Categories
தொடர் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023 பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது!

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (4)

ஏதாவது ஒரு நம்்பரை ரேண்டமாகப் போட்டு “நான்தான் பெப்சி உமா பேசுகிறேன்” என்றெல்லா்ம் கலாய்த்துப் பொழுதை ஓட்டுவேன்.

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:

ஏழு ஆண்டுகளாக எல்ஐசியில் வேலை கிடைத்துவிடும் என்ற கனவில் வாழ்ந்்த எனக்கு அந்த வேலை இல்லை என்கிற செய்தி மிகுந்த வேதனையையும் மனவருத்தத்தையும் தந்தது. இயல்பாக என்னால் இருக்க முடியவில்லை. என் பெற்றோர்மீது எனக்குக் கடுமையான கோபம் எழுந்தது.

என்னுடைய பார்வையும் மங்கத் தொடங்கிவிட்டது. என் அண்டை வீட்டாரில் ஒருவர் என் தந்தையிடம் “சித்ரா சாலையில் நடப்பதில் தடுமாற்றம் தெரிகிறது.   எனவே அவளை வெளியே தனியே அனுப்பாதீர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என அவர் பங்குக்கு எனக்கு ஆப்பு வைத்துவிட்டார்.அதனால் சர்ச்சுக்கும் யூத் ஃபெல்லோஷிப்புக்கும் என் தோழி ரோசிட்டாவுடன் சென்று திரும்புவதாக இருந்தது. சிறிது காலத்தில் அவளும் ஃபெல்லோஷிப்பிலிருந்து நின்ற காரணத்தினால் நானும் விலக நேர்ந்தது. என் மனதிற்கு ஒரே ஆறுதலாக இருந்த செயல்பாடும் எனக்கில்லாமல் போனது மனதிற்குப் பெரிய வெறுமையைத் தந்தது.

சித்ரா

அந்தச்  சமயத்தில் என் அப்பா நண்பர்கள் மூலம் என்ஐவிஹெச்

(NIVH)

பற்றிக் கேள்விப்பட்டு என்னை அழைத்துச் சென்றார். அப்போது அறிவானந்தம் என்பவர் அங்கு இயக்குநராக இருந்தார். அவரிடம் என் அப்பா என் மூன்றாம் வகுப்புமுதல் எல்ஐசி கதைவரை அனைத்தையும் கூறினார். அந்த இயக்குநர் அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பின்பு, என்னிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து அதில் உள்ளதை என்னைப் படிக்கச் சொன்னார். நான் மிகவும் சிறமப்பட்டு ஒரே ஒரு வார்த்தையை மட்டும் படித்தேன். அதற்கே இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகிவிட்டது. அந்த ஒரு வார்த்தையைப் படித்தபின் அவர் போதுமென பேப்பரை வாங்கிக்க்கொண்டார்.

“இவளுக்கு மொபிலிட்டி பயிற்சியும் பிரெயில் கற்பதும் தற்போதைய தேவையாயிருக்கு. ஆனால், இங்க லேடி இன்ஸ்ட்ரக்டர் இல்லை. நந்தனம் ஒய்எம்சிஏவில்

(YMCA)

மேகி மேடம் இருக்கிறார்கள். அங்கு மூன்று மாதங்கள் தங்கிப் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்” என அவர் சொன்னார். “இந்தப் பயிற்சி எடுத்தபிறகு மேற்கொண்டு என்ன செய்வது என முடிவெடுக்கலாம்” என்று ஆலோசனை கூறினார்.

அனைத்தையும் கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்தபிறகும் அதைப் பற்றி எதுவும் பேசாது அமைதியாக இருந்தார் என் அப்பா. ஒருவாரம் பொறுத்தபிறகு நானாக என் அப்பாவிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் “எல்லாம் சரிதான் ஆனால் அங்கே மூன்று மாதம் தங்கவேண்டும் என்பதுதான் சற்று யோசனையாக இருக்கிறது” என்றார்.

“நான் இருந்துக்குவேன்”

“நீ இருந்துக்குவ, உங்கம்மா ஒத்துக்காது” என்று கூறி அந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். எனக்கு என் அம்மா மேல் பயங்கர ஆத்திரமும் கோபமும் வந்தது. ஆனால் அப்படிக் கோபம் வரும்போதெல்லாம் அமைதியாகப் போய் தூங்கிவிடுவேன். வீட்டுவேலை செய்வது, அவ்வப்போது என் இயலாமைகள் ஆத்திரமாகவும் கோபமாகவும் வெளிப்படுவது இப்படியாகக் காலங்கள் உருண்டோடின.

சரி, இப்போ ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தை கதையில் அறிமுகப்படுத்தப்போறேன். என் பக்கத்து வீட்டில் வசிக்கும் எங்களால் லதா அம்மா என அழைக்கப்படும் இந்த கேரக்டரை மறந்திடாதீங்க. ஏனென்றால் இவங்கதான் என்னுடைய அடுத்த அத்தியாயத்திற்கு துவக்கப்புள்ளி வைக்கக் காரணமாக இருந்தவங்க.

“சித்ரா, உன்னைமாதிரி  பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் நன்கு படித்து நல்ல நல்ல வேலையில் இருப்பதாக நம்ம லல்லி சொல்லிருக்கா. அவகூட மவுன்ட்ரோட்ல ஒரு ஸ்கூலுக்கு சென்று பார்வையில்லாத இந்த மாதிரி பிள்ளைகளுக்கு வாசிக்க எழுத எல்லாம் உதவி செஞ்சிட்டிருக்கா. அந்த பிள்ளைங்ககிட்ட பேசினா உனக்கு ஒரு ஐடியா கிடைக்குமென நினைக்கிறேன்.  அந்தப் பொண்ணை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லவா?” என்று கேட்டார் லதா அம்மா, அதான் லல்லியின் அம்மா. அதற்கு நான் “இருங்க அம்மா என்ன சொல்லுவாங்கணு தெரியல, பேசிப் பாத்துட்டு சொல்றேன்” என்றேன்.

அவங்க சொன்னதில ஒருபக்கம் ஏதோ ஒரு வழி கிடைக்குமுணு சந்தோஷமா இருந்தாலும் ஒருபக்கம் என்ன நம்மள கண்ணு தெரியாதவங்க லிஸ்ட்ல சேத்துட்டாங்கன்னு வருத்தமாவும் இருந்துச்சு.  பின் அம்மாகிட்ட கேட்டேன். “சரி வரச்சொல்” என்றார்கள். நான் லதா அம்மாவிடம் சொல்ல, அவர்கள் அவங்க மகள் லல்லியிடம் சொல்ல  படித்து முடித்த முனியம்மா என்ற சகோதரியை என் வீட்டுக்கு லதா அம்மா அழைத்து வந்தாங்க. அவர் அப்போது பி.ஏ பி.எட் முடித்திருந்தார்.

முனியம்மா என்னிடம் எனக்கு எவ்வளவு பார்வை இருக்கிறது என்பதை கேட்டறிந்துகொண்டு “உன்னைவிட சற்று பார்வை நன்கு தெரிந்தவர்கள்கூட எங்க பள்ளியில் படிக்கிறாங்கப்பா அதனால் நீயும் பிளைண்ட் ஐடி கார்டு வாங்கிட்டு கல்லூரிப் படிப்பைத் தொடரலாம்” என சொன்னார்.

நான் அவரிடம், “நீங்கள் எப்படிப் படித்தீர்கள்?” என கேட்டேன். அதற்கு பிரெயில் புத்தகங்கள் மூலம், பாடங்களை பதிவு செய்த கேசட் மூலம், வாசிப்பாளர் மூலம் என பலவகையிலும் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திப் படித்ததாகச் சொன்னார். தன்னுடைய கல்லூரிப் படிப்புக்கெல்லாம் லல்லி மேடம்தான் ஃபீஸ் கட்டி உதவினார்கள் என கூறினார். எனக்கு உடனே பிரெயில் கற்றுக்கொள்ள வேண்டுமென்று  ஆசையாக இருந்தது.

முனியம்மாவிடம் “எனக்கு பிரெயில் கற்றுக்கொடுக்கிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு இசைந்து வாரத்திற்கு ஒருமுறை என வீட்டிற்கு வந்து எனக்கு பிரெயில் கற்றுக்கொடுத்தார்.     முதல்முறையாக 27 லைன் பிரெயில் போர்டை கையில் வாங்கிப் பார்த்தபோது வரிசையாக இருந்த அந்தப் பள்ளங்கள் ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளைப் போலத் தெரிந்தது. பிறகு ஸ்டைலஸ்ஸை பார்த்தபோது ஏதோ  ஒரு பெரிய ஆணியைப் போல இருந்தது.

braille cell

முதல்முதலில் ஆறு புள்ளிகளை அடிக்க முற்பட்டபோதுதான் நுணுக்கமான சத்தத்தைத் துள்ளியமாகக் கேட்கும் திறனை முதல்முதலில் பயன்படுத்தினேன் என்று நினைக்கிறேன். ஒழுங்கற்ற ஆறு புள்ளிகளை அடித்து அடித்து இறுதியாக நன்கு பழகியபின் வேகமாக ஆங்கில எழுத்துகள், தமிழ் எழுத்துகள், வார்த்தைகள், வாக்கியங்கள் என சரசரவென எழுதுவதில் வேகம் காட்டிய எனக்கு வாசிப்பதில் வேகம் வரவில்லை. அதற்கு நான் எழுதிய ஒவ்வொன்றையும் உடனுக்குடன் வாசித்திருக்க வேண்டுமென்று ஆசிரியர்ப் பயிற்சியில் தெரிந்துகொண்டேன்.

இப்படியாக நான் ஒரு வழியாக ஏதோ ஒரளவுக்கு பிரெயில் கற்றுக்கொண்டேன். பின்பு நான் முனியம்மாவிடம் “நீங்கள் எப்படி உங்கள் அன்றாட வேலைகளையெல்லாம் செய்கிறீர்கள்” என கேட்டேன். “முக்கியமாக உங்கள் ஸாரிக்கு மேச்சிங்கா  ப்ளௌஸை எப்படி எடுத்துக் கட்டுவீங்க”  எனக் கேட்டேன்.  துவைத்து அடுக்கி வைக்கும்போதே செட்டாக வைக்கலாம். ஸாரியையும் ப்ளௌஸையும் ஒரே கிளிப்பில் சேர்த்துவைப்பது என பல டிப்ஸ்கள் தந்தார். அப்பொழுது எனக்கு ஒரளவுக்கு நிறம் பார்க்க தெரியும்.

முனியம்மா மூலம் சகோதரர் சேவியர் (தற்போது தர்மபூரியில் ஆசிரியராக இருப்பவரின்) அறிமுகம் கிடைத்தது. அவரும் அவ்வப்போது என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசி தைரியம் கொடுத்தார்.

கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகள்  வீட்டிலிருந்த காலம் நான் எப்படியெல்லாம் பொழுதைக் கழித்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள். வீட்டில் சமையல் வேலை தவிர மற்ற எல்லா வேலைகளையும் அதாவது துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது, வீடு பெருக்கித் துடைப்பது, டீ போடுவது, சப்பாத்தி சுடுவது, உலைவைத்து கொதித்தவுடன் அரிசியைப் போடுவது போன்ற சிறுசிறு வேலைகளைத் தவிர அடுப்பில் அதிகம் வேலை பார்க்கமாட்டேன். மதிய நேரங்களில் தொலைக்காட்சியில் பொழுதைக் கழிப்பேட். என் அண்டை வீட்டில் ஒரிசா பெண் ஒருத்தி எனக்கு நெருங்கிய தோழி, அவளுடன் பேசி அறட்டை அடிப்பது, அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பது அவள் பேசுவதைக் கிண்டல் செய்வது என கழிப்பேன்.

என் தோழி ரோசிட்டா ஃப்ரீ டைமில் வீட்டுக்கு வந்தால் பைபில் மற்றும் வேறு புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் சொல்லிக் கேட்பேன். நானும் அவளும் நிறைய உரயாடல்களில் ஈடுபடுவோம். என் யூத் ஃபெல்லோஷிப் நண்பர்களிடம் தொலைபேசியில் பேசுவேன். இவையெல்லாம் செய்து சலிப்படைந்தால் ஏதாவது ஒரு நம்்பரை ரேண்டமாகப் போட்டு “நான்தான் பெப்சி உமா பேசுகிறேன்” என்றெல்லா்ம் கலாய்த்துப் பொழுதை ஓட்டுவேன். என்னடா இயலாமையில் கவலையில் இருந்தேன் என்றெல்லாம் கூறிய பெண்ணா இவ்வளவு ஜாலியாக இருந்தாள் என்கிற உங்களின் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்டுவிட்டது. எவ்வளவு நேரம்தாங்க கவலையிலேயே உலழ்வது அதுவும் போரடிச்சிடும்ல அதான் அப்ப மனசை ரிலாக்ஸ் செய்ய இப்படியெல்லாம் லூட்டியடிப்பேன்.

சர்ச்சில் அன்பியம் என்ற ஒரு அமைப்பு உண்டு. அதன்மூலம் லோட்டஸ் ஹாஸ்டலை விசிட் செய்தோம். அதுதான் நான் முதல்முறையாக அத்தனை பார்வையற்றவர்களை ஒரே இடத்தில் பார்த்தது. அங்கு அதன் நிறுவனரான பத்மராஜன் சாரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. அவர் எங்களை நன்கு வரவேற்று பார்வையற்றோர் பற்றி  நிறைய தகவல்கள் கூறியதோடு, என்னை அந்த ஹாஸ்டலில் வந்து ஒருவாரம் தங்கும்படி சொன்னார். என் அம்மா அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் “சரிங்க சார் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.  

ஓரளவுக்கு அனைத்தையும் மேனேஜ் செய்ய முடிந்த என்னால் என் அம்மாவை கன்வின்ஸ் செய்வது மட்டும் குதிரைக் கொம்பாகவே இருந்தது. அதை எப்படி சாத்தியமாக்கினேன்?

அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பதைச் சொல்கிறேன்,

அடுத்த இதழில்.

தொடர்புக்கு: anbirkiniyaval@gmail.com

***வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம். தங்களுடைய மனம் திறந்த பகிர்வுகள் ஒவ்வொன்றும் இன்றைய நிலையில் இதே சூழலில் துன்புற்றுக்கொண்டிருக்கும் நம் தம்பி தங்கைகள், அவர்களின் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும்.

உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர விரும்பினால், anbirkiniyaval@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

அல்லது 9655013030 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத சிறு சிறு குரல்ப்பதிவுகளை அனுப்புங்கள்.

பிரெயில் வழியே எழுத விரும்புபவர்கள், ஐந்து பக்கங்களுக்கு மிகாத வகையில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி,

தொடுகை மின்னிதழ்,

G1 சுனில் மெசியா,

30 டெலிபோன் காலனி,

2ஆவது தெரு,

ஆதம்பாக்கம்,

சென்னை 600088.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (4)”

தங்களுடைய இந்த படைப்பு இனி வரும் அடுத்த சந்ததிகளுக்கு வழிகாட்டுவதாக அமையும்.

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.