மூத்தோர் சொல்

மூத்தோர் சொல்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ராஜகோபால்

சாய்வு நாற்காலியில் முதல் ஆளுமையின் நினைவுப் பகிர்வு பரவலாக அனைவரிடமும் சென்று சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. தொடுகை தளத்தின் எழுத்துகளைவிடவும், யூட்டூப் காணொளிகளை அதிகம் பேர் கேட்கிறார்கள் என்பது நன்கு புரிகிறது.

மூத்த ஆசிரியர் ராஜகோபால் அவர்கள் பகிர்ந்துகொண்ட அன்றைய காலகட்ட நினைவுகள் அந்தச் சமகாலத்தவர் பலரின் நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது.

சிலர் அவர் கூற்றுகளில் முரண்பட்டார்கள். சிலர் சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டினார்கள்.

எவ்வாறாயினும், மூத்த பார்வையற்றவர்களின் நினைவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாறு தங்கியிருக்கிறது. அதுதான் பார்வையற்றோர் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் முதன்மை ஆவணமாக இருக்கிறது.

கல்வித்துறையில் இருந்தவரை, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளிகள் எத்தகைய பொலிவும், வலுவும் பெற்றுத் திகழ்ந்தன, அவை சில தலைமுறைப் பார்வையற்றோரிடம் எவ்வாறான நேர்மறை விளைவுகளை ஏற்படுத்திவைத்திருக்கின்றன என்பதை நம்மால் உணர முடிகிறது.

சிறப்புப்பள்ளிகளின் இன்றைய நலிவை அன்றைய பொலிவுடன் ஒப்பிடுகையில் ஒருவிதக் கூச்சமும், குற்ற உணர்ச்சியும், ஏக்கமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எந்தவிதத் தொழில்நுட்ப வளர்ச்சியோ, போக்குவரத்து சகாயமோ இல்லாத அந்த காலகட்டங்களில், எல்லாமே முழு மனித முயற்சிகள் எனும்போது வியப்பு மேலிடுகிறது. இன்று வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன, வாய்ப்புகள் கூவி அழைக்கின்றன. ஆனாலும், அதளபாதாளத்தில் போய்க்கொண்டே இருக்கின்றன சிறப்புப்பள்ளிகள்.

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்றால், இது ஏன் கசக்கிறது? உண்மை என்பதாலா?

இனிவரும் பகுதிகளும் இப்படித்தான் இருக்கப்போகின்றன. கசப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். சிலருக்காவது வேலை செய்தால் மகிழ்ச்சியே.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *