அன்பு தொடுகை வாசகர்களே!
பெரும்பாலும் அரிசி தோசை, கோதுமை தோசை என இவைகளைத்தான் சாப்பிட்டிருப்போம். ஆனால், இன்று பல புதிய சத்தான தோசைகளை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.
வெண்டைக்காய் தோசை:
தேவையான பொருட்கள்:
ஒரு டம்ளர் இட்லி அரிசி (200 கிராம் அளவு), ஏழு வெண்டைக்காய்,
செய்முறை:
இட்லி அரிசியை ஐந்தாறு மணிவரை ஊறவைக்கவும். அரிசி நன்கு ஊறியபின் வெண்டைக்காயை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். பின் அரிசியை அதில் சேர்க்கவும். நன்றாக மைய தோசைமாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கறைத்து தோசை ஊற்றி சுடச்சுடப் பரிமாறலாம். தோசை நன்கு முறுகலாக வரும். ஊற்றுவதற்கும் மிக எளிது.
வெண்டைக்காயில் பொட்டாஸியம், கால்ஸியம், வைட்டமின் கே நிறைந்திருக்கிறது. எனவே குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் உகந்தது.
கம்பு தோசை:
தேவையான பொருட்கள்:
ஒரு டம்ளர் கம்பு, ஒரு டம்ளர் இத்லி அரிசி, அரை டம்லர் வெள்ளை உளுந்து, எந்த டம்ளரில் கம்பு அளக்கிறோமோ அதே டம்ளரில் அரிசியையும் உளுந்தையும் அளந்தெடுத்துக்கொள்ளவும்.
செய்முறை: கம்பு போன்ற சிறு தானியங்கள் பொதுவாக அதிக தூசி நிறைந்ததாக இருக்கும். எனவே, அதை இரண்டு மூன்று தடவை நன்றாக கழுவியபின் நல்ல தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். கம்பைத் தனியாகவும்் அரிசி, உளுந்தை சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவும். ஐந்தாறு மணிநேரம் நன்கு ஊறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மைய தோசைமாவு பதத்திற்கு அறைத்து நான்கு ஐந்து மணி நேரத்திற்கு புளிக்கவிட்டு தோசை ஊற்றிச் சுடச்சுடப் பரிமாறவும். சிறுதானியமான கம்பு உடலுக்கு மிக நல்லது. எடையைக் குறைக்க உதவும். புறதச்சத்து நிறைந்த இந்த தோசை குழந்தைகள்முதல் பெரியவர்வரை அனைவருக்கும் மிகவும் நல்லது.
கொண்டைக்கடலை தோசை:
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை கறுப்பு அல்லது வெள்ளை ஒரு டம்ளர், இட்லி அரிசி ஒரு டம்ளர், வெந்தயம் சிறிதளவு,
செய்முறை: கொண்டைக்கடலை, அரிசி, வெந்தயம் அனைத்தையும் எட்டு மணிநேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். பின் சிறிதளவு இஞ்சி ,சீரகம் சேர்த்து ஊறிய கொண்டைக்கடலை, அரிசி, வெந்தயம் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக தோசைமாவு பதத்திற்கு அறைத்து எடுத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து நன்கு ஆறேழு மணிநேரம் வைத்து நன்கு புளித்தபின் தோசையை ஊற்றி சுடச்சுட பரிமாறவும்.
கொண்டைக்கடலையில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளதால், குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் உகந்த உணவாகும். கொண்டைக்கடலையை வாயு என்று ஒதுக்குபவர்கள் இப்படி தோசையாகச் செய்து சாப்பிடுவதால் எவ்விதத் தொந்தரவும் இருக்காது. இதனைக் இரவில் உட்கொள்வதைத் தவிர்த்து, காலை உணவாக எடுத்துக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.
பாசிப்பயறு தோசை:
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு ஒரு டம்ளர், ஒரு ஸ்பூன் பச்சை அரிசி, சிறிதளவு இஞ்சி, நான்கு பச்சை மிளகாய் காரத்திற்கேற்ப
செய்முறை: பாசிப்பயறை எட்டு மணிநேரம் நன்கு ஊறவைத்துப் பின் இஞ்சி, பச்சைமிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கி ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து ஊறவைத்த பாசிப்பயறு, அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து ந்நன்கு அரைத்துத் தேவையான உப்பு சேர்த்து தோசையாக ஊற்றி சுடச்சுடப் பரிமாறவும்.
அதிகப் புரதச்சத்து நிறைந்த இந்த பாசிப்பயறு தோசையை உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வாரத்திற்கு ஒருமுறை உணவாகக்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
***அனாமிகா
Be the first to leave a comment