப்பர். ஆண்டுக்கு ரூ. 400 செலுத்தி, நீங்கள் இதுவரை வெளியாகியுள்ள நூறு இதழ்களையும் படிக்கலாம்.

மிகச் செறிவாகவும், அளவில் சிறியதாகவும் எழுதப்படும் இக்கட்டுரைகளின் கர்த்தாக்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால், அவற்றின் கூறல் முறைகளில் அனல் தெறிக்கிறது. ஒவ்வொரு வாரத்தின் புதன்கிழமையும் வெளியாகும் இந்த இணைய இதழ் கணினியில் மட்டுமல்ல திறன்பேசியிலும் படிப்பதற்கு எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Projectmadurai.org

மதுரைத்திட்டம் என அழைக்கப்படும் தமிழின் செவ்விலக்கியங்கள் தொடங்கி, நாட்டுடைமையாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்வரை ஒருங்குறி முறையில் படிக்கக் கிடைக்கும் தளம் இது. 17ஆம் நூற்றாண்டு சிற்றிலக்கியங்கள், அளவில் பெரியதான பக்தி இலக்கியங்கள் அனைத்துமே தன்னார்வலர்களின் உதவியோடு தட்டச்சு செய்யப்பட்டு, ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேலான நூல்கள் தற்போதுவரை பதிவேற்றப்பட்டுள்ளன.

Shaivam.org

சைவநெறி இலக்கியங்களை ஒரே இடத்தில் படித்து இன்புற உதவும் சிறந்த தளம் இது. பன்னிரு திருமுறைப் பாடல்கள் வரிவடிவிலும் ஒலிவடிவிலும் பதிவேற்றப்பட்டுள்ளமை தளத்தின் கூடுதல் சிறப்பம்சம். அதேவேளை, பொருள் விளக்கங்கள் இன்றிப் பாடல்கள் மட்டும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதும், திரைவாசிப்பானுக்கு உகந்த தளமாக வடிவமைப்பதில் இருக்கிற சில போதாமைகளும் கொஞ்சம் சோர்வை ஏற்படுத்துகின்றன.

Tamil-bible.com

விவிலியத்தின் ஆகச் சிறந்த ஆக்கமாக அகிலமே முன்வைப்பது கிங் ஜேம்ஸ் பதிப்பைத்தான். அதனை ஒரே நேரத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது இந்தத்தளம்.

தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை என்ற இணைப்பைச் சொடுக்கினால், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பிரிவுகள் காண்பிக்கப்படும். ஒவ்வொரு தலைப்புக்கும் கீழே ஒரு காம்போ பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதனுள் சென்று நீங்கள் படிக்க வேண்டிய புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஒரு புத்தகத்தையோ, அல்லது அதன் அத்தியாயம் ஒன்றையோ, அல்லது அதற்குள் இருக்கிற ஒரு குறிப்பிட்ட வசனத்தையோ நீங்கள் தெரிந்து படிக்கும் வசதி மிக எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வசனத்தைத் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது இரண்டிலும் படித்துக்கொள்ளும் வசதி நம்முடைய ஆங்கிலச் சொற்களஞ்சியப் பெருக்கத்துக்கு பெரிதும் உதவக்கூடியது.

தமிழிணையம் – மின்னூலகம்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் இந்தத் தளத்தின் வழியே ஏராளமான தமிழ்நூல்கள் பிடிஎஃப் மற்றும் ஒருங்குறி வடிவிலும் படிக்கக் கிடைக்கின்றன. இவர்களின் முதன்மை இணையதளமான

தளத்தின் நூலகம் என்ற பக்கத்தைச் சொடுக்கினால், தமிழ் இலக்கியம், அகராதிகள், சொல்லடைவுகள் என அங்கேயும் ஒரு சிறப்பான மொழிக்களஞ்சியம் நம்மை வரவேற்கும். ஆனால், ஒரு குறிப்பிட்ட நூலை நாம் ஒரே நாளில் படிக்காமல் விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என அதை புக்மார்க் செய்துவைத்தால், அடுத்தநாள் அந்த பக்கங்கள் திறந்துகொள்ளாமல் பிழைக்குறி காட்டிவிடுகிறது.

வெண்முரசு

கடந்த 2014 முதல் மகாபாரதத்தை நவீன கண்ணோட்டமாக தனது தளத்தின் வழியே அன்றாடம் ஒரு அத்தியாயம் என எழுதி, அவற்றை இத்தளத்தின் வழியே தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள். காட்சிசார் சிந்தனைகளைப் பார்வையற்றோருக்குள்ளும் மிகத் துல்லியமாகக் கடத்தக் கூடியவை திரு. ஜெயமோகன் அவர்களின் எழுத்துச் சித்திரம். அந்தவகையில், மிகமிக புதிய கண்ணோட்டத்தில், அழகும் நவீனமும் இழையோடும் சொற்கள் படிக்கப் படிக்க இன்பம் கூட்டுபவை.

26 நாவல்களின் தலைப்புகள் சுட்டிகளாக முகப்புப் பக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். தேவையான சுட்டியைச் சொடுக்க, அதன் உட்பிரிவுகள் அடுத்த பக்கத்தில் தோன்றும். ஒரு நொடிக்குள் திறக்கும் அடுத்தடுத்த பக்கங்கள், நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் பக்கம் தானாகவே புக்மார்க் செய்யப்படும் வசதி என மிகச் சிறப்பான வடிவமைப்பைக்கொண்டது இந்தத்தளம். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரே ஒரு புகைப்படம் அதுவும் பதிவின் மையத்தில் என்பதும் கூடுதல் சிறப்பு.

விகடன்

மடிக்கணினியும் தமிழ் படிக்கும் என்விடிஏ திரைவாசிப்பானும் கிடைத்த 2010களின் தொடக்கத்தில் பெரும்பாலான பார்வையற்றோர் படித்துச் சிலிர்த்ததும், தாங்களும் எழுத வேண்டுமென உத்வேகம் பெற்றதற்கும் முக்கியத் தூண்டுகோலாய் அமைந்தது  விகடன் இணையதளம்.

தற்போது விகடனின் தளத்தைக் காட்டிலும் அதன்

செயலி

மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தச் செயலியின் வழியே, தமிழ் இதழியல் வரலாற்றில் முதன்மை வார இதழாக விளங்கும் ஆனந்தவிகடன், ஜூனியர்விகடன் போன்ற வெளியீடுகளை தொகை செலுத்திப் படித்துக்கொள்ளலாம். இங்கும் கிண்டில் போலவே, ஒரு கணக்கை ஐந்து அல்லது ஆறுபேர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் நண்பர்கள் குறித்துக்கொள்ள வேண்டுகிறேன்.

விரல்மொழியர்

பார்வையற்றோருக்காக, பார்வையற்றோரால் தொடங்கப்பட்ட தமிழின் முதல் மின்னிதழ் விரல்மொழியர். பார்வையற்றோரின் எழுத்துகள், பார்வையற்றோர் மற்றும் பார்வையின்மை தொடர்பான படைப்புகள் என 35 இதழ்கள் இதுவரை இத்தளத்தின் வழியே வெளிவந்துள்ளன.

அத்தோடு,

பார்வையற்ற படைப்பாளர்களும் படைப்புகளும்

என்ற தலைப்பின் கீழ்

அந்தகக்கவிப் பேரவையால்

இதுவரை பார்வையற்றோரால் படைக்கப்பட்ட நூல்கள் நூலாசிரியர்களின் விவரங்களோடு தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும்,

பார்வை மாற்றுத்திறனாளிகள் நடத்தும் வலையொலிக் கூடங்கள் (YouTube channels owned by visually challenged people)

போன்ற பக்கங்களும் மிகச் சிறந்த தொகுப்புகளாக உள்ளன.

இவை தவிர, அன்றாடச் செய்திகளைப் படித்துக்கொள்ள

Hindu Tamil

மின்னம்பலம்

போன்றவை திரைவாசிப்பானுக்கு உகந்த தளங்கள்.

நாளுக்கு ஒன்றென சிறந்த செய்திக் கட்டுரைகளை வெளியிடும்

அருஞ்சொல்

இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்து பல்வேறு ஆக்கங்களைத் தொடர்களாக வெளியிடும்

கிழக்கு டுடே

இணையதளங்களும் மிக முக்கியமானவை.

இதுவரை பட்டியலிடப்பட்டவைகளுள் கீற்று தவிர, திராவிடம், பகுத்தறிவு, நாத்திகம் சார்ந்து படிக்கக் கிடைக்கும் திரைவாசிப்பானுக்கு உகந்த கருத்தியல் தளங்கள் ஒன்றுமே காணோம் என்று அங்கலாய்க்கும் நண்பர்கள், அப்படி உங்களுக்கு ஏதேனும் தளங்கள் தெரிந்திருந்தால் அதனைப் பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். முன்னால் முதல்வரும், தமிழகத்தின் தலைசிறந்த தலைவருமான அண்ணா அவர்கள் எழுத்இய பல புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் கிடைக்கின்றன. ஆனாலும், திராவிடம் சார்ந்த கருத்துகளைப் பரப்பும் விடுதலை, முரசொலி ஆகியவற்றின் பதிப்புகள், பெரியாரின் புத்தகங்கள் திரைவாசிப்பானுக்கு உகந்த வடிவமைப்பைப்பெற இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும்என்பது தெரியவில்லை. திராவிடம் 200 கொண்டாடும்வரை என்று காலநிர்ணயம் செய்யப்படாது என நம்புவோம்.

கணினி

இறுதியாக ஒன்று, திறன்பேசிகளைப் பயன்படுத்துவதில் இடரும் நம் மூத்தவர்கள்தான் என்றில்லை. அதனைக் கற்று நல்ல முறையில் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்ற சமகாலப் பார்வைக்குறையுடைய இளையோரும் யூட்டூப் காணொளிகள், வாட்ஸ் ஆப், டெலகிராம் குரல்ப்பதிவுகள் என அறிவுத்தளத்தில் தேங்கி நிற்பது மனச்சோர்வைத் தருகிறது. என்விடீஏ, ஈ ஸ்பீக் போன்ற இயந்திரக் குரல்களைப் பழகுவதில் இருக்கிற மிகக் குறுகியகாலச் சிக்கலுக்கு முகம் கொடுக்க இயலாமல், “ஈ ஸ்பீக் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கு சார், அதனால ஆடியோல கிடைக்குமா?” என்ற வேண்டல்களை அதிகம் எதிர்கொள்ள நேர்கையில் சலிப்பாக இருக்கிறது.

ஒரு தன்னார்வ வாசிப்பாளரைத் தேடிப் பிடித்து, அவரிடம் வெறும் 1 எம்பிக்குக் குறைவான ஒரு பிடிஎஃப் புத்தகத்தை ஒலிப்பதிவு செய்து வாங்குகையில் அது கிட்டத்தட்ட 1 ஜிபி அளவுகொண்ட ஒலிப்புத்தகமாகப் பெருத்திருக்கும். நம் கைகளுக்கு வந்துசேரும் அந்த ஒலிப்புத்தகத்தைடிரைவிலோ அல்லது யூட்டூப்பிலோ பதிவேற்றி, பிறகு அந்த இணைப்பைத் தேவைப்படுவோருக்கு அனுப்பி, அவர் அந்த இணைப்பைப் பயன்படுத்தி மீண்டும் அதைப் பதிவிறக்கி என ஸ்ப்ப்ப்பா எவ்வளவு பணிகள். எத்தனை கடினமான மனித உழைப்பு, எவ்வளவு கால விரையம்.

ஈஸ்பீக் உள்ளிட்ட இயந்திரக் குரல்களைப் பழகிக்கொள்வோர்கூட, திறன்பேசியில் க்ரோம் உள்ளிட்ட உலாவி (browser) வழியாக இணைப்பைச் சொடுக்கி, ஸ்வைப் செய்து  ஒரு கட்டுரையைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதை சொம்பல் என்பதா இடரல் என்பதா சொல்லத் தெரியவில்லை.

இன்று நம்மிடையே இரண்டு வகையான வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஒன்று, அபிரிவிதமான கற்றல் வளங்கள், இன்னொன்று, அயர்ச்சி அல்லது அலட்சிய மனோபாவம் கொண்ட மனித வளங்கள்.

உரிய பயிற்சிகள், ஒருங்கிணைத்தல்கள் வழியே இரண்டையும் முறைப்படுத்தினால், எதிர்காலப் பார்வையற்றோர் சமூகம், தன்னுடைய ஒற்றைப் பற்றுக்கோடான அறிவுச் செல்வத்தில் தன்னிறைவு அடையும்.

எல்லாம் அறிவு மயம் என்றாகும் காலம் சமைப்போம்.

***ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

5 replies on “சிந்தனை: கொட்டிக்கிடக்கும் இருவகை வளங்கள்”

சரவணன் மணிகண்டன் சார் மிகச் சிறப்பான ஒரு படைப்பு அதாவது அரிய பெரிய தகவல்களை மிக நேர்த்தியாக வழங்கியிருக்கின்றீர்கள் படித்தலின் அவசியத்தை அதாவது பார்வையற்றோர்கள் படித்தலின் அவசியத்தை நீங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று மிக நேர்த்தியாக திட்டமிட்டு அழகாக எழுதி இருக்கின்றீர்கள் உங்கள் எழுத்தாற்றல் திறன் மிகவும் அற்புதம் என்ன சொல்லி புகழ்ந்தாலும் அது தகாது எனவே மிக நன்றி நிறைய தகவல்களை தெரிய முடிந்தது நிறைய இணையதளங்களை நாம் அறிந்து கொள்ள இயல்பாக இருந்தது வழங்கியமைக்கும் மிக்க நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்மேலே நான் படித்தல் என்று குறிப்பிட்டு இருந்தேன் அதை வாசித்தல் வாசித்தல் பார்வையற்றவர்கள் நிறைய வாசிக்க வேண்டும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் ஒளி புத்தகங்களாக அல்லாமல் எழுத்து பதிவுகளை வாசிப்பான் மூலம் வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை பிழைக்கின்றமைக்கு மீண்டும் எனது நன்றிகள் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

Like

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கொட்டிக்கிடக்கு வளங்கள், விருப்பம் இருந்தும் விடியாச் சூழல் மிகவும் அருமை ஆரம்பம் முதல் இறுதி வரையில் சுவாரசியம் குறையாமல் கொண்டுசெல்வது மிகவும் கடினமான செயல். இதுபோன்ற வாய்ப்பு இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் பசுமறத்து ஆணி போன்று நிலைக்கும். பார்வை குறைபாடு உள்ளவர்கள் சுயமாக வாசிக்க இத்தனை வழிவகைகள் இருப்தை அழகாக கூறியது மிகவும் அருமை. இன்றைய இளைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ள தகவல் கூறிய தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார்

Like

மிகச்சிறப்பான தொகுப்புரையை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி சார்.
பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை தொடர்ந்து கொண்டு சேர்க்கும் KVTC அமைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

Like

Leave a reply to sethupandi Cancel reply