தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (2)

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (2)

ஆக்கம் சித்ரா U. வெளியிடப்பட்டது
காரைத் தொட்டுப் பார்க்கும் பார்வையற்ற பெண்

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (1)

ஐந்தாம் வகுப்புப் படித்து முடித்தபிறகு என்னைப் பல்லாவரத்தில் உள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள்.  அங்கு என்னுடைய சின்ன அக்கா பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் இணைந்து பள்ளிக்குச் செல்வோம். ஓராண்டு காலம் நிறைவுற்றபின் நான் தனியாகப் பள்ளிக்குச் செல்லப் பழகிவிட்டேன். பள்ளிக்குத் தொடர்வண்டியில் சென்று வந்தேன். அதனால் பெரிய சிக்கல் எதுவும் இல்லை. தாம்பரம் செல்லும் நடைமேடையில் நின்றபடி, வரும் தொடர்வண்டியில் ஏறிப் பயணம் செய்வேன். பெரும்பாலும் என் உடன் பயிலும் மாணவிகள் அதிகம் பேர் பரங்கிமலையில் இருந்து செல்வார்கள். அவர்களோடு இணைந்து சென்றுவிடுவேன்.

பள்ளியைப் பொறுத்தவரையில் மூன்று, நான்கு கட்டடங்கள் இருந்த பெரிய வளாகம். எனவே அந்தப் பள்ளிக்குள் எனக்குப் பழக்கம் ஆவதற்கு சில மாதங்கள் எடுத்தன. ஆசிரியர் அறைகளும் ஆங்காங்கே இருக்கும். வகுப்பில் முதன்முதலில் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், “ஏன் இவ்வளவு கிட்டத்துல வைத்து படிக்கிறாய்” என்ற ஒற்றைக் கேள்வியைத்தான் சொல்லிவைத்ததுபோலக் கேட்பார்கள். நான் ஒவ்வொருவரிடமும் என்னுடைய பிரச்சனையைக் கூறுவேன். முதலில் வகுப்பு ஆசிரியரிடம் சொல்லி முதல் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அப்படியிருந்தும் சில நேரங்களில் கரும்பலகையில் எழுதுவது எனக்குத் தெரியாது. ஏனென்றால், கரும்பலகைக்கும் முதல் இருக்கைக்கும் இடையேயான தூரம் அதிகமாக இருக்கும். அப்போதெல்லாம் நான் இறங்கி முன் தரையில் அமர்ந்துகொண்டு ஆசிரியர் கரும்பலகையில் எழுத எழுத அவருடன் பின் நகர்ந்து நகர்ந்து என்னுடைய நோட்டுப் புத்தகங்களில் எழுதிக்கொண்டே செல்வேன். தொடக்க காலத்தில் அதாவது முதல் ஆறு மாதங்கள் மட்டும்தான் நான் அப்படிச் செய்தேன். பிறகு என் உடன் இருந்த மாணவிகள் “இங்கேயே அமர்ந்துகொள், நாங்கள் டிக்டேட் செய்கிறோம்” என்று கரும்பலகையில் எழுதுவதை எனக்குச் சொல்லச் சொல்ல நான் என்னுடைய புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்களில் எழுதிக்கொள்வேன்.

மனிதக் கண்ணின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

ஐந்தாம் வகுப்புவரை முதல் மூன்று ரேங்க்குகளுக்குள் வந்துகொண்டிருந்த நான், ஆறாம் வகுப்பு வந்தபிறகு பாஸ் செய்வதே கடினமாக இருந்தது. ஜஸ்ட் பாஸ் என்றெல்லாம் மார்க்குகள் 35, 40, 50 என்றுதான் எடுக்க முடிந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் 80, 90 மாணவிகள் இருப்பார்கள். எனவே பர்சனல் அட்டென்ஷன் என்பதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே இருந்தது. சிரமப்பட்டுப் படித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் பிராகிரஸ் கார்டில் என் அப்பாவிடம் கையெழுத்து வாங்கும்பொழுது என் அப்பா “இன்னும் நன்றாகப் படிக்க வேண்டும்” என்ற ஒரு வாக்கியத்தை மட்டுமே சொல்லி முடித்துவிடுவார்.

இதற்கிடையில்,  என் குடும்பத்தார் என்னை பரிசோதனைக்காகக் கண் மருத்துவரிடம் அவ்வப்போது அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அப்படி நான் எட்டாம் வகுப்பு படித்தபோது, எழும்பூரிலுள்ள அரசுக் கண் மருத்துவமனைக்குப் போனோம். அங்கே இருந்த சீஃப் டாக்டர் திரு. செல்வராஜ் அவர்கள் என் கண்களைப் பரிசோதனை செய்த பின்பு, “இது ஜெனடிக் பிராப்லம்” எனச் சொன்னார். என் ரத்த சொந்தங்களுக்கெல்லாம் கண் பரிசோதனை செய்ய வேண்டும் எனச் சொல்லி, என் அப்பா, அம்மா மற்றும் இரண்டு அக்காக்களுக்கும் அங்கேயே பரிசோதனையும் செய்துவிட்டார்கள். அந்தப் பரிசோதனைக்குப் பிறகுதான் எனக்கு ஏற்பட்டிருப்பது ‘Bilateral Macular Degeneration’ அதாவது, விழித்திரையின் மையப்பகுதி பழுதடைந்திருப்பதாகத் தெரியவந்தது. அப்போதும் எழுதும் படிக்கும் நேரங்களைத் தவிர நான் என்னைப் பார்வைச்சவால் உடையவள் என எப்போதும் நினைத்துக்கொண்டதே இல்லை.

 நான் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது, சீதாலட்சுமி என்ற தமிழ் ஆசிரியர் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர் கையெழுத்து நோட்டுப் புத்தகத்தை ஒருமுறை திருத்தும்போது என்னுடைய நோட்டில் அதிகமான பிழைகள் இருப்பதைக் குறித்துவிட்டு, என்னை அழைத்து, “ஏன் இவ்வளவு தவறு” என்று திட்டி தரையில் கையினால் கொட்ட வைத்தார். நான் என்னுடைய பிரச்சனையைச் சொன்னபோதும் அவர் கேட்காமல், “நீ செய்யும் தவறுக்கு சாக்கு சொல்கிறாயா?” என்று கடிந்துகொள்ளவே செய்தார். அப்போது எதார்த்தமாக புத்தகங்களைக் கொடுக்க வந்த என் உடன்படிக்கும் மாணவி பத்மா, நான் கொட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆசிரியரிடம், “அவளுக்குக் கண்ணில் பிரச்சனை இருக்கிறது” என்று சொன்னால். அவள் சொன்னபோதுதான் நான் சொல்லியதை உண்மையென்று நம்பினார். பிறகு என்னை அழைத்து, “என்ன பிரச்சனை? எவ்வளவு நாளா இப்படி இருக்கிறது? ஏன் டாக்டரிடம் செல்லவில்லையா? ஒன்றும் செய்ய இயலாதா?” எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார். நான் எல்லாவற்றையும் அவருக்கு விளக்கமாகச் சொன்னேன். பின்னர் அவர் என் வகுப்புக்கு வரும்போதெல்லாம் என்மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு கேள்வி பதிலையும் படிப்பதற்கு எனக்கு உதவுவார். அதேபோல மாணவிகளிடம் “அவள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள்” என்று சொல்வதோடு, “உனக்கு எப்போது எந்த சந்தேகம் இருந்தாலும் என்னிடம் வந்து கேள் என்று மிக அரவணைப்பாக பேசி எனக்கு மிகவும் ஆறுதல் அளித்தார்.

நடுவயதில் பார்வை இழப்பால் பாதிக்கக் கூடிய கண்ணின் பின்பகுதி

எங்கள் பள்ளியில் பீட்டிக்கு எல்லாம் எக்ஸாம் வைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடச்சொல்லி, அந்த தூரத்தை எத்தனை வினாடியில் கடக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மதிப்பெண் கொடுப்பார்கள். அதிலும் மூன்றாவது இடத்தை பிடிப்பேன். விளையாட்டில் சிறிதளவு ஆர்வம் இருந்தது. ஆனால் பெரிதாக எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை. பள்ளிக்கும் வீட்டுக்கும் அதிக தூரம் இருந்ததால், பள்ளி முடிந்த உடனேயே வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனக் கிளம்பிவிடுவேன். இப்படியாக என் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முடித்தேன்.

நான் பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு செல்வதற்கு முன், என் தந்தை என்னிடம் “இந்த அரையாண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் 60% மதிப்பெண்களுக்கு மேல் கண்டிப்பாக எடுக்க வேண்டும், நன்றாகப் படி” என்று கூறினார். என் இரண்டு அக்காக்களும் அரசுப்பணியில் இல்லாத காரணத்தால் என்னை எப்படியாவது அரசுப்பணியில் சேர்த்துவிட வேண்டும் என்பது என் அப்பாவின் ஆவல். அதனால் ஆயுள் காப்பீட்டுக் கழகம் நடத்திய ஒரு வேலைவாய்ப்புக்கான கோர்ஸில் என்னைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினார். ஆனால் வழக்கம்போல நான் அரையாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண்ணே பெற்றேன். இருப்பினும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற பிறகு குரோம்பேட்டில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் என் அப்பாவிற்கு தெரிந்தவர்கள் மூலமாக என்னை பதினொன்றாம் வகுப்பில் எல்ஐசி வொக்கேஷ்னல் கோர்ஸில் சேர்த்தார்கள். அந்தப் பள்ளியில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் கடைபிடிக்கப்பட்டதால், எனக்கு அது மிகவும் கடினமாக இருந்தது.

பள்ளியில் நுழைந்தது முதல் அனைவரும் ஆங்கிலத்திலேயே பேசினர். முதலில் சிரமமாகத்தான் இருந்தது. பின்னர்  தவறாகப் பேசினாலும் பரவாயில்லை என்று அவர்களோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தேன். ஆங்கிலம், எல்ஐசி (LIC) தொடர்பான 3 பாடங்கள், அக்கவுண்டன்சி, எக்கனாமிக்ஸ் என மொத்தம் ஆறு பாடங்கள் இருந்தன. தமிழ் பாடம் கிடையாது.

என் கண்ணில் உள்ள பிரச்சனை அங்கு இருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியும். என் வகுப்பு ஆசிரியருக்கு என்னை மிகவும் பிடிக்கும். அடிக்கடி என்னை வகுப்பில் எழுப்பி நிற்கவைத்து, “சித்ராவைப் பாருங்கள், கண்ணில் இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் எவ்வளவு கடினமாக உழைக்கிறாள், எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கிறாள், அவளை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு எல்லோரும் படிக்க வேண்டும்” என்று என்னைப் பாராட்டி கூறுவார் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதுவே எனக்கு ஒரு மோட்டிவேஷனாக இருந்தது. இருப்பினும் பாடப்புத்தகங்கள் எல்லாம் மிகமிகச் சிறிய எழுத்துக்களால் ஆனவை என்பதால், எனக்குப் படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். யாருடனும் சேர்ந்து படிப்பதற்கு ஏதுவாக இருக்காது. எனவே தனியாகத்தான் படிப்பேன். வீட்டில் என் அக்கா அல்லது அப்பாவை வைத்துப் படிப்பேன்.

ஒருமுறை எக்கனாமிக்ஸ் கிளாஸ் டெஸ்ட் நடந்தது. அப்போது எழுத்துகளை எனக்கு படிக்கவே முடியவில்லை. மிகவும் சிரமமாக இருந்தது. கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. என்னால் புத்தகத்தை கிட்ட வைத்துக்கூடப் படிக்க இயலவில்லை. என் அப்பாவிடம் எனக்காக லீவு போட்டு படிக்கச் சொல்லலாம் என்று மனதிற்குள் நினைத்தேன். ஆனால் கேட்க மனம் துணியவில்லை. சிரமப்பட்டு சிறிதளவு படித்துவிட்டுச் சென்றுவிட்டேன். அந்த எகனாமிக்ஸ் டெஸ்டில் குறைவாக மதிப்பெண் எடுத்தேன்.

எக்கனாமிக்ஸ் ஆசிரியருக்கு எப்போதுமே என்னைப் பிடிக்காது. திட்டிக்கொண்டே இருப்பார். கூப்பிட்டு வரைபடங்களை வரையச் சொல்வார். கரும்பலகையில் எனக்கு வரையத் தெரியாமல் நிற்பேன். பயங்கரமாகத் திட்டுவார். அவரின்வகுப்பு என்றாலே எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

அப்படித்தான் ஒருநாள், வகுப்புத்தேர்வு நடத்தியபின், அதைத் திருத்துவதற்கு எங்களுக்குள் எக்சேஞ்ச் செய்யச் சொன்னார். திருத்துவதற்கு ரெட்பென் இல்லாதவர்களை எல்லாம் பக்கத்து வகுப்பில் கேட்டு வாங்கி வருமாறு அனுப்பிவைத்தார். சொன்ன மாத்திரத்தில் நான் வகுப்பை விட்டு வெளியே வேகமாக ஓடினேன். என் வகுப்பிற்கு எதிரில் நீர் நிரப்பப்பட்ட ஒரு சில்வர் ட்ரம் இருக்கும். நான் வேகமாக அதில் இடித்ததில்,  அதனுடைய மூடி கீழே விழுந்து பயங்கரச் சத்தம் கேட்டது. வேகமாக ஓடிவிட்ட நான் திரும்புவதற்குள் என் வகுப்பில் படிக்கும் சக மாணவன் அதை எடுத்து வைத்துவிட்டான். அதனால் நான் ரெட் பென் வாங்க பக்கத்து வகுப்பிற்கு சென்று கடன் பெற்று வந்தேன். நான் உள்ளே வருவதற்கு “excuse me”என அனுமதி கேட்டபோது, எகனாமிக்ஸ் ஆசிரியர் என்னை பார்த்து, “wasn’t the sound jarring? Even if it doesn’t disturb your eyes, it should have disturbed your ears” மூடி விழுந்தது கண்ணுக்குத்தான் தெரியாது, அவ்வளவு பெரிய சத்தம் கேட்டுச்சே, உனக்குக் காதுகூடக் கேட்காதா என்ன?” எனக் கடுமையாகக் கேட்டார். எனக்கு அழுகை பீறிட்டு வந்தது. நான் சொல்ல வந்த விளக்கத்தைக்கூட கேட்க அவர் தயாராக இல்லை. மதியம் முழுவதும் நான் வகுப்பில் அழுதுகொண்டே இருந்தேன். என் தோழிகள் அனைவரும் என்னை சமாதானம் செய்ய முற்பட்டனர். ஆனால் யாருடைய சமாதானமும் என்னைச் சரிப்படுத்தவில்லை. நான் அழுதுகொண்டே இருந்தேன்.

இத்தனை இடைஞ்சல்களுக்கும் மத்தியில் நான் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேனா? எல்ஐசியில் பணி என்கிற என் அப்பாவின் கனவு நிறைவேறியதா? சொல்கிறேன் அடுத்த இதழில்.

தொடர்புக்கு: anbirkiniyaval@gmail.com

***வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம். தங்களுடைய மனம் திறந்த பகிர்வுகள் ஒவ்வொன்றும் இன்றைய நிலையில் இதே சூழலில் துன்புற்றுக்கொண்டிருக்கும் நம் தம்பி தங்கைகள், அவர்களின் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும்.

உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர விரும்பினால், anbirkiniyaval@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

அல்லது 9655013030 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத சிறு சிறு குரல்ப்பதிவுகளை அனுப்புங்கள்.

பிரெயில் வழியே எழுத விரும்புபவர்கள், ஐந்து பக்கங்களுக்கு மிகாத வகையில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி,

தொடுகை மின்னிதழ்,

G1 சுனில் மெசியா,

30 டெலிபோன் காலனி,

2ஆவது தெரு,

ஆதம்பாக்கம்,

சென்னை 600088.

பகிர

2 thoughts on “தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (2)

  1. பார்வை சவால் கொண்டு உங்களுடைய பள்ளி நாட்களை கடந்து வந்த அனுபவம் நெகிழ்ச்சியாகவும் ஊக்கம் தருகிற விதத்திலும் இருக்கிறது. இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் நீங்கள் பள்ளியை விட்டு விலகி விடாமல் பயின்ற விதம் உண்மையில் பாராட்டுக்குரியது. ஒருவரின் உயரம் அவர் கடந்து வந்த பாதையில் இருந்த முற்களையும் தடைகளையும் பொருத்தே அமைகிறது என்கிற நான் உணர்ந்த பொன்மொழி உங்களுக்கு பொருந்தும் என்று நினைக்கிறேன்.

  2. இந்த தன்னம்பிக்கை இந்த தலைமுறைக்கு புத்துயிர் தரும் என்று நான் நம்புகிறேன் காரணம் பதிம வயதில் நீங்கள் கொண்ட சீரிய சிந்தனை முயற்சி எதிர் கொண்ட சவால்கள் பின்னர் வெற்றி பெற்றதன் மகிழ்ச்சி ஆகவே கொண்டு உணர முடிகிறது மேலும் உங்கள் பயணம் தொடர பல வெற்றிகளை தன தாக்க என் வாழ்த்துக்கள் அடுத்த சுவாரசியமான தகவல் மற்றொரு படைப்பில் வரும் என்று காத்திருக்கிறேன் மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *