Categories
achievers கல்வி சிறப்புப் பள்ளிகள்

வெற்றிக்கதை: சாகசங்கள் சகஜமாகும் அந்த நாள்

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in

கண்டுகொள்ளப்படாத சிறப்புப்பள்ளிகள், கணக்குக்காகச் சேர்த்துக்கொள்ளும் பொதுப்பள்ளிகள் என கடந்த இரண்டு தலைமுறைப் பார்வையற்றோருக்கான கல்வி உரிமைகள் அதள பாதாளத்துக்குச் சென்றுவிட்டது குறித்து இங்கு யாருக்கும் அக்கறை இல்லை.

உண்டு உறைவிட சிறப்புப்பள்ளிகள் உண்ணத்தரும் சத்திரங்களாய் மாறிநிற்க, அண்டயில் இருக்கும் பல பொதுப்பள்ளிகள் அஞ்சல்வழித் திட்டம்போல் கல்வியை கையளிக்க, கல்வி என்ற ஒற்றைப் புகலிடத்துள்ளும் ஒதுங்கும் நிலை இல்லை பெரும்பான்மைப் பார்வையற்றவனுக்கு.

இப்படிப்பட்ட கையறு சூழலில் கொஞ்சமே கொஞ்சமேனும் நம்பிக்கையை விதைக்கிற ஒளிக்கீற்றைப் பாய்ச்சியிருக்கும் தம்பி ஆனந்துக்கு வாழ்த்துகள். தனது பார்வையின்மையால் பறிபோன 85 விழுக்காடு அறிவினைப் பிற புலன்கள் கொண்டு ஈடு செய்யும் சவால்ப் பயணத்தில், பிரெயிலோடு தொழில்நுட்பத்தையும் துணையாகக்கொண்டு ஆனந்த் திறந்து வைத்திருப்பது பார்வையற்றோருக்கான தற்சார்ப்உ இயங்குதலில் ஒரு புதிய பாதை. எப்படிச் சாத்தியமானது இந்த முயற்சி? எதிர்கொண்ட சவால்கள், சிக்கல்கள் என்னென்ன?

ஆனந்த் பற்றியும் அவரது முயற்சி பற்றியும் சில தரப்புகளிடம் பேசியதிலிருந்து கிடைத்த சில சுவாரசியத் துளிகள் இங்கே!

மாணவன் ஆனந்த் பற்றி தி இந்து நாளிதழில் வந்த செய்தி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், கேவரோடை கிராமத்தைச் சேர்ந்த ஆனந்துக்குப் பிறவியிலேயே இரண்டு கண்களிலும் பார்வை பறிபோய்விட, செய்வதறியாது தவித்திருக்கிறது அந்தக் குடும்பம். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இரு்ந்தாலும் தங்கள் மகனுக்கான மருத்துவ வழி எதையும் கைவிட மனமில்லை பெற்றோருக்கு. பிறகென்ன? உடல், பொருள், ஆவி என அத்தனையையும் வைத்தாடியாயிற்று. பயனில்லை, இனி பார்வைக்கே வழியில்லை என்றபிறகுதான் பள்ளியில்சேர்த்திருக்கிறார்கள் ஆனந்தின் பெற்றோர்.

தொடக்கத்தில் பார்வையு்ள்ள குழந்தைகளோடு படிக்கத் தொடங்கிய ஆனந்த் தனிக்கவனம் இன்றி அல்லாடியிருக்கிறான். எனவே, அங்கிங்கென விசாரித்து, பார்வையற்றோருக்கான அரசுத் தொடக்கப்பள்ளி கடலூரில் படித்துப் பின் பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து தற்போது 12ஆம் வகுப்பை முடித்திருக்கிறார்.

கல்வி கேள்விகளில் படு சுட்டியாகத் திகழ்ந்த ஆனந்துக்கு, ஏழாம் வகுப்பில் கணினி அறிமுகமாகியுள்ளது. “என்னோட கணினி ஆசிரியர் விஜயலட்சுமி டீச்சர் எனக்கு கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்தாங்க. இங்லீஷ்ல டைப் பண்ணவெல்லாம் கத்துக்கிட்டேன். நான் தொடுறதையெல்லாம் அந்தக் கம்ப்யூட்டர் பேசுனப்போ அவ்லோ சந்தோஷமா இருந்துச்சு. ஆனா ஏழாம் வகுப்பு முடிக்கும்போதே கரோனா வந்துட்டதால, கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் நாங்க வீட்டிலதான்இருந்தோம். அதனால எல்லாமே மறந்து போச்சு” என்று சொல்லும் ஆனந்துக்கு பத்தாம் வகுப்பில் கணினியோடான உறவு மீண்டும் துளிர்த்திருக்கிறது.

“இந்த வீடியோ பார்த்துட்டு பேசு!”

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 444 மதிப்பெண்களுடன் பள்ளியின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்ற ஆனந்த் அனைவரின் பாராட்டு மழையிலும் நனைந்துகொண்டிருக்க, “உனக்கு ஒரு வீடியோ அனுப்பியிருக்கேன் அதைப் பார்த்துட்டு என்கிட்டப் பேசு” என்கிறார் அவனது ஆங்கில ஆசிரியர். அதுதான் ஆனந்துக்குத் திருப்புமுனைத் தருணம்.

“தொடுகை யூட்டூப் சேனல்ல வந்த அந்த வீடியோவைப் பார்த்தேன். அதில ஓவியா, லிபிகா என இரண்டுஅக்காங்க கம்ப்யூட்டர்லேயே தங்களோட எக்சாம்ஸை எல்லாம் எழுதிருக்காங்கனு தெரிஞ்சதும் எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. டீச்சர் இதெல்லாம் சாத்தியமானு கேட்டப்போ, “நீயும் எழுதுறியானு டீச்சர் கேட்டாங்க. எனக்கு அப்போ என்ன சொல்றதுன்னு தெரியலை. ஆனா அந்த வீடியோ மட்டும் என் மனசில அப்படியே வந்து வந்து போச்சு. கூடவே டீச்சரின் கேள்வியும்.

அவுங்க சிபிஎஸ்சில பண்ணினதை நாம ஏன் நம்ம ஸ்டேட்ல பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. எங்க தமிழ் சார்கிட்ட சொன்னேன். டீச்சரும் சாரும் வீட்டில அப்பா அம்மாகிட்ட பேசிப் புரியவச்சாங்க. உடனே எங்க வீட்டில எனக்கு ஒரு மடிக்கணினி வாங்கிக் கொடுத்தாங்க.” என்று தனக்கே தனக்கான ஒரு மடிக்கணினி கிடைத்த அந்த மறக்க முடியாத தருணத்தை எண்ணிப் பூரிக்கிறார் ஆனந்த்.

“சக ஆசிரியர் சித்ரா அவர்கள்,  “ஓவியா லிபிகா மாதிரி 12ஆம் வகுப்பு எக்சாம்ஸ்கு நாம ஏன் ஆனந்தை ட்ரை பண்ணக்கூடாது”னு கேட்டார். முதலில் கொஞ்சம் தயங்கினேன். ஆனால் யோசித்ததில் எனக்கு அது சரியென்றே பட்டது. காரணம் ஆனந்தைப் பற்றி எனக்குத் தெரியும். அவன் புத்திசாளி மாணவன். நிச்சயமாக ஒரு புதிய வரலாற்றைத் தொடங்கிவைக்க அவனே சரியான தெரிவு எனத் தோன்றியது ” என்கிறார் தமிழாசிரியர் சரவணமணிகண்டன்.

மாணவன் ஆனந்த் பற்றி நியூஸ் 18ல் வந்த செய்தி

 பொதுத்தேர்வைக் கணினியில் எழுத, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறம்படத் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்; கணினித் திரையில் வெளிப்படும் அனைத்தையும் குரல்வழியே பார்வையற்றவர்களுக்கு விளக்கும் என்விடிஏ (NVDA) போன்ற திரைவாசிப்பான்களின் குரலில் நன்கு பரிட்சயம் கொள்ள வேண்டும் என்பவைகள்தான்முதலும் முடிவுமான தகுதிகள்.  அந்தத் தகுதியை எட்டுவதற்குத் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டார் ஆனந்த். அந்தப் பயிற்சிகளில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கர்ணவித்யாவின் கணினிப் பயிற்றுநர் புவனேஷ் மற்றும் ஹெல்ப் தி ப்லைண்ட் கணினிப் பயிற்றுநர்களான பிரகாஷ் மற்றும் வினோத்.

மாறிமாறி அவர்கள் தந்த தொடர் பயிற்சியில் மேலும் தெம்பு பிறக்க, தனது கோரிக்கையினைப் பள்ளியின் முதல்வர் கவனத்துக்குத் தன் ஆசிரியர்கள் வாயிலாகக் கொண்டு சேர்த்திருக்கிறார். முதலில் தயங்கிய பள்ளி முதல்வர், “காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வினைக் கணினியில் எழுதட்டும், நீ எழுதுவதை வைத்துப் பிறகு  முடிவு செய்துகொள்ளலாம்” எனச் சொல்லிவிட்டார்.

“பள்ளி முதல்வர் இப்படிச் சொன்னதும் எங்களுக்கும் அது சரினு பட்டது. டெக்னாலஜியில அவன் ஸ்ட்ராங்குன்உ எனக்கு நல்லாத் தெரியும். அதில எனக்கு அவன்மேல அபார நம்பிக்கையுண்டு. ஆனா சப்ஜெக்ட்?

படிப்பான், எல்லாவற்றையும் புரிஞ்சு தன் போக்கில எழுதுவான், அதுவே அவனுக்கான பிலஸும் மைனஸும் என்பதால் எனக்கும் சில தயக்கங்கள் இருந்துச்சு. ஆனந்துக்கு நிறைய எடுத்துச்சொன்னோம். தம்பி! இது உன்னோட வாழ்க்கைப் பிரச்சனை. வெற்றில முடிஞ்சா மகிழ்ச்சி. ஆனா தோத்துட்டா உன் வாழ்க்கையே போயிடும் என்றெல்லாம் பயமுறுத்திப் பார்த்தோம். ஆனந்த் எதுக்கும் அசையல. அவன் கணினியில பொதுத்தேர்வை எழுதியே ஆகணும்கிறதில ரொம்ப உறுதியா இருந்தான்” என்கிறார் சரவணமணிகண்டன்.

“ஆனந்தின் இந்த வெற்றியில் எங்கள் பள்ளி முதல்வருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. “பார்க்கலாம்” என்கிற அவரின் பதில் எங்களுக்கு அவ்வளவாகத் திருப்தியளிக்கவில்லை. நாங்களும் ஒரு அவநம்பிக்கையோடுதான் அவரது அறையைவிட்டு வெளியேறினோம். ஆனால், காலாண்டு, அரையாண்டில் ஆனந்தைக் கணினிவழியே தேர்வெழுத அனுமதித்ததாகட்டும், ஆனந்தை அழைத்துப் போய் எங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரிடம் அறிமுகம் செய்து, நிர்வாக ரீதியில் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதி, உரியவர்களிடமிருந்து இந்த அனுமதியைப் பெற்ற பெருமை எங்கள் பள்ளி முதல்வரையே சாரும். அத்தோடு, ஆனந்துக்கு கணினி வழியாக வகுப்பறைத் தேர்வுகளை நடத்தி, அவனது விடைத்தாள்களின் பிழைகளைச் சுட்டி நெறிப்படுத்தியதில் அவனது பாட ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் பங்கும் அதிகம்” என்கிறார் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் சித்ரா.

“மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் கர்ணவித்யாவின் திரு. ரகுராம் அவர்களைச் சொல்லியே ஆக வேண்டும். ஆனந்த் குறித்தும், அவனுடைய விருப்பம் குறித்தும் அவரிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தொடர்ந்து அன்றாடம் நானே சலிக்கும் அளவுக்கு அவர் ஆனந்த் பற்றி என்னிடம் பேசுவார், அடுத்த கட்டம், அடுத்த கட்டம் என எங்களை உந்தியபடியே இருப்பார். எல்லாம் பள்ளியின் முதல்வர் கையில்தான் இருக்கிறது எனத் தெரிந்ததும், அவரையும் விடவில்லை. தான் போகும் இடங்கள், சந்திக்கும் முக்கிய நபர்கள் என எல்லோரிடமும் ஆனந்த் பற்றியும் அவன் கனவு குறித்துப் பேசிக்கொண்டும், அவனுக்கான அனுமதிக்காய் தனக்குத் தெரிந்த வழிகளில் முயன்றுகொண்டும் இருந்தவர் பேராசிரியர் ரகுராம்” என நெகிழ்கிறார் சரவணமணிகண்டன்.

12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வைக் கணினியில் எழுத விருப்பம் தெரிவிக்கும் மாணவனின் கோரிக்கைப் பள்ளி முதல்வரின் வழியே மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், பள்ளிக்கல்வித்துறை என தொடர்புடைய துறைகளுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. மாணவனின் உள்ளார்ந்த விருப்பத்தை அறிந்த பள்ளிக்கல்வித்துறையின் உயர் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளிக்கே நேரில் வந்து, மாணவனிடம் உரையாடியிருக்கிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை இது புதிய முயற்சி என்பதால், முதலில் மாதிரித் தேர்வொன்றை நடத்தி, நடைமுறையில் இருக்கிற சின்னச் சின்ன சிக்கல்களையும் களைந்துவிடுவதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள் அவர்கள்.

தேர்வெழுதிக்கொண்டிருக்கையில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுத் தேர்வு தடைபட்டுவிடக் கூடாது எனச் சிந்தித்த பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள், வினாத்தாள் வாசிப்பாளராக ஒரு கணினிப் பயிற்றுநரையே நியமித்தார்கள் என்பதிலிருந்தே ஒரு மாற்றுத்திறனாளி மாணவனுக்கான உகந்த சூழலைக் கட்டமைப்பதில் பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் காட்டிய அக்கறையையும்  மெனக்கெடலையும் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான், நலவாழ்வு மறுவாழ்வுத் திட்டங்களிலேயே தனது பெரும்பான்மை கவனத்தைச் செலுத்தும் நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடமிருந்து சிறப்புப் பள்ளிகளை விடுவித்து, முன்பிருந்ததுபோல், பள்ளிக்கல்வித்துறையிடம் கையளித்து்விட வேண்டும்என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இன்று ஆனந்த் சாதித்துவிட்டார். 81 விழுக்காடு மதிப்பெண்களுடன் தனது பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் ஆனந்தின் கனவு ஆங்கிலப் பேராசிரியராகவும், ஆப் டெவலப்பராகவும் ஆக வேண்டும் என்பது. வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் இது ஒன்றும் அத்தனை கடினமானதாக இருக்காது. ஆனால், அந்தக் கனவுகளைச் சாத்தியப்படுத்தும் வகையில் ஆனந்துக்குக் கிடைத்த பெற்றோரும், அவர்கள் ஏற்படுத்தித் தந்த வாய்ப்புகளும் எல்லாப் பார்வையற்ற மாணவர்களுக்கும் சாத்தியமில்லை.

அதனால்தான் அரசின் தலையீடு இங்கே அவசியமாகிறது. பார்வைத்திறன் குறையுடைய ஒவ்வொரு பள்ளி வயதுக் குழந்தையின் கையிலும் மடிக்கணினிகளை வழங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. பார்வையற்றோருக்கான உண்மையான மறுவாழ்வு என்பது, அன்றாட வாழ்க்கைத்திறன் (Daily Living Skills) பயிற்சிகளையும், பிரெயில் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.

தன்னார்வ நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் முயற்சிகள் என பார்வையற்றோருக்கான கற்றல் வளங்கள் பெருகிக்கொண்டிருக்கும் அதேசமயம், அவை அங்கிங்கு எனாதபடி சிதறடிக்கப்பட்டவையாக, ஒரு குடையின்கீழ் ஒருங்குபடுத்தப்படாததாக இருப்பது பெருங்குறை. இவற்றையெல்லாம் களைய வேண்டுமெனில், அரசு பார்வையற்றோரின் கல்வி சார்ந்து புதிய கொள்கைகளை வகுக்கவேண்டும். உரிய சிறப்புச் சூழல்களோடு உள்ளடங்கிய கல்வியை மேம்படுத்துதல், சிறப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவந்து, அமலாக்கப்படும் கல்விசார் பொதுத் திட்டங்களில் பார்வையற்ற மாணவர்களை நேரடியாகப் பங்கேற்கச்ச் செய்தல் போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டால், அடுத்த பத்தாண்டுகளில் பல ஆனந்தன்கள் உருவாகி வருவார்கள்.

இன்று சாகசம் எனக் கொண்டாடப்படும் பார்வையற்றவர்களின் பல செயல்கள் அன்று சகஜம் எனஆகிவிடும். அந்தநாள் அருகில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நடைபோடும் ஒவ்வொரு பார்வையற்ற மாணவனின் கையிலும் ஒரு மடிக்கணினியைத் தந்து, அவர்களின் வருங்கால வாழ்க்கைப் பயணத்தை ஒளிரும் ஒன்றாக மாற்ற வேண்டியது அரசின் கடமை.

***சகா

தொடர்புக்கு: anbullasaga@gmail.com

தொடர்புடைய வெளி இணைப்புகள்:

Visually impaired student makes history by writing state board exams on computer, scores 486

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2025/May/09/visually-impaired-student-makes-history-by-writing-state-board-exams-on-computer-scores-486#:~:text=Anand%2C%20a%20student%20of%20Government,express%20himself%20better%2C%20he%20said.

Computer to help blind boy clear exam

https://timesofindia.indiatimes.com/toireporter/author-Preetika-P-479262723.cms

ஓவியா — லிபிகா சிபிஎஸ்சி தேர்வில் தொடரும் சாதனைகள்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “வெற்றிக்கதை: சாகசங்கள் சகஜமாகும் அந்த நாள்”

பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி அவர்களுடைய வாழ்க்கையில் வசந்தத்தை உருவாக்க அரசு இனி நல்ல முயற்சி ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் இருப்போம்

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.