கண்ணுங்களா! செல்லங்களா! கட்டித்தழுவி வாழ்த்துகிறேன்

கண்ணுங்களா! செல்லங்களா! கட்டித்தழுவி வாழ்த்துகிறேன்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ‘இதயத் துடிப்பின் இன்னிசையில் மாற்றம் தேடும் மாணவர்கள்’ என்ற இசைத்தொகுப்பின் ஒவ்வொரு மெட்டும் மனதில் நிற்கும்படியாக இசையமைக்கப்பட்டு்ளது வாழ்த்துகள்.

இசையமைப்பாளர் J.V.C.S. வசந்த்த், தனுஷ்ராஜா, பாடகர்கள் மகேந்திரன், அஜய், நவீன், ராமச்சந்திரன், கவிஞர்கள் ராமச்சந்திரன், இமானுவேல் என எல்லோருமே பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்குக் கீழே படிக்கிறார்கள் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி. தன்னம்பிக்கை சுமந்த புதுத் தமிழ் மணத்தைப் பரப்பியிருக்கின்றன  வெவ்வேறு வண்ணத்தில் மலர்ந்த இசை மொட்டுகள்.

‘பறையடிக்க,கொடி பறக்க, விசில் அடிக்க

Positivity எல்லாம் enable பண்ணு,

panic mood எல்லாம் disable பண்ணு

என உற்சாகம் பொங்கும் ராப்பைத் தந்து தங்களுக்கான க்லாப்ஸை அள்ளுகிறார்கள் தம்பிகள்.

‘உறுதி இதயம் ஒன்று இருந்திடும்போது’ என்ற பாடல் இன்னொரு ஒவ்வொரு பூக்களுமே போல ஆறுதலாய் அகம் வருடுகிறது. “கொடுத்தால் கூடும் லாபம் கல்வியல்லவா?” என்ற கவிஞர் ராமச்சந்திரனின் சிந்தனைக்கு ஒரு சலாம்.

‘துயரம் தாண்டி உயரம் செல்லவே’ என தொடைநயமும்,

மதி பெருக்குகின்ற மனவொலிச் சிறகே’ என உருவகச் செறிவுமாய், தம்பி ராமச்சந்திரனின் முன் அனுமதி இல்லாமலே அவர் மனதில் தமிழழகிகள் வந்து குடிபுகுந்திருக்கிறார்கள். நன்றாய்ப்பேணி வளர்த்தெடுங்கள்  தம்பி.

‘மணிக்கொடி மேலே பறந்திட எங்கள் மனதிலே ஒரு பெருமிதம்.’

நாளை குடியரசு தினத்தின் ஒவ்வொரு மேடைக் கொண்டாட்டத்திலும் ஒலிக்க வேண்டிய பாடல் இது. தேசபக்தர்கள் மொழியிலே சொல்வதென்றால் பாடலில் வரிகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு தேஜஸ். அதிலும் ஸாரே ஜகாசே அச்சா என இசைகூட்டி பாடலை முடித்திருக்கும் மாணவர்களின் யுப்தி பேஷ் பேஷ்.

‘எங்கே போகிறாய்’

மகேந்திரனின் குரலில் இருக்கும் நவீன பாவத்துக்கு நம்ம யுவனே அடிமையாகலாம். அசத்தீட்டிங்க மகேந்திரன்.

அதிலும் ராமச்சந்திரனின் “ஆசைகொண்ட ஆயர்கண்ணன்” என்கிற வரியை மகேந்திரன் பாடுகையில், என்னவெல்லாமோ சிந்தனைகள் எகிறி எழுகின்றன.

என்ன சொல்ல வாறீங்க தம்பி?

உலகத்தையே கட்டி மேய்க்கும் இந்த ஆயர் கண்ணனால், உன் மீதான ஆசையை மட்டும் கட்டி மேய்க்க முடியவில்லை என்றா?

‘வாழ்க்கை என்பது புறம் சார்ந்த வாழ்க்கையோ அகம் சார்ந்த வாழ்க்கையோ?’ முதல் அடியில் வினா எழுப்பி, அடுத்த அடியில்,

‘உணர்விலே நாம் இருப்போம்;

 உலகையே வியக்க வைப்போம்.’ என அகமும் புறமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்ற விடையைச் சொல்லியிருக்கும்  கவிஞர் இமானுவேல் பள்ளி வயது மாணவன் என்றால், நாற்பதைத் தொட்டும் ஞானமே கைப்பெறாத சூனியத்தால் வியக்காமலும், கொஞ்சமேனும் பொறாமை கொள்ளாமலும் இருக்க முடியுமா என்ன?

‘உன்முகம் காண’ பாடலில் வரும் அந்த கொயர் அடேங்கப்பா JVCS வசந்த் வளமான எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துகள்.

‘சொல்ல நினைத்தேன்,

சொன்னால் பிழைப்பேன்

இருந்தும் தயக்கமென்ன?’

மிகுந்த பொருட்செலவில், மேடை போட்டு இசைமீட்டி இப்படியெல்லாம் எங்களுக்குச் சொல்ல வாய்ப்புகள் வாய்க்காமல் போய்விட்டதே ராமச்சந்திரா!

எல்லாப் பாடல்களையும் கேட்டபிறகு, எழுந்த வியப்பும், எண்ணங்களும் இவைகள்தான். மாணவர்களின் மனதில் தமிழ்த்திரையிசைப் பாடல்களும், தற்காலத் தமிழ் இசையமைப்பாளர்களான D. இமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோரின் தாக்கமும் நிறைந்திருக்கிறது.

ஆண்டின் பெரும்பாலான நாட்களை பார்வையற்றோருக்கான ஓர் அரசுப்பள்ளியின் விடுதியில் கழிக்கும் இந்த மாணவர்கள் மனதில், தாங்கள் அன்றாடம் கேட்கும் சினிமாப் பாடல்களே இத்தனை பெரிய எழுச்சியை இவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இவர்களுக்கான முறையான இசை மற்றும் இலக்கிய பயிற்சி வாய்த்தால் இன்னும் எத்தனை உயரம் போவார்கள் என்று எண்ணிப் பார்த்தேன் பெருமையும் பூரிப்புமாக இருந்தது.

இவர்களின் உள்ளார்ந்த திறமையை உலகத்துக்கு அறிவிக்க உழைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி பகர்கிறேன்.

கண்ணுங்களா! செல்லங்களா! உங்கள் ஒவ்வொருவரையும் கட்டித் தழுவுவதாய்க் கற்பனை செய்துகொண்டு, உங்கள் வரிகளிலேயே உங்களை வாழ்த்தி முடிக்கிறேன்.

‘கதிரவனின் ஒளிக்கோலே!

ஒளிர்ந்திடுவாய் புவிமேலே!

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *