விடுமுறையைக் கொண்டாடுங்கள் ஆனால்…
“கோடை விடுமுறை என்றாலே பலருக்கும் கொண்டாட்டம்தான். மலைவாசஸ்தலங்கள், கடலோரங்கள், கானகங்களுக்குப் போய் உல்லாசமாக இருந்துவிட்டு வருவது வாடிக்கை. ஆனால் போகிற இடத்தில் சுயநிலையை இழந்து மனம் போன போக்கில் செயல்பட்டால் என்ன ஆகும்? ஆபத்துதான்.

கடலில் நீந்துவது என்றால் நல்ல பயிற்சி இருந்தால் மட்டும் போதாது. சுற்றிலும் நடப்பதைப் பற்றி நம் கவனம் இருக்கவேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். கோடை வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காகக் கடலில் நீந்தி மகிழ்ச்சி அடைவதில் தப்பில்லை. ஆனால். இப்படியும் இருப்பதா?
பனாமா சிட்டி பீச்சில் நடந்தது இந்தச் சம்பவம். அங்கே தன் விடுமுறையை ஸ்டான் பெட்லஸ் என்பவர் செலவிட்டுக்கொண்டிருந்தார். கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில்தான் அவர் தங்கியிருந்தார். கட்டிடத்தின் 28வது மாடியில் இருந்த பால்கனியில் நின்றுகொண்டு காட்சிகளை எல்லாம் கண்டு ரசித்துக்கொண்டிருந்தபோது அதோ ஒரு அழகி கடலில் நீந்திக்கொண்டிருக்கிறார்.
கொஞ்சம் கவனமாகப் பார்த்தபோது நிழல்போல ஏதோ ஒன்று அந்த அழகியைப் பின்தொடர்வதை அவர் அறிந்துகொண்டார். மொபைல் போனை எடுத்து ஜூம் செய்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். ஒரு ராட்சச சுறாமீன் நம் அழகியைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நீச்சல் அழகியோ இதைப் பற்றி எதுவும் தெரியாமல் மகிழ்ச்சி பொங்க ஆனந்தமாக நீந்திக்கொண்டிருந்தார். அவரைப் போல இதைக் கண்ட பலரும் கரையிலிருந்து கூக்குரல் போட்டார்கள். ஆனால் நம் அழகியின் முழு கவனமும் நீச்சலில் மட்டுமே இருந்தது.
பல்வேறு பாணிகளில் நீச்சலை அவர் அனுபவித்துக்கொண்டிருந்தார். தன்னைவிட பல மடங்கு பெரிய சுறா தன்னைக் குறிவைத்துத் தன் பின்னால் தொடர்ந்து வருவதை அந்த அழகி தெரிந்துகொள்ளவே யில்லை. சுறா கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிட்டது. அப்போதுதான் நம் கதாநாயகி ஊர்க்காரர்களின் கூக்குரலைக் கவனித்தார். “சுறாமீன்! சுறாமீன்!” என்று அலறினார் அழகி. அப்புறம் என்ன? அழகி கரையை நோக்கி ஒரே பாய்ச்சல். அவ்வளவுதான். அவர் ஆழம் குறைந்த இடத்துக்கு நீந்த ஆரம்பித்தார். சுறா மறுபடி கடற்புற்களை நோக்கிச் செல்வதை அனைவரும் கண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். கடந்த 2019 மே 28 அன்று நடந்த இந்த மயிர்க் கூச்செறியும் சம்பவத்தை ஸ்டான்ஸ் காணொளியாக வெளியிட்டார்.
காட்டிற்குள் கூடவே வந்த கரடி

காட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் இடங்கள் எவ்வளவு அழகாக இருக்கும்! ஆனால் நம்முடன் ஒரு காட்டுவிலங்கும் கூட வருகிறது என்றால் எப்படி இருக்கும்? அதுவும் ஒரு கரடி நம்மோடு வருகிறேன் என்று அடம் பிடித்தால்?
அய்யோ சாமி.. ஆளை விடுங்கள்.. காடும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்.. ஓடிவந்துவிடலாம் என்று நினைப்பீர்கள் அல்லவா? இதுபோன்ற ஒரு சம்பவமே அமெரிக்காவில் ரோட் ஐலான்டில் (Rhode island) நடந்தது. அங்கே இருக்கும் ப்ரன்டா மார்க் ரோஸ் கேம்ப் என்பவருக்கு நடந்த உண்மைச் சம்பவம்.
நண்பகல் வேளை. அப்போதுதான் தன் காருக்குப் பக்கத்தில் ஒரு கரடி பதுங்கி இருப்பதை ப்ரன்டா பார்த்தார். எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. பட்டென்று காருக்குள் நுழைந்து கதவை இழுத்து மூடினார். கரடி விடுகிறமாதிரி இல்லை. அதுவும் அவரது காருக்குள் ஏற முயற்சி செய்ய ஆரம்பித்தது. முதலில் டிரைவரின் சீட்டில் உட்காரப் பார்த்தது. அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. காரின் அடுத்த பக்கத்திற்கு நகர்ந்தது. அங்கே உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. பாசஞ்ஜர் பக்கத்தின் வழியாக எப்படியோ கரடி காருக்குள் புகுந்துகொண்டது. ஆனால், ப்ரன்டா வலிமையோடு எதிர்த்துப் போராட ஆரம்பித்தார்.
மரணத்தைக் கண்முன் பார்த்த போராட்டமாக இருந்தது அது என்று ப்ரன்டா பீதியுடன் நடந்த நிகழ்ச்சியை விவரிக்கிறார். இடையில் இருந்த கதவை இழுத்து மூடிவிட்டு காவல்துறையைக் கூப்பிட்டார். காவலர் வரும்போது கண்ட காட்சி. முன்கால்களைத் தூக்கிக்கொண்டு கதவின் கைப்பிடியைக் கடித்து உடைக்க அது முயற்சி செய்துகொண்டிருந்தது. காவல்துறை கூச்சல் போட்டும், சைரனை முழக்கியும் கரடியை ஒருவழியாக விரட்டினர். டிரைவரின் சீட்டின் வழியாக கரடி உள்ளே நுழைய முயற்சி செய்கிற ஒரு படத்தை ப்ரன்டா இதற்கு இடையில் எடுத்தார். இந்தப் படம் மாரகன் ஸ்டேட் அனிமல் கன்ட்ரோல் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.. அதனுடன் சேர்த்து “கரடியால் மணிக்கு 30 கி மீ வேகத்தில் ஓடமுடியும். ஆனால்? மனிதனால்? கரடி. வனவிலங்கு!”.
அலங்கோலத்தின் கணினி வடிவம்

“உலகில் உள்ள சர்வ மால்வேர்களையும் அதாவது கம்ப்யூட்டர்களை செயலிழக்கச் செய்யும் எல்லாவிதமான மென்பொருட்களையும் ஒரே ஒரு கம்ப்யூட்டரில் வைத்திருந்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் என்ன விலை இருக்கும்? எங்கேயாவது பழையசாமான் கடைக்காரரிடம் எடைக்கு ஏதாவது போட்டுக்கொடு என்று சொல்லிக் கொடுப்பதை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால் தவறு. ஆனால் எவ்வளவு விலை இருக்கும் தெரியுமா? 1,34,00,000 டாலர். இந்திய ரூபாயில் எவ்வளவு சைபர்கள் போடவேண்டும் என்று எழுதிப் பார்த்தால் உங்களுக்குத் தலைசுற்றும்.
The persistence of cayos என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கம்ப்யூட்டர் சாம்சனின் மாடல். உய்யோவோ டாம் என்ற கலைஞர் ஒரு கலைவடிவத்தின் பாகமாக இதை உருவாக்கி இருக்கிறார். உலகிலேயே மிகவும் மோசமானதான வானக்ரி, ப்ளாக் எனர்ஜி, ஐ லவ் யு, மை டூம், சோபிக், டாக் டப்பிலா போன்ற எல்லா மால் வேர்களும் (malwares) இதில் உட்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 95 லட்சம் கோடி டாலர் இழப்பை இவை ஏற்படுத்தின. இந்தத் திட்டம் சைபர் உலகத்தின் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனைகளின் பொருள் ரீதியான வடிவம் என்ற நிலையில் உருவாக்கப்பட்டுள்ளதாக டாம் கூறுகிறார். இருந்தாலும் இந்த அலங்கோலத்தின் மொத்த உருவத்தை இணையத்தில் எந்தவிதத்திலும் நுழையவிடாமல் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறார்கள். சும்மா ஒரு ப்ளக் இன் செய்தாலே போதும்! உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தகவல் தொடர்பு சாதனங்கள் எல்லாவற்றையும் தாறுமாறாக்கிவிடும் திறனுடையது இது!”.
உப்புப்பெறும் விஷயம்

“உப்பு’ என்ற சோடியம் குளோரைடைப் பல சமயங்களிலும் மிக சர்வ சாதாரணமாகவே காண்கிறோம். அதனால்தான் முக்கியம் இல்லாத விஷயங்களைக்கூட நாம் பொதுவாக ‘ உப்புப் பெறாத விஷயம்’ என்று எள்ளி நகையாடுகிறோம். “உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே’, ‘ உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்..’, ‘உப்பிட்டவரை உள்ளவும் நினை’ , ‘ உப்புக் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியதைப் போல..’ என்று பலப் பழமொழிகளும் உப்பின் பெருமையை நிலைநாட்டுகின்றன. சித்தர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் கடைபிடிக்க வேண்டியதாகச் சொல்லிய ஐந்து வெண்ணிறப் பொருட்களில் உப்புக்கும் முக்கிய இடம் உண்டு.
தேசத்தந்தை மகாத்மா காந்தி நாம் அல்பமாக நினைக்கும் இந்த உப்பை வைத்துத்தான் சூரியன் மறையாத பேரரசாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே நடுங்க வைத்தார். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு NaCl. இதில் ஒரு சோடியம் அணுவும், ஒரு குளோரின் அணுவும் உள்ளன.
மனித உடலியக்கத்திற்கு சோடியம் என்ற தனிமம் அத்தியாவசியமானது. இரத்த அழுத்தம், இரத்தத்தின் அளவு (blood volume) போன்றவற்றை ஒழுங்குபடுத்தக் குறைந்தது 180 மில்லிகிராம் உப்பு நாளொன்றுக்கு நம் உடலுக்குத் தேவையாக இருக்கிறது.
வீட்டில் சமைக்கப்படும் உணவுகளின் மூலமாக மிகக் குறைவான அளவிற்கே உப்பு நம் உடம்பினுள் செல்கிறது. வெளியில் நாம் வாங்கி உண்ணும் உணவுகளில் இருந்து சுமார் 75% உப்பு நம்மிடம் வந்து சேர்கிறது. உப்பு கூடுதலாக அடங்கியுள்ள உணவுகளே உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணமாகிறது.
லேசாக வீட்டில் மனைவியோ அல்லது தாயோ சமையலில் உப்பைக் குறைவாகப் போட்டால் சாப்பாடு வேண்டாம் என்று கோபமாகக் குப்பையில் வீசியெறிபவர்கள் பலர் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாகக் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம்தான் இது. அதனால் உப்பை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே நம் உடலுக்கும், உள்ளத்திற்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது.
தொடர்புக்கு: nrvikram19@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “தொடர்: வியப்பூட்டும் விந்தை செய்திகள் (4)”
சின்ன சின்ன தகவல்கள் தேடி திரட்டி தந்தமைக்கு நன்றி
LikeLike