மீள்: பேட்டி: இசைக் கலைவாணி

மீள்: பேட்டி: இசைக் கலைவாணி

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

இசையின் ஏபிசிகூடத் தெரியாத உலகம் முழுதும் உள்ள ரசிகர்களின் உள்ளங்களை “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே” என்றபடி, மொழிகளைக் கடந்த மல்லிகையாகிக் கொள்ளைகொண்ட வாணி ஜெயராம் என்ற அதிசய மலர்முகம் கொண்ட கவிபாடும் இசைக்குயில் அன்று, “தூக்கம் எனக்கு வல்லதான்” என்று ரகசியமாகப் பாடியதை மறந்து, ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு, நிரந்தர நித்திரையில் ஐக்கியமாகிவிட்டது.

அந்தக் குயிலை எனக்கு அறிமுகப்படுத்தியது “சந்தோஷ ராகத்தில் சங்கீத ஸ்வரம் பாடி, வணக்கம் வணக்கம் வணக்கம் அம்மா, அன்னையே ஆரோக்கிய அன்னையே, கோடி விண்மீன் வானத்திலே கண்டேனம்மா, விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம்” போன்ற கிறிஸ்தவ பாடல்கள்.

சிறுவயதில் பிற மத மொழிப் பாடல்களைப் பாடுவதையோ ஏன் கேட்பதையோகூட விரும்பாத நான், அருட்சகோதரிபோல உருகி உருகிப் பாடும் அவர்களுடைய திறமையைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். மதங்களைக் கடந்து, முத்தமிழில் முருகன் உள்ளிட்ட சகல தெய்வங்களையும், தெய்வீக மணம் கமழும் பாடல்கள் மூலம் ஆராதனை செய்து, மகிழ்ந்தும், மகிழ்வித்தும் இருக்கிறார். அவருடைய பாடல்கள் இன்றும் பல கோவில்களிலும், மதக் கூட்டங்களிலும் ஒலிவலம் வந்தபடிதான் இருக்கிறது.

இப்போது சினிமாவில் அவர்கள் பாடிய பாடல்களைத் தேடியபோது, “அந்த மானைப் பாருங்கள் அழகு, மான் கண்டேன் மான் கண்டேன், ஒரே நாள் உனை நான், மேகமே மேகமே, நானே நானா, கவிதை கேளுங்கள், வா வா என் வீணையே, வசந்தகால நதிகளிலே, கட்டிக் கரும்பே கண்ணா,என்னுள்ளில் எங்கோ, மல்லிகை முல்லைப் பூப்பந்தல், நான் ஒரு கன்னிப் பொண்ணு” போன்ற பாடல்கள் விருப்பப் பாடல்கள் பட்டியலில் இட ம்பிடித்துக்கொண்டன.

“போலிரே  பப்பீ ஹரா” என்ற ஹிந்தி மொழிப் பாடலுடன் வட இந்தியத் திரையில் அழகிய இளம் மங்கையாக அறிமுகமாகி, தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட 19 தென்னிந்திய மொழிகளில்  தனக்கென்று ஒரு பாதையை வகுத்துப் பயணித்த இசைக்குயில், தன் இசைப் பயணத்தை நிறுத்திக்கொண்ட செய்தி கேட்டு ஒட்டுமொத்த இசை ரசிகர்களின் இதயத் துடிப்பின் வேகம் குறைந்தது என்று  சொல்வது பொருத்தமாக இருக்கும். சூழலுக்கு ஏற்ப நவரசம் சொட்டச் சொட்டப் பாடி மகிழ்வித்த அந்த இசை மேதைக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, எல்லா சமூக  வலைதளங்களிலும் அவர் தொடர்பான பாடல்கள், கருத்துகள், பேட்டிகள், நினைவுப் பகிரல்கள், பாடல் நிகழ்ச்சிகள் ஆகியவை பகிரப்பட்ட வண்ணம் இருந்தன. அவரை ஒரு கேள்வியின் நாயகன் (பார்வையற்றவர்) 2012லேயே பேட்டி எடுத்ததாக வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பகிரப்பட்டது.

ஆம் 2012இல் பேராசிரியர் திரு. ரகுராமன் அவர்கள் ‘வள்ளுவன் பார்வை’ இணையத்தின் தீபாவளி சிறப்பு வெற்றித்திலகம் நிகழ்ச்சிக்காக எளிமையே உருவான அந்த இசைக்கடலைப் பேட்டி கண்டிருக்கிறார். “உலகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிப்பது எழுத்து” என்று பாடிய அந்தப் பாடகியின் வார்த்தைகளை எழுத்தாக்குவது என்று முடிவெடுத்து,  அந்தப் பேட்டியின் ஒலிவடிவக் கோப்பும், எழுத்தாக்குவதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றதன் விளைவே இப்பகிர்வு.  பூமி சுற்றும் மட்டும் நாதமெனும் கோவிலில் அந்த இசைக் கலைவாணி ஏற்றிய ஞான விளக்கின் ஒளியோடு இந்த எழுத்து நிலைத்திருக்கட்டும்.

இடது ரகுராம், வலது வாணி ஜெயராம்

ரகுராமன்: வணக்கம் மேடம். வாழும் இசை அரசியைச் சந்திப்பது பெருமைக்குரிய விஷயம். எங்களுடைய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துககளைத் தெரிவித்துக்கொண்டு, இந்த வாய்ப்பை நல்கியமைக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

வாணி: திரு. ரகு அவர்களே! உங்களுக்கும் என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் இணையத்தைச் சேர்ந்த அன்பர்கள் எல்லோருக்கும் என் மனம் கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரகு: மேடம் நீங்கள் இசைத்துறையில் கால் பதிக்காத தடங்களே கிடையாது. நீங்கள் எல்லா இடங்களிலும் பரிமளித்து எல்லாருக்கும் மகிழ்வளிக்கும் ஒரு பெரிய சேவையைக் கடந்த 40 ஆண்டுகளாகச் செய்துவருகிறீர்கள். அப்படிப்பட்ட இசைத்துறைக்கு நீங்கள் வருவதற்கு விதை எப்போது விதைக்கப்பட்டது என்பதைச் சொல்லுங்கள்.

வாணி: சுமார் 42 ஆண்டுகளாக நான் திரைப்படப் பின்னணிப் பாடகராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு சிறுவயதிலிருந்தே என் தாயாரும் மூத்த சகோதரிகளும் சொல்லக் கேட்டிருக்கிறேன். சரியாக இரண்டரை மூன்று வயது இருக்கும்போதே ராகங்களை எல்லாம் சரியாகத் தெரிந்து அந்தப் பெயர்களை சொல்லுவேனாம். அதனால் இந்தக் குழந்தை சங்கீத ஞானமுள்ள குழந்தை என்பதைத் தெரிந்துகொண்டு பயிற்றுவித்திருக்க வேண்டும். என் தாயார் மிகச் சிறந்த பாடகி. அவர்  வயலின் வித்வான் திரு. ரங்க ராமானுஜ ஐயங்காரிடம் இசை பயின்றார். அவருடைய உந்துதலாலும் ஆர்வத்தாலும் ஊக்கத்தாலும்தான் நாங்கள் எல்லோரும் இசை பயின்றோம். வீட்டிலேயே ஒரு கர்நாடக சங்கீத  சூழல் நிலவும்.  மூத்த சகோதரிகள் எல்லாருமே மிகவும் நன்றாகப் பாடுவார்கள். அவர்களும் நிறையப் போட்டிகளில் கலந்துகொண்டு மெடல்கள், பரிசுகள் வாங்கியிருக்கிறார்கள்.

அம்மாவுடைய ஆர்வத்தாலும், மூத்த சகோதரிகளுடைய ஒத்துழைப்பாலும் நானும் இசையைக் கற்றுக்கொண்டேன். சிறுவயதில் இருந்தே நான் மூன்று மணிநேரம் கச்சேரி எல்லாம்கூட செய்ததுண்டு. திருமணத்திற்குப் பிறகு என்னுடைய கணவர் பம்பாயில் Indo Belgium chamber of commerce நிறுவனத்தில் executive secretary வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் நான் பம்பாய் சென்றேன். அங்கு அவர் என் குரல் வளத்தைக் கேட்டு “நீ ஹிந்துஸ்தானி இசையும் கற்றுக்கொள்ளலாமே?” என்று கேட்டார்.

எனக்கும் பெரிய அளவில் ஆர்வம் இருந்ததால், உஸ்தாத்  திரு. அப்துல் ரஹ்மான்கான் என்பவரிடம் ஹிந்துஸ்தானி இசையை முறைப்படி பயின்றேன். அவர் மிகவும் அருமையான குரு. வீட்டிற்குக் காலை 10 மணிக்கு வருவார். மாலை ஆறு மணிவரை சங்கீதம் கற்றுக்கொடுப்பார். என்னுடைய கிரகிக்கும் தன்மை அவரை வெகுவாகக் கவர்ந்ததால், என்மீது அதிக அக்கறைகொண்டு வாய்ஸ் கல்ச்சர் எனப்படும் குரல்வளம் குறித்து நிறையப் பயிற்சி அளித்திருக்கிறார். போனவாரம்கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, இன்றும்கூட குரல் எப்படி அப்படியே இருக்கின்றது என்று சக கலைஞர்கள் கேட்டார்கள். அதற்கு என் பெற்றோர், பெரியோரின் ஆசிர்வாதமும் என் குருவின் ஆசிர்வாதம் மற்றும் பயிற்சியுமே காரணம் என்று பதில் அளித்தேந்.

ரகு:  ரொம்ப சந்தோஷம் மேடம். “இந்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே” பாடல் இப்பொழுதும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. உண்மையாகவே அது நடந்தும் கொண்டிருக்கிறது. நீங்கள் எப்படி திரைத்துறைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்?

வாணி: என்னுடைய தாயாருக்கு நான் ஒரு மிகச் சிறந்த கர்நாடக இசைப்பாடகியாக வரவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் என் மனம் என்னவோ சிறுவயதிலேயே ஹிந்திப்பட பாடல்களால் கவரப்பட்டது. அந்தக் காலத்தில் வந்த ஹிந்தி சினிமாப் பாடல்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. இப்போதுபோல் தொலைக்காட்சி இல்லாத அந்த காலகட்டத்தில் ரேடியோதான் இருக்கும். தவறாமல் ரேடியோவில் அந்தப் பாடல்களைக் கேட்டு பேக்ரவுண்ட்கூட சொல்வேன். நொட்டேஷன் பவர் இருந்ததால் திரைப்படப் பாடல்களின் ஸ்வரங்களைக்கூட சொல்லிவிடுவேன்.

என்னுடைய திரைப்படப்பாடல் ஆர்வம் அம்மாவுக்கு வருத்தத்தையே தந்தது. நான் அம்மாவிடம் “ஒரு நாள்  பாரு. திரையில் இருந்து எனக்கு அழைப்பு வரும். நான் ஹிந்திப் பாடல்களைப் பாடுவேன்” என்று விளையாட்டாகச் சொல்லுவேன். எந் கனவு எனக்கு ஹிந்துஸ்தானியில் பாடுவதற்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த உஸ்தாத் அவர்கள் மூலம் நிறைவேறியது. அதாவது அவர்களிடம் என்னைப் பற்றி கேள்விப்பட்ட சிறந்த இசையமைப்பாளராகிய திரு. வசந்த்ட் தேசாய் அவர்கள் என்னை அவர் வீட்டுக்கு அழைக்க நானும் என் கணவரும் அங்கு சென்று பார்த்தோம். அவர் என் குரலைக் கேட்டுவிட்டு மறுநாளே ஒரு மராட்டி நாடகத்திற்குப் பாடி ஒலிப்பதிவு செய்ய  என்னை அழைத்தார். அந்த காலகட்டத்தில் தான் ஹிந்திப்பட இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜி என்பவர் குட்டி என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஜெயா ஹபினி அவர்கள், (தற்போது திருமதி. அமிதாப்பச்சன்) அவர்களுடைய முதல் படம் அது. “புதிய குரலைத் தேடிக்கொண்டிருக்கிறேன். வாணியின் குரல் அருமையாக இருக்கிறது. பொருத்தமாக இருக்கும். வாணியே பாடட்டும்” என்று சொன்னார் அப்படித்தான் அந்த முதல் சந்தர்ப்பம் கிடைத்தது.

வாணி ஜெயராம்

அந்தப் படத்தின் பாடல்கள் நல்ல பிரபலமாகின. அதிலும், இந்தியா முழுக்க நான் எங்கு சென்றாலும் ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, சென்னை, கேரளா எல்லாப் பகுதிகளிலும் உள்ள குழந்தைகள் “ஹம் கோ மந்க்கி” பாடலைப் பிரார்த்தனை கீதமாகப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் மியாக்கி மல்ஹார் என்ற ராகத்தைப் பற்றிப் பேச முனைந்தாலே “போலிரே பப்பி ஹரா” நினைவுக்கு வரும்படி ஒரு அற்புதமான பாடல். அந்த இயக்குனருக்கும், வசந்த் தேசாய் அவர்களுக்கும்,  பாடல் எழுதிய திரு. குல்சார் அவர்களுக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை நான் பதிவு செய்துகொள்கிறேன்.

ரகு: போலிரே பாடல் தொடர்ச்சியாக 16 வாரங்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இடம்பெற்றது என்று நினைக்கிறேன்.

வாணி: விவித் பாரதி வருவதற்கு முன்பாக பினாகா கீத்மாலா ரேடியோ சிலோன்தான் பாப்புலராக இருந்தது. அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிவரை பினாகா கீத்  மாலா என்ற நிகழ்ச்சி இடம்பெறும். அதில் பிரபலமான ஹிந்திப் பாடல்களை மட்டுமே ஒலிபரப்புவார்கள். போலிரே பப்பிஹரா  எனக்குத் தெரிந்து 16 வாரங்கள் முதலிடம் பெற்று  பெருமையைத் தந்தது.

ரகு: சில வரிகள் நீங்கள் நேயர்களுக்காகப் பாட முடியுமா?

வாணி: கட்டாயமாக. (என்றபடி சில வரிகளைப் பாடிக்காட்டினார்.

ரகு: அற்புதம் மேடம். மெய் மறந்து கேட்கும்போது உணர்வுகளோடு இதுபோன்ற பாடல்கள் கலந்துவிடுகின்றன . (பின்னணியில் ஹம்கோ மந்க்கி பாடல் குழந்தைகள் குரலில் ஒளிபரப்பாகிறது).

ரகு: தமிழ் திரைத்துறையில் உங்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?

வாணி: நான் பாடிய ஹிந்திப் பாடல்களைத் தொகுத்து இரண்டு நிகழ்ச்சிகள் தருவதற்காக அப்போதைய மெட்ராஸுக்கு 1973 ஜனவரி மாதம் இறுதியில் வந்தேன். பம்பாயில் இருந்து சில வாத்திய இசை வல்லுநர்கள் நிகழ்ச்சி அளிப்பதற்காக என்னுடன் வந்தார்கள். சென்னை மியூசிக் அகாடமியில் நான் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் தென்னிந்தியப் பெண் என்பதையும் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதையும் அறிந்து, தமிழ்ப்படப் பாடல்களை ஒலிப்பதிவு செய்வதற்கு என்னைத் தேடிக்கொண்டிருப்பதாக ஒரு அழைப்பு வந்தது. 1973 ஜனவரி 31 அன்று இப்படித்தான் தமிழில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

திரு. எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைப்பில் ‘தாயும் சேயும்’ படத்திற்காக “பொன்மயமான காலம் வரும் என்று பூவிழி காட்டட்டுமே” என்றுதான் முதல் வரி தொடங்கியது. அந்தப் பாடலைப் பாடினேன். ஆனால் அந்தத் திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்த நாள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தபோது, மலையாளப் படத்தில் பாடுவதற்காக வாய்ப்பு போன் கால் வழியாக என்னைத் தேடிவந்தது. தி கிரேட் சலீம் சவுத்ரி அவர்கள் இசை அமைப்பில், திரு. ஷிவன் அவர்கள் இயக்கிய படம் அது. படம் பெயர் ‘சொப்னம்’. அதில் நான் பாடிய சௌரி  கத்தில் பாடல் மிகப் பிரபலம். இன்றுவரை கேரளாவில் அந்தப் பாடல் சூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து தமிழிலும் மலையாளத்திலும் நிறைய வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. இப்படித்தான் எனக்கு தென்னிந்தியாவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

திரு. எஸ்.எம். சுப்பையா நாயிடு அவர்களது இசையமைப்பில்தான் முதல்ப் பாடலைப் பாடிநேன். திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் இசையமைப்பில் நான் பாடிய முதல்ப்பாடல் “மல்லிகை என் மன்னன் மயங்கும்”. அந்தப் பாடல் 1973 ஏப்ரல் மாதம் ஒலிப்பதிவானது. அதற்கு முன்பாக ஷங்கர்  கணேஷ் இசையமைப்பில் ‘வீட்டுக்கு வந்த மருமகள்’ என்ற படம் வெளிவந்தது. சகோதரர் திரு.டி.எம். சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து “ஓரிடம் நேரிடம்” என்ற பாடலைப் பாடினேன். அந்தப் படம்தான் முதலில் வெளிவந்தது. அதுதான் என் குரலில் வெளிவந்த முதல்ப்பாடல் அதற்குப் பிறகுதான் ‘தீர்க்க சுமங்கலி’ வெளிவந்தது. திரு. எம்.எஸ்.வியின்  இசையில் நான் பாடிய முதல் பாடல்தான் “மல்லிகை என் மன்னன் மயங்கும்”. என்று சொன்னவர் சில வரிகளைப் பாடிக்காட்டினார்.

பேட்டியை ஒலிவடிவில் கேட்க:

ரகு: ஹிந்தியிலிருந்து தமிழ்த்திரைக்கு ஷிஃப்ட் ஆகும்போது வார்த்தைப் பிரயோகம் மற்றும் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய சிக்கல் இருந்திருக்கும் அல்லவா? தாங்கள் எப்படிச் சமாளித்தீர்கள்?

வாணி: முதலாவதாக எனக்குத் தாய்மொழி தமிழ். தமிழ்வழிப் பள்ளியில்தான்  படித்தேன். கல்லூரியிலும் என்னுடைய இரண்டாவது பாடம் தமிழ். மாணவர் மன்றப் பரீட்சையில் நான் முதலிடம் பெற்றேன். சிறுவயதில் வானொலியில் நடத்தப்படும் பாப்பா மலர் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். திரு. வாசவன் மற்றும் திரு. தமிழ்வாணன் ஆகியோர் எழுதிய எல்லா நாடகங்களிலும் நான் நடித்திருக்கிறேன்.

மொழி எனக்கு எப்போதும் பிரச்சனையாக இருந்ததில்லை. இது எனக்குத் தாய்மொழி. பள்ளியில் எனக்கு 2வது மொழி ஹிந்தி. ஹிந்திப் பாடல்களை அதிகம் கேட்டு வளர்ந்ததால், ஹிந்திப் படங்களில் பாடுவது எனக்கு ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை.  அதைத் தொடர்ந்து ஹிந்தி,மராட்டி, குஜராத்தி,மார்வாரி, ஹரியான்வி,  போஜ்புரி,துளு,கொங்கணி,கஷ்மீரி, டோகரி, தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி என எல்லா மொழிகளிலும் பாடியிருக்கிறேன்.

ரகு: நீங்கள் பாடாத மொழியே இல்லை. மொழியைச் சிதைக்காமல் முறையாகப் பாடுகிறீர்கள்.

வாணி: கவிஞர் கண்ணதாசன் என்னைப் பற்றி எழுதியிருந்தார். இந்தத் தருணத்தில் நான் அதைப் பெருமையோடு நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். அவ்வளவு மகத்தான ஒரு கவிஞரால் புகழப்பட்ட ஒரே பாடகி என்ற பெருமை எனக்கு இருக்கிறது. அவரது ‘சந்தித்தேன் சிந்தித்தேன்’ பகுதியில், “இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் அதன் த்வனி மாறாமல் உச்சரித்துப் பாடும் பாடகி; இவர் ஒரு ஆயுட்காலப் பாடகி” என்று குறிப்பிட்டிருந்தார். அது எனக்கு சிகரம் வைத்ததுபோல இருந்தது.

ரகு: நிச்சயமாக.  பாடல்களைத் தேர்வு செய்வதில்  ஆரம்பகாலத்தில் இருந்தோ அல்லது இடையிலேயோ ஏதாவது புதிய வழக்கம் வைத்திருக்கிறீர்களா? 

வாணி: பாடுவது எனக்கு இறைவன் அளித்த வரம் என்று நினைக்கிறேன். எனக்கு வந்த எல்லாப் பாடல்களுமே கஷ்டமான பாடல்கள் என்று எல்லோரும் சொல்வார்கள். மிக அருமையான பாடல்கள் எனக்குக் கிடைத்தன. “மல்லிகை,ஏழு ஸ்வரங்கள், நாதமெனும் கோவிலிலே,இலக்கணம் மாறுதோ,மேகமே மேகமே,யாரது,ஒரே நாள், நானே நானா” உள்ளிட்ட அருமையான பாடல்கள் கிடைத்தன.

ரகு: “மேகமே மேகமே” பாடல் ஒரு வித்யாசமான கஜல்.

வாணி: கஜல் ட்யூனை அடிப்படையாக வைத்துப் பாடப்பட்ட பாடல்தான் அது.

ரகு: சாதாரணமாக, லைட் மியூசிக் என்றால் பாடிவிடுகிறோம். இதில் கஜல், ஹிந்துஸ்தானி இது போன்ற வெவ்வேறு வடிவங்களை எப்படித் தெரிந்துகொள்வது?

வாணி: பயிற்சி இருந்தால் தெரிந்துகொள்ளலாம். அந்தந்த வடிவத்திற்கென்று ஒரு ரூபம் இருக்கிறது. கஜலை பஜன் மாதிரி பாட முடியாது. பஜனை கஜல் மாதிரிப் பாடக் கூடாது. கர்நாடக சங்கீதத்தை ஹிந்துஸ்தானி மாதிரி பாடக் கூடாது. ஹிந்துஸ்தானியைக் கர்நாட்டிக்கா கமகம் கொடுத்துப் பாடக்கூடாது. நமக்கு முழு ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

ரகு: அதற்கு basic கர்நாட்டிக் தெரிந்தால் ஹிந்துஸ்தானி மற்றும் கஜல் பாடலாமா அல்லது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகக் கற்க வேண்டுமா?

வாணி: அவசியம் இல்லை. இப்போது வட இந்தியாவில் பாடுபவர்கள் எல்லோருக்கும் கர்நாடிக் தெரியும் எந்று சொல்வதற்கில்லை. அவர்கள் ஹிந்துஸ்தானி பயிற்சி எடுத்திருக்கிறார்கள். அது போதும். இந்த மேகமே பாடல் ஜெகஜித்சிங் அவர்கள் பாடிய ஒரு கஜல். அதை அப்படியே எடுத்துப் போட்டிருக்கிறார்கள். (மேகமே பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.)

***remix பற்றி உங்கள் கருத்து?

நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றி?

நீங்கள் கவிதைகள்கூட எழுதியிருக்கிறீர்களாமே?

பதில்கள், அடுத்த இதழில்.

தொகுப்பு: திரு. ரகுராமன்.

எழுத்தாக்கம்: X. செலின்மேரி.

பகிர

3 thoughts on “மீள்: பேட்டி: இசைக் கலைவாணி

  1. தொகுப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இது நாமாக உருவாக்கியது அல்ல தானாக காலத்திற்கு ஏற்ப அமைந்தது போல தோன்றுகிறது மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் 👏🏼👍🏻❤🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *