தமிழக அரசு: ஏமாற்றம் தந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

உதவித்தொகைகள் உயர்வு, சிறப்புப் பள்ளிகள் தரம் உயர்த்தல், பார்வையற்றோரின் பணிவாய்ப்பை உறுதி செய்ய சிறப்புத் தேர்வுகள் என புதிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என அதிகம் எதிர்பார்த்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், நிச்சயம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையின்போது புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற நம்பிக்கையும் தற்போது பொய்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மாண்புமிகு முதல்வர்தான் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சர் என்றாலும், துறையின் மானியக்கோரிக்கையினை சமூகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் மாண்புமிகு அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்களே வாசித்தார்.

கடந்த காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த பல்வேறு நலத்திட்டங்கள் மானியக் கோரிக்கை ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்தோடு, உலக வங்கியின் 1702 கோடி நிதி உதவியுடன் ஆறு ஆண்டுகள் காலத்தில் நிறைவேற்றப்பட உள்ள ரைட்ஸ் (Rights) திட்டத்தைப் பற்றி அதிகக் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முதல்வர் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டது குறித்து முதலில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்த ஒருவகைப் பெருமிதப் பேச்சுகள் தற்போது குறைந்து வருகின்றன. சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறையின் அமைச்சருக்கே இதனையும் கையளித்தால், தங்களின் கோரிக்கை குறித்து துறையின் அமைச்சரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பாவது தங்களுக்கு இருக்கும் என முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *