பெண்களைப் பற்றிய மதிப்பீடுகள் எண்ணற்றவை. அது சமுகத்தின் காலாவதியாக உருப்பெற்று பழுப்பேறிய பக்கத்தின் வெளிப்பாடு. அறத்தின் வழி நிற்காத உளறல்களின் கூட்டு குவியல் அவை. அவற்றை எதிர்ப்பது எளிதன்று. ஆயினும் அத்தகைய அழுக்காறுகளை மோதி மிதித்திட, துடைத்து அதன் தடத்தினை அழித்திட வேண்டிய தேவை இருக்கிறது.
குறிப்பாகப் பெண்களின் உடல் மற்றும் நடத்தை சார்ந்து கட்டவிழ்க்கப்பட்டு புழக்கத்தில் இருக்கும்படிப் பராமரிக்கப்படும் விஷமக் கருத்தாக்கங்கள் ஆபத்தானவை. சுயநல போக்கு கொண்டவை. ஆண்களை அதிகாரம் உள்ளவர்களாக வைத்திருக்க பயன்படுபவை. இது போன்ற எதிர்மறை உரையாடல்கள் பலதரப்பட்ட துறைகளின் அங்கமென காணப்பட்டாலும், அது ஊடகத்துறையில் மிகவும் இயல்பாக ஒட்டிக்கொண்டு கசந்து விஷத்தேன் சொட்டச் சொட்டக் கிடக்கிறது. அதிலும் வெள்ளித்திரையில் பட்டவர்த்தனமாக இருக்கத்தான் செய்கிறது. திறமைகளை இருட்டடிப்புக்கு உள்ளாக்கி இம்சித்தபடி இழையோடி, சரி ஒரு மாற்றத்திற்குச் சொல்லுவதென்றால், திரையோடி கிடக்கிறது. இதனை சற்று விரிவாகவும் அதற்க்கு இக்கால மைய பெண் கதா நடிகைகளின் எதிர்வினையும் குரித்து சற்று காண்போம்.
இதுவரை வெள்ளித்திரை தன்னகத்தே கொண்டிருக்கக்கூடிய ஆணாதிக்க சிந்தனைகள் எவ்வித கேள்வி கேட்டலுக்கும் உள்ளாகவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். திறமையான நடிகராக இருந்தால்கூட ஒரு பெண் எத்தகைய பாத்திரத்திற்கும் நடனத்திற்கும் வரையறுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறாள் என்பது ஏனோ பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை. பயில்வான் என்கிற ஒரு நடிகர், கிசுகிசுப்பு சொல்கிறேன் பேர்வழி என்கிற போர்வையில் திரை உலகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகைகள் குறித்து கசியவிடுகிற மோசமான, தரக்குறைவான, உள்நோக்கமுள்ள தகவல்கள் எதையுமே இதுவரை மிகப் பெரிய ஆண் பிரபலங்கள் அந்தத் துறையில் இருந்துகொண்டே எவ்விதக் கண்டனக் குரலும் அதற்கு எழுப்பியதில்லை என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதை அனுமதிக்கிற ஆண் பிரபலங்களின் எண்ணம் கவனிப்புக்கு உள்ளாகாமல் போகிற இடத்தில்தான் ஆணாதிக்கம் அப்படியே தேங்கிக் கிடக்கிறது.
வெள்ளித்திரையில் மட்டுமல்ல, சின்னத்திரையில்கூட நடிக்கிற பெண்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் மற்றும் முன்னுரிமை போன்ற எதற்குமே உரிமைக்குரல் பெரிதாக எழுப்பப்பட்டதாகத் தெரியவில்லை. இதைத் தன்னை பிம்பமாகக் கட்டியெழுப்பிக் கொண்ட ஆண்கள் ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் வினவலாம். ஆனால் அவர்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கத்தானே செய்கிறது என்பதே எனது பதில். பிரபல நடிகர்கள் இடையே இருக்கக்கூடிய பாலினத்தை முன்னிறுத்திய ஊதிய வேறுபாடுகள் ஏனோ அதிர்வுகளை ஏற்படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டு புழக்கத்தில் இருக்கிறது.
நடிகைகள் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட நடத்தப்படும் ஆடிஷன் என்கிற போர்வையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிற நிலைதான் இன்றும் இருக்கிறது என்பதை எப்படிப் புறந்தள்ளிவிட முடியும்? அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிற நடிகைகள் அழகு என்கிற கட்டமைக்கப்பட்ட இலக்கண சட்டகத்திற்குள் உட்பட்டால் மட்டுமே வாய்ப்பினைப் பெறுகிற இடத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கக்கூடிய நடனத்திறமை, உடல் மொழியை வெளிப்படுத்துதலில் இருக்கக்கூடிய ஆற்றல் ஆகியவற்றை அளவிடாகக் கொள்ளாமல், செக்கச் சிவந்த நிறத்தினை வைத்து மட்டுமே அல்லது அதனை முதன்மை அளவிடாகக்கொண்டு மட்டுமே அவர்கள் கதாநாயகி அந்தஸ்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது மிகப் பெரிய அபத்தம் அல்லவா?
புறந்தள்ளிவிட முடியாத திறமையைக்கொண்டு ஒரு நடிகை வாய்ப்பு பெற்றுவிட்டால் அதனைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஏராளமான அர்ப்பணிப்பையும், அவமானங்களையும், வசைச் சொற்களையும், புறக்கணிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்தும் ஏன் இதுவரை கண்டனத்திற்கு உள்ளாகவில்லை? நாகரிகம் குறித்து மேடையில் முழங்கித் தள்ளுகிற திரை உலக ஜாம்பவான்கள் இவ்வாறு பெண் நடிகைகளை அழகு என்கிற கட்டமைப்பிற்குள் சுருக்கித் திறமைகளை முடக்குவதை நாகரீக வளர்ச்சிக்கு வெளியே வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களா என்கிற கேள்வியை இனியும் எழுப்பாமல் இருக்க முடியாது.
நிலைமை இவ்வாறு இருக்க, இதனைத் தகர்த்திருக்கிற முயற்சியில் பெண்ணை மையக் கதாபாத்திரமாகக்கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து, ஒட்டுமொத்தத் திறமையும் கொடுத்து, அதனை ஜெயிக்கவைத்து அத்தகைய படங்களை தவிர்க்க இயலாத ஒன்றாக மாற்றி பதில் தர போராடிக்கொண்டிருக்கிறார்கள் சமகால பிரபல நடிகைகள். உதாரணத்திற்குச் சொல்வதென்றால், ஜோதிகா மற்றும் ஊர்வசி நடித்து வெளிவந்த மகளீர்மட்டும், அவ்வாறே ஜோதிகா தனது நடிப்பின் பரிணாமங்களைப் புலப்படுத்தி வெளிவந்த ராட்ஷசி, காற்றின்மொழி, ஜாக்பாட். நயன்தாரா தனது அசாதாரணமான நடிப்பில் தந்த மாயா, நெற்றிக்கண், கோலமாவு கோகிலா. த்ரிஷாவின் மோகினி, டாப்சியின் கேம் ஓவர், அனுஷ்கா அசத்தி வெளிவந்த பாகமதி, அருந்ததி; ஸ்ரீ பிரியங்காவை முக்கிய கதாபாத்திரமாகக்கொண்டு வெளிவந்த மிகமிக அவசரம், அமலாபால் வித்தியாசமாக நடித்து கலக்கியிருக்கும் ஆடை மற்றும் அம்மா கணக்கு ஆகிய படங்களும், இதுபோன்ற இதரப் படங்களும் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அவை ஆணாதிக்க அசட்டுத்தனத்துக்குக் கொடுத்த பதில் சாதாரணமான ஒன்று அல்ல. அவைகளினூடே பெண்களின் குரல் கம்பிரமாக ஒளிர்ந்தது. நடிப்பாற்றல் கவனிப்புக்கு உள்ளானது. ஐட்டம் பாட்டுக்கு அல்லது கதாநாயகனுக்கு காதல் ஜோடியாக வளம்வர மட்டுமே நாங்கள் அல்ல என்கிற செய்தியைக் கைதட்டிக் குதுகளிக்கும்படி அவை சான்றாயின, பேசின.
மேலும் அதுபோன்ற கதைகளில் முன்னிறுத்தப்படுகிற சிந்தனைகள் சமூகப்பார்வைக் கொண்டதாக இருக்கின்றன. பழமைவாத பெண் சித்தரிப்பை எள்ளி நகையாடுகிற தன்மையைக் கொண்டிருக்கின்றன. வக்கிரத்தை அவ்வப்பொழுது பெண்களுக்குத் தருகிற ஆணின் மனக் கட்டமைப்பைச் சாடுகிற கதைகளாக இருக்கின்றன.
நடிகைகள் மையக் கதாபாத்திரத்தை ஏற்று திறம்படச் செய்து முடிக்கிற கதைகள் எல்லாம் அவை பேசப்படும் சிந்தனைக்காகத் தன்னுடைய இருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்யத் தவறுவதில்லை என்பதை உறக்கப் பேசியாகவேண்டும். இத்தகைய கதைச் சித்தரிப்புகள் குடும்ப வெளிகளில் பெண் காலந்தொட்டு எதிர்கொண்டுவரும் வலிமிகு ஆதிக்கங்களை அழுத்தமாகப் பேசுகின்றன. அதுபோன்ற சிந்தனைகளை உரத்து வெளிப்படுத்தியதாக தி கிரேட் இந்தியன் கிச்சன், கனா, ௩௬ பிளஸ், ஜமுனா டிரைவர், அறம், அருவி, சலாம் வெங்கட், ஐரி, பேபி போன்ற படங்களைக்கூட குறிப்பிட்டாக வேண்டும்.
இதுபோன்ற படங்கள் இப்பொழுதெல்லாம் திரைஅரங்க வெளியீடுக்குக் காத்துக்கிடப்பதில்லை. அது ஆணாதிக்கம் இழையோடிக் கிடக்கிற, பணம் புழங்கும் வெளியிடுகளைப் பெரிதாகப் பொருட்படுத்துவது இல்லை. மாறாக அவர்களே இதுபோன்ற திரைக் காவியங்களைத் தேடித் தேடி ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டன என்பதே இதன் சிறப்பு. இருப்பினும் அவற்றிற்கு அங்கு ஒரு நியாயமற்ற தடை இருக்கத்தான் செய்கிறது. அதனால் இப்பொழுது பிரபலம் அடைந்துவருகிற ஒடிடி தளங்களை இதுபோன்ற கருத்தாழம் மிக்க படங்கள் தழுவிக்கொள்கின்றன. அங்கு ஜெயித்து சமுக எண்ணங்களை வெகுவாகப் பாதிக்கவும் அவை தவறுவதில்லை.
இப்படிப்பட்ட படங்களை நடித்து ஜெயிக்கவைப்பதன் மூலம் அவர்கள் ஆற்றுகிற எதிர்வினையை இனம் கண்டு அவை அதிகம் பேசப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கருத்தரங்கங்கள் மற்றும் சமூக உரையாடல்கள் மூலம் இவ்வாறான படங்கள் தாங்கள் எடுக்கப்படுவதன் இலக்கை அடைவதை உறுதிசெய்ய வேண்டும். இதனை சமகாலத்தில் மிகத் திறம்பட செய்து வருகிற ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்தும், அவருடைய தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட சவால்கள் அதை மீறி அவர் சாதித்துக் காட்டியது குறித்தும் இந்தக் கட்டுரையில் பேச வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ஏற்கனவே போதுமான அறிமுகம் இந்த பாணியிலான திரைப்படங்களுக்குக் கொடுத்துவிட்டதால் மிகச் சுருக்கமாக அவர் தன்னுடைய வாழ்க்கை குறித்துப் பேசிய தகவல்களை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். தன் தந்தையை சிறுவயதிலேயே இழந்தபிறகு, தன் அன்னை எடுத்த கடுமையான முயற்சி மற்றும் வெளிப்படுத்திய அசாதாரணமான தன்னம்பிக்கை உழைப்பு ஆகியவற்றால் அவரின் குடும்பம் மேம்பட்டாலும் அடுத்தடுத்து இரண்டு சகோதரர்களை இழந்து குடும்பம் வாடியிருக்கிறது. இந்த சகோதர இழப்பு நேரிட்ட காலகட்டம் மிகவும் துயரமானது. அவர்கள் சம்பாதித்து குடும்பத்தை ஸ்திரப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கைக் கீற்று தென்படும் வேளையில் துடிப்பான இளம் வயதில் மறைந்துபோனார்கள். ஆனாலும் விடாமுயற்சியாக ஐஸ்வர்யா வலுவான பள்ளிக்கல்வி மற்றும் சிறப்பான உயர்கல்வியை தன் அன்னையின் துணையோடு பெற முடிந்திருக்கிறது.
அதன்பிறகு ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு வெளியே கூவிக்கூவி வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்த்து சம்பாதிக்கிற வாய்ப்பே அவருக்கு ஆரம்பகட்டத்தில் கிட்டியிருக்கிறது. இருப்பினும் இந்தியன் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முகவராக பணியாற்றிய அவரின் அன்னைக்கு இந்த சொற்ப வருமானம் கொண்டு கைகொடுக்க முடியவில்லை என்பதால் நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அங்கு அவரைத் திறமைகொண்டு மதிப்பிடாமல், “நீ கண்டிப்பாக கதாநாயகிக்கு உரிய தோற்றம் கொண்டவள் அல்ல” என்பதை முகத்துக்கு நேராகச் சொல்லக் கேட்டிருக்கிறார். அதன்பிறகு தன்னுடைய எண்ணத்தையும் பயணத்தையும் மாற்றி, இனி மைய கதாபாத்திரமாக பெண்ணை கொண்டு எடுக்கப்படும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற வைராக்கியம் அவருக்குள் ஊற்றெடுத்திருக்கிறது, அதையே இன்றும் அவர் வெற்றிகரமாக செய்து கொண்டு வருகிறார்!
வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நடிகைகள் போன்று அவர் அழகாக இல்லாமல் இருக்கலாம். அவர்கள் பேசுகிற நுனி நாக்கு ஆங்கிலம் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு வசப்படாமல் இருக்கலாம். ஆனாலும் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி அதில் தனது முழு உழைப்பையும் ஈடுபாட்டையும் கொடுத்து கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் ஜெயித்து ஜொலித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். அதிலும் குழந்தைகளின் தாயாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் காணப்படும் பெண் கதாபாத்திரங்களை அவர் ஏற்று நடித்திருக்கிற படங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கொண்டாட்டத்திற்குரியவை.
தன் அன்னையின் வலியை, வேதனையைக் கண்டு, உணர்ந்து, உழைத்து ஜெயித்தவர். அதுபோன்ற படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது அவர் அன்னைக்குக் கொடுக்கிற நன்றி பாராட்டுதல். ஆகவே, இந்த குணத்தினை வியக்காமல் கடந்துபோவது அறம் அன்று. தன் அனுபவம் குறித்து யூட்டூபின் டெட் டாக்ஸ் என்கிற காணொளியில் பேசியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் “எல்லா படத்திலும் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்” என்பதை அழுத்தம் திருத்தமாக பதியவைக்கத் தவறவில்லை.
நான் அவரைக் குறித்து விளக்கி வியந்து பேசுவதைத் தேர்ந்தெடுக்கக் காரணம், படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் எளிமை, நேர்மை, விடாமுயற்சி வாழ்வில் வருகிற சவால்களை ஒருகை பார்த்துவிடுவோம் என்கிற துணிச்சல் போன்றவைதான். அது மட்டுமல்ல தன்னைக் கதாநாயகிக்காண தோற்றம் கொண்டவள் அல்ல என்று நிராகரித்த ஆணாதிக்கத் திரை உலகத்திற்கு அவர் கொடுக்கிற சவுக்கடி பதில்களாக அவரின் தேர்ந்தெடுப்பையும் நடிப்பையும் பார்ப்பது இதுபோன்ற போராளிகளுக்கு நாம் கொடுக்கிற அங்கீகாரமாகவும் நாம் செலுத்துகிற வீரவணக்கமாகவும் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
இவர்கள் எடுக்கிற படங்களுக்கு திட்டமிட்ட விமர்சனங்கள் வராமல் இல்லை. அவை பெண் நடிகைகள் கையாளும் துணிச்சலை முடக்க முயலுகின்றன. இத்தகைய படங்கள் பேசுகிற கதைகள் பெரும்பாலும் மரபுகள் மற்றும் பாரம்பரியம் என்று திணிக்கப்பட்டவற்றைக் கட்டுடைக்கின்றன. அதனால்தான் அவை அதிக புறக்கணிப்புச் சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது எனத் தோன்றுகிறது. வசூல் ரீதியாக ஐஸ்வர்யா மற்றும் இதர நடிகைகளின் படங்கள் ஜெயிக்காமல் இருக்கலாம், ஆனாலும் இந்தப் படங்கள் தன்னகத்தே கொண்டிருக்கும் தனித்துவத்திற்கும், ஆணாதிக்க கட்டமைப்பு தகர்ப்பிர்க்கும், பாலின சமத்துவப் போராட்டத்திற்கும் அடையாளப்படுத்தப்பட வேண்டியவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. ஆகவே முதிர்ச்சியும் முயச்சியும் மகுடம் சூடுவதை திறந்த மனதுடன் பாராட்டுவோம் வாரீர்! அப்படிப் பாராட்டுவதன் வாயிலாகத் திறமை பெண்களின் உடன்னிர்ப்போம், மனிதமின்றி அவர்கள்எதிர்கொள்கிற கவச்சி அரசியலைத் தொளுரித்து, அதன் முகத்திரை கிழித்து கோர வன்மங்களை உடைத்து மாற்றுவோம் வாரீர்! அப்படி செய்தால் மாச் ௮ மட்டும் அல்ல, ஆண்டின் அத்தனை நாட்களுமே நமது மதிப்புக்குரிய மகளிருக்காண தினங்களாகும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை!
***தொடர்புக்கு: mahendranlitmcc@gmail.com
Be the first to leave a comment