சமையல்: மீல் மேக்கர் தோசை

சமையல்: மீல் மேக்கர் தோசை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பார்வையற்றோருக்குச் சவாலான பல கலைகளில் இன்றைய பெண்கள் எதிர்ப்பை மீறிப் பயிற்சி பெற்று சிறந்து விளங்குகின்றனர். குடும்ப வண்டி நிதானமாக ஓட வேண்டுமென்றால், பாரம்பரியத்தையும், புதுமைகளையும் சேர்த்துத் தருகிற ஸ்வாரஸ்யமான உணவுமுறை இருக்க வேண்டும். காலம் காலமாக பெண்களுக்கே உரியதாகச் சொல்லப்படும் சமையல் கலைக்குப் பார்வையற்ற மகளிரும் விதிவிலக்கல்ல என்று பலர் நிரூபித்து வருகிறார்கள்.

சமைப்பது ஒரு கலை என்றால், அதை தம்மைப் போன்ற பார்வையற்ற மகளீருக்கு அவர்களுக்குப் புரியும்படி சொல்லித் தருவது அதைவிடச் சிறந்த கலை என்றுதான் நான் சொல்லுவேன். எத்தனையோ பேர், எத்தனையோ சமையல் குறிப்புகளைக் கொடுத்தாலும், கோயம்புத்தூர் ஜோதி அக்கா எப்பொழுதும் ஸ்பெஷல்தான். அவர்களுடைய கணீர்க்குரல், தெளிவான தமிழ், இனிமையான பேச்சு, கூடுதல் விளக்கங்கள் எல்லாம் சேர்த்து ஒரு ரெசிப்பியை ஒருமுறை கேட்டாலே மனதில் பதிவித்துவிடும். அவர்களது உடல்நலக் குறைபாடுகளுக்கு மத்தியிலும், நமக்காகப் புது ரெசிப்பியைத் தந்தமைக்கு நன்றி கூறியபடி அவர்களோடு சமையலறைக்குச் செல்வோம்!

தேவையான பொருட்கள்:

ஒரு டம்லர் பாசிப்பருப்பு,

அரை டம்லர் பச்சரிசி,

10-20 மீல் மேக்கர்கள்,

தேவையான அளவு உப்பு.

செய்முறை:

ஒரு டம்ளர் பாசிப்பயறு (நாட்டுப்பயிராக இருந்தாலும் சரி, ஆடினரியாக இருந்தாலும் சரி) எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோதும். தேவைப்பட்டால் அரை டம்ப்லர் பச்சரிசியைச் சேர்த்து 6 மணிநேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும். நாம் குருமா வைக்கப் பயன்படுத்தும் மீல் மேக்கர்களை 10 முதல் 20 வரை எடுத்து அரைப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகத் தண்ணீரில் தனியாக ஊறவைக்க வேண்டும். நன்றாக நீர் விட்டு அலம்பி, இரண்டையும் மிக்ஸி அல்லது கிரைண்டரில் ஆட்டிக்கொள்ளலாம். உப்புப் போட்டுப் பிசைந்து வைத்துவிடுங்கள். ஒரு இரவு முழுவதும் ஊற வேண்டும். 

காலையில் எழுந்து அதற்கு சைட் டிஷ்ஷாக தக்காளிச் சட்டினி அல்லது தேங்காய்ச் சட்டினி செய்துகொள்ளலாம். தோசை இன்னும் டேஸ்டாக வர வேண்டுமென்றால், அந்த மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் எல்லாம் சேர்த்து தோசையாக ஊற்றிக்கொள்ளலாம். உளுந்து சேர்க்காமல், மீல் மேக்கர் மற்றும் பாசிப்பருப்பு பயன்படுத்துவதால், அது வேகக் கொஞ்ச நேரம் ஆகும். நிதானமாக வேகவைத்து, சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், மீல் மேக்கர் பெண்களுக்கு ரொம்ப நல்லது. சோயா எல்லாரும் சாப்பிடச் சொல்கிறார்கள். சோயா, பால் சோயா என்று ஏதோ வகையில் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். மெனோபாஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு மீல்மேக்கரோ, சோயாவோ பேருதவியாக இருக்கும். ஈஸ்ட்ரோஜன் குறையும்பொழுது, நம் உடல் சூடு அதிகரிக்கும் அல்லவா? நிறைய பிரச்சனைகள் வரும். இந்த சோயா எடுத்துக்கொள்வதால், மெனோபாஸ், ப்றீ மெனோபாஸ் சமயங்களில் வரக்கூடிய எல்லாப் பிரச்சனைகளும் சரியாவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த ரெசிபி சொல்லியிருக்கிறேன்.

என்ன வாசகர்களே! மீல் மேக்கர் தோசை புதிய ரெசிபிதானே! அக்கா சொன்னபடி சமைத்துச் சுவைக்கும் ஆசை வந்துவிட்டதல்லவா? இதோ நானும் வருகிறேன். எனக்குத்தான் முதல் தோசை!

***தொகுப்பு: X. செலின்மேரி

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *