Categories
சிறப்புப் பள்ளிகள் தொடுகை மின்னிதழ்

சல்யூட் மோகன் சார்!

எப்போதையும் போல மிகமிகச் சம்பிரதாயமான ஒரு சாதாரண நிகழ்வுதானே இந்தக் கொடியேற்றமும் என நினைத்திருந்தேன்.

கொடியேற்றும் ஆசிரியர் மோகன்

பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 75ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டது. எல்லாப் பள்ளிகளிலும் இதுதானே நடைமுறை இதெல்லாம் ஒரு விஷயமா என நீங்கள் கேட்டால், ஆம்! விஷயம் இருக்கிறது தொடர்ந்து படித்துப் பாருங்கள் என்பேன் நான்.

பொதுவாகவே எமது பள்ளியில் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் வெளியிலிருந்து அழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்கள் கொடியேற்றுவார்கள். ஆனால், ஜனவரி 26, குடியரசு நாளில் அந்தக் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறவிருக்கிற ஆசிரியர் கொடியேற்றுவார். இது பள்ளியில் சில ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை, அவர்களுக்கு மரியாதை செய்யும் ஒரு சடங்கு.

அந்தவகையில், 75ஆவது குடியரசு நாளான இன்று, இந்தக் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறவிருக்கிற எமது பள்ளியின் முதுகலை ஆசிரியர் திரு. மோகன் அவர்கள் கொடியேற்றி உரையாற்றினார். அவர் படித்ததும் பணியாற்றியதும் ஒரே பள்ளியில் என்பதைத் தவிர, புதிதாக அவரைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. மாறாக, சொல்வதற்கு என்னிடம் நிறைய அதிர்ப்திகள் இருக்கின்றன, அவ்வப்போது அதை அவரிடம் தயவு தாட்சண்யமின்றி சொல்லியும் வருகிறேன்.

எப்போதையும் போல மிகமிகச் சம்பிரதாயமான ஒரு சாதாரண நிகழ்வுதானே  இந்தக் கொடியேற்றமும் என நினைத்திருந்தேன். கொடியேற்றிய பிறகு, அவர் ஆற்றிய உரையும் என்னளவில் சாதாரணமானதுதான். ஆனால் அதன் இறுதிப் பகுதியை அப்படிக் கடந்துவிட முடியாது.

ஆசிரியர் மோகன்
நடுவே இடது மாணவன், வலது முதல்வர், நடுவே ஆசிரியர் மோகன்

அவர் தன்னுடைய உரையை இப்படி முடித்தார், “அங்கே டெல்லியில் நமது மாண்புமிகு குடியரசுத் தலைவர் கொடியேற்றி, நாட்டு மக்களுக்குச் சில அறிவிப்புகளைச் செய்துகொண்டிருப்பார். இங்கே நமது பள்ளியில் நான் கொடியேற்றிவிட்டு, இப்போது ஓரிரு அறிவிப்புகளை மட்டும் செய்ய விரும்புகிறேன்.

பள்ளியின் விடுதிக்கு ஒரு மூன்று சக்கர மிதிவண்டி வாங்கித் தருகிறேன்.” அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால், நாமும் சம்பிரதாயமாய் ஒரு நன்ற்இ சொல்லிவிட்டுக் கடந்திருக்கலாம்.

ஆனால் அவர் தொடர்ந்தார். “விடுதிக்குச் செய்தால் போதுமா? பள்ளிக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால், ஒரு லட்சம் ரூபாயைப் பள்ளிக்கு வழங்குகிறேன். அந்தத் தொகையினை ஆண்டுதோறும் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவர்களை ஊக்கப்படுத்தப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பள்ளி முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று முடித்தார்.

சடங்கெனத் தொடங்கிய நிகழ்வு, சரித்திரத் தருணமாய் நிறைவுற்றது.

சல்யூட் மோகன் சார்!

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “சல்யூட் மோகன் சார்!”

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.