தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (1)

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (1)

ஆக்கம் சித்ரா U. வெளியிடப்பட்டது
சித்ரா
சித்ரா

இன்று பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். ஒருவேளை நான் பார்வையற்றவள் என்ற ஏற்புத் தன்மையை பெறாமல் இருந்திருந்தால், பார்வையற்ற சமுதாயத்தில் வராமல் இருந்திருந்தால், இன்று என் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கக்கூட இயலவில்லை.

சிறுவயதில் நான் வீட்டில் இருக்கும்போது கரண்ட் கட் ஆனாலோ அல்லது லைட்டை அணைத்தாலோ நான் வீட்டிற்குள் நடமாடுவதற்கே சிரமப்படுவேன். ஆனால் இன்று எவ்வளவு நேரம் ஆனாலும் விளக்கு வெளிச்சம் இல்லாமல் என் வீட்டில் என்னால் தனியாக உலாவ முடிகிறது. என் வாழ்க்கை என்னை அந்த நிலைக்கு நகர்த்திச் சென்றிருக்கிறது

சென்னை ஆதம்பாக்கத்தில், ஒரு சிறிய அழகான வீட்டில், நான், என் இரண்டு அக்காக்கள், அப்பாவும் அம்மாவும் என அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தோம். என் அப்பா ஜூனியர் என்ஜினியராக (பிஎஸ்என்எல்) பணியாற்றி வந்தார். என் அம்மா ஹவுஸ் வைஃப். எனக்கும் என் அக்காவுக்கும் இடையே எட்டு, பத்து ஆண்டுகள் வித்தியாசம் என்பதால் நான் வீட்டின் மிகவும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தேன். பள்ளிக்குச் செல்வதும், வீட்டிற்கு வந்தவுடன் நண்பர்களுடன் விளையாடுவதும், ஹோம் ஒர்க் செய்வதும், அரட்டை அடிப்பது, லூட்டி அடிப்பது என என் லைஃப் மிக ஜாலியாக சென்றுகொண்டிருந்தது.

பள்ளிச் சீருடையில் சிறுமி சித்ரா

எனது வீட்டிற்கு அருகில் இருந்த லிட்டில் பிளவர் நர்சரி பள்ளியில் நான் மூன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வகுப்பு ஆசிரியர் என்னுடைய பெற்றோரை சந்திக்க வேண்டும் என்று வரவழைத்தார்.

என் அப்பா அயல்நாட்டில் பணியாற்றிக்கொண்டிருந்ததால், அம்மாதான் வகுப்பு ஆசிரியரை வந்து சந்தித்தார். “இவளுடைய க்லாஸ் ஒர்க், ஹோம் ஒர்க் நோட் எல்லாமே தப்புத்தப்பா இருக்கு; என்ன காரணம்னு தெரியல. இவளோட கண்ல ஏதாச்சும் பிரச்சனை இருக்கானு கவனிங்க” என்று சொன்னார். உடனே என்னுடைய அம்மாவும் சித்தப்பாவும் என்னை மாம்பளத்தில் உள்ள ஒரு கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அந்தக் கண் மருத்துவரும், என் கண்ணைப் பரிசோதித்துவிட்டு, பலகையில் இருந்த எழுத்துகளைப் படிக்கச் சொன்னார். என்னால் முதல் வரிசையில் இருந்த தடிமனான எழுத்துகளை மட்டுமே படிக்க முடிந்தது. அதற்கு அடுத்த வரிசையில் இருந்த எழுத்துகளை எல்லாம் என்னால் படிக்க இயலவில்லை. உடனே அவர் எனது வலது கண்ணை மூடி, இடது கண்ணில் பல லென்ஸ்களை மாற்றி மாற்றி படிக்க செய்தார். அப்படியும் என்னால் படிக்க இயலவில்லை. பிறகு இடது கண்ணை மூடி வலது கண்ணில் பல லென்ஸ்களை மாற்றி மாற்றி படிக்கச் சொன்னார். ஊஹூம் என்னால் படிக்க இயலவில்லை. பின்பு இன்னும் பல்வேறு விதமான கண்ணாடிகளைப் போட்டுப் போட்டுப் படிக்க செய்தார். ஒன்றும் நடக்கவில்லை. பிறகு அவர், “கண்ணில் பிரச்சனை இருக்கிறது, எந்த கண்ணாடியை போட்டாலும் அவளுக்கு ஒரே மாதிரியாகவே இருக்கிறது என்னவென்று தெரியவில்லை” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

வேறு ஒரு கண் மருத்துவரை ரெஃபர் செய்து, சென்று பார்க்கும்படி சொன்னார். ஒருவாரம் கழித்து நாங்கள் அந்த கண் மருத்துவரைச் சென்று சந்தித்தோம். அவரும் இதேபோன்று பல லென்ஸ்களைப் போட்டுப் போட்டுப் படிக்கச் செய்தார். பின்னர் ஒரு கண்ணாடியை மாற்றி கையில் ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்கச் செய்தார். அப்பொழுதும் என்னால் என் கண்ணுக்கு மிக அருகில் வைத்து மட்டுமே புத்தகத்தைப் படிக்க இயன்றது. சிறிது தள்ளி வைத்தால் என்னால் படிக்க இயலவில்லை. பிறகு சில கருவிகளை வைத்து என் கண்ணைப் பரிசோதித்துப் பார்த்தார்.

அதன் பிறகு சென்னையில் பல கண் மருத்துவர்களிடம் சென்றேன்.  எல்லா இடங்களிலும் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று மருத்துவர்கள் கையை விரித்தனர். பின்பு அகர்வால் கண் மருத்துவமனை பற்றி என் அப்பாவிடம் அவருடைய நண்பர் சொன்னதை வைத்து அகர்வால் கண் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கும் பலவிதமான டெஸ்டுகள் எடுக்கப்பட்டன. சில மருந்துகளை 10 நாட்களுக்கு கண்களில் விடும்படியாகக் கூறி, மீண்டும் 10 நாட்களுக்குப் பின் வந்து பரிசோதிக்கும்படியாக சொன்னார்கள். இப்படி எல்லாம் அந்த சிறு வயதிலேயே கண் பரிசோதனைக்காக பல இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றனர். ஆயினும் எந்த பலனும் இல்லை. எந்த மருத்துவரிடம் சென்றாலும் எல்லாப் பரிசோதனையும் செய்துவிட்டு இதற்கு எந்தக் கண்ணாடியும் பொருத்தமாக இல்லை, என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்றேதான் அனைவரும் கூறினர்.

அந்தச் சமயங்களில், கண்களில் மருந்துவிடும்போது கண்கள் மிகமிக மங்கலாகத் தெரியும். நன்கு தெரிந்த, தெளிவாக இருந்த பார்வையும் மங்கலாக இருக்கும். புத்தகங்களை எல்லாம் வாசிக்க இயலாது. அதனால் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன். அந்த மருந்துகளை விடும் நாட்களில், “நான் ஸ்கூலுக்கு போல, நான் வீட்ல இருக்கேன், லீவ் போட்டுக்கிறேன்” என்று சொன்னால், என் அம்மா என்னை உட்கார வைத்து, புக்கை கையில் கொடுத்து, அதைப் படிக்கச் சொல்வார். என்னால் முடியவில்லை என்று சொன்னால், என்  அம்மாவே என்னை “ஸ்கூல் போறதுக்குப் பிடிக்காம  லீவ் போடுறதுக்காக இந்த மாதிரி பொய் சொல்லிட்டு இருக்கியா?” எனத் திட்டுவார். “என்னடா அம்மாவே நம்மள புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்களே”னு ரொம்பக்  கஷ்டமாய் இருக்கும். அறியாமையிலதான்  அப்படிப் பேசினார் என்றாலும், அந்தப் பிஞ்சு வயதில் எனக்கு அது ரொம்ப வருத்தத்தைக் கொடுத்தது.

அம்மா திட்டும்போதெல்லாம், உட்கார்ந்து அழுதிட்டிருப்பேன். அப்புறம் ஸ்கூலுக்குப் போய்விடுவேன். ஸ்கூலுக்குப் போனால், போர்டுல எழுதி இருக்கிறது பக்கத்தில் போனால்கூட எதுவுமே தெரியாது. அந்த மருந்தெல்லாம் போடுவதனால் ரொம்ப ஒரு மாதிரி இருக்கும். கண்ணெல்லாம் மங்கலாகத் தெரியும்.

அழச் செய்த ஆசிரியரின் அந்தச் சொல்:

நான் ஐந்தாம் வகுப்புபடித்தபோது ஒரு சம்பவம். என் ஆசிரியர் நோட்ஸ் டிக்டேட் செய்துகொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் அதனை எழுதிக்கொண்டிருந்தோம். மொத்த வகுப்பையும் சுற்றி வந்தவர், என் அருகில் வந்து, என்னைப் பார்த்து, “ஏய் குருடி! ஒழுங்காக எழுது தப்பில்லாம எழுது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அந்த வார்த்தைகள் என் மனதை நொறுக்கிவிட்டன. என் கண்களில் பீறிட்டு கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது. நான் அப்படியே குனிந்துகொண்டு அழத் தொடங்கிவிட்டேன். என்னால் தொடர்ந்து எழுத இயலவில்லை.

என் அப்பாவிடமும் அம்மாவிடமும் நான் இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அழுதேன். “நான் எல்லாம் நன்றாகத்தான் செய்கிறேன், ஆனாலும் என்னை இந்த டீச்சர் இப்படிச் சொல்லிவிட்டார்” என்று சொல்லி அழுதேன். அப்பா என்னை சமாதானப்படுத்தி, தான் வந்து தலைமை ஆசிரியரைச் சந்திப்பதாகச் சொன்னார். அதேபோல் அடுத்த நாள் வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து விட்டுச் சென்றார்.

தலைமை ஆசிரியரும் என் வகுப்பறைக்கு வந்து என்னை அழைத்து, “சித்ரா யார் உன்னை இப்படிச் சொன்னது? யாருக்கு அவ்வளவு தைரியம், தைரியமாக என்னிடம் சொல், நான் கேட்கிறேன்” என்று என்னிடம் சொன்னார். அவர் அதைக் கேட்ட மாத்திரத்திலேயே என் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கிவிட்டது. நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். அவர் என்னைத் தன் அருகில் அழைத்து, என்னைத் தன்னோடு அணைத்துக்கொண்டு, “அழாதே; தைரியமாகச் சொல் யார் என்று நான் கேட்கிறேன்” என்றார்.  அப்போது அந்த வார்த்தையைச் சொன்ன ஆசிரியர்தான் வகுப்பில் இருந்தார் என்பதால், என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. நான் அப்படியே அழுதுகொண்டே இருந்தேன். அவர் வகுப்பில் உள்ள அனைவரையும் நோக்கி, “இனி யாராவது இவளை அப்படிச் சொன்னீர்கள் என்றால்…” என்று மிரட்டினார்.

கண்ணில் எனக்குப் பிரச்சனை என்று மற்றவர்கள்தான் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். உற்றுப் படிப்பதைத் தவிர எனக்கோ எந்தவித வேறுபாடும் தெரியவில்லை. நான் சகஜமாக எழுதுவேன், படிப்பேன். பெரிதாக சிரமம் எதுவும் பட்டதாகத் தெரியவில்லை. விளையாட்டிலும் சாதாரணமாக ஈடுபடுவேன் என்பதால், எனக்கு இந்த வார்த்தைகள் எல்லாம் மனதை உறுத்தியபடியே இருந்தன. ஏன் இப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்று யோசித்து யோசித்துப் பார்ப்பேன்.

அப்படித்தான் அதேஐந்தாம் வகுப்பில், “ஆண்டுவிழாவுக்கு  டான்ஸ்ல யாரெல்லாம் கலந்துக்குறீங்க?” வகுப்பாசிரியர் கேட்டார். நிறைய பேர் எழுந்து நின்றதால், நானும் நின்றேன். உடனே வகுப்பிலிருந்த எல்லாரும்  சிரித்துவிட்டார்கள். எனக்கு அது ஒரு மாதிரி அவமானமாப் பட்டது.  “நமக்கு எல்லாம் தெரியுதுதானே!ஏன்  இப்படி எல்லாரும் சிரிக்கிறாங்க”னு ரொம்பவே வருத்தப்பட்டேன்.

“சரி, இப்படியே ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே! பார்வையில்லை என்று நீ எப்போதுதான் உணர்ந்தாய்?” என நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது. சொல்கிறேன். ஆனால், அடுத்த இதழில்.

தொடர்புக்கு: anbirkiniyaval@gmail.com

***வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம். தங்களுடைய மனம் திறந்த பகிர்வுகள் ஒவ்வொன்றும் இன்றைய நிலையில் இதே சூழலில் துன்புற்றுக்கொண்டிருக்கும் நம் தம்பி தங்கைகள், அவர்களின் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும்.

உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர விரும்பினால், anbirkiniyaval@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

அல்லது 9655013030 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத சிறு சிறு குரல்ப்பதிவுகளை அனுப்புங்கள்.

பிரெயில் வழியே எழுத விரும்புபவர்கள், ஐந்து பக்கங்களுக்கு மிகாத வகையில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி,

தொடுகை மின்னிதழ்,

G1 சுனில் மெசியா,

30 டெலிபோன் காலனி,

2ஆவது தெரு,

ஆதம்பாக்கம்,

சென்னை 600088.

பகிர

1 thought on “தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *