கொண்டாட்டம்: “முட்களும் சுகமே! முல்லைகளைச் சுமப்பதால்”: அன்னையர்தின சிறப்புக் கலந்துரையாடலின் தொடர்ச்சி

கொண்டாட்டம்: “முட்களும் சுகமே! முல்லைகளைச் சுமப்பதால்”: அன்னையர்தின சிறப்புக் கலந்துரையாடலின் தொடர்ச்சி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

சித்ரா: குழந்தைக்கு நான்கு ஐந்து வயது ஆனபோது, நீங்கள் எந்தவகையான சவால்களை எதிர்கொண்டீர்கள்?

செலின்: குழந்தைக்கு இரண்டு வயது முடிவதற்குள் அம்மாவுக்குத் தொட்டுக் காண்பித்தாள்தான் தெரியும் என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டது. மூன்று வயதுவரை ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு ஆடைகளின் நிறத்தைக் கண்டுபிடித்துப் போடுவதில் சிரமம் இருந்தது. தன்னுடைய உடையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அவள் வளர்ந்தபிறகு, அந்தக் குழப்பம் இல்லை. இப்பொழுதும் அதிகமாகக் கறைபட்டுவிடும் வெள்ளை உடைகளைத் துவைப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான்.

குழந்தைகளுக்குப் பெற்றோரை எப்படி கவனிக்க வேண்டும் என்பதும், எப்படி ஏமாற்றலாம் என்பதும்கூட சிறுவயதிலேயே புரிந்துவிடுகிறது. தட்டிக்த் தட்டிச்  சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இப்பொழுது அவளுக்கான உடை, மேக்கப் இவற்றோடு புகைப்படம் எடுப்பது, புகைப்படங்களை விளக்குவது, பார்வையற்றோரை வழி நடத்துவது, ஷாப்பிங் மால் சென்றால் ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டு பின்னை உள்ளிடுவது, கணினியை இயக்குவது, மெலோடிக்கா இசைப்பது, செஸ் விளையாடுவது   உள்ளிட்ட பலவற்றையும் படிப்படியாகப் பழக்கி வருகிறேன்.

ராமலக்ஷ்மி: பொதுவாகவே பார்வையற்றோருடைய குழந்தைகளுக்கு IQ லெவல் அதிகமாக இருக்கும். என்னுடைய குழந்தையைப் பொருத்தவரை இரண்டு வயதிற்குள் யூரின் வரும்போது இடுப்பைவிட்டு இறங்கிவிடுவாள். எங்காவது குச்சியுடன் யாரையாவது கண்டால் பார்வையற்றோர் என்று அழைத்துச் செல்ல தொடங்கிவிடுவாள். 10 வயதிற்குள் தன்னுடைய வேலைகளைச் செய்து பழகிக்க்கொண்டாள்.

பத்தாம் வகுப்புவரை நாங்கள் எடுத்துக்கொடுத்த உடைகளைத்தான் உடுத்துவாள். இப்பொழுதுதான் அவள் விருப்பப்படி உடுத்திக்கொள்கிறாள். சமையலில் எனக்கு உதவியாக இருப்பாள். சில சமயங்களில், ‘உனக்குத்தான் கொஞ்சம் கண்ணு தெரியுதுல்ல, அப்புறம் எதுக்கு என்ன கேட்கிறாய்?’ என்று சொல்லும்போது பார்வையின் நிரந்தரமின்மையையும், முழுப் பார்வையற்றோரின் சவால்களையும் எடுத்துச் சொல்லி, அவளைத் திருத்திக்கொண்டிருக்கிறேன்.

விஜயலட்சுமி: முடியாதவர்களுக்கு உதவுவது, பார்வையற்றோரைக் கண்டால் அறிமுகம் செய்வது, பேருந்து எண்களைப் படித்துச் சொல்வது, ஊர்ப் பெயர்களைத் தெரிந்துகொள்வது. இதுபோன்ற பல விஷயங்களுக்கும் என் குழந்தைகள் உறுதுணையாக இருக்கிறார்கள். வீட்டு வேலைகளைச் செய்வதில் விருப்பம் இருப்பதில்லை. செல்போன், டீவி, கேம் என்று பொழுதைக் கழிக்கிறார்கள்.

குழந்தைக்கு டயப்பர் மாற்றிவிடும் பார்வையற்ற தாய்

செந்தமிழ்ச்செல்வி: பார்வையற்றோரைப் பொறுத்தவரை, அவர்களது குழந்தையை அவர்களே வளர்க்கும்பொழுதுதான், அவர்களது இயலாமை குழந்தைக்குத் தெரியவரும். என்னுடைய குழந்தை ஒன்று ஒன்றேகால்  வயதிருக்கும்போதே, மோஷன் போய்விட்டு அதன்மீது பேப்பரைப் போட்டு, என்னிடம் தொட்டுக் காண்பிப்பாள். இது தவிர அவளுக்குத் தேவையான உடையை 7 மாதத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறோம். என்னுடைய உடையிலும் கலர் செலக்‌ஷன் அவளுடையதாகத்தான் இருக்கும். இது தவிர, பார்வையற்றோருடைய குழந்தைகள் பொதுவான பல விஷயங்களைத் தட்டுத் தடுமாறித்தான் கற்றுக்கொள்கின்றன. சைக்கிள் ஓட்டுவது, செல்போன் ஆப்ரேட் செய்வது, சிஸ்டம் இயக்குவது உள்ளிட்டவற்றை தாங்களாகவே பார்த்துப் பழகிக்கொள்கின்றனர்.

பிரியா ஷாந்தகுமார்: எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லவும், கூப்பிட்டால் சத்தம் கொடுக்கவும் பழக்கி இருக்கிறேன். இதுவரை கடைபிடிக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு அதிகம் கவனிப்பு தேவைப்படுகிறது. இப்பொழுது என் பையன் வண்டியில்  விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்கிறான்.

சித்ரா: உங்கள் குழந்தையைப்  பள்ளியில் சேர்க்கும்பொழுதும், சேர்த்த பிறகும் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள், சங்கடங்கள் குறித்துப் பகிருங்கள்.

பிரியா ஷாந்தகுமார்: பையனைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன் அம்மாவிடமும் எங்களிடமும் மாறிமாறி வளர்ந்ததால், கேஜி சேர்க்கும்போது கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. பள்ளிச் சூழலில், நாங்கள் இருவரும் பார்வையற்றோர் என்பதை சொல்லிச் சொல்லிப் பதிவு செய்தோம். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்குத் தவறாமல் சென்றுவிடுவோம். எங்களிடம் கருத்துக் கேட்கப்படும். குழந்தைகளுக்குக் கல்வி குறித்த கவலை இல்லை. கேஜி முடிக்கும்போதே, என் பையனுக்கு ஆங்கிலம் நன்றாக வாசிக்கத் தெரிந்திருந்தது.

 ராமலக்ஷ்மி; என் குழந்தைக்கு உடல் நலக் குறைபாடு இருந்ததால், அவளுக்கு ஆர்வம் இருந்த போதிலும், பள்ளி நிகழ்வுகள் விளையாட்டு போட்டிகள் யோகா உள்ளிட்ட எதிலும் பங்கெடுப்பதை ஊக்குவிக்க முடியவில்லை. நான் மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதை எப்போதும் விரும்ப மாட்டேன்.

 ஒவ்வொரு முறை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு செல்லும் பொழுதும், அது நடைபெறும் இடத்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். இது தவிர ஒரு முறை இறங்கவேண்டிய இடம் உயரமாக இருப்பது அறியாமல் பல்டி அடித்து விட்டேன். ஏனோ அதை எளிதாக கடக்க முடியவில்லை. காலம் கடந்து, இப்போதும் அந்த இடத்திற்குச் செல்லும்போதெல்லாம், அந்த நினைவு வந்துகொண்டுதான் இருக்கிறது.

விஜயலட்சுமி: என் குழந்தைகளின் பள்ளியில் நடைபெறும் விழாக்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பெற்றோர் ஆசிரியர்க் கூட்டம் என எல்லாவற்றிற்கும் குழந்தைகளுடனோ அல்லது ஓரளவி்ற்குப் பார்வை இருப்பதால் மற்ற பெற்றோரைப் பார்த்தோ  சென்றுவிடுவேன். சிறுவயதில், மற்றவர் உதவியுடன் மதிப்பெண் பட்டியலைப் படிக்க முடிந்தது. இப்போதைக்குக் குழந்தைகளே வாசித்துக் காட்டிவிடுகிறார்கள். மாறுவேடப் போட்டிக்கெல்லாம் பியூட்டி பார்லர் அழைத்துச் சென்று தயார்படுத்திவிடுவேன். இது தவிர குழந்தைகள் அதிகம் நிகழ்ச்சிகளில் பங்குகொள்வர். அம்மாவுக்கு இரவில் தெரியாது, பகலில்  ஓரளவு தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியும். குழந்தைகளுடைய நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க முடியவில்லை என்ற வருத்தம் எப்போதும் இருக்கத்தான் செய்யும்.

செலின்: பாப்பாவை கேஜி படிக்கும்போது எழுத வைப்பதுதான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. டியூஷனில் சொல்லித் தருவது திருப்திகரமாக இல்லை. வீட்டிலும்  பொறுமையாக சொல்லித் தர ஆள் இல்லை வருத்தத்தோடு கடக்க வேண்டியிருந்தது. பிறகு ஒரு நல்ல டியூஷன் டீச்சர் கிடைத்தார்.

இது தவிர விளையாட்டுப் போட்டிகள், மாறுவேடப் போட்டி, கலை நிகழ்ச்சிகள், யோகா எனப் பள்ளியின் எந்த நிகழ்விலும் அவள் கலந்துகொள்வதை ஊக்குவிப்பது உண்டு. பள்ளிக்கு வெளியே நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல முடியாதது குறித்து ஒரு பார்வையற்ற, பணிக்குச் செல்கின்ற தாயாக பலமுறை வருந்தியிருக்கிறேன்.

பள்ளியில் நடைபெறும் நடனத்தில் கலந்துகொண்டபின்,  வீட்டிற்கு  வந்து ஒவ்வொரு ஸ்டெப்பாக போட்டுத் தொட்டுக் காண்பிப்பாள்.  போட்டோக்கள், வீடியோக்களை மற்றவரோடு பகிர்ந்து பெருமைப்படுவதோடு சரி, நான் பார்க்க முடியாதது குறித்து அவள் வருந்தியதாகத் தெரியவில்லை.

செந்தமிழ்ச்செல்வி: எங்கள் குழந்தைக்கு எந்தப் போட்டிக்கும் தயார் செய்து கொடுப்பதில்லை. எனினும் தவறாமல் கலந்துகொள்வோம். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை அவர்களாகவே  தேடி வந்துவிடுவார்கள். எங்களுடைய பார்வையின்மை கருதி, பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தது. இது தவிர எனக்கு பிரைடல் மேக்கப் மணப்பெண் அலங்காரம்வரை தெரியும். நான் எனக்குத் தெரிந்தவற்றைச் செய்துவிட்டு, முடியாதவற்றுக்கு எங்கள் வீட்டு வேலையாளின் மகளை அழைத்துச்  சென்றுவிடுவேன்.  என்னுடைய  அந்தச் செய்கை மகளுக்கு பிரம்மிப்பு தந்ததை உணர முடிந்தது.,

சித்ரா: குழந்தைகள் பருவமடைந்த சூழல் குறித்தும் பேசவேண்டும் என நினைக்கிறேன்.

 செந்தமிழ்ச்செல்வி: என் மகள் பருவம் அடைந்தபோது நாங்கள் கணினிப் பயிற்சிக்காகக் குடும்பத்தோடு ஏலகிரி சென்றிருந்தோம்.  செய்தி கேள்விப்பட்டு, காருடன்  வந்து, அத்தனை சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து முடித்தோம். என் வீட்டிற்கும் மாமியார் வீட்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தபோதிலும், முன்பாகவே கேட்டுத் தெரிந்து வைத்திருந்த தகவல்கள் உதவியாக இருந்தன. என்னை ஆச்சரியப்படுத்திய  விஷயம் என்னவென்றால், நாப்கின் வைக்கப் பழக்கியபோது, ஏற்கனவே யூட்யூபில் பார்த்ததாகக் கூறி எங்களை மேலும் ஆச்சரியப்படுத்தினாள்.

  விஜயலட்சுமி: நான் ஒரு ஜோக் சொல்கிறேன்.  யூரின் போகும்போது சிவப்புக் கரை இருந்தால் சொல்லுமாறு  குழந்தையை அறிவுறுத்தியிருந்தேன். ஒருநாள் ரெட் கலர் ஹார்பிக்  வெஸ்டன் டாய்லட்டில் ஊற்றியிருந்தது  தெரியாமல் என்னிடம் வந்து ரத்தம் கிடப்பதாய்ச் சொல்ல, அம்மாவை அழைத்து இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

 செந்தமிழ்ச்செல்வி: பருவமடையும்போது, உள்ளாடைகளில் கரை படிதல், வயிற்று வலி, சோர்வு, வாந்தி, இடுப்பு வலி, கால் வலி, மயக்கம் உள்ளிட்ட சில அறிகுறிகள் இருப்பதைக் குழந்தைக்கு் சொல்லித் தர வேண்டும்.

 சித்ரா: ஒரு தாயாக நிறையப் பிரச்சனைகள், சவால்கள், சங்கடங்களைச் சந்திக்க வேண்டி இருந்திருக்கும். நமக்கு நிறைய திறமைகள், வாய்ப்புகள், வசதிகள் கிடைக்கப்பெற்றபோதும், சில விஷயங்களுக்கு நம்முடைய பார்வையின்மை தடையாக இருந்திருக்கலாம். அப்படித்தானே!.

 செந்தமிழ்ச்செல்வி: என்னுடைய மகள் யாராவது சைகை மொழியில் அழைக்கும்போது, என்னிடம் சொல்லாமல் சென்றுவிடுவாள். அதுபோன்ற சமயங்களில் அதிகக் கோபம் வரும். சில சமயங்களில் இதை எடுக்காதே, அதைச் செய்யாதே என்று சொல்லும் அளவுக்கு நமக்குத் தெரியாததை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன்.

 ராம லக்ஷ்மி; நான் வேண்டாம் என்று சொல்லும் ஒரு பொருளை அவள் வேண்டி வாங்கி, பிறகு பொறுப்பில்லாமல் எங்கேயாவது போட்டு விடுவாள். அது உடைந்ததையோ, தொலைந்ததையோ நாமாக கண்டுபிடிக்கும் போது, அதிக கோபம் வரும்.

 செந்தமிழ் செல்வி; ஒரு சம்பவத்தை பகிர்கிறேன். என் மகளுக்கு பால் குடிக்க கொடுக்கும் பொழுது தினமும் குப்பை தொட்டியில் கொட்டி விடுவாள். வாசனையை வைத்து கண்டுபிடித்து விட்டேன். ஒருநாள் அருகில் அமர்ந்து குடிக்க வைத்த பொழுது, குடித்து விட்டேன் என்றவளை, வெரி குட் என்று வாழ்த்திய பிறகு தான் தெரிந்தது கிரைண்டர் சந்தில் கொட்டி இருந்த விஷயம்.

 ராமலக்ஷ்மி: என்னுடைய குழந்தை ஒருமுறை வண்டியில் வேகமாகச் சென்று, நாய் குறுக்கே வர, விழுந்து அடிபட்ட விஷயம் அவளுடைய அப்பா சொல்லி தான் எனக்கு தெரிய வந்தது. ஓரளவு பார்வை இருந்தும், கண்டுபிடிக்க முடியாமல் போனதும், அவள் என்னிடம் மறைத்ததும், அதிகக் கோபத்தை தந்தது.

செந்தமிழ்ச்செல்வி: ஒரு சில சமயங்களில் மற்றவர்கள் குழந்தைகளுக்கு நம்மை ஏமாற்றச் சொல்லிக்கொடுப்பார்கள். அதுபோன்ற சமயங்களைத் திறமையாகக் கையாள வேண்டியது நம்முடைய பொறுப்பு.

விஜயலட்சுமி: நான் அவர்கள்  பக்கத்தில் இல்லாதபொழுது, டாக்பேக்  ஆப் செய்துவிட்டு, செல்போனை எடுக்க தொடங்கி விடுகிறார்கள்.

செந்தமிழ்ச்செல்வி: நம்முடைய குழந்தைகள் எந்தெந்த அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் கண்காணிக்க வேண்டும். ஒருமுறை என்னுடைய குழந்தை இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை அப்டேட் செய்துவிட்டாள். அதன்பிறகு கண்டுபிடித்து அவளை திருத்த வேண்டியதாயிற்று.

செலின்: என்னுடைய பெரிய வருத்தமாக நான் கருதுவது, நானும் என் குழந்தையும் இதுவரை தனியாக எங்குமே சென்றதில்லை. ஒருவேளை செல்லும் சூழல் வந்தாலும், ட்ராப் செய்துவிட்டு முடிந்தவுடன் பிக் அப் செய்துவிடுவார்கள்.

செந்தமிழ்ச்செல்வி: என்னுடைய குழந்தைகளை நம்பி எங்கு வேண்டுமென்றாலும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லலாம். செல்வதற்கு முன்பாகவே யூட்டூப், மேப் இப்படி ஏதாவது பார்த்து தெரிந்து வைத்துக்கொள்கிறார்கள். ஒருமுறை சமுதாய ஹாஸ்டல் டூர் (குடும்பத்தில் நிறைய பார்வையற்றோர் இருப்பதால் இந்த வார்த்தைப் பிரயோகம்) சென்றபோது, சங்கவை சிறப்பாக வழிகாட்டி, எங்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்திவிட்டாள்.

சித்ரா: வருங்காலத் தலைமுறைக்கு, ஒரு பார்வையற்ற தாயாக நீங்கள் கூற விரும்பும் அறிவுரைகள்?

 ராமலக்ஷ்மி: நாம் கருவுற்றிருக்கும்போது, மருத்துவமனைக்குச் செல்வதற்கும்,  பிற விஷயங்களுக்கும் பிறரை சார்ந்திருக்கும் சூழல் ஏற்படலாம். அது போன்ற சமயங்களில் தைரியமாக வெளியே வந்து பழகி பிறருக்கு நம் நிலையை உணர்த்த வேண்டும். செல்வி அக்கா சொன்னதுபோல, நம் குழந்தைகளை நாமே வளர்க்க வேண்டும். அவர்களுடன் நம் நேரத்தை செலவிட வேண்டும். அவர்களுடைய செயல்களைக் கண்காணிக்க வேண்டும். எல்லாச் சமயங்களிலும் அவர்கள் நம்முடன் வந்து உரையாடும்படியான ஒரு சூழலை நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

விஜயலக்‌ஷ்மி: குழந்தைகளை மற்றவரிடம் விட்டு வளர்க்காமல், நம்முடைய தேவைகளைச் சொல்லிக்கொடுத்து, வளர்க்க வேண்டும். என்னுடைய குழந்தைகள் எல்லா விஷயங்களுக்கும் எங்களுடன் வெளிப்படையாகப் பேசி அனுமதி பெறுகிறார்கள்.

எதிர்கால வாழ்க்கையிலும் அவர்கள் விருப்பம் சரியாக இருக்கும் பட்சத்தில் இசைந்து கொடுப்பதையும், தவறும் பட்சத்தில் திருத்தி சிறப்பானதொரு வாழ்க்கையை அமைத்துத் தருவதையும் எங்களுடைய கடமையாகக் கருதுகிறோம். தேவையான சமயங்களில் அன்பையும் கண்டிப்பையும்  கொடுத்து வளர்க்கிறோம்.

 செந்தமிழ்ச்செல்வி: கிளப் ஹௌஸில் ஒருமுறை, ‘நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பார்வையற்றோருக்குத் திருமணம் செய்து தருவீர்களா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

 ராமலட்சுமி:  என் மகளிடம் கேட்டேன், அவள் வேண்டாம் என்கிறாள். அவளுக்கு விருப்பமிருந்தபோதிலும்,   சூழலை எண்ணி பயப்படுகிறாள்.

சித்திரா:  எதார்த்தம்தான். அதுபோன்ற எண்ணங்களைத் திணிப்பது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய மடத்தனம்.

விஜயலட்சுமி: அவர்களுக்கு விருப்பம் இருந்தால் செய்துவைக்கலாம். நாம் கட்டாயப்படுத்தக்  கூடாது.

செலின்: குழந்தைகளை இன்றைய சூழலுக்கு ஏற்ப, உலகியல் அனுபவங்களோடு வளர்க்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் கண்டிப்பாகவும், ஒருவர் இலகுவாக அனுகும் வகையிலும் இருத்தல் நலம். மேலும், பெற்றோர் பார்வையற்றவர்கள் என்பதற்காக, அவர்களின் குழந்தைகளைப் பார்த்து மற்றவர் பரிதாபப்படுவதை நான் விரும்புவதில்லை.

ஒருமுறை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கலந்துகொள்ளாத குழந்தைகளை அழைத்து வகுப்பாசிரியர்  கடிந்துகொண்டிருக்கிறார். அப்போது, “எங்க அம்மா  Blind” என்று சூழலைச் சமாளிப்பதற்காக குழந்தை சொன்னதாக என்னிடம் வந்து பகிர்ந்துகொண்டாள்.  குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தும், தவறும் பட்சத்தில்  தட்டிக் கொடுத்தும் வளர்க்க வேண்டியது நம்முடைய பொறுப்பாக நான் கருதுகிறேன்.

செந்தமிழ்ச்செல்வி: பார்வையற்ற பெண்கள் எல்லாவற்றையும் முன்பாகவே தெரிந்துவைத்திருப்பது நல்லது. திருமணம் ஆவதற்குள் சம்பாதிக்கத் தெரிகிறதோ இல்லையோ, சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ராமலக்ஷ்மி: பல பார்வையற்ற பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய சோம்பேறிப்படுகிறார்கள்.

 செந்தமிழ்ச்செல்வி: பல பார்வையற்ற குழந்தைகள் வளர்க்கப்படும் முறை தவறு. அதனால்தான் அப்படி இருக்கிறார்கள். சிறு வேலையைக்கூடச் செய்யவிடுவதில்லை. இந்தச் சூழல் மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

செலின்: நம்மிடம் படிக்கும் குழந்தைகளுக்கு, ஐந்து ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே, தங்களுடைய மொத்த வீட்டு வேலைகளையும் செய்யத் தெரிந்திருக்கிறது. ஆனால் நம்மவர்களில் பலர்  அப்படி அல்ல.

 செந்தமிழ்ச்செல்வி: ஆம் நிச்சயமாக நீங்கள் சொல்வது சரிதான். குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர் தங்கள் பார்வையற்ற பெண் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். நானே செய்து கொடுக்கிறேன். என்று பெற்றோர் பெருமையாக சொல்லிக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். திருமண வரன் பார்க்கும் வைபவத்தில்  திருமணத்திற்குப் பிறகும் பெண்ணுடைய தாயார் வந்து தங்கி அத்தனை வேலைகளையும் செய்து தருவதாக உறுதி கொடுத்த நிகழ்வுகளைக்கூட கேள்விப்பட்டிருக்கிறேன். இது அபத்தம் என்று தோன்றியது.

அதுபோலவே, பணியிலிருக்கும் பார்வையற்ற பெண்களை ஓரளவிற்கே படித்த அல்லது படிப்பறிவற்ற, நலிந்த பின்புலம் கொண்ட பார்வையுள்ளோர் திருமணம் செய்துகொள்ள முன்வருகிறார்கள். அந்த ஆண்களுக்கு முழு மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. எல்லாவற்றையும் அந்த பார்வையற்ற பெண் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள நினைக்கிறாள். இதுபோன்ற நிறைய சம்பவங்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 ராமலக்ஷ்மி: சிலருக்குத் தன் சுத்தம், குடும்ப பராமரிப்பு, வீட்டு வேலைகள் என்று தெரிந்திருப்பதில்லை. இவையும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும்.

 விஜயலட்சுமி: வேலைக்குப் பகட்டாகக் கிளம்பும் பெண்கள், வீட்டில் தாயாரையோ,  அல்லது வேலைக்கு ஆட்களையோ வைத்துக்கொண்டு, எந்த வேலையும் செய்வதில்லை. இதுவும் மாறிட வேண்டும்.

பிரியா ஷாந்தகுமார்: பெண்களுக்கு சேமிப்பு மிகவும் முக்கியம். சில காலம் அதிகம் சிந்திக்காமல் வீணடித்துவிட்டேன்.  வருங்காலத் தலைமுறையினருக்கு இதையே என் முதன்மை அறிவருஐயாகச் சொல்ல விரும்புகிறேன்.

செந்தமிழ்ச்செல்வி: சமூகம் இப்போது மாறியிருக்கிறது. பார்வையுள்ளவர்களோடு சேர்ந்து படித்து வளரும் குழந்தைகள் ஓரளவுக்குத் தெளிவாக இருக்கிறார்கள். தவிர தேவைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறது என்பதுதானே உண்மை.

சித்ரா: நிச்சயமாக. ஏனென்றால், உறவினர் எவருமே உதவாமல், தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கும் பல வெற்றிகரமான பார்வையற்ற தம்பதிகள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களின் அனுபவங்களை எதிர்காலத் தலைமுறைக்குக் கடத்துவதும், பொதுச்சமூகத்துக்குப் பார்வையற்றோர் குறித்த பல புரிதல்களை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உரையாடலில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் தொடுகை மின்னிதழ் சார்பில் எங்களின் நன்றிகளும் வாழ்த்துகளும்.

வாசகர்களே! உரையாடல் எப்படி இருந்து என்பது குறித்து எமக்கு எழுதுங்கள்.

தாய்மையைப் போற்றும் சமூகம் இது. குழந்தையைக் கருவில் சுமக்கும் பெண்மணியே உலகில் மாசற்றவராகக் கருதப்படுகிறார். எனினும், அன்பு, கருணை, தியாகம், இரக்கம் என எல்லாமே தாய்க்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருப்பதில் பொருள்  இல்லை. ஒவ்வொரு தாய்க்கும் அவரவர்க்கென்று விருப்பு வெறுப்புகள், ஆசா பாசங்கள், தனிப்பட்ட புரிதல்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருப்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஆண்களின் நடவடிக்கைகளை அடக்குமுறை அல்ல அக்கறை என்று கருதும் பெண்களுக்கு மத்தியில் , சுதந்திரம், சுயமரியாதை, தனித்து இயங்குதல், தமக்கென்று கொள்கைகளை வகுத்தல் என முற்போக்குச் சிந்தனைகளோடு செயல்படுகின்ற பெண்கள் பெருகி, தாய்மைக்கு புது வரையறை வகுக்கப்பட வேண்டும்.

பார்வையற்ற தாய்

 பார்வையற்றோரைப் பொருத்தவரை, குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்ததும்,  எல்லா உதடுகளும் தவறாமல் உதிர்க்கும் கேள்வி, அந்தக் குழந்தையின் பார்வை நன்றாக இருக்கிறதா? என்பதுதான். இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத மாற்றுத்திறனாளிகளே கிடையாது. குழந்தையைப் பெற்ற பிறகுதான், நம்  கண்முன் இருக்கும் சவால்கள் பூதாகரமாகத் தெரியத் தொடங்குகிறது. சகோதரிகள் சொன்ன மாதிரி நம் வலியையும், பாரத்தையும், சுகத்தையும், மகிழ்ச்சியையும் நாமே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 நீச்சல் கற்றுத்தரும் மீன்கள் போல, பறக்கக் கற்றுத்தரும் பறவைகள் போல போட்டிகள் நிறைந்த உலகில் சவால்களை எதிர்கொண்டு வாழ நம் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டியது ஒவ்வொரு அன்னையின் கடமையாகும்.

 ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வியல், கருத்தியல், உளவியல், உலகியல் சார்ந்த புரிதல்களை ஏற்படுத்தி, அவர்களது வாழ்க்கைக் கடலில் அவ்வப்போது தோன்றும் அசாதாரணப் புயல்களையும் தனித்து நின்று எதிர்கொள்ளும் துணிச்சல் உடையவர்களாக வளர்த்தெடுத்து, அவர்களின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்வோம்!

நம் குழந்தைகளுடன் கைகோர்த்து நடப்போம்;

பூக்களடர்ந்த சோலைவனத்தில் வழிகாட்டியாக அல்ல,

முட்கள் படர்ந்த பாலைவனத்திலும் வழித்துணையாக!

தொகுப்பு:X. செலின்மேரி மற்றும்

U. சித்ரா.

பகிர

1 thought on “கொண்டாட்டம்: “முட்களும் சுகமே! முல்லைகளைச் சுமப்பதால்”: அன்னையர்தின சிறப்புக் கலந்துரையாடலின் தொடர்ச்சி

  1. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சந்தித்த சவால்கள் எவை என்பதை பகிர்ந்து கொண்டார். பல்வேறு நிறை குறைகளை அழகாக தொளிவுபடுத்தினர் 👍🏻👍🏻👍🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *