தலையங்கம்: அடிப்படை விழுமியத்துக்கே எதிரானது

தலையங்கம்: அடிப்படை விழுமியத்துக்கே எதிரானது

ஆக்கம் ஆசிரியர் வெளியிடப்பட்டது
தொடுகை பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். உரையாடலும், உரையாடல் நிமித்தமும்.

“அமைதி நிலையமானது சென்னை சென்ட்ரல்” என்ற வாசகம் பெருமிதத்தோடு அனைத்து நாளிதழ்களின் பக்கங்களை நிறைத்துள்ளது. ஆனால், யாருக்கான அமைதி என்பதில்தான் தெளிவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனி டிஜிட்டல் வழியில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட உள்ளது.

நிலையத்துக்கு வந்து செல்லும் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள், அவை வந்துசெல்லும் நடைமேடை குறித்த தகவல்கள் என ஒலிபெருக்கி மூலமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் நேற்று பிப்ரவரி 27 2023 முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சாமானியர்களின் போக்குவரத்துப் பயன்பாட்டில் முதல்த்தெரிவாக இருப்பது ரயில்கள்தான். அதிலும், படிப்பறிவற்ற, கடைக்கோடி மனிதர்கள்தான் அதிகம் ரயில்களில் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் வெளியாகும் அறிவிப்புகள் பேருதவியாக அமைபவை.

சரியாக ஆலோசிக்கப்படாத, அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருத்தில்கொள்ளாததுமான இந்த அறிவிப்பால் வேறு எவரையும்விட அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள். ஏனெனில், ரயில்களை தங்களின் அன்றாடத்தில் அதிகம் பயன்படுத்தும் பார்வையற்றவர்கள் கேட்டல் புலத்தையே அதிகம் சார்ந்திருப்பவர்கள். ரயிலின் வருகை, புறப்பாடு, தடம் எண் ஆகியவற்றை அறிந்த்உகொள்வது மட்டுமல்ல, ஒலிபெருக்கியின் அறிவிப்புச் சத்தத்தையே தங்களுக்கான வழிகாட்டிக் குரலாகப் பின்தொடர்ந்து,  நெரிசலும், இறைச்சலும் நிறைந்த நடைமேடைகளில் தங்கள் பயணத்தை நெறிப்படுத்திக்கொள்கிறார்கள்.

பார்வையற்றோரைப் பொருத்தவரை, பிறவழிப்  பயணங்களைவிட ரயில்ப் பயணங்கள் அவர்களிடம் அதிக உத்வேகத்தைத் தோற்றுவிக்கக்கூடியவை. காரணம், நன்கு திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட வசதிகளைக் கொண்ட ரயில்ப்பயணமானது, ஒருவிதத் தற்சார்பையும்  தன்னம்பிக்கையையும் அவர்களிடம் ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், டிஜிட்டல் பலகையைப் பார்த்து அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தென்னக ரயில்வேயின் அறிவிப்பு, பார்வையற்றவர்கள்ளின் அணுகல் உரிமையை (Right to Access) முற்றிலும் இல்லாமல் ஆக்குவதோடு, தடையற்ற சூழலை (Barrier Free Environment) ஏற்படுத்துதல் என்கிற இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

எனவே, ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்புகள் வழங்கும் சேவையை உடனடியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் அமல்ப்படுத்திட தென்னக ரயில்வே முன்வர வேண்டும். தடையற்ற சூழல் என்பது மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை அரசின் பொதுத்துறை நிறுவனமே இல்லையென மறுப்பது அரசின் விதிகளுக்கும் புறம்பானது, அடிப்படை விழுமியத்துக்கே எதிரானது.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *